பிரதேச மக்களின் நன்மைகருதி மக்கள் நலத்திட்டங்களுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும் – உப தவிசாளர் யூ.எல்.அஹமட்

0
305

(ஊடகப்பிரிவு)

கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச சபையின் கன்னியமர்வு தவிசாளர் ஐ.ரீ.அஸ்மி தலைமையில் நேற்று 26.04.2018ம் திகதி வியாழக்கிழமை இடம்பெற்றது.

இதில் தனது கன்னியுரையை நிகழ்த்திய கோறளைப்பற்று மேற்கு பிரதேச சபையின் உதவித்தவிசாளர் எம்.அஹமட் லெப்பை மேலும் குறிப்பிட்டதாவது,

இப்பிரதேச மக்களின் நலன்களில் அக்கறை கொண்டு நாமனைவரும் செயற்பட வேண்டும். அதற்காக இக்கன்னி அமர்வில் எனது கன்னியுரையில் கீழே குறிப்பிடும் மக்கள் பயன் திட்டங்களை இந்த உயர் சபை கவனத்திற்கொண்டு செயற்பட வேண்டும்.

எமது பிரதேசத்தில் பல்வேறு நோய்களுக்கு காரணமாகவுள்ள இராசாயனக்கலவை பயன்படுத்திய பழ வகைகளின் பாவனையை முற்றாக ஒழித்து, நோய்களற்ற நல்ல பழவகைகளை விற்பனைக்கு தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதுடன், இறைச்சிக்கடைகளில் இடம்பெறும் அளவை மோசடிகளை இல்லாதொழிக்கும் பொருட்டு இலத்திரனியல் தராசுகளை பயன்பாட்டை உறுதி செய்து, இறைச்சிக்கான நிரந்தர நியாய விலை நிர்ணயமொன்றை ஏற்படுத்துதல் வேண்டும்.

பிரதேசங்களில் சேரும் குப்பைகளை உரிய காலத்திற்குள் அகற்ற நடவடிக்கையெடுப்பதுடன், குப்பைகள் தேங்கும் நிலை இல்லாமல் செய்யப்பட வேண்டும். ஆற்றங்கரையோரத்தை சுத்தமாக வைத்திருக்கத் தேவையான ஏற்பாடுகளை மேற்கொள்வதுடன், ஓட்டமாவடி பாலத்திற்கு அருகாமையில் அமைந்துள்ள மெரீனா பீச் எனப்படும் ஆற்றின் கரையோரப்பகுதியை பொது மக்களின் ஓய்வுக்காக பயன்படுத்தும் விதத்தில் சுற்றுச்சூழலை ஏற்படுத்தல் வேண்டும்.

அத்துடன், வடிகான்களைச்சுத்தம் செய்து நீர் தேங்கும் பகுதிகளை இனங்கண்டு தடைகளை அகற்றத் தேவையான ஏற்பாடுகளை மேற்கொள்ளல், கான்களுக்கு மூடியிடல் வேண்டும்.இதன் மூலம் பாரிய உயிர் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வரும் டெங்கு நோய் ஆபத்திலிருந்து பாதுகாப்பைப் பெறலாம்.

மேலும், அதிகரித்து வரும் போதைப்பாவனையைக் கட்டுப்படுத்த நடவடிக்கை மேற்கொள்வதுடன், அதனோடு தொடர்பட்டு இடம்பெற்று வரும் போதை மாத்திரை வியாபாரம், கொள்ளைச் சம்பவங்களை இல்லாதொழிக்க நடவடிக்கை எடுத்தல்.

எமது பிரதேசத்தில் வெள்ளிக்கிழமைகளில் இடம்பெறும் கட்டட நிர்மாணப்பணிகளை முற்றாகத்தடை செய்து, அதன் மூலம் ஏற்படும் அசெளகரியங்கள், அனாச்சாரங்களை இல்லாதொழிக்க முயற்சி மேற்கொள்ளல்.

அத்துடன், ஓட்டமாவடியின் பிரதான சந்தியாகக் காணப்படும் சாவன்னா ஹாஜியார் சந்தியில் இடம்பெறும் வீதி விபத்துகளைத் தவிர்க்க வேகத்தடைகளை ஏற்படுத்துவதுடன், குறித்த பகுதியில் நிரந்தரமாக போக்குவரத்து பொலிசாரை கடமையில் ஈடுபடுத்த நடவடிக்கை எடுத்தல். சன நெரிசல் நிறைந்த பிரதேசமாக கொழும்பு-ஓட்டமாவடி பிரதான வீதி காணப்படுவதால், பொருத்தமான இடங்களில் வீதித்தடைகள், போக்குவரத்து விதி முறை தொடர்பான எச்சரிக்கைப் பலகைகள் இடல் போன்ற மக்கள் நலத்திட்டங்களை இந்த உயரிய சபை முன்னெடுக்க வேண்டுமென உதவித்தவிசாளர் யூ.எல். அஹமட் லெப்பை தனது கன்னியுரையில் கேட்டுக் கொண்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here