இன்னும் உருவாக்கப்படாத ‘தலைமைத்துவச் சங்கிலி’

0
407

அரசியல் விடுதலைப் பயணத்தை அஞ்சலோட்டத்திற்கு ஒப்பிடுவதுண்டு. அஞ்சலோட்டத்தில் முதலில் ஓடுபவர் முதற்கொண்டு ஓட்டத்தை நிறைவு செய்பவர் வரை எல்லோரும் ஓட்டப்பாதைக்கு வெளியே இருக்கும் புதினங்களை பராக்குப் பார்த்துக் கொண்டிருக்காமல், இலக்கை நோக்கி ஓட வேண்டும். ஒருவரிலிருந்து மற்றவருக்கு அச் சிறியபொல் சரியாக கைமாற வேண்டும். அஞ்சலோட்டத்தை ஒருவரால் தனித்து ஓடி முடிக்க முடியாது. அதுபோலத்தான், மக்கள்சார்பு அரசியல் விடுதலைப் பயணமும் அமையும்.

உலக வரலாற்றிலும் சரி இலங்கையின் அனுபவத்திலும் சரி எந்தவொரு இனக் குழுமத்தின் விடுதலைப் பயணத்தையும் தனியே ஒரு அரசியல் தலைமையால் அவரது காலத்துக்குள்ளேயே இலக்கை அடைய முடியாமல் போனதென்பதே நிதர்சனம். மக்களின் அபிலாஷைகள் என்கின்ற பொல்லானது, பல தலைவர்களின் கைகளில் மாறி மாறிச் சென்றே பெரும்பாலும் இலக்கை அடைந்திருக்கின்றது.

ஒரு தலைவர் கையிலெடுத்துச் செல்கின்ற அபிலாஷைகளை அதனைத் தொடர்ந்து அப்பதவிக்கு வருபவர் எடுத்துக் கொண்டு வேகம் குறையாமல் ஓட வேண்டும். அதன்மூலமே அரசியல் விடுதலையை அடைய முடியும். அப்படியென்றால் அங்கு ஒரு ‘தலைமைத்துவச் சங்கிலி’ இருக்க வேண்டும். ஆனால் இலங்கையில் பொதுவாக எந்த அரசியல் கட்சிகளிடத்திலும் குறிப்பாக முஸ்லிம்களின் அரசியலில் இந்த தலைமைத்துவச் சங்கிலி இன்று வரை உருவாக்கப்படவில்லை.

உலக அனுபவம்

உலகில் வல்லரசுகளின் யுத்தமோ, பயங்கரவாதத்தை ஒழிப்பதாக சொல்கின்ற அமெரிக்க நேச நாடுகளின் படை நடவடிக்கையோ, ஏகாதிபத்திய அடக்குமுறைக்கு எதிராக போராடுகின்ற ஆயுதக்குழுக்களின் முன்னெடுப்புக்களோ, இலங்கையின் யுத்தமோ, பலஸ்தீனத்தின் போராட்டமோ ஒரு குறிப்பிட்ட தலைவரின் காலத்திற்குள் முடிவுக்கு கொண்டு வரப்படவில்லை என்பதை நாமறிவோம்.
உலக பொலிஸ்கார வேடமணிந்த அடக்குமுறையாளர்களுக்கு எதிராக காஸாவில் கவச வாகனங்களுக்கு முன்னால் நெஞ்சை நிமிர்த்திக் கொண்டு ஒன்றன்பின் ஒன்றாக முன்னுக்கு வருகின்ற சிறுவர்களி;ன் போராட்டமோ, எதியோப்பியாவிலும் இன்னபிற நாடுகளில் இந்தியாவில் சில மாநிலங்களிலும் அன்றாடம் உணவுக்காகப் போராடுகின்ற மக்களின் வயிற்றுப் பசி போராட்டமோ, இலங்கைத் தமிழர்களின் போராட்டமோ, முஸ்லிம்களின் தனித்துவ வேட்கையோ…. ஒரு தலைமுறைக்குள் அல்லது ஒரு தலைவரின் காலத்திற்குள் வெற்றிபெற்றதை காண முடியவில்லை.
ஆக, எந்தவொரு அரசியல், சமூக, பொருளாதார, இராணுவ முன்னெடுப்பாக இருந்தாலும் அதை ஒருவர் விட்ட இடத்திலிருந்து முன்கொண்டு செல்வதற்கு அடுத்த தலைவர் தயார்நிலையில் இருக்க வேண்டும். அதாவது தலைமைத்துவச் சங்கிலி சரியாக இணைக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் இலங்கையில் இருக்கின்ற பெருந்தேசிய, முஸ்லிம், தமிழ்க் கட்சிகள் எதுவுமே ஒழுங்கான தலைமைத்துவச் சங்கிலியை பிணைக்கவில்லை என்பது கவனிப்பிற்குரியது. இதனால், தலைமைப பதவி திடீரென வெற்றிடமாகும் போது, அங்கிருந்து ஒரு அடிகூட முன்னோக்கி எடுத்து வைக்க முடியாத நிலை ஏற்படும் என்பதால் இது குறித்து பேச வேண்டியிருக்கின்றது.

தலைமைக் காய்ச்சல்

இன்றைய முஸ்லிம் அரசியல் இலக்குத் தெரியாத பாதையில் ஓடிக் கொண்டிருக்கின்றதோ என்ற எண்ணம் அடிக்கடி ஏற்படுவதுண்டு. பல முஸ்லிம் கட்சித் தலைவர்களுக்கு ‘தேசியத் தலைமை’ காய்ச்சல் பிடித்திருக்கின்றது. ஒரு கட்சி நாடெங்கும் இயங்கும் போது, அதற்கு பிராந்தியக் கட்சிகள் இல்லாத போது தலைமைப் பதவியில் இருப்பவர் தேசிய தலைவரே. அதைவிடுத்து அது ஒரு மகுடமல்ல. ஆனால்;, சில கட்சித் தலைவர்களுக்கு அதைச் சூடும்போது தலை சற்று ‘பெருக்கவே’ செய்கின்றது.

ஒவ்வொரு கட்சியினதும் அல்லது அரசியல்வாதிகளினதும் வாக்காளர்கள் நடுநிலையாக சிந்திக்கக் கூடியவர்களாக இருக்கின்ற போதிலும் அக்கட்சிகளின் தீவிர ஆதரவாளர்கள் என்போர் விசிறிகளாக, ஜால்ரா அடிப்பவர்களாக, மந்திரித்து விடப்பட்டவர்களாக வளர்க்கப்பட்டிருக்கின்றார்கள் என்றே சொல்ல வேண்டும். தலைவர்களுக்கு ‘தலைமைத்துவ மோகம்’ வருவது போல் இவர்களுக்கு ‘தலைவர்கள் மீதான மோகம்’ வந்துவிடுகின்றது.

அரசியல் தலைவர்களை அவருடைய ஆதரவாளர் கூட்டம் பல சந்தர்ப்பங்களில் ஒரு சினிமாத்தனமாக நோக்குவதையும். தோழில் வைத்து சுமந்து செல்வதையும், கட்டிப் பிடித்து முத்தம் கொடுப்பதையும் முஸ்லிம் அரசியல் பெருவெளியில் காண்கின்றோம். இது கம்ய10னிச, இடதுசாரி கொள்கைகளுக்கு முரணானது மட்டுமன்றி இதனால் தலைவர்களுக்கு இன்னும் அப்பதவியில் இருக்க வேண்டுமென்ற போதை தலைக்கேறுகின்றது என்று சொன்னால் மிகையில்லை.

இந்தியாவில் நடிகைகளின் சிலைக்கு பால் ஊற்றுவதற்கும் ஒன்றுமே சாதனை செய்யாத தலைவனை உணர்ச்சி மிகுதியால் தோழில் சுமப்பதற்கும் இடையில் பெரிய வித்தியாசங்கள் இருப்பதாக தெரியவவில்லை. அத்துடன் இது பக்குவப்படாத முஸ்லிம் அரசியலின் அடையாளங்களுமாகும்.

சுற்றியுள்ள கூட்டம்

இலங்கை முஸ்லிம் கட்சி தலைவர்கள் மற்றும் முக்கிய முஸ்லிம் அரசியல்வாதிகள் பொதுவாக தம்மைச் சுற்றி ஒரு வட்டத்தை உருவாக்கியிருக்கின்றார்கள். குறிப்பாக, மக்கள் தொடர்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டிருப்பார்கள். வாக்களித்த மக்கள் யார் என்றும் அவர்களுக்கு தெரியாது. முக்களுடன் தொடர்புபடும் நாகரிகமும் தெரியாது. இணைப்பு அதிகாரிகள் என்று பலர் இருப்பார்கள். அவர்கள் மக்களையும் அபிவிருத்தித் திட்டங்களையும் தலைவருடன் இணைப்பதை விட வேறு வேறு விடயங்களுக்கே முக்கியத்துவம் கொடுத்து செயற்படுவதை காண முடிகின்றது.

முஸ்லிம் தலைவர்கள், அமைச்சர்களைச் சுற்றி தலையாட்டுகின்ற கூட்டம் ஒன்று இருக்கின்றது. இதில் எடுபிடிகள், சண்டித்தனம் பேசுகின்றவர்கள், ஜால்ரா அடிப்பவர்கள், அவருக்கு எதிராக வரும் அம்புகளை தாங்கிப் பிடிக்கின்ற ஆட்கள் எனும் வகையறாக்கள் இதில் அடங்கும். இதில் இலங்கையிலுள்ள எந்த அரசியல் கட்சி தலைவரோ அல்லது அரசியல்வாதிகளோ விதிவிலக்கல்ல, ஓரிருவரைத் தவிர.
இவ்வாறு எல்லா வகையான கூட்டத்தாரையும் உருவாக்கி வைத்திருக்கும் முஸ்லிம் தலைமைகள்ää தலைமைத்துவச் சங்கிலியை அதாவது அடுத்த தலைவர்களை மாத்திரம் சரியாக உருவாக்குவதும் இல்லை. அதனை வெளியுலகுக்கு தெரியப்படுத்துவதும் இல்லை என்பதுதான் கவலைக்குரிய விடயமாகும்.

சில அரசியல் தலைவர்கள் எவ்வகையிலும் தம்மை மேவாத, தம்மை எதிர்த்து எதனையும் பேசாத அரசியல் செயற்பாட்டாளர்களையே தன்கூட வைத்திருக்க விரும்புகின்றார்கள். அப்படி எதிர்த்து பேசுபவர் மிக இலகுவாக ‘துரோகி’ முத்திரை குத்தப்படுகின்றார். பல அரசியல் தலைவர்களுக்கு, தனக்குப் பிறகு இந்தக் கட்சி, இந்த பயணம் எப்படி இருக்க வேண்டும் என்ற பிரக்ஞை எதுவும் இருப்பதாக தெரியவில்லை. ஏதோ தன்னோடு இந்தக்கட்சி முடிந்துவிடும் அல்லது முஸ்லிம்களின் அபிலாஷைகள் நிறைவேறிவிடும் என்பது போலவே அவர்களது செயற்பாடுகள் தெரிகின்றன.
பொதுவாக அரசியல் தலைவர்கள், அமைச்சர்கள் மற்றும் பிரதியமைச்சர்களான முஸ்லிம் அரசியல்வாதிகளுடன் இணைய வருகின்ற நபர்களுள் 95 சதவீதமானோர் எதாவது ஒரு சுயஇலாப நோக்கத்திற்காகவே வருகின்றனர். கொந்தராத்து கிடைக்குமா? எதாவது உழைத்துக் கொள்ள வழி கிடைக்குமா? என்று பலர் வருகின்றார்கள். தொழில் கிடைக்குமா? தொழில்களை விற்க முடியுமா? அமைச்சரை வைத்து எதாவது வியாபாரம் செய்யலாமா? என்ற எதிர்பார்ப்புடன் சிலர் வந்து சேர்கின்றார்கள்.

அடுத்த தேர்தலில் பிரதேச சபையில் போட்டியிட, மாகாண சபையில் குதிக்க வேண்டும் என்ற பேரார்வத்துடன் சிலர் முஸ்லிம் கட்சித் தலைவர்கள் மற்றும் அரசியல்வாதிகளிடம் வந்து சேர்கின்றனர். மாற்றுக் கட்சியின் மீது கொண்ட கோபத்திலும் ஒரு குழு வந்து சரணடைகின்றது. ஆக, இந்த முஸ்லிம் சமூகத்திற்கு ஏதாவது நல்லது செய்ய வேண்டும், அபிலாஷைகளை வென்றெடுப்பதற்கான போராட்டத்திற்கு பங்களிப்பு வழங்க வேண்டும் என்ற எண்ணத்தில் 2 சதவீதத்திற்கும் குறைவான அபூர்வ பிறவிகளே வந்து சேர்ந்து கொள்கின்றார்கள்.
பல முஸ்லிம் தலைவர்கள் தமக்குப் பிறகு இந்த சமூகத்தை தலைமை தாங்கி வழிநடாத்தக் கூடிய தலைமைகளை உருவாக்கவில்லை. சிலர், அடுத்த தலைவனை உருவாக்கினால் நமது தேசியத் தலைமை பதவிக்கு ஆபத்தாக வந்துவிடும் என்று உருவாக்கவில்லை. சிலர் நம்மை விட வேறு யாரும் அரசியலில் சோபித்துவிடக் கூடாது என்பதில் குறியாக இருக்கின்றனர்.

ஒரு சில அரசியல் தலைமைகளுக்கு, தமக்குப் பிறகு முஸ்லிம்களின் அபிலாஷைகளை முன்கொண்டு செல்வதற்கான நல்ல இளம் தலைவர்கள் கிடைப்பதில்லை என்பதையும் ஏற்றுக் கொள்ள வேண்டியுள்ளது. ஏனெனில் கொந்தராத்துக்காகவும் தொழிலுக்காகவும் பணம் உழைப்பதற்காகவும் மாறுவேடம் ப10ண்டுகொண்டு வருகின்றான் எனத் தெரிந்து கொண்டு அவனை எவ்வாறு ஒரு தலைமையால், அடுத்த தலைவராக முன்மொழிய முடியும்? என்ற கேள்வியிலும் நியாயமிருக்கின்றது.

அஷ்ரஃபிற்கு பிறகு

இப்படியாக முஸ்லிம் அரசியலில் நெடுங்காலமாகவே இந்த தலைமைத்துவச் சங்கிலி மிகச் சரியான முறையில் கோர்க்கப்படவில்லை என்பது கண்கூடு. ஆனால் இது மிகவும் பாரதூரமான ஒரு நிலைமை என்பதுடன், ஒரு இனக்குழுமத்தின் விடுதலைப் பயணத்தை ஸ்தம்பிதமடைய வைக்கும் என்பதையும் இலங்கை முஸ்லிம்கள், எம்.எச்.எம்.அஷ்ரஃபின் மரணத்திற்குப் பிறகு ஏற்பட்ட சிக்கல்களின் போது அனுபவ ரீதியாக உணர்ந்தனர்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபக தலைவர் மர்ஹ_ம் அஷ்ரஃப் ஓப்பீட்டளவில் சிறந்த, முன்மாதிரியான ஒரு தலைவராக நோக்கப்படுபவர். தனித்துவ அடையாள அரசியலில் அவர் வகித்த பாத்திரத்தை அதற்கு முன்னரோ பின்னரோ எந்த முஸ்லிம் அரசியல்வாதியாலும் நிரப்ப முடியவில்லை என்பதுடன், முஸ்லிம் அரசியல்வாதிகளால் கூட்டாகச் சேர்ந்தும் அவர் செய்த காரியங்களை செய்ய முடியாது போயுள்ளது.

அஷ்ரஃப் தனது பாசறையில் தலைமைத்துவ தகுதியுள்ள பலரை உருவாக்கினார். ஆயுதமில்லா போராட்டம் ஒன்றின் ஊடாக, ஆயுதங்களையும் எதிர்கொண்டு நின்று மக்கள்சார்பு அரசியலை செய்யக் கூடிய சிலரை வளர்த்தெடுத்தார் என்பதை மறுப்பதற்கில்லை. ஆனால் அவர்கூட தலைமைத்துவச் சங்கிலியை சரியாக கட்டமைக்கவில்லையோ என்ற எண்ணம், அவரது மறைவுக்குப் பின்னர் ஏற்பட்டது.
அஷ்ரஃபின் திடீர் மறைவையடுத்து முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் பதவியில் எதிர்பாராத வெற்றிடமொன்று ஏற்பட்டது. அஷ்ரஃப் சரியாக தலைமைத்துவச் சங்கிலியை அமைத்து தனக்குப் பின்னர் ‘இவர்தான்’ தலைவராவார் என்று பகிரங்கமாக சொல்லியிருந்திருப்பாரேயானால் அவரை நியமித்திருக்க முடியும். ஆனால் கிட்டத்தட்ட சம அந்தஸ்துள்ள பலர் இருந்தாலும் தலைவராக யாரை நியமிப்பது என்ற முடிவை எடுப்பதில் பெரும் இழுபறி நிலவியது. கடைசியாக அப்பதவியை விரும்பிக் கேட்ட றவ10ப் ஹக்கீமும், அஷ்ரஃபின் பாரியார் பேரியலும் மு.கா.வின் இணைத் தலைமைகளாக நியமிக்கப்பட்டனர்.

ஆனால் சில மாதங்களுக்குள்ளேயே மு.கா.வின் தனித் தலைமையாக ஹக்கீம் அறிவிக்கப்படுகின்றார். பேரியல் அஷ்ரப், மு.கா.வின் ஸ்தாக தவிசாளரான சேகு இஸ்ஸதீன் போன்றோருடன் இணைந்து தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவியாகின்றார். ஆனால் என்ன நடந்தது? றவூப் ஹக்கீமை தலைவராக்கிய அதாவுல்லா போன்றோரே ஓரிரு வருடங்களில் அவரது தலைமைத்துவம் சரியில்லை என்று கூறுகின்றனர். முதலில் அதாவுல்லா, பின்னர் றிசாட் பதியுதீன், அமீரலி, நஜீப் ஏ மஜீத், அதன்பிறகு பசீர் சேகுதாவூத் ஹசனலி என மூன்று நான்கு கட்டங்களாக பிரிந்து வந்து சிறிது காலத்தின் பின்னர் அவர்கள் சொந்த முஸ்லிம் கட்சிகளை ஆரம்பித்தனர். தலைமைத்துவச் சங்கிலியில் ஏற்பட்ட குறைபாடே இதற்கு அடிப்படைக் காரணம் எனலாம்.

இப்போதும் கூட ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைமைப் பதவியைக் கைப்பற்ற பலர் காய்களை நகர்த்திக் கொண்டிருக்கின்ற போதிலும், அங்கு தலைமைத்துவச் சங்கிலி ஒன்று இருப்பதற்கான எந்த அடையாளங்களும் இல்லை. ஏதாவது ஒரு காரணத்தினால் மு.கா.வின் தலைமைத்துவத்திற்கு வெற்றிடம் ஏற்படுமாயின் அடுத்த மு.கா. தலைவர் இவர்தான் என்று கட்சி அறிவிக்கவும் இல்லை, மக்களுக்கு ஊகிக்கவும் முடியாதுள்ளது.

ஏனைய கட்சிகள்

மு.கா.வில் மட்டுமன்றி அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியிலும் தலைமைத்துவச் சங்கிலி இன்னும் கட்டமைக்கப்படவில்லை. இப்போது அதன் தலைவர் றிசாட் பதியுதீனின் முயற்சியை பிரதான மூலதனமாகக் கொண்டே கட்சி இவ்வளவு தூரம் பயணித்திருக்கின்றது. ஆனால் றிசாட்டுக்குப் பிறகு அந்தக் கட்சியின் தலைமைத்துவம் யார், அடுத்த, அதற்கடுத்த தலைவர்கள் யார் என்ற ஒரு தலைமைத்துவச் சங்கிலி இல்லை.

இதேபோன்று ஏ.எல்.எம்.அதாவுல்லா தலைமையிலான தேசிய காங்கிரஸ் கட்சியிலும் தலைமைத்துவச் சங்கிலி ஒன்று இதுவரை உருவாக்கப்பட்டதாக தென்படவில்லை. எல்லாக் கட்சிகளிலும் தலைமைத்துவப் பண்புள்ளவர்கள், சமூக சிந்தனை கொண்;டவர்கள், அரசியல் அறிவுள்ளவர்கள் ஒருசிலர் இருக்கின்றார்கள். ஆனால் அவர்களில் இருந்து அடுத்த தலைமுறைக்கான கட்சியின், முஸ்லிம் சமூகத்தின் ‘தலைவர்’ நிர்ணயிக்கப்படவில்லை என்பதே இங்கு முக்கியமான விடயமாகும். இந்நிலைமை, இன்னுமொரு பிரளயத்திற்கு வழிவகுப்பதுடன், முஸ்லிம் மக்களின் அரசியல் முன்னகர்வில் பின்னடைவுக்கும் காரணமாகலாம்.
முஸ்லிம் கட்சிகளில் மாத்திரமல்லாமல் தமிழ் கட்சிகள் மற்றும் பெருந்தேசிய கட்சிகளிலும் தலைமைத்துவச் சங்கிலியில் பெரும் குறைபாடுகளும் தொய்வுகளும் இருப்பதை காண முடிகின்றது.

அந்த வகையில், தமிழ் தேசியக் கூட்டமைப்பு அல்லது தமிழரசுக் கட்சியின் அடுத்த தலைமைகள் யார் என்ற கேள்விக்கு தமிழ் மக்களிடையே தெளிவான விடைகள் இல்லை. இரா.சம்பந்தன், மாவை சேனாதிராஜா மற்றும் சுமந்திரன் போன்றோருக்குப் பிறகு தமிழ்த் தேசியத்தின் பயண வழித்தடம் எவ்வாறு அமையும்? தமிழ்-முஸ்லிம் உறவுக்கு என்ன நடக்கும் ? என்பது பெரிய கேள்விகளாகும். அது ஒருபுறமிருக்க தமிழர் அரசியல் தலைமைத்துவ தொடரில் அடுத்தவர் யார் என்பது மயக்கமாகவே உள்ளது.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியிலும் அடுத்த தலைமைத்துவம் யார் என்பது தெரியாது. அடுத்து ஆட்சிக்கு வரும் ஜனாதிபதியே அடுத்த தலைவர் என்று சொல்லாமல் சொல்வது தலைமைத்துவச் சங்கிலியின் இலட்சணம் இல்லை. மாறாக, இந்தச் சங்கிலியில் அடுத்து வருபவர் நாட்டின் ஆட்சியைப் பிடிப்பதாகும். அதேபோன்று ஐக்கிய தேசியக் கட்சியிலும் முறையான தலைமைத்துவச் சங்கிலி இல்லை என்பதால் இப்போதே அடுத்த தலைவர் யார் என்ற பனியுத்தங்கள் ஆரம்பமாகிவிட்டதாக சொல்ல முடியும்.

அவசரமான பணி

எனவே, குறிப்பாக முஸ்லிம் அரசியலில் தலைமைத்துவச் சங்;கிலி ஒன்று உருவாக்கப்பட வேண்டும். தூரநோக்கு, வியூகம், கொள்கை என்றெல்லாம் சொல்கின்ற முஸ்லிம் கட்சிகள் மட்டுமன்றி முக்கிய முஸ்லிம் அரசியல்வாதிகளும் தமது கட்சியின் அல்லது சமூகத்தின் அடுத்த தலைவர் யார் என்று தீர்மானித்து, மற்றவர் அறியும்படி செய்ய வேண்டும். தனக்குப் பிறகு தனது கட்சியையும் கொள்கைகளையும் தங்குதடையின்றி முன்கொண்டு செல்வது அவசியமாகும். ஆனால், சில அரசியல்வாதிகளுக்கு இது அவசியமில்லை. ஏனெனில் அவர்களையே அரசியலில் இருந்து ஒதுக்க வேண்டுமென்று மக்கள் நினைக்கையில் அவர்களது சிஷ்யன்களும் அடுத்த அரசியல்வாதியாக, தலைமைதாங்க வந்து முஸ்லிம் அரசியலை நாசமாக்கத் தேவையில்லை.

எனவே இப்போதிருக்கின்ற தலைவர்கள் அடுத்த (இரண்டாம்நிலை) தலைவர்களை இனங்கண்டு, அடையாளப்படுத்த வேண்டும். அவர்கள் உண்மையிலேயே தலைமைத்துவ இலட்சணங்களை கொண்டவர்களாக, சமூக சிந்தனை உடையவர்களாக, பணத்திற்குப் பின்னால் போகாதவர்களாக இருக்க வேண்டும் என்பதே அடிப்படை நிபந்தனையாகும். அவ்வாறில்லாமல் பொருத்தமற்றவரை முன்மொழிந்தால், ஒரு இரும்புச் சங்கிலியின் நடுவே ஒரு ‘இறப்பர் வளையத்தை’ பொருத்தியது போலாகிவிடும்.

தலைமைத்துவச் சங்கிலியை உருவாக்குவதற்கு முன்னதாக, முதலில் இப்போதிருக்கின்ற தலைவர்கள் தம்மை ‘உயிரோட்டமுள்ள தலைமைகளாக’ ஆக்கிக் கொள்ளவும் வேண்டியுள்ளது.

– ஏ.எல்.நிப்றாஸ் (வீரகேசரி 24.06.2018)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here