காத்தான்குடியில் போதைப்பொருளைத் தடுக்க முச்சக்கரவண்டி சாரதிகளின் ஒத்துழைப்பு அவசியம்!

0
371

நாட்டில் இடம்பெறும் போதைப்பொருள் உள்ளிட்ட மாபெரும் குற்றச்செயல்களைத் தடுக்க முச்சக்கரவண்டி சாரதிகளின் ஒத்துழைப்பு அவசியம் என நெடுஞ்சாலைகள் மற்றும் வீதி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.

காத்தான்குடி முச்சக்கரவண்டி சாரதிகள் நலன்புரி அமைப்பின் தொழிலாளர் தின நிகழ்வு காத்தான்குடி கடற்கரையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் கூறியதாவது:-

‘காத்தான்குடி முச்சக்கரவண்டி சாரதிகள் நலன்புரி சங்கம் போன்ற அமைப்புக்கள் சிறப்பாக இயங்கி இவ்வாறான நிகழ்வுகளை ஏற்பாடு செய்கின்றமை பாராட்டத்தக்கது. நாங்கள் இவ்வாறான அமைப்புக்களின் முயற்சிகளுக்கு எப்போதும் ஒத்துழைப்பு வழங்குவோம்.
முச்சக்கரவண்டி சாரதிகளுக்கு பிரதேசத்தில் இடம்பெறும் குற்றச்செயல்கள் உள்ளிட்ட சகல விடயங்களும் தெரியும். சிலர் முச்சக்கரவண்டிகளைப் பயன்படுத்தி போதைப் பொருள் வியாபாரம் செய்கின்றனர். இவ்வாறான சமூக சீர்கேடுகளை நாங்கள் தடுக்க வேண்டும். அதற்கு முச்சக்கரவண்டி சாரதிகள் மறைமுகமாகவோ – நேரடியாகவோ ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

முச்சக்கரவண்டி சாரதிகளின் பொருளாதாரத்தை பலப்படுத்த வேண்டும். அதிகளவான முச்சக்கரவண்டி சாரதிகள் இருக்கின்றனர். எனவே புதிதாக முச்சக்கரவண்டி சாரதிகள் உருவாகுவதை தடுத்து வேறு ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும்.
தொழிலாளர் தினத்தை முன்னிட்டு தொழிலாளர்கள் தேவைகள் தொடர்பிலான மும்மொழிவு பிரகடனமொன்றை இந்த அமைப்பினாலும் வெளியிட வேண்டும். அதனை தேசிய ரீதியில் இயங்கும் தொழிற்சங்கங்கள் ஊடாக அரசியல் ரீதியில் அடைந்து கொள்ள முயற்சிக்க வேண்டும்.
காத்தான்குடி முச்சக்கரவண்டி சாரதிகள் நலன்புரி சங்கத்துக்கு காரியாலயம் ஒன்றை அமைத்துத் தருமாறு கோரிக்கை விடுக்கப்பட்டது. நாங்கள் அதற்கான ஏற்பாடுகளை செய்து தருவோம்” – என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here