ஓட்டமாவடி பிரதேச சபையில் குடிநீர் விநியோகத்திட்டம் தொடர்பாக விளக்கமளிக்கும் கலந்துரையாடல்

0
442

(எஸ்.எம்.எம்.முர்ஷித்)

ஓட்டமாவடி பிரதேச சபையின் எல்லைக்குட்பட்ட பிரதேசங்களில் தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையினால் அமுல்படுத்தப்பட்டு வரும் குடிநீர் விநியோகத்திட்டம் தொடர்பாக விளக்கமளிக்கும் கலந்துரையாடல் ஓட்டமாவடி பிரதேச சபையின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

பிரதேச சபை தவிசாளர் ஐ.ரீ.அமிஸ்டீம் (அஸ்மி) தலைமையில் நடைபெற்ற கலந்துரையாடலில் மீன்பிடி நீரியல் வள அபிவிருத்தி மற்றும் கிராமிய பொருளாதார பிரதி அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.

மேலும் இக்கலந்துரையாடலில் ஓட்டமாவடி பிரதேச செயலாளர் திருமதி.நிஹரா மௌஜுத், ஓட்டமாவடி பிரதேச சபையின் உப தவிசாளர், சபை உறுப்பினர்கள், சபை செயலாளர் எம்.எச்.எம்.ஹமீம், உத்தியோகத்தர்கள், தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் சார்பில் பிரதம பொறியியலாளர், நிர்மாணப் பொறியியலாளர், உதவிப் பொறியியலாளர், திட்டப் பொறியியலாளர்கள் மற்றும் வேலை மேற்பார்வையாளர்கள் என பலர் கலந்து கொண்டிருந்தனர்.

இதன்போது கோறளைப்பற்று மேற்கு பிரதேச செயலகத்தில் சென்ற மார்ச் மாதம் நடைபெற்ற பிரதேச அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் குறித்த குடிநீர் விநியோகத்திட்ட வேலைகள் நடைபெறும் வீதிகள் சரியான திட்டமிடலின்றி வெட்டப்படுதல் மற்றும் வெட்டப்படும் கொங்கிறீட் வீதிகளின் பாகங்கள் முறையாக அகற்றப்படாமை உள்ளிட்ட பிரச்சினைகளால் போக்குவரத்துச் செய்ய முடியாமல் பொதுமக்கள் எதிர்கொள்ளும் அசௌகரியங்கள் தொடர்பான பொது மக்களது முறைப்பாடு முன்வைக்கப்பட்டிருந்தது.

இதனை கவனத்திற் கொண்டு ஓட்டமாவடி பிரதேச சபையினது தலைமையின் இத்திட்டம் தொடர்பாக எழும் பிரச்சினைகளுக்கு தீர்வைப் பெற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற பிரதேச அபிவிருத்திக் குழுக் கூட்டத்தின் தீர்மானத்தின் பிரகாரம் உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்கும் பொருட்டு மேற்படி கலந்துரையாடலை நடாத்துவதற்கு ஓட்டமாவடி பிரதேச சபையினால் ஒழுங்கு செய்யப்பட்டது.

இக்குடிநீர் விநியோகத்திட்ட வேலைகள் தொடர்பாக ஓட்டமாவடி பிரதேச சபைக்கும் தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் அதிகாரிகளுக்கும் இடையே நடைபெறும் மூன்றாவது கலந்துரையாடல் என்ற வகையில், குறித்த குடிநீர் விநியோகத்திட்டம் தொடர்பாக ஓட்டமாவடி பிரதேச சபையுடன் தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபை முறையான உடன்படிக்கை ஒன்றினை செய்து கொள்ளல், இத்திட்டம் தொடர்பான திட்ட வரைபடத்தை பிரதேச சபைக்குச் சமர்ப்பித்தல், வெட்டப்பட்ட வீதிகளை மீள சரியான முறையில் அமைத்துக் கொடுத்தல், பொதுமக்கள் குடிநீர் இணைப்பை பெற்றுக் கொள்வது தொடர்பாக பொதுமக்களுக்கு விளக்கமளித்தல் போன்ற விடயங்கள் பற்றி விரிவாக ஆராயப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here