கிண்ணையடியில் வீதி அபிவிருத்தி நிறைவேற்று பொறியியலாளருக்கு எதிராக போராட்டம்

0
349

(எஸ்.எம்.எம்.முர்ஷித்)

வீதி அபிவிருத்தி நிறைவேற்று பொறியியலாளர் கிண்ணையடி பெயர் பலகையை புதுபிக்க அனுமதி வழங்காமைக்கும், வாழைச்சேனை பிரதேசசபை உறுப்பினரை தொலைபேசியூடாக அச்சுறுத்தமைக்கும் எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் புதன்கிழமை மட்டக்களப்பு கொழும்பு பிரதான வீதியின் கிண்ணையடி சந்தியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

வீதி அபிவிருத்தி நிறைவேற்று பொறியியலாளர் கிண்ணையடி பெயர் பலகையை புதுபிக்க அனுமதி வழங்காமைக்கும், கிண்ணையடி மில்லர் விளையாட்டுக் கழகத்தினை அவமதித்தமைக்கும், வாழைச்சேனை பிரதேச சபை உறுப்பினர் கு.குணசேகரம் என்பவரை தொலைபேசியூடாக அச்சுறுத்தியமை தொடர்பாக அரச அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு வரும் வகையில் குறித்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.

இதன்போது தடுக்காதே தடுக்காதே மில்லரின் உரிமையை தடுக்காதே, கிராமத்திற்கு கிராமம் சட்டங்கள் வேறுபடுகின்றதா?, உடைக்காதே உடைக்காதே எங்கள் அடையாளத்தை உடைக்காதே, பெயர் பலகையை புதுப்பிக்க அனுமதியை வீதி அதிகார சபை மறுப்பது ஏன்?, நீங்கள் உடைக்க நினைப்பது சீமெந்து தூண்கள் அல்ல எங்கள் உணர்வுகளையும், உரிமைகளையும் என்ற வாசகங்கள் அடங்கிய பதாதைகளுடன் மக்கள் கலந்து கொண்டனர்.

கடந்த 1991ம் ஆண்டு கிண்ணையடி பொதுமக்களினால் அமைக்கப்பட்ட கிண்ணையடி பெயர் பலகை ஒரு சில மாதங்களுக்கு முன்னர் சில விசமிகளால் உடைக்கப்பட்ட நிலையில் பொதுமக்களின் பங்களிப்புடன் மீண்டும் கிண்ணையடி பெயர் பலகையை அமைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

இதற்கான அனுமதிகள் வாழைச்சேனை பிரதேச சபை மற்றும் வாழைச்சேனை பிரதேச அபிவிருத்திக் குழுவிலும் அனுமதி பெறப்பட்ட நிலையில் வீதி அபிவிருத்தி நிறைவேற்று பொறியியலாளரினால் பெயர் பலகையை புதுபிக்க அனுமதி வழங்க முடியாது எனவும்ää இதனை உடனடியாக உடைக்குமாறும் தெரிவிக்கப்பட்டதாக ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட பொதுமக்கள் தெரிவித்தனர்.

அத்தோடு இவ்விடயம் தொடர்பாக வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும், இவ்வீதியினூடாக கிண்ணையடி, சுங்கான்கேணி, சாராவெளி, பிரம்படித்தீவு, முருக்கன்தீவு உட்பட்ட பல கிராம மக்கள் பயணிப்பதாகவும் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் மேலும் தெரிவித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here