ரிதிதென்னையில் ஹேரோயினுடன் ஒருவர் கைது.

0
410

(எஸ்.எம்.எம்.முர்ஷித்)

வாகரை ரிதிதென்னை பிரதேசத்தில் வியாபாரத்திற்காக ஒரு இலட்சம் ரூபாய் பெறுமதியான 3110 மில்லி கிராம் ஹேரோயின் கொண்டு சென்றவரை நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை கைது செய்துள்ளதாக வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தனஞ்ஜய பெரமுன தெரிவித்தார்.

வாழைச்சேனை பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து ரிதிதென்னை பகுதியிலுள்ள வயல் செய்கை இடத்திற்கு விற்பனைக்காக கொண்டு சென்ற ரிதிதென்னை பகுதியைச் சேர்ந்த 26 வயதுடைய நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

வாழைச்சேனை பொலிஸ் நிலைய போதைப் பொருள் ஒழிப்பு பிரிவு பொறுப்பதிகாரி ஏ.சிவதர்சன் தலைமையிலான குழுவினர்களான இந்திக்க பெரேரே, எஸ்.தினுச, எஸ்.நிமால் உள்ளிட்டோர் ஒரு இலட்சம் ரூபாய் பெறுமதியான மூவாயிரத்தி நூற்றி பத்து மில்லி கிராம் ஹேரோயின் மற்றும் சந்தேக நபரையும் கைது செய்துள்ளனர்.

குறித்த சந்தேக நபர் தம்புள்ளை பகுதியில் இருந்து ஹேரோயின் எடுத்து வந்து வியாபார நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் இருந்து தெரிய வருவதாகவும், வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் அதிக போதைப் பாவனை இடம்பெற்று வருவதால் அதனை தடுக்கும் வகையில் விசேட பொலிஸ் குழுவினர் இரவு பகலாக ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாகவும், வாழைச்சேனை பொலிஸ் நிலைய போதைப் பொருள் ஒழிப்பு பிரிவு பொறுப்பதிகாரி ஏ.சிவதர்சன் தெரிவித்தார்.

இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் சட்ட விரோத போதைப் பொருள் பாவனை மற்றும் விற்பனைகள் அதிகரித்து காணப்படுவதை தடுக்கும் வகையில் வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தனஞ்ஜய பெரமுன வழிகாட்டலில் பல்வேறு வேலைத் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here