தென்பகுதி மக்கள்தான் யுத்தத்தை முன்னெடுத்தனர் என்கிற சிந்தனையில் இருந்து வட பகுதி மக்கள் விடுபடல் வேண்டும்

0
288

நாட்டில் தொடர்ந்தேச்சையாக 30 வருடங்களுக்கும் மேலாக இடம்பெற்ற யுத்தத்தில் வட பகுதி மக்கள் மாத்திரம் அன்றி தென்பகுதி மக்களும் பெரிதும் துன்பப்பட்டனர் என்று இராணுவத்தின் யாழ். மாவட்ட கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாராச்சி தெரிவித்தார்.

யாழ். மாவட்டத்தில் போரால் பாதிக்கப்பட்ட, வறிய குடும்பங்களை சேர்ந்த பாடசாலை பிள்ளைகளுக்கு துவிச்சக்கர வண்டிகளை யாழ். மாவட்ட கட்டளை தலைமையகத்தில் வைத்து இவர் இன்று ஞாயிற்றுக்கிழமை வழங்கினார். அத்தோடு வறிய குடும்பத்தை சேர்ந்த பாடசாலை சிறுமி ஒருவருக்கு ஒரு வருடத்துக்கான கல்வி சகாய நிதியை வழங்கியதுடன் சுய தொழில் முயற்சியாளரான குடும்ப தலைவி ஒருவருக்கு வாழ்வாதார மற்றும் சுய தொழில் மேம்பாட்டு சகாய நிதியை வழங்கினார்.

இவ்வைபவத்தில் விசேட அழைப்பின் பேரில் அம்பாறை மாவட்ட தமிழ் ஊடகவியலாளர்கள் சங்க பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.

இவ்வைபவத்தில் இவர் தலைமையுரை ஆற்றியபோது மேலும் தெரிவித்தவை வருமாறு:-

வட பகுதி மக்களுக்கும், தென்பகுதி மக்களுக்கும் இடையிலான நல்லுறவை பிரிவினைவாதம் சிதைத்ததுடன் நாட்டின் அமைதி சூழலையும் கெடுத்தது. நாட்டில் தொடர்ந்தேச்சையாக 30 வருடங்களுக்கும் மேலாக இடம்பெற்ற யுத்தத்தில் வட பகுதி மக்கள் மாத்திரம் அன்றி தென்பகுதி மக்களும் பெரிதும் துன்பப்பட்டனர்.தென்பகுதியில் அரசாங்க அலுவலகங்கள் அடங்கலாக பொது இடங்களில் நடத்தப்பட்ட குண்டுவெடிப்புகள் மூலம் தென்பகுதி மக்கள் பெரிதும் துன்பப்பட்டனர். தென்பகுதி மக்கள்தான் யுத்தத்தை முன்னெடுத்தனர் என்கிற சிந்தனை வட பகுதி மக்களுக்கு உள்ளது. ஆனால் இந்த யுத்தத்தில் வட பகுதி மக்களும், தென்பகுதி மக்களும் பாதிக்கப்பட்டனர் என்பதே உண்மை ஆகும். நாட்டையும், மக்களையும் பாதுகாத்து அமைதியை நிலைநாட்ட பிரிவினைவாதத்துக்கு எதிராக இராணுவம் போராட நேர்ந்தது. அதற்காக தமிழ் மக்களை எதிரிகளாக ஒருபோதும் தென்பகுதி மக்களும் சரி, இராணுவமும் சரி எண்ணவே இல்லை.

நாம் பழைய கசப்பான சம்பவங்களை மறப்பது உசிதமான விடயம் ஆகும். நடந்த கெட்டவைகளை எல்லாம் ஒரு கெட்ட கனவாக நினைத்து மறந்து விட வேண்டும். அவ்வாறான ஒரு சந்தர்ப்பத்தில்தான் இரு பகுதி மக்களுக்கும் இடையில் நல்லிணக்கம் மலரும். அதற்கான வேலை திட்டங்களையே இராணுவத்தின் யாழ். மாவட்ட கட்டளை தலைமையகம் முன்னெடுத்து வருகின்றது. இவ்வேலை திட்டங்களின் ஒரு அம்சமாகவே வறிய குடும்பங்களின் கல்வி வளர்ச்சி மற்றும் வாழ்வாதார எழுச்சி ஆகியவற்றுக்கு நாம் உதவுகின்றோம். மாறாக தேர்தல் நோக்கத்துக்காகவோ, அரசியலுக்காகவோ நாம் இவற்றை செய்யவில்லை. கல்விக்கு வறுமை ஒருபோதும் தடையாக அமைதல் கூடாது. ஆகவேதான் வறிய குடும்பங்களை சேர்ந்த மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளை மேம்படுத்த உதவுகின்றோம். இவர்கள் கல்வியில் மேன்மை அடைந்து வீட்டுக்கும், சமுதாயத்துக்கும், நாட்டுக்கும் பயன்படுகின்ற நற்பிரஜைகளாக மிளிர்தல் வேண்டும். இன்றைய சிறுவர்கள் கல்வியின் மேன்மை அடைகின்றபோது எதிர்காலத்தில் எல்லா விதமான பிரச்சினைகளும் இல்லாமல் போய் எமது நாடு அமைதி பூங்காவாக மாறும் என்று தெரிவித்தார்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here