அக்குறணை நவீன சந்தை தொகுதி நிர்மாணத்தை துரிதப்படுத்துவதற்கு நடவடிக்கை

0
198

அக்குறணையில் நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சின் நிதியொதுக்கீட்டில் நிர்மாணிக்கப்படவுள்ள, 4 மாடிகள் கொண்ட நவீன சந்தைக் கட்டிடத் தொகுதியை அமைப்பதற்கு இடையூறாக இருக்கின்ற நிறுவனங்களுடன் இணக்கப்பாட்டை ஏற்படுத்தி, பழைய கட்டிடத்தை உடைத்துவிட்டு வேலைகளை விரைவாக ஆரம்பிப்பதற்கான பேச்சுவார்த்தை, இன்று (04) ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தலைமையில் நடைபெற்றது.

தற்போது இயங்கிவரும் பழைய சந்தை கட்டிடத்தை உடைப்பதற்கு அங்கு இயங்கிவரும் அரச வங்கியொன்று காலஅவகாசம் கோரியிருந்தது. இதனால் புதிய கட்டிடத்தை அமைப்பதில் இழுபறி நிலை தொடர்ந்துகொண்டிருக்கிறது. இதனால் சம்பந்தப்பட்டவர்களுடன் ஒரு இணக்கப்பாட்டுக்கு வந்துஇ பிரச்சினைக்கு தீர்வுகாணும் நோக்கிலான பேச்சுவார்த்தை இன்று அக்குறணையில் நடைபெற்றது.

நல்லாட்சி அரசாங்கத்தின் 100 நாள் வேலைத்திட்டத்தின் கீழ் இந்த புதிய சந்தை கட்டிடத் தொகுதியை நிர்மாணிப்பதற்கு அமைச்சர் ரவூப் ஹக்கீம் தீர்மானித்திருந்தார். இதற்கு 320 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்ட நிலையில், முதற்கட்டமாக 100 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்‌ளது. எனினும், பழைய கட்டிடத்தை உடைப்பதில் பிரச்சினைகள் இருப்பதால், புதிய கட்டிடத்துக்கான வேலைகளை ஆரம்பிப்பதில் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளன.

நிலக்கீழ் வாகன தரிப்பிடத்துடன் கூடிய 4 மாடிகள் கொண்ட தள மற்றும் முதலாம் மாடிகளில் தலா 18 வீதம் 36 கடைகளும் ஒரு தகவல் பிரிவும், அனைத்து வங்கிகளுக்குமான ஏ.ரி.எம். இயந்திரங்களும் மூன்றாம் மாடியில் அக்குரணை பிரதேச சபைக்கான உப அலுவலகம் மற்றும் காரியாலயங்களும் நான்காம் மாடியில் ஒரு சிறிய கேட்போர் கூடம் மற்றும் உடற்பயிற்சி நிலையம் அடங்கலாக அனைத்து மாடிகளிலும் கழிவறை வசதிகளும் புதிய சந்தை கட்டிடத் தொகுதியில் அமைக்கப்படவுள்ளன.

இக்கலந்துரையாடலில், தபால் மற்றும் தபால்துறை, முஸ்லிம் சமய விவகார அமைச்சர் எம்.எச்.ஏ. ஹலீம், அமைச்சர் ரவூப் ஹக்கீமின் பிரத்தியேக செயலாளர் எம். நயீமுல்லாஹ், அக்குறணை பிரதேச செயலாளர், பொதுச்சந்தை திட்ட பொறியியலாளர், அக்குறணை பிரதேச சபை தவிசாளர், உறுப்பினர்கள், பொதுச்சந்தையில் இயங்கும் வங்கியின் பிரதிநிதிகள் என பலரும் கலந்துகொண்டனர்.

ஊடகப்பிரிவு
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here