வாழைச்சேனையில் தௌஹீத் ஜமாஅத்தின் (JDIK) பள்ளிவாயல் தாக்கப்பட்டமை தொடர்பாக…

0
1217

தலைவர்/ செயலாளர்,
அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா,
கல்குடாக் கிளை.
இல 04, கே.பீ. ஹாஜியார் வீதி,
05.06.2018

அன்புடையீர்
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹு

வாழைச்சேனையில் தௌஹீத் ஜமாஅத்தின் (JDIK) பள்ளிவாயல் தாக்கப்பட்டமை தொடர்பாக…

கடந்த 04.06.2018ம் திகதி கல்குடா தௌஹீத் ஜமாஅத்தின் (JDIK) வாழைச்சேனை கோறளைப்பற்று மத்தி பிரதேசத்தில் அமையப்பெற்றுள்ள பள்ளிவாயலொன்று ளுஹர்த் தொழுகை வேளையில் தாக்கப்பட்டு தொழுகைக்கு வந்திருந்த ஐந்து சகோதரர்கள் மிக மோசமாக துன்புறுத்தப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இத்தாக்குதலை கல்குடா ஜம்இய்யதுல் உலமாவின் நிருவாகத்திலுள்ள ஒரு சில உலமாக்களை உள்ளடக்கிய தப்லீக் ஜமாஅத்தைச் சேர்ந்தவர்கள் எனக் கூறிக்கொள்ளும் ஒரு குழுவினராலேயே மேற்கொள்ளப்பட்டுள்ளது என்பதை அறியத்தருகின்றோம்.

இதேவேளை கடந்த 01.06.2018ம் திகதி அறபா நகர் ஜும்ஆப் பள்ளிவாயலில் நிருவாகத்திற்கெதிரான குழப்பம் ஒன்றும் நடைபெற்று அமளிதுமளியில் முடிந்துள்ளது. இந்த இரண்டு சம்பவங்களும் அதற்கு முன்னர் நடைபெற்ற சில சம்பவங்களும் தப்லீக் ஜமாஅத்தினர் எனக் கூறிக்கொள்ளும் உலமாக்களைக் கொண்ட ஒழுங்கமைக்கப்பட்ட குழு ஒன்றினாலயே திட்டமிட்டு முன்னெடுக்கப்பட்டுள்ளமை கவனத்திற்கொள்ளத்தக்கதாகும்.

இச்சம்பவங்களில் பொது மக்கள் அணிதிரண்டு தாக்குதலைச் செய்ததாக கூறப்பட்டாலும் பொதுமக்களின் பிரவேசத்திற்கு பதிலாக கல்குடா ஜம்இய்யதுல் உலமா நிருவாகத்தில் அங்கம் வகிக்கும் ஒரு சிலரினால் ஒழுங்கமைக்கப்பட்ட முன்கூட்டிய திட்டமிடல்களுடன் கூடிய ஒரு குழுவாகவே இது செயல்படுகின்றது. கல்குடா ஜம்இய்யதுல் உலமாவில் முக்கிய அங்கம் வகிக்கும் உலமாக்களைக் கொண்ட நிறுவனம் என்ற வகையில் இச்சம்பவங்ளை நாம் வன்மையாக கண்டிப்பதுடன் அவற்றுடன் சம்பந்தப் பட்டவர்களுக்கெதிராக தக்க நடவடிக்கை எடுக்குமாறும்; இச்சம்பவத்திற்கெதிராக பகிரங்க கண்டனம் ஒன்றை விடுக்குமாறும் கேட்டுக்கொள்கின்றோம்.

அப்பாவி மக்களை எமக்கெதிராக இப்புனிதமிகு ரமழான் மாதத்தில் தூண்டிவிட்டு இப்பிரதேசத்தின் அமைதியை குலைக்கும் வண்ணம் இவ் உலமாக்களை தலைமையாகக் கொண்டு குழுவாக செயல்படும் அளவுக்கு எம்மிடமுள்ள இஸ்லாமிய மார்க்கத்திற்கெதிரான செயற்பாடுகள் என்னவென தெளிவு படுத்துமாறு கோருவதுடன் அவ்வாறு இருப்பின் அவற்றை பகிரங்கமாக பொது மக்களுக்கு தெளிவூட்டுமாறும் கேட்டுக்கொள்கின்றோம்.

அதிகார மட்டங்களில் கல்குடா ஜம்இய்யதுல் உலமாவின் பெயரைப் பயன்படுத்தி செயற்பட்டு வரும் இக்குழுவினருக்கெதிராக தாங்கள் தக்க நடவடிக்கை எடுக்காமல் மௌனம் காத்து, மீண்டும் இத்தகைய சம்பவங்கள் தொடருமாயின் நாமும் எமக்கெதிரான செயற்பாடுகளைத் தடுத்து நிறுத்த களத்தில் இறங்க வேண்டி வரும். இது இப்பிரதேசத்தின் அமைதி நிலையை வெகுவாகப் பாதிக்கும் என்பதை எச்சரிக்கையாகக் கூறிக்கொள்ள விரும்புகின்றோம்.

……………….
அஷ் ஷெய்க் ஏ.எல். பீர் முஹம்மத் (காஸிமி) MA
பொதுத் தலைவர்
JDIK

பிரதி
• அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா – கொழும்பு

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here