வாலாட்டும் கூட்டம் அரசியல்வாதிகளை சுற்றித் திரிவதாக முஸ்லிம் அரசியல்வாதிகளிடத்தில் சொல்லப்படுகின்ற குற்றச்சாட்டாகும்.

0
260

(எஸ்.எம்.எம்.முர்ஷித்)

வாலாட்டும் கூட்டம் அரசியல்வாதிகளை சுற்றித் திரிவதாக முஸ்லிம் அரசியல்வாதிகளிடத்தில் சொல்லப்படுகின்ற குற்றச்சாட்டு என மீன்பிடி நீரியல்வள கிராமிய பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார்.

கொடகே தேசிய கையெழுத்துப் பிரதிப் போட்டியில் முதல்பரிசு பெற்ற கவிஞர் காத்தநகர் முகைதீன் சாலி எழுதிய மழை நின்ற போதும் கவிதை நூல் வெளியீட்டு விழா காத்தான்குடி பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு இடம்பெற்ற போது கலந்து கொண்டு மேற்சொன்னவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்-

அதிகாரம் உனக்கிருந்தால் பூக்கள் மாலையாகும், அதிகாரம் நீ இழந்தாய் செருப்பும் கேள்வி கேட்கும், இதுபோல எத்தனை பேருக்கு மாலை போட்டு இருப்பீர்கள். இது முஸ்லிம் அரசியலில் இருக்கின்ற மாபெரும் குறைபாடு. தமிழ் அரசியலில் எவ்வாறு என்று எனக்கு தெரியாது, ஆனால் சிங்கள அரசியலில் இவ்வாறு கிடையவே கிடையாது. இந்த நிலவரம் முஸ்லிம் பிரதேசத்தில் முஸ்லிம் அரசியலில் குடி கொண்டிருக்கின்ற ஒரு வியாதியை துள்ளியமாக எடுத்து காட்டியுள்ளார்.

பொதுவாக அரசியல்வாதிகளிடத்தில் சொல்லப்படுகின்ற குற்றச்சாட்டு வாலாட்டும் கூட்டம் அரசியல்வாதிகளை சுற்றித் திரிவதாக சொல்லப்படுகின்றது. சிங்கள பிரதேசத்தில் இவ்வாறு சொல்லமாட்டார்கள். ஏன் சிங்கள பிரதேசத்தை ஒப்பிட்டு நோக்குகின்றேன் என்று சொன்னால் எனது அரசியலில் ஒவ்வொரு பிராந்தியங்களுக்கும் சென்று பார்க்கின்ற பொழுது அம்மக்கள் எவ்வாறு நடந்து கொள்கின்றார்கள் என்பதை நான் பார்க்கின்றேன்.

சிங்கள பிரதேசத்தில் இல்லை. ஆனால் முஸ்லிம் பிரதேசங்களில் இவ்வாறு சொல்லிக் கொண்டுதான் இருப்பார்கள். முஸ்லிம் அரசியல் தலைவர்களிடத்தில் இந்த குற்றச்சாட்டு இருக்கின்றது. வாக்காளர்கள் பணத்திற்கும், பொருட்களுக்கும் வாக்களிப்பார்கள், வாக்காளர்கள் கௌரவமாக நடந்து கொள்வதற்கு முயற்சிப்பதில்லை. அரசியல்வாதிகளை அவர்கள் பழுதடையச் செய்கின்றார்கள்.

ஐந்து வருட காலப்பகுதிக்குள் உங்களுக்கு தேவையான, பிரதேசத்திற்கு, சமூகத்திற்கு தேவையான விடயங்களை செய்து தருகின்றோம் என்கின்ற விடயத்தை கொண்டுதான் வாக்குகளைக் கேட்பது. வாக்காளர்களிடத்தில் சிலர் பணம் மற்றும் பொருட்களை பார்த்து வாக்குகளை போடுகின்றனர். அவர்களின் கணக்கு முடிந்த பின்பு அந்த அரசியல்வாதிகள் அவர்களை பார்க்க வேண்டும் என்கின்ற தேவைப்பாடு கிடையாது என்றார்.

காத்தான்குடி ஜாமியதுல்பலாஹ் செயலாளர் கலாபூசணம் கவிமணி எம்.எச்.எம்.புஹாரி தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் காத்தான்குடி நகர சபை உறுப்பினர்களான இல்மி அகமட் லெப்பை, எம்.பி.பிர்தௌஸ், புரவலர் தேசமான்ய ஏ.எல்.மீராசாஹிபு, கவிஞரும் ஊடகவியலாளருமான ரீ.எல்.ஜவ்பர்கான் உட்பட பல பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

இதன்போது “மழை நின்ற போதும்” கவிதை நூல் முதல் பிரதி புரவலர் தேசமான்ய ஏ.எல்.மீராசாஹிபுவுக்கு வழங்கி வைக்கப்பட்டதுடன், அதிதிகளுக்கும் இதன் பிரதிகள் வழங்கி வைக்கப்பட்டது. கொடகே சகோதரர்கள் பிரைவட் லிமிட்டட்டினால் கவிஞர் காத்தநகர் முகைதீன் சாலி நினைவுச் சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here