ஓட்டமாவடி பிரதேச சபையின் நூலகங்களிலும் தினக்குரல் பத்திரிகைக்குத் தடை!

0
286

(எம்.எம்.பைறூஸ்)

தினக்குரல் பத்திரிகைகளை ஓட்டமாவடி பிரதேச சபையின் கீழ் இயங்கும் பொது நூலகங்களிலும் வாசிப்பு நிலையங்களிலும் பயன்படுத்துவதனை உடனடியாக நிறுத்துமாறு கௌரவ தவிசாளர் ஐ.ரீ. அமிஸ்டீன் (அஸ்மி) உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இனவாதத்தைத் தூண்டும் வகையில் செய்தி வெளியிட்டதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச சபையின் கீழ் இயங்கி வரும் அனைத்து பொது நூலகங்களிலும், வாசிப்பு நிலையங்களிலும் தினக்குரல் பத்திரிகைகளை பயன்படுத்த வேண்டாம் என உத்தரவிட்டுள்ளார்.

ஊடகங்கள் நடுநிலமையானதும், உண்மைத்தன்மை வாய்ந்ததுமான செய்திகளை வெளியிட வேண்டுமே தவிர, இனங்களுக்கிடையே முறுகல் நிலையை ஏற்படுத்தக் கூடியதான செய்திகளாக அச்செய்தி அமையக் கூடாது. எனினும் அண்மையில் திருகோணமலை ஸ்ரீ சண்முகா இந்து மகளிர் கல்லூரயில் கடமையாற்றும் முஸ்லிம் ஆசிரியைகள் ஹபாயா ஆடை அணிந்து பாடசாலைக்கு வரக் கூடாது என அப்பாடசாலை நிருவாகம் தடை விதித்தமை தொடர்பாக எழுந்த பிரச்சினையை இனவாதத்தைத் தூண்டு் வகையில் தினக்குரல் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளமை கண்டிக்கத் தக்க விடயம் என்பதுடன், இவ்வாறான பத்திரிகைகளை பொதுமக்கள் வாசிப்பதை நிறுத்திக் கொள்வதே பாதுகாப்பானது. பொதுமக்களுக்கு மத்தியில் உண்மையானதும் பக்கச் சார்பின்றியுமான செய்திகளை கொண்டு சேர்க்க வேண்டிய ஊடகங்கள் இவ்வாறு கவனயீனமாக செயற்படுவது கவலைக்குரிய விடயமாகும்.

எதிர்காலங்களில் தினக்குரல் பத்திரிகையின் நிருவாகம் இவ்வாறான செய்திகளை வெளியிடுவதால் ஏற்படும் பாதகங்கள் பற்றி சிந்தித்துச் செயற்பட வேண்டும்.

ஒரு உள்ளுராட்சிமன்றத்தின் தவிசாளர் என்ற வகையில் தமிழ், முஸ்லிம் உட்பட பல்லின மக்கள் வாழும் எனது உள்ளுராட்சிமன்ற அதிகாரப் பிரதேசத்தினுள் எவ்வித இனமுறுகல்களும் ஏற்படக் கூடாது என்பதே எனது எதிர்பார்ப்பாகும். எனவே தான் எமது சபையின் கீழ் இயங்கும் அனைத்து பொது நூலகங்களிலும், வாசிப்பு நிலையங்களிலும் தினக்குரல் பத்திரிகைகளை பயன்படுத்த வேண்டாம் என உத்தரவிட்டுள்ளதாக கௌரவ தவிசாளர் ஐ.ரீ. அமிஸ்டீன் (அஸ்மி) தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here