எங்களிடத்தில் சேவைகளை பெறக் கூடிய தகுதி உங்களுக்கு உண்டு நீங்கள் முகவர்களிடம் எந்தவித பணங்களையும் வழங்கக் கூடாது – அலிஸாஹிர் மௌலானா

0
290

(எஸ்.எம்.எம்.முர்ஷித்)

அரசியல் வாதிகளிடத்தில் நீங்கள் சேவைகளை பெறக் கூடிய தகுதி உங்களுக்கு உண்டு. அந்தவகையில் நீங்கள் முகவர்கள் மூலம் எந்தவித பணங்களையும் வழங்கி உதவிகளைப் பெறக்கூடாது என தேசிய நல்லிணக்கம் ஒருமைப்பாடு மற்றும் அரச கரும மொழிகள் பிரதியமைச்சர் அலிஸாஹிர் மௌலானா தெரிவித்தார்.

தேசிய நல்லிணக்கம் ஒருமைப்பாடு மற்றும் அரச கரும மொழிகள் பிரதியமைச்சரை வரவேற்கும் நிகழ்வு செம்மண்ணோடை அல் ஹம்றா வித்தியாலய கேட்போர் கூடத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு இடம்பெற்ற போது கலந்து கொண்டு உரையாற்றும் போதே மேற்சொன்னவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்-

எதிர்காலத்தில் என்னுடைய பணிகளை தொடர்வதற்காக ஞாயிற்றுக்கிழமையும், திங்கட்கிழமையும் மட்டக்களப்பு மாவட்டத்தில் பொதுமக்களை சந்திப்பதற்காகவும், புதன்கிழமைகளில் எனது அமைச்சில் பொதுமக்களை சந்திப்பதற்காகவும் ஏற்பாடுகளை செய்திருக்கின்றேன்.

எனது சேவையைப் பெற்றுக் கொள்ளும் முகமாக எனது இணைப்பாளர்கள் மற்றும் எமது உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்கள் ஊடாக பெறலாம். எனது கடந்த கால அரசியலில் ஊழலில்லாமல், இனபேதமத பாகுபாடுகளின்றி எனது சேவையை செய்து வந்தேன்.

சில அரசியல்வாதிகள் பதவிகள் வருகின்ற நேரத்தில் சில முகவர்கள் அமைச்சரிடம் கூறி விடயத்தை முடித்து தருவோம் என்று பல தேவையற்ற விடயங்கள் எல்லாம் இடம்பெறலாம். ஒரு நாளும் நான் ஊழலுக்கு சம்மதிப்பதில்லை.

எங்களிடத்தில் நீங்கள் சேவைகளை பெறக் கூடிய தகுதி உங்களுக்கு உண்டு. அந்த வகையில் நீங்கள் முகவர்கள் மூலம் எந்தவித பணங்களையும் வழங்கக் கூடாது. கடந்த காலங்களில் அரசியல் செய்தவர்கள் மத்தியில் இழிவான முறையில் அரசியல் செய்திருக்கின்றார்கள்.

இளம்பெண்கள் உதவி கேட்டு சென்றால் மனிதாபிமான அடிப்படையில் உதவி செய்யாமல் இழுக்கான முறையில் இழிவான அரசியல் செய்த அரசியல்வாதிகளையும் நாங்கள் பார்த்திருக்கின்றோம். இவ்வாறான செயல்களுக்கு ஒருநாளும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் அனுமதிக்கக் கூடாது.

பதினெட்டு மாதங்களிற்குள் துரிதகதியில் அபிவிருத்திகளை செய்வதற்கு கடமைப்பட்டுள்ளோம். அந்த வகையில் அரசாங்கம் என்னிடத்தில் பொறுப்புக்களை வழங்கியுள்ளது. அரச கரும மொழிகள் அமுலாக்கல் சம்பந்தமாக பாடசாலை சமூகத்தினுடன் சம்மந்தப்பட்டு செயற்பட வேண்டியப ல விடயங்கள் உள்ளன.

எல்லா இனங்களுடன் செயற்பட வேண்டிய வீதி அபிவிருத்தி, பாலம் அமைத்தல், மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துதல் போன்ற அபிவிருத்திகள் இருக்கின்றது. ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்கள், பிரதேச சபை உறுப்பினர்கள் ஊடாகவும் எங்களது சேவைகள் தொடர வேண்டும்.

நாங்கள் பாரபட்சம் பார்ப்பதில்லை, முஸ்லிம்கள் என்ற அடிப்படையில் இந்த நாட்டில் சமாதான சகவாழ்வு வாழ்வதற்காக, நாட்டின் ஒருமைப்பாட்டிற்கும், நாட்டின் இறமைக்கும் எப்போதெல்லாம் சவால் ஏற்பட்டதோ அந்த நேரத்தில் நாட்டுப்பற்றுடன் எமது முஸ்லிம்கள் என்றும் இருந்திருக்கின்றார்கள்.

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் இந்த நாட்டில் முஸ்லிம்களுக்கு ஏற்பட்டுள்ள சவால்களை வடக்கு, கிழக்கு அதற்கு வெளியிலும் கவனமான முறையில் தலைவரது தலைமையில் தீர்வுகளைக் காண்பதற்காக முகங்கொடுத்துக் கொண்டிருக்கின்றோம்.

தேசிய ரீதியாக இந்துக்கள், முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள், பௌத்தர்கள் அத்தனை சமூகத்தவர்களுக்கும் சமமான முறையில் சமாதான சகவாழ்வகளைப் பெற்று வாழ்வதற்காக எங்களது சேவைகளை கண்ணும் கருத்துமாக தியாகத்தன்மையுடன் செய்ய கடமைப்பட்டுள்ளோம் என்றார்.

நல்லிணக்கம் ஒருமைப்பாடு மற்றும் அரச கரும மொழிகள் பிரதியமைச்சரின் இணைப்பாளர் இஸ்மாயில் சபீக் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் வாழைச்சேனை பிரதேச சபை உறுப்பினர்களான ஏ.எல்.ஏ.கபூர், எம்.ஐ.இம்தியாஸ், எம்.வி.வாசுதீன், ஓட்டமாவடி பிரதேச சபை உறுப்பினர்களான எஸ்.அன்வர், எஸ்.பதுர்தீன், எஸ்.அஸ்சுர் ரஹீம், பி.எஸ்.ஜெஸீமா, எம்.ஐ.மாஜிதா உட்பட பல முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

இதன்போது தேசிய நல்லிணக்கம் ஒருமைப்பாடு மற்றும் அரச கரும மொழிகள் பிரதியமைச்சர் அலிஸாஹிர் மௌலானாவுக்கு பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டு, நினைவுச் சின்னமும் வழங்கி வைக்கப்பட்டதுடன், சிறுமியரின் கலை நிகழ்ச்சிகளும் இடம்பெற்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here