அரசியல் தீர்வு முயற்சியை கைவிட பெரும்பான்மை கட்சிகள் முயற்சி-அமைச்சர் மனோ

0
326

(பாறூக் ஷிகான்)

தேசிய அரசாங்கம் உருவாக்குவதற்காக பிரதான இரு கட்சிகளுக்கு இடையில் கைச்சாத்சிடப்பட உள்ள புதிய உடன்படிக்கை, அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் சிறு கட்சிகளுடனும் பேசி அவர்களுடைய சம்மதத்துடன் சேர்ந்து இறுதி செய்யப்பட வேண்டும் என நாம் கேட்டுள்ளோம்.” எனக் கூறுகின்றார் தேசிய சகவாழ்வு, கலந்துரையாடல், அரச கரும மொழிகள் அமுலாக்கல் அமைச்சர் மனே கணேசன்.

உள்ளூராட்சிமன்றத் தேர்தல்களையடுத்து கொழும்பு அரசியல் சூடாகியுள்ள நிலையில், தலைநகர அரசியல் நிலைமைகள், அரசியலமைப்பாக்க முயற்சி, கட்சிக்குள் உருவாகியிருக்கும் நெருக்கடிகள் குறித்து விரிவாக பேட்டி ஒன்றை அமைச்சர் வழங்கினார். அவரது நேர்காணலில் முக்கிய பகுதிககள் வருமாறு:

கேள்வி: ‘நல்லாட்சி’ அரசு பதவிக்கு வந்து 3 வருடங்கள் சென்றுள்ளன. இந்த அரசு பதவிக்கு வரும்போது பலத்த எதிர்பார்ப்புக்கள் இருந்தன. உங்களைப் பொறுத்தவரையில், இந்த எதிர்பார்ப்புக்கள் நிறைவேற்றப்பட்டிருப்பதாக கருதுகின்றீர்களா?

அரைக்கிணறுதான் தாண்டியுள்ளோம். முழுக்கிணற்றையும் தாண்டிட முயல்கிறோம். ஊடக சுதந்திரம், பொலிஸ் சுயாதீனம், நீதிமன்ற சுயாதீனம் ஆகியவற்றில் கணிசமாக முன்னேறியுள்ளோம்.

தேசிய இனப்பிரச்சினை தீர்வில் ஆரம்பித்த இடத்திலேயே நிற்கிறோமோ என்ற சந்தேகம் வலுக்கிறது. அரசியல் தீர்வு, தேர்தல் முறை மாற்றம், ஜனாதிபதி அதிகார குறைப்பு அல்லது முறை நீக்கம் மூன்றையும் ஒருசேர செய்வோம் என சிறுபான்மை கட்சிகள் சொல்லுகிறோம். இந்நிலைப்பாட்டை தமிழ் முற்போக்கு கூட்டணி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆகிய அரசின் பங்காளிக் கட்சிகள் சொல்கிறோம். இந்த எம் நிலைப்பாட்டுக்கு அரசுக்கு வெளியே இருந்து ஈ.பி.டீ.பி.யும் ஆதரவு வழங்கியுள்ளது. நாம் இது பற்றி தமிழ்த் தேசிய கூட்டமைப்புடன் பேச விரும்புகிறோம்.

ஆனால், இந்த மூன்றில் தேர்ந்தெடுத்த விடயங்களை, முன்னுக்கு பின் வெவ்வேறாக செய்வோம் என பெரும்பான்மைக் கட்சிகள் சொல்லுகின்றன. அதாவது அரசியல் தீர்வை கணக்கில் எடுக்காமல் கைவிட முயல்கிறார்கள். இந்த முரண்பாடு இப்போது அரசுக்கு உள்ளேயே முற்றுகிறது.

அடுத்தது, நல்லாட்சியின் தலைவர்கள் நாட்டை விட தமது கட்சி அரசியலை நேசித்து தொலைத்து விட்டார்கள். ஆகவே திருடர்களை பிடிக்க வந்த ஆட்சியை திருடர்கள் பிடித்து விட்டார்களோ என்ற தோற்றப்பாடு மக்கள் மத்தியில் ஏற்பட்டு விட்டது.

கேள்வி: கூட்டாட்சியைத் தொடர புதிய உடன்படிக்கை ஒன்றும் கைச்சாத்திடப்படவிருப்பதாக செய்திகள் வருகின்றன. 2015 ஜனவரி 8 மக்கள் ஆணையை அடுத்த இரு வருடத்துக்குள் இந்த அரசினால் நிறைவேற்றக் கூடியதாக இருக்குமா?

தேசிய அரசாங்கம் உருவாக்குவதற்காக பிரதான இரு கட்சிகளுக்கு இடையில் கைச்சாத்திடப்பட உள்ள புதிய உடன்படிக்கைஇ அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் சிறு கட்சிகளுடனும் பேசி அவர்களுடைய சம்மதத்துடன் சேர்ந்து இறுதி செய்யப்பட வேண்டும் என நாம் கேட்டுள்ளோம். நாம் என்றால்இ தமிழ் முற்போக்கு கூட்டணி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ். இந்த எம் நிலைப்பாட்டுக்கு அரசுக்கு வெளியே இருந்து ஈபிடீபியும் ஆதரவு வழங்கியுள்ளது.

கேள்வி: அரசியலமைப்பு பேரவையின் வழிநடத்தல் குழுவின் ஒரு உறுப்பினராகவும் நீங்கள் இருந்துள்ளீர்கள். இந்த அரசியலமைப்பாக்க முயற்சிகள் தொடருமா? புதிய அரசியலமைப்பு ஒன்றை அதன் மூலமான தீர்வு ஒன்றை தமிழ் மக்கள் எதிர்பார்க்கலாமா?

தேசிய இனப்பிரச்சினை தீர்வில் ஆரம்பித்த இடத்திலேயே நிற்கிறோமோ என்ற சந்தேகம் வலுப்பதை மேலே சொன்னேன். நின்று போயுள்ள அரசியலமைப்பு முயற்சிகள் அடுத்த மாதமாவது மீண்டும் ஆரம்பிக்கப்பட வேண்டும் என நான் விரும்புகிறேன். அதையே தானும் எதிர்பார்ப்பதாக சம்பந்தனும் என்னிடம் கூறினார். முயற்சி ஆரம்பித்தாலும் தீர்வு வருமா என ஆரூடம் கூறவும் முடியாது. போலி நம்பிக்கைகளை ஊட்டவும் முடியாது. இப்போது புதிய ஒரு அரசியலமைப்பு என்ற ஒன்று தேவையா? இருப்பதையே கொஞ்சம் அங்கே, இங்கே திருத்திக்கொண்டு அப்படியே மேலே போவோம் என்ற எண்ணம் ஏற்பட்டு வருகிறது. நிறைய பெரிய இடங்களில் இந்த கருத்து ஒலிப்பதை நான் செவி மடுத்துள்ளேன்.

கேள்வி: உங்களுடைய கட்சி மீதும், உங்கள் மீதும் அண்மையில் சில குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டிருந்தன. முக்கிய உறுப்பினர்கள் சிலர் கட்சியிலிருந்து வெளியேறியும் இருக்கின்றார்கள். கட்சிக்குள் அப்படி என்னதான் பிரச்சினை?

இன்று ஐ.தே.க, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, கூட்டமைப்பு உட்பட எல்லா கட்சிகளிலும் இப்படியான சச்சரவுகள் உள்ளன. எனது கட்சிக்கு மாத்திரம் பிரத்தியேகமானதல்ல. ஐ.தே.க., ஸ்ரீலசுக, கூட்டமைப்பு தலைவர்களிடமும் இப்படி நீங்கள் கேட்கிறீர்களா?

சரி கேட்டதால் சொல்கிறேன். ஒன்றிரண்டு நடுத்தர வயதினரும், ஒரு பாசமுள்ள முதியவரும் கட்சியை விட்டு வெளியேறியுள்ளனர். நிறைய பேர் போய் விட்டார்கள் என்று சொல்வதெல்லாம் பொய். இடைக்கிடை கட்சி காரியாலயத்துக்கு வந்து போகின்றவர்கள், என்னுடன் கைப்பேசி மூலம் செல்பி படம் எடுத்து கொள்பவர்கள் எல்லோருமே கட்சி அங்கத்தவர்கள் அல்ல.

எல்லா கட்சிகளிலும் நடைபெறும் பதவி நியமன சச்சரவுதான் இதற்கு ஒரே ஒரு அடிப்படைக் காரணம். என் மீது சாட்டப்படும் குற்றச்சாட்டுகள் நகைப்புக்கிடமானவை.

இது ஒருபுறமிருக்க, எழுப்பப்படும் காலகட்டத்தை பாருங்கள். என்னை பிடிக்கவில்லையா, கட்சியில் வேறு எந்த ஒரு முக்கியஸ்தரையாவது பிடிக்கவில்லையா? எனது நிறம், நடை உடை, பாவனை அல்லது எம் கட்சி சின்னம் பிடிக்கவில்லையா? அப்போதே அல்லது எப்போதோ போயிருக்கலாமே! எவரையும் கட்டி வைக்கவில்லையே. தேர்தல் முடியும்வரை காத்திருந்து, அதன் பிறகும் பட்டியல் நியமனங்கள் அறிவிக்கப்படும்வரையும் காத்திருந்து பார்த்து விட்டு, பிறகு சீ..சீ..இந்த பழம் புளிக்கும் என விலகுவது ஏன்? இந்த ஒரே ஒரு மாதத்திற்குள்தான் என் குற்றங்கள் அனைத்தும் தெரிய வந்ததா?

ஒருவேளை தலைநகர் மாநகரசபையில் இவர்களுக்கு நான் நியமனம் வழங்கி இருந்தால், தலைவர் வாழ்க! என்று கோஷம் போட்டுக்கொண்டு இப்போதும் இருந்திருப்பார்கள். இன்று அவர்களுக்கு நியமனம் தரவில்லை என்றதுடன் தலைவர் ஒழிக!. அப்புறம் தலைவர் வீழ்க!, சாகுக!, தொலைக! என்றெல்லாம் ஈனஸ்வரத்தில் அரசியல் கெட்ட வார்த்தைகளை பயன்படுத்தி என்னை வைகிறார்கள்.

உண்மை என்னவென்றால், பதவி நியமனங்களை தெரிவு செய்தது நான் மட்டுமல்ல. அதற்கு ஒரு நியமனக்குழு நியமிக்கப்பட்டு, அந்தக்குழு கூடி ஆராய்ந்து, தன் சிபாரிசுகளை எனக்கு தந்தது. நியமிக்கப்பட்டவர்களும் குறிப்பிட்ட காலத்துக்குப் பிறகு பதவி விலக வேண்டும் என்ற நிபந்தனையின் அடிப்படையிலேயே நியமிக்கப்பட்டுள்ளார்கள். ஏனென்றால் இயன்ற அளவில் நிறைய பேருக்கு வாய்ப்பு வழங்க வேண்டும் என நான் விரும்புகிறேன்.

அதேவேளை தமக்கு நியமனம் வழங்காவிட்டால் மாற்றுக்கட்சிக்கு தாவுவது அல்லது வேறு பாதை செல்வது என சிலர் எம் அரசியல் எதிரிகளுடன் இரகசிய பேச்சுவார்த்தை நடத்தி வந்தது என் காதுகளை எட்டியது. அதுமட்டுமல்ல தேர்தல் வேளையில் எமது இந்த வேட்பாளர்களில் சிலர் தாம் போட்டியிட்ட வட்டாரத்துக்கு பக்கத்து வட்டாரத்தில்இ நமது கட்சி வேட்பாளரை எதிர்த்து போட்டியிட்ட, மாற்றுக்கட்சி வேட்பாளருக்கு இரகசியமாக உதவி செய்தனர். அதாவது தமக்கு அடையாளம் கொடுத்து வளர்த்து விட்ட கட்சிக்கு எதிராகவே இரகசியமாக துரோகம் செய்தனர். இவை என் காதுகளை எட்டின. ஏனெனில் கொழும்பில் எனக்கு தெரியாமல் காரியம் செய்வது கடினமானது. எல்லா இடங்களிலும் எனக்கு கண், காதுகள் உள்ளன.

இந்நிலையில் எந்த ஒரு கட்சித்தலைவராவது இப்படியான நேர்மையற்ற நபர்களுக்கு, துரோகிகள் எனத் தெரிந்தும், நியமனம் வழங்கி தன் தலையில் தானே மண்ணை போட்டுக்கொள்வாரா? சொல்லுங்கள்?

கேள்வி: நீங்கள் பாசமுள்ள முதியவர் என குறிப்பிட்டது வேலணை வேணியன் அவர்களைத்தானே? அவர் ஏன் விலகினார்?

ஒன்றை சொல்ல வேண்டும். விலகிப்போய் என் மீது மிக நீண்ட குற்றப்பட்டியல் தயாரித்து வாசித்து, தாம் உண்மையாகவே விலகியதன் காரணமான பதவி நியமனம் என்ற காரணத்தை மூடி மறைக்க முயன்று, இன்று அந்த முயற்சியில் தோற்றுபோய் நிற்கும் அந்த ஒருசில நடுத்தர வயதினரை விட முதியவர் கவிஞர் வேலணை வேணியன் நேர்மையாளர். தனக்கு பதவி நியமனம் தரவில்லை என்பதால்தான், நான் இன்று கட்சி மாறிவிட்டேன் என அவர் நேர்மையாக கூறியுள்ளார். அதனால் அவரை, எங்கிருந்தாலும் வாழ்க என பாராட்டுகிறேன். (ஹஹா..சிரிக்கிறார்!).

உண்மையில் அவருக்கு நியமனம் வழங்க நான் முற்றாக மறுக்கவில்லை. மூன்று முறை கொழும்பு மாநகரசபை பதவி காலமாக, 2002 முதல் சுமார் பதின்மூன்று வருடங்கள் அவரை கொழும்பு மாநகர சபையில் மந்திரியாக நான் வைத்திருந்தேன். 2002இல் வெற்றிப் பெற்ற என் கடைசி சகோதரர் பிரகாஷ் கணேசன் திடீரென பதவி விலகிய போது கவிஞரை அழைத்து அவருக்கு முதன்முறையாக கொழும்பு மாநகரசபையில் நியமனத்தை நானே வழங்கினேன். பிறகு அடுத்த முறை குமரகுருபரன் பதவி உயர்வு பெற்று மேல்மாகாணசபைக்கு சென்ற போது ஏற்பட்ட வெற்றிடத்துக்கும் கவிஞரை அழைத்து நானே நியமனம் வழங்கினேன். பிறகு 2011ம் வருடம் நானே நேரடியாக மாநகரசபை தேர்தலில் போட்டியிட்டு சுமார் 30இ000 விருப்பு வாக்குகளை வாங்கி குவித்த போது மிகக்குறைவான வாக்குகளை பெற்ற பலரும் என் பின்னால் வந்து மாநகரசபை அங்கத்துவம் பெற்றனர். அது அந்த தேர்தல் முறையின் கீழ் கிடைத்த சிறப்பு. இப்படித்தான் கவிஞர் மூன்றாம் முறையாகவும் மாநகரசபை போனார்.

இந்த முறை அய்யா மூன்று முறை பதவி பெற்றுக்கொடுத்தேன். கொஞ்சம் பொறுங்கள். புதியவர்களுக்கு இடம் கொடுப்போம். அடுத்த வருடம் இவர்களில் சிலர் பதவி விலகுவார்கள். அப்போது உங்களை மீண்டும் நியமிக்கிறேன். அதுவரை வழமைபோல் உங்களை என் தந்தையாக கவனித்துக்கொள்கிறேன் என்றுதான் சொன்னேன். என்ன செய்வது? என்னால் வாழும்போதே வாழ்த்தப்பட்ட இந்த பெரியவருக்கு எனது கோரிக்கையின் நடத்தையின் நியாயம் விளங்கவில்லை. ஆனால் மக்களுக்கு விளங்கியுள்ளது.

கேள்வி: உங்களிடமிருந்து விலகி போனவர்களுக்கு என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?

ஹஹா (சிரிக்கிறார்) இந்நாட்டில் இன்று மேலகத்தில் வடக்கில்இ கிழக்கில்இ மலையகத்தில் வாழும் நம் மக்களுக்காக காத்திரமான ஆளுமையுள்ள ஒரு பாத்திரத்தை சொல்லாலும்இ சிந்தனையாலும், செயலாலும் எமது கட்சியும் கூட்டணியும் ஆற்றி வருகின்றன. இதெல்லாம் தெரிந்தும்கூட, கடைசியில் ஒரு உள்ளூராட்சி சபை பதவிக்காக கட்சியையும் தலைமையையும் விலையாக கொடுக்க விளைகிறீர்களே? வரலாற்றில் துரோகங்களை எதிர்கொண்ட பெருந்தலைவர்களின் மனங்களில் அந்த இறுதிக்கணத்தில் ஓடியிருக்கக்கூடிய எண்ணங்களை, ஒரு சிறிய கட்சி தலைவனான என் மனதிலும் ஒரு சிறு அளவில் ஓடச்செய்து விட்டீர்கள்.

எம் கட்சியில் இருந்து ஏறக்குறைய ஒன்பது வருடங்களுக்கு முன் விலகிப்போன சில தனிநபர்கள், இப்போது விலகியவர்களை பார்த்து அடைகின்ற குரூர திருப்தியை இன்று பாருங்கள். இத்தனை ஆண்டுகள் போயும் என்னை பழித்தும், இழித்தும் பேசி அதன் மூலம் குரூர திருப்தி அடையும் நபர்கள் இன்று இருக்கும் இடத்தை தேடிப்போய் பாருங்கள். சொந்தமாக ஒரு ஐநூறு வாக்குகளை கூட பெற்றுக்கொள்ள இவர்களால் முடியாததை பாருங்கள். பாமர மக்களை தேடிப்போய், பணம், பொருள், கையூட்டு கொடுக்காமல் தேர்தல்களில் இவர்களால் வாக்குப் பெற முடியாததை பாருங்கள். இவற்றை பார்க்கும் போதாவது உங்களுக்கு உண்மை விளங்கவில்லையா?

என்னை எவர் தூற்றினாலும் நான் மனம் வாடுவதுமில்லை. எவர் போற்றினாலும் நான் ஆகாயத்தில் பறக்க முயலுவதுமில்லை. வாழ்க்கை எனக்கு நிதானத்தை கற்று தந்துள்ளது. வரலாறு எனக்கு வழி காட்டுகிறது. நேர்மை, அர்ப்பணிப்பு, தூர்பார்வை, துணிச்சல், தன்னம்பிக்கை என்ற அடிப்படைகளில் வாழும் எனக்கு அந்த பிரபலமான பாரதி பாடல் தான் இப்போது ஞாபகம் வருகிறது. அன்றும், இன்றும் என்னை விட்டுப்போய் என்னை தூற்றி திரியும் நபர்களுக்கு இது சமர்ப்பணம்.

……தேடிச் சோறு நிதந்தின்று பல சின்னஞ் சிறுகதைகள் பேசி, மனம் வாடித் துன்பமிக உழன்று பிறர் வாடப் பல செயல்கள் செய்து, நரைகூடிக் கிழப்பருவம் எய்தி கொடுங்கூற்றுக் கிரையெனப்பின் மாயும் பல வேடிக்கை மனிதரைப் போலே நான் வீழ்வேனென்று நினைத்தாயோ!…

கேள்வி: உள்ளுராட்சிமன்றத் தேர்தலின் போது உங்களுடைய தமிழ் முற்போக்கு கூட்டணி பெற்றுக்கொண்ட வெற்றி குறித்த உங்களுடைய மதிப்பீடு என்ன? இது உங்களுக்குத் திருப்தியானதாக இருக்கின்றதா?

நான் எப்போதும் எதிலும் முழுமையான திருப்தி அடைவதில்லை. ஆகவே இன்னமும் வேண்டும், தேவை என எண்ணுகிறேன். நாடு முழுக்க சுமார் 110 உறுப்பினர்களை பெற்றுள்ளோம். கொழும்பு மாவட்டத்தில் மொத்தம் 15 பேரை பெற்றுள்ளோம். நுவரெலியா மாவட்டத்தில், நாம் புதிதாக பெற்று கொடுத்த சபைகளை எம்மால் ஆட்சி செய்ய முடியவில்லை என்பதையிட்டு கவலையடைகிறேன். அந்த மாவட்டத்தில் அதிக வாக்குகளை நாமே பெற்று இருந்தாலும், புதிய கலப்பு தேர்தல் முறையின் கீழ், குதிரை பேரம் செய்ய வாய்ப்புகள் ஏற்பட்டு விட்டன. நாம் ஆளும் அரசாங்க கூட்டணி கட்சி என்ற அடிப்படையில் எம்மால் வெவ்வேறு இடங்களில் வெவ்வேறு கட்சிகளுடன் கூட்டு சேர்ந்து சபைகளை அமைக்க முடியாமல் போய் விட்டது. பிரசார கால கட்டத்தில் நடைபெற்ற துர்பிரசாரம் பாதகமாகவும் அமைந்து விட்டது.

முதன் முறையாக கண்டி, இரத்தினபுரி, மாத்தளை, கேகாலை, கம்பஹா ஆகிய மாவட்டங்களிலும் கணிசமான உறுப்பினர்களை பெற்றுள்ளோம் என்பது புதிய எழுச்சியாகும். எனினும் சில குளறுபடிகள் காரணமாக சில மாவட்டங்களில் நியமனங்கள் சரியாக நடைபெறவில்லை. அடையாளம் காணப்பட்டுள்ள அவை மிக விரைவில் திருத்தி அமைக்கப்படும்.

கொழும்பில் வாக்களிப்பு நிலைய முகவர்களின் வாக்காளர் இடாப்பு குறிப்புகளின்படி வாக்களிப்பு நிலையங்களுக்கு சென்ற சுமார் 42,000 தமிழ் பெயர் கொண்ட வாக்காளர்களில் 60 விகிதமானோர் எமது ஏணி சின்னத்துக்கே வாக்களித்துள்ளனர். மிகுதி 40 விகித தமிழ் வாக்குகளையே தமிழ் வாக்குகளை பெற்ற ஏனைய கட்சி வேட்பாளர்கள் பகிர்ந்து கொண்டுள்ளனர். பழைய தேர்தல் முறையாக இருந்திருக்குமானால், எமது கட்சிக்கு இன்னமும் அதிக வெற்றி கிடைத்து இருக்கும். புதிய கலப்பு முறையின் கீழ் இன்று பல அங்கத்தவர் வட்டாரங்களில் தெரிவு செய்யப்பட்டுள்ள பல தமிழ் மாநகரசபை உறுப்பினர்கள் அவ்வந்த வட்டாரங்களில், சேர்ந்து போட்டியிட்ட பெரும்பான்மை இன வேட்பாளர்கள் பெற்ற வாக்குகளாலேயே வெற்றி பெற்றுள்ளனர். இது தேர்தல் முடிவுகள் சொல்லும் உண்மை. எனவே கொழும்பில் பெரும்பான்மை தமிழர் வாக்குகளையும் சிறு தொகை சகோதர இன வாக்குகளையும் நமது கட்சி பெற்றுள்ளது. இவை நம்பிக்கை அளிக்கும் தரவுகள் ஆகும்.

கேள்வி: முக்கியமான அமைச்சுப் பொறுப்பு ஒன்றை நீங்கள் பெற்றிருக்கின்றீர்கள். கடந்த 3 வருடங்களில் இந்த அமைச்சுப் பொறுப்பைக் கொண்டுநடத்துவதில் நீங்கள் எதிர்கொண்ட தடைகள் என்ன? அடுத்த இரு வருடங்களுக்காக உங்களிடமுள்ள திட்டங்கள் என்ன?

இதை முக்கியமான அமைச்சாக கருதி எனக்கு எவரும் வழங்க வில்லை. ஆனால், இந்த அமைச்சின் விடயதானங்களை தேசிய பேசுபொருளாக மாற்றி, இன்று ஒரு முக்கியமான அமைச்சாக மாற்றிக்கொண்டது நானாகும். இது நான் கடுமையாக உழைத்து பெற்ற வெற்றியாகும்.

தேசிய சகவாழ்வு என்பதும்இ கலந்துரையாடல் என்பதும்இ மொழி சட்டத்தை அமுல் செய்வதும் சிவி, சமூக அமைப்புகளை தேச நிர்மாணத்தில் சேர்த்துக் கொள்வதும் என் விடயதானங்கள்.

நான் எதிர்கொள்ளும் பிரதான தடை நிதி பற்றாக்குறையே. கடந்த வருடம், எனது அமைச்சின் நிதி மீண்டும் திரும்பி திரைச்சேரிக்கு சென்றது என சில ஊடகங்கள் அவசரப்பட்டு செய்தி வெளியிட்டன. உண்மையில் நாம் செலவு செய்யும் நிதிப்பயன்பாட்டை வெளி நிறுவனங்களிடமிருந்து கடனுக்கே பெறுகிறோம். அவற்றை மீள செலுத்த திரைசேரி பணம் தரும்போது தாமதம் ஏற்படுகிறது. அதாவது, திரைசேரியில் இருந்து எமக்கு ஒதுக்கப்பட்ட நிதி வருவதற்கு முன்னமேயே நாம் செலவு செய்து விடுகிறோம். ஆனால், அதுவரையில் கொடுக்கப்பட்ட நிதியை மட்டுமே முதற்கட்டமாக கணக்கில் காட்டுகிறார்கள். அதை வைத்துக்கொண்டு, ஊடகங்கள், ஒதுக்கப்பட்ட நிதியை இவர் செலவழிக்க வில்லை. என செய்தி வெளியிடுகின்றன.

கனடா அரசு எமது அமைச்சுடன் செய்துகொண்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் வழங்க வேண்டிய உதவி தொகையில் ஒரு சதம்கூட இன்னமும் வழங்கப்படவில்லை. அந்நாட்டில் ஏற்பட்ட அரசியல் மாற்றங்கள் காரணமாக இரண்டு வருட தாமதம் ஏற்பட்டுள்ளது. இவ்வருடம் தருகிறோம் என இப்போது கூறியுள்ளார்கள்.

இதையெல்லாம் அறியாமல் நாட்டின் ஏதோ ஒரு மூலையில் இருக்கின்ற ஒரு பிழையான பெயர் பலகையை சுட்டிக்காட்டி அமைச்சர் தூங்குகிறார். எனவே உங்கள் நிதி உதவியை நிறுத்துங்கள் என கனடா வாழ் நம் புலம் பெயர் தமிழர் ஒருவர் சமீபத்தில் தன் டுவிட்டர் தளத்தில் எழுதி கனடா பிரதமருக்கும் அனுப்பிஇ எனக்கும் பெரும் கோபத்தில் அனுப்பி வைத்திருந்தார். உங்கள் அரசாங்கத்துக்கு ஞாபகமூட்டி உறுதியளித்த நிதியை பெற்றுக்கொடுங்கள். அப்புறம் நிறுத்தலாம் என்று நான் அவருக்கு அமைதியாக பதில் அனுப்பினேன். அப்புறம் சத்தமே இல்லை. இந்த மாதிரி நூற்றுக்கணக்கான சம்பவங்களை என்னால் சொல்ல முடியும்.

இப்படித்தான் தமிழ் ஊடகவியலாளர்கள் சிலர் என் நடைமுறை கஷ்டத்தை புரிந்துகொள்வதில்லை. சிறு சந்தர்ப்பம் கிடைத்தாலும், என்னை கடும் சொற்களால் போட்டு தாக்கி, கட்டுரை அல்லது தலையங்கம் எழுதுமளவுக்கு போய் விடுகிறார்கள். என்னை சந்தித்து பிரச்சினைகளை விளங்கிக்கொண்டு எழுதுவோர் அரிது. இப்போது நீங்கள்கூட கனடிய தூதுவரிடம் ஏன் இந்த இரண்டு வருட தாமதம் என கேட்டு பதில் பெற்று எழுதலாம். புதிய அமைச்சரவை மாற்றத்தின் போது புதிய பொறுப்புகளும் நிதி வளத்துடன் கிடைத்தால், என்னால் இன்னமும் சிறப்பாக செயற்பட முடியும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here