மூவகை நண்பர்களில் நீங்கள் எவ்வகை?!

0
567

அல்லாமா முஹம்மத் பின் ஸாலிஹ் அல்உஸைமீன் (ரஹிமஹுல்லாஹ்) கூறுகின்றார்கள்:-
“நண்பர்கள் மூன்று வகைப்படுவர்:

1) பயனை எதிர்பார்த்துப் பழகும் நண்பன்:

பணம், சொத்துபத்து; அல்லது பதவி, அந்தஸ்து; அல்லது இவையல்லாத வேறு ஒன்றின் மூலம் உன்னிடமிருந்து பயன்பெறும் காலமெல்லாம் உன்னுடன் இவன் நட்பு பாராட்டிக் கொண்டிருப்பான். பயன்பாடு நின்றுபோய் விட்டால் உன்னை அவன் அறிந்துகொள்ள முடியாத அளவுக்கும், நீ அவனைத் தெரிந்து கொள்ளமுடியாத அளவுக்கும் அவன் உன் எதிரியாகி விடுவான். இப்படியானவர்கள் நிறையபேர் இருக்கின்றார்கள். தர்மங்கள், கொடுப்பனவுகள் விடயத்தில்தான் இவர்களில் அதிகம்பேர் குறை கூறிக்கொண்டிருப்பர். “தர்மங்களின் (பங்கீட்டு) விடயத்தில் உம்மைக் குறை கூறுவோரும் அவர்களில் உள்ளனர். அதிலிருந்து அவர்களுக்கு வழங்கப்பட்டால் திருப்தியடைகின்றனர். அதிலிருந்து அவர்களுக்கு வழங்கப்படாவிட்டால் உடனே அவர்கள் கோபம் கொள்கின்றனர்”. (அல்குர்ஆன், 09:58)

இவன் உனது ஆருயிர் நண்பனாக இருப்பான்; மனிதர்களில் மிக கண்ணியமானவனாக உன்னிடம் இவன் இருப்பதை நீ காண்பாய்; அவனிடம் நீயும் மனிதர்களில் மிக கண்ணியமானவராக இருப்பாய்! ஒருநாள் அவன் உன்னிடம், “உனது புத்தகத்தை எனக்குத் தா! அதில் நான் படிக்க வேண்டும்!” என்று கேட்பான். “அல்லாஹ் மீது ஆணையாக! அதே புத்தகம் எனக்கும் நாளைக்குத் தேவையாக இருக்கிறது! (அதனால் தர முடியாதுள்ளது!)” என்று நீ சொல்லியிருப்பாய் என்று வைத்துக்கொள்வோம்! உடனே, உன்னோடு அவன் கோபம் கொண்டு, உன்னுடன் விரோதமும் பாராட்டுவான். இவனெல்லாம் ஒரு நண்பனா!? இவன், பயனை எதிர்பார்த்துப் பழகும் நண்பனாவான்.

02) இன்புற்று, ஜாலியாக இருக்கும் நண்பன்:

கதை பேச்சுக்களில், இரவுகால உரையாடல்களில், மனநிம்மதிக்கான பொழுதுபோக்குகளில் உன்னுடன் இன்பம் அனுபவிப்பதற்காகவே இவன் நட்பு கொள்வான். எனினும், இவன் உனக்குப் பயனளிக்கவும் மாட்டான்; நீயும் இவனிடமிருந்து பயன் பெற்றுக்கொள்ளவும் மாட்டாய்! உங்களில் ஒவ்வொருவரும் மற்றவருக்கு பயனளிக்கமாட்டார்கள். நேரம் வீணாகுவது மட்டும்தான் இதில் உள்ளதே தவிர வேறெதுவுமில்லை. உன் நேரங்களை வீணாக்கும் இவனிடமிருந்தும் நீ எச்சரிக்கையாக இருந்து கொள்!.

03) சிறப்புக்குரிய நண்பன்:

இவன்தான் (உன் புகழை) அலங்கரிக்கும் விடயத்திற்கு உன்னைக் கொண்டு செல்வான்; உனக்குத் தீங்கை உண்டாக்கிக் குறையை ஏற்படுத்தும் விடயங்களை விட்டும் உன்னைத் தடுப்பான். மேலும், நன்மையின் வாசல்களை உனக்காகத் திறந்து அதற்கான வழியையும் உனக்கு அவன் காட்டுவான். (நேரான வழியை விட்டும்) நீ சறுகிச் சென்று விட்டாலோ உனது கண்ணியத்திற்குக் களங்கம் ஏற்படாத வகையில் உன்னை அவன் தடுப்பான். இவன்தான் சிறப்புக்குரிய நண்பனாவான்!.
{ நூல்: ‘ஷர்ஹு ஹில்யதி தாலிபில் இல்ம்’, பக்கம்: 102 }

தமிழில்: அஷ்ஷெய்க் N.P.ஜுனைத்(காஸிமி,மதனி)
புதிய சாளம்பைக்குளம்,வவுனியா

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here