கிராமம் முன்னேற வேண்டுமாக இருந்தால் ஆளும் கட்சியில் இணைந்து ஆட்சி செய்யும் அரசியல்வாதியை தெரிவு செய்யுங்கள்

0
343

(எஸ்.எம்.எம்.முர்ஷித்)

மட்டக்களப்பு மாவட்டத்தில் தேர்தலில் தோல்வி பெறும் குதிரைக்கு பந்தயம் கட்டுகின்ற மக்கள் பல இடங்களில் இருக்கின்றார்கள் என மீன்பிடி நீரியல் வள அபிவிருத்தி மற்றும் கிராமிய பொருளாதார பிரதி அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார்.

போரதீவுபற்று பிரதேச செயலாளர் பிரிவில் பாலையடிவெட்டை – நெல்லிக்காடு பிரதேசத்தில் ஆறு மாத கால தையல் பயிற்சியை முடித்த யுவதிகளுக்கு தையல் இயந்திரம் வழங்கும் நிகழ்வு நெல்லிக்காடு தையல் பயிற்சி நிலையத்தில் நேற்று புதன்கிழமை மாலை இடம்பெற்ற போது கலந்து கொண்டு மேற்சொன்னவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்-

தேர்தலில் தோல்வி பெறும் குதிரைக்கு பந்தயம் கட்டுகின்ற மக்கள் மட்டக்களப்பு மாவட்டத்தில் பல இடங்களில் இருக்கின்றார்கள். தேர்தலில் வெற்றி பெறும் குதிரைக்கு பந்தயம் கட்டுகின்ற மக்கள் மட்டக்களப்பு மாவட்டத்தில் கனிசமான இடங்களில் வாழும் முஸ்லிம் மக்கள்.

அவர்களுடைய தேவை, பசி, எதிர்பார்ப்பு, அவர்கள் வாழ்கின்ற காலத்திற்குள்ளே எங்களது பிள்ளைகளுக்கு நல்ல பாடசாலை, வைத்தியசாலை, நல்ல சுற்றுச்சூழல், வாழ்வாதாரம் உட்பட பல விடயங்களை பெற்றுக் கொடுக்க வேண்டும் என்று அரசியல் தலைவர்கள் யோசிப்பதற்கு முன்பாக கிராமத் தலைவர்கள் யோசிக்கின்றார்கள்.

அரசியல்வாதிகள் தேர்தல் காலங்களில் கிராமங்களுக்கு வந்தால் அவர்களிடத்தில் உங்களுக்கு வாக்களிக்கின்றோம் எங்களது பிள்ளைகளுக்கு நல்ல பாடசாலை, வைத்தியசாலை, நல்ல சுற்றுச்சூழல், வாழ்வாதாரம் உட்பட பல விடயங்களை செய்து தாருங்கள் என்கின்றோம். அரசயில்வாதிக்கு முஸ்லிம் புள்ளடியா, தமிழ்; புள்ளடியா, சிங்கள புள்ளடியா தெரியாது. அவருக்கு எந்த கிராமத்தில் புள்ளடி இடுகின்றதோ அது அவருடைய மக்கள். இதுதான் அரசியல் தெளிவாக விளங்கிக் கொள்ள வேண்டும்.

கடந்த காலங்களில் நாங்கள் ஏமாற்றப்பட்டிருக்கின்றோம். அந்த மாற்றம் உங்களுக்குள் இருந்து வரவேண்டும். உங்களது கிராமம் முன்னேற வேண்டுமாக இருந்தால் ஆளும் கட்சியில் இணைந்து ஆட்சி செய்யக் கூடிய அரசியல்வாதியை தெரிவு செய்யுங்கள் என்றார்.

கிராம அபிவிருத்தி சங்க தலைவர் எஸ்.தயாபரன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் அமைச்சரின் இணைப்பாளர்களான ஜோன் பாஸ்டர், திருமதி.ஜெ.மீனா, எஸ்.ஜெகன், எம்.எஸ்.எம்.றிஸ்மின் உட்பட செயலக உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.

இதன்போது கிராமிய பொருளாதார அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் மூலம் ஆறு மாத கால தையல் பயிற்சியை முடித்த பதினாறு யுவதிகளுக்கு தையல் இயந்திரங்கள் வழங்கி வைக்கப்பட்டதுடன், பிரதி அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டார்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here