பல்வேறு கோரிக்கைகள் ஆளுனரிடம் முன்வைப்பு – பிரதி தவிசாளர் த.யசோதரன்

0
242

(எஸ்.எம்.எம்.முர்ஷித்) 

வாழைச்சேனை பிரதேச சபை எல்லைக்குள் அமைந்திருக்கும் இராணுவ முகாம்களுக்குள் உள்ள பொது மக்களின் காணிகளை விடுவிக்கும் அரசாங்கத்தின் முயற்சிகளை துரிதப்படுத்தி அக்காணிகளை மக்களுக்கு பெற்றுத் தருமாறு ஆளுநரிடம் கோரிக்கை முன்வைப்பதாக வாழைச்சேனை பிரதேச சபையின் பிரதி தவிசாளர் த.யசோதரன் தெரிவித்தார்.

வாழைச்சேனை கோறளைப்பற்று பிரதேச சபையின் முதலாவது அமர்வு சபையின் கேட்போர் கூடத்தில் செவ்வாய்கிழமை இடம்பெற்ற போது கலந்து கொண்டு மேற்சொன்னவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்!

பல்வேறு எதிர்பார்ப்புகளோடு நமது பிரதேச மக்கள் நமக்கு வாக்களித்து அவர்களின் பிரதிநிதிகளாக நம்மை தெரிவு செய்துள்ளனர். கடந்த கால கொடிய யுத்தத்தினாலும், சுனாமியினாலும் பாதிக்கப்பட்ட நமது பிரதேசத்ததை கட்டியெழுப்பவும் அபிவிருத்தி செய்யவும் தவிசாளர் தலைமையின் கீழ் நாம் ஒற்றுமையோடும் அர்ப்பணிப்போடும் சேவையாற்றுவதன் மூலம் எமது பிரதேசத்தை அபிவிருத்தி அடைந்த பிரதேசமாக மாற்றியமைக்க முடியும்.

இப்பிரதேச சபை எல்லைக்குள் சேகரிக்கப்படும் சபையின் சொந்த வருமானத்தை மட்டும் கொண்டு இப்பிரதேசத்தின் முழுத் தேவைகளையும் நிறைவேற்ற முடியாது என்பதையும் நாம் அறிவோம். நாட்டிலுள்ள சகல உள்ளுராட்சி மன்றங்களிலும் சொந்த வருமானத்தின் மூலம் மீண்டுவரும் செலவினங்களையும், ஒருசில அபிவிருத்தி பணிகளையுமே நிறைவேற்றக் கூடியதாகவுள்ளது.

எனவே நமது தேவைகளை நிறைவேற்ற நாம் கிழக்கு மாகாணத்தின் ஆளுநர், நாட்டின் அரசாங்கத்தினதும், ஜனாதிபதி அவர்களினதும் ஒத்துழைப்புக்களையும், விசேட உதவிகளையும் நாம் பெற்றுக் கொள்ள வேண்டிய அவசியத்தில் இருக்கின்றோம்.

இதற்காக எமது ஸ்ரீ.சு.கட்சியின் முழுமையான பங்களிப்பை நாம் வழங்க தயாராக இருக்கின்றோம் என்பதையும், ஆளுநரிடத்தில் எமது தேவைகள் தொடர்பாக தவிசாளரும் நானும் பல கோரிக்கைகளை முன்வைத்து அவற்றுக்கு அவரது இணக்கப்பாட்டை பெற்றுள்ளோம் என்பதையும் இங்கு மகிழ்ச்சியுடன் கூறிக் கொள்ள விரும்புகின்றேன்.

இது தவிர ஆளுநர் அவர்களிடமும், அமைச்சர்களிடமும் எமது கட்சி சார்பாக இப்பிரதேச சபையின் முக்கிய தேவைகளை நானும் சக உறுப்பினர் சுதர்சனும் முன்வைத்து இணக்கப்பாட்டினை பெற்றுள்ளோம். அவற்றினை இந்த சபையில் பிரேரணைகளாக முன்வைத்து சபையின் அங்கீகாரத்தினை தயவுடன் கோருகின்றேன் என்றார்.

அத்தோடு வாழைச்சேனை பிரதேச சபையின் பிரதி தவிசாளர் த.யசோதரனால் பத்தொன்பது கோரிக்கைகள் இதன்போது முன் வைக்கப்பட்டது. அவையாவன-

இப்பிரதேசசபைக்கென ஆயளவநச pடயn தயாரித்தல், நமது பதவிக் காலமான 04 வருடங்களில் நிறைவேற்றப்பட வேண்டிய பணிகளை வட்டாரங்களில் மக்களின் பங்குபற்றலுடன் அடையாளம் கண்டு 04 வருட திட்ட முன் மொழிவுகளை தயாரித்தல், நமது சபை எல்லைக்குள் அமைந்திருக்கும் இராணுவ முகாம்களுக்குள் உள்ள பொது மக்களின் காணிகளை விடுவிக்கும் அரசாங்கத்தின் முயற்சிகளை துரிதப்படுத்தி அக்காணிகளை மக்களுக்கு பெற்றுத் தருமாறு ஆளுநரிடம் கோருதல், நமது பிரதேச சபைக்கான அலுவலக கட்டடமொன்றை ஆளுனரிடம் கோருதல்.

பிரதேசத்தில் மக்களால் அதிகளவில் பயன்படுத்தப்படும் கிறவல் வீதிகளை கொங்ரீட் வீதிகளாக அமைக்க வீதி அபிவிருத்தி அமைச்சை கோருதல், பிரதேசத்திலுள்ள மணல் வீதிகளை கிறவல் வீதிகளாக மாற்றவும், மோசமாக பாதிக்கப்பட்டுள்ள கிறவல் வீதிகளை செப்பனிடவும் ஆளுனருக்கு கூடாக அரச நிறுவனங்களின் ஒத்துழைப்பை பெறல்.

சந்திவெளி திகிலிவெட்டை படகுச் சேவையை வீதி அபிவிருத்தி திணைக்களம் பெறுப்பேற்று இலவச சேவையை வழங்க ஆளுனரை கோருதல், கிரான் பிரதேசத்தில் புலிபாய்ந்தகல் தொடக்கம் குடும்பிமலை வரையுள்ள கிராமங்களிலுள்ள பல்லாயிரக்கணக்கான மக்களின் வைத்திய தேவைக்காக கூழாவடி பிரதேசத்தில் கிராமிய வைத்தியசாலை ஒன்றை அமைக்க ஆளுனரைக் கோருதல்.

எமது பிரதேச சபை எல்லைக்குள் 04 ஆற்றங்கரை பூங்காக்களை அமைக்க மாகாண சபைகள் உள்ளுராட்சி அமைச்சை கோருதல், பிரதேச சபையின் திண்மக் கழிவகற்றல் தேவைக்காக 25 ஏக்கர் காணிகளை பொருத்தமான இடத்தில் பெற்றுத் தருமாறு ஆளுநரிடம் கோருதல்.

கிரான் மற்றும் தேவபுரம் ஆகிய இடங்களில் சகல வசதிகளுடனான விளையாட்டு மைதானங்களை அமைக்க தேவையான அரச காணிகளை பிரதேச செயலாளரிடம் கோருதல், வாழைச்சேனை, சந்திவெளி பொது விளையாட்டு மைதானங்களை தேசிய தர மைதானங்களாக மாற்ற விளையாட்டுத்துறை அமைச்சரை கோருதல், திருத்தம் செய்யப்பட வேண்டிய நிலையில் உள்ள சபையின் வாகனங்களை திருத்தம் செய்து பயன்படுத்த தேவையான நிதிகளை மாகாண சபைகள் உள்ளுராட்சி அமைச்சரிடம் கோருதல்.

சபைக்காக தீயணைப்பு வானக பிரிவு ஒன்றை ஆளுநர் மூலம் அரசாங்கத்தை கோருதல், அவசியமான வடிகாலமைப்பு பணிகளுக்கு அரசாங்கத்தினதும், வெளிநாட்டு உதவிகளையும் உள்ளுராட்சி அமைச்சின் மூலம் கோருதல், சபையின் வாகனங்களை திருத்தம் செய்யவும், சேர்விஸ் பண்ணவும் நூலகத்திற்கு பின்னாலுள்ள காணியில் வாகனங்கள் தரிப்பிடமும், திருத்துமிடமும் அமைத்தல். இதற்கு சபை நிதியுடன் உள்ளுராட்சி அமைச்சின் வலுவூட்டல் திட்ட நிதிகளையும் கோருதல்.

மிக கூடுதலான உள்நாட்டு வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வரும் சுற்றுலா தலமாக நமது பிரதேசம் இருப்பதால் சுற்றுலா தகவல் மையம் ஒன்றை நமது அலுவலக காணிக்குள் அமைக்க மாகாண சுற்றுலா பிரிவை கோருதல், பழுதடைந்த நிலையில் இருக்கும் மகேந்திரா மினி லொறியினை திருத்தி சடலங்களை ஏற்றி இறக்கும் தேவைக்காக பயன் படுத்துதல்.

கிரான் பிரதேசத்தின் தூர இடங்களிலிருந்து அலுவலகத்திற்கு வந்து போக மக்கள் பெரிதும் சிரமப்படுகின்றனர். அம்மக்களின் தேவைகளை நிறைவேற்ற கிரான் உப அலுவலகத்திற்கு தேவையான அனைத்து வசதிகளையும், ஆளணியினையும் வழங்க வேண்டும் என பிரதி தவிசாளரினால் முன்மொழிவுகளுக்கு இச்சபையின் மேலான அங்கீகாரத்திற்கு முன்வைக்கப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here