கடும் வெயிலில் பயணம் செய்த மாணவன் திடீர் மரணம். காங்கேசன்துறையில் துயரச் சம்பவம்

0
330

(பாறுக் ஷிஹான்)

யாழ். இந்துக் கல்லூரியின் உயர் தரத்தில் கல்வி கற்கும் மாணவன் கடும் வெயிலில் நீண்ட தூரம் பயணம் செய்த நிலையில் திடீரென மயங்கி விழுந்து மரணமடைந்தார்.

காங்கேசன்துறையில் நேற்று இந்தத் துயர சம்பவம் இடம்பெற்றது. சுதுமலை வடக்கு – மானிப்பாயைச் சேர்ந்த 18 வயதான பாலகுமார் சிறிசத்தியா என்ற மாணவனே உயிரிழந்தவர் என மானிப்பாய் பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த இளைஞனின் உறவினர்கள் கனடாவிலிருந்து யாழ்ப்பாணம் வந்துள்ளனர். நேற்று காங்கேசன்துறை கடலில் குளித்து விட்டு அங்குள்ள ஹோட்டல் ஒன்றில் அவர்கள் தங்கியுள்ளனர்.

இந்நிலையில் இந்த மாணவன் நேற்று முன்தினம் திங்கட்கிழமை காலை தனியார் வகுப்பிற்கு சென்றுவிட்டு அங்கிருந்து மதியவேளை, உறவினர்களைப் பார்ப்பதற்காக சுமார் 30 கிலோ மீற்றர் தூரம் உள்ள காங்கேசன்துறைக்கு துவிச்சக்கர வண்டியில் சென்றுள்ளார். மிகவும்
சோர்வடைந்திருந்த அவர், அங்கு தண்ணீர் குடித்துள்ளார். பின்னர் மென்பானமும் அருந்தியுள்ளார். இதன்பின் தலைசுற்றுவதாகக் கூறி வாந்தி எடுத்துள்ளார். இதனையடுத்து அவரை உறவினர்கள் உடனடியாக தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு சென்றனர். எனினும் வைத்திய சாலை செல்லும் வழியில் மாணவனின் உயிர் பிரிந்ததாக மானிப்பாய் பொலிஸார் தெரிவித்தனர்.

இறப்பு விசாரணைகளை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் திடீர் இறப்பு விசாரணை அலுவலர் நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார். நேற்று இடம்பெற்ற உடற்கூற்று பரிசோதனையின் பின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here