விளையாட்டுத்தனத்தால் ஏற்பட்ட விபத்து – 60 பேர் காயம் – 20 பேரின் நிலை கவலைக்கிடம்

0
616

குருணாகல் – தம்புள்ளை பிரதான வீதியின் மெல்சிறிபுர, பன்லியந்த பகுதியில் இன்று (09) பிற்பகல் தனியார் பேருந்துகள் இரண்டு நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் 60 பேர் காயங்களுக்குள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கொகரெல்ல பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

மெல்சிறிபுர மற்றும் கலேவல பகுதிகளுக்கு இடையில் உள்ள பன்லியந்த பகுதியில் இடம்பெற்ற இந்த விபத்தில் காயமடைந்தவர்கள் கலேவல, குருணாகல், கொகரெல்ல மற்றும் தம்புள்ளை ஆகிய வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த விபத்தில் காயமடைந்த இரு பேருந்துகளினதும் ஓட்டுனர்கள் உட்பட 20 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

குறித்த இரு பேருந்துகளும் ஒரே உரிமையாளருடையவை என தெரிவிக்கப்படுகின்றது.

எம்பிலிபிட்டியவில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த பேருந்தும் வவுனியாவில் இருந்து எம்பிலிபிட்டிய நோக்கி பயணித்த பேருந்துமே இவ்வாறு நேருக்கு நேர் மோதி விபத்துக்கு உள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

குறித்த பேருந்து ஓட்டுனர்கள் இருவரும் வெகு தூரத்தில் இருந்தே வேகமாக வந்ததாகவும், அவர்கள் இருவரும் நட்பின் அடிப்படையில் பேருந்தை விளையாட்டாக செலுத்தியதாகவும் பேருந்தில் பயணித்தவர்கள் தெரிவிக்கின்றனர்.

குறித்த பேருந்துகள் இரண்டினதும் உரிமையாளர் ஒருவர் என்பதால் குறித்த ஓட்டுனர்கள் இருவரும் அடிக்கடி பாதையில் சந்திக்கும் போது இவ்வாறு விளைகாட்டுத்தனமாக செயற்படுவது வழக்கமான விடயம் என அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

திடீர் என பாரிய சப்தம் ஒன்று கேட்டதை அடுத்து அந்த இடத்திற்கு சென்று பார்க்கும் போது மக்கள் அலறிக் கொண்டிருந்ததாகவும் அவர்களை உடனடியாக அப்பகுதியால் வந்த வாகனங்களில் ஏற்றி வைத்தியசாலைகளுக்கு எடுத்துச் சென்றதாகவும் பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.

கலேவல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர்களில் பலர் தம்புள்ளை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் கொகரெல்ல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர்களில் பலர் குருணாகல் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த விபத்தினால் குருணாகல் – தம்புள்ளை பிரதான வீதி 45 நிமிடங்கள் தடைப்பட்டிருந்ததாவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

ஓட்டுனர்கள் இருவரும் பாதுகாப்பற்ற விதத்தில் பயணித்த விதமும் அவர்களின் விளையாட்டுத்தனமுமே இந்த விபத்திற்கு காரணம் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இரு பேருந்துகளினதும் ஆசனங்கள் உடைந்ததில் பலருடைய கைஇ கால்கள் முறிவடைந்துடன் முகங்களிலும் பாரிய பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

விபத்து தொடர்பில் கொகரெல்ல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

-நன்றி அத தெரன

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here