பிரதி அமைச்சர் ஹரீசின் முயற்சியினால் கிழக்கு மாகாணத்தில் விஷேட ஹைப்ரிட் மின் திட்டம்

0
270

(அகமட் எஸ். முகைடீன்)

கிழக்கு மாகாணத்தில் விஷேட ஹைப்ரிட் மின் திட்டத்தை அமுல்படுத்துவதற்காக அரச தொழில் முயற்சி மற்றும் கண்டி நகர அபிவிருத்தி பிரதி அமைச்சர் சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸின் அழைப்பின்பேரில் ஜேர்மன் நாட்டு முதலீட்டாளர்கள் மற்றும் தொழிநுட்பவியலாளர்கள் இலங்கைக்கு வருகை தந்து குறித்த திட்ட அமுலாக்கல் தொடர்பாக கலந்துரையாடினர்.

குறித்த ஹைப்ரிட் மின் திட்டம் தொடர்பான கலந்துரையாடல் அரச தொழில் முயற்சி மற்றும் கண்டி நகர பிரதி அமைச்சரின் அலுவலகத்தில் நடைபெற்றது.

இக்கலந்துரையாடலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதித் தலைவரும் அரச தொழில் முயற்சி மற்றும் கண்டி நகர அபிவிருத்தி பிரதி அமைச்சருமான சட்டத்தரணி எச்.எம்.எம் ஹரீஸ், ஜேர்மன் நாட்டு முதலீட்டாளர்கள் மற்றும் தொழிநுட்பவியலாளர்கள், அரச தொழில் முயற்சி மற்றும் கண்டி நகர அபிவிருத்தி பிரதி அமைச்சரின் பிரத்தியேக செயலாளர் எம்.என். அல்தாப் ஹுசைன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

அதனைத் தொடர்ந்து பிரதி அமைச்சர் ஹரீசின் ஏற்பாட்டில் மேற்குறித்த குழுவினர் மின்சக்தி மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய, அமைச்சின் செயலாளர் டொக்டர் பி.எம்.எஸ். வத்தேகோட, இலங்கை நிலைபெறுதகு வலு அதிகாரசபையின் தலைவர் உள்ளிட்ட அதிகாரிகளுடன் குறித்த திட்டத்தை அமுல்படுத்துவது தொடர்பில் நேற்று (13) புதன்கிழமை கலந்துரையாடல்களை மேற்கொண்டு அத்திட்டத்தை ஆரம்பிப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.

ஹைப்ரிட் மின் திட்டத்தினால் மின் கலம், சூரிய சக்தி, காற்றாடி மற்றும் மின்பிறப்பாக்கி போன்றவற்றைப் பயன்படுத்தி குறைந்த செலவில் மின்சக்தி உற்பத்தி செய்யப்படவுள்ளது. இதனால் கிழக்கு மாகாண மக்களின் மின் பாவனைக் கட்டணம் கணிசமான அளவு குறைவடையுமென எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் இத்திட்டத்தினால் கிழக்கு மாகாணத்தில் வேலைவாய்ப்புக்கள் உருவாகுவதோடு மேலும் பல அநுகூலங்கள் உருவாகுவதற்கான வாய்ப்புகள் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here