விஜயகலா விவகாரம்: வாயால் வந்த வினை

0
346

இலங்கையின் முக்கியமான பௌத்த பீடங்களில் ஒன்றான அஸ்கிரிய பீடத்தின் இரண்டாம்நிலை பீடாதிபதியான உபால தேரர், ‘நாட்டில் ஹிட்லரைப் போன்றதொரு ஆட்சிதான் அவசியம் என்றால் அதனைச் செய்ய வேண்டும்’ என்ற தொனியில் கூறியிருக்கின்றார். மறுபுறத்தில், இராஜாங்க அமைச்சரான விஜயகலா மகேஸ்வரன் ‘புலிகளின் கை ஓங்க வேண்டும்’ என்று பேசியிருக்கின்றார்.

ஏதோ சில நியாயங்களுக்காக பெருந்தேசிய தரப்பினர் ஹிட்லரையும், தமிழ் தேசியம் விடுதலைப் புலிகளையும் அவாவி நிற்கின்ற சூழலில் இரண்டாவது சிறுபான்மையினமான முஸ்லிம் தேசியம் நமது நிலைமையும் நிலைப்பாடும் குறித்த, ஒருவிதமான மனச் சஞ்சலத்திற்கு ஆட்பட்டிருக்கின்றது.
முன்னொருகாலத்தில் முஸ்லிம்களுக்கு ஏற்பட்ட ஒரு பாதிப்பு தொடர்பாக தமிழ் அரசியல்வாதி ஒருவரிடம் வினவியபோது, ‘யானைகளும் புலிகளும் சண்டையிடும் போது நடுவில் இருக்கின்ற தகரப்பற்றைகள் நொருங்கத்தான் செய்யும்’ என்று சொன்னதாக முஸ்லிம்கள் பேசிக் கொள்வார்கள். இப்போது சிங்கள பெருந்தேசியமும் தமிழ்த் தேசியமும் தமது இலக்குகளுக்காக மோதிக் கொள்கையில் முஸ்லிம்களின் நிலை என்னவாகப் போகின்றதோ என்ற கவலை சமூக செயற்பாட்டாளர்களுக்கு ஏற்பட்டிருக்கின்றது.

இதையெல்லாம் ஒரு புறம் வைத்துவிட்டு, உபால தேரருக்கும் விஜயகலா மகேஸ்வரனுக்கு வாயால் வந்த வினை குறித்தும் அதற்குப் பின்னால் உள்ள பின்னணிகள் மற்றும் அரசியல் குறித்தும் நோக்க வேண்டியிருக்கின்றது. முஸ்லிம்கள் தங்களது அடுத்த காலடியை எடுத்து வைப்பதற்கான தீர்மானமெடுக்கும் உசாத்துணையாக அது அமையலாம்.

ஹிட்லரின் வருகை

“வார்த்தைகளை மிகக் கவனமாக உதிர்க்க வேண்டும்” என்று சொல்வார்கள். “வாயில் இருந்து ஒரு வார்த்தை வெளியில் வந்து விட்டால் அதை மீளவும் அள்ள முடியாது” என்றும், “வார்த்தை தவறி விட்டால் வருந்த வேண்டியிருக்கும்” என்றும் பழமொழிகளின் ஊடாக நாம் அறிந்து வைத்திருக்கின்றோம். குறிப்பாக சமூக அரசியல் சூழலில் ‘வார்த்தை தவறுதலின் எதிர்வினைகளை’ நாம் அடிக்கடி கண்டுகொண்டும் இருக்கின்றோம்;.

முன்னாள் பாதுகாப்புச் செயலாளரான கோத்தாபய ராஜபக்ச கடந்த சில தினங்களுக்கு முன்னர் அஸ்கிரிய பீடத்தின் இரண்டாம்நிலை பதவியில் உள்ள தேரரான வெந்தருவே உபால தேரரை சந்தித்த போது அந்த தேரர், ‘நாட்டைக் கட்டியெழுப்ப இராணுவ ஆட்சிதான் அவசியம் என்றால் அதனை கோத்தபாய செய்ய வேண்டும்’ என்றும் ‘அதனூடாக நாட்டை ஹிட்லரைப் போல கட்டியெழுப்ப வேண்டும்’ என்றும் அறிவுரை சொல்லியிருந்தார்.

இந்தக் கருத்து பெரும் சர்ச்சைகளை தோற்றுவித்திருந்தது. ஈவா பிரவுண் மட்டுமன்றி ஹிட்லரை நேசிக்கின்ற பலர் இன்னும் உலகில் இருக்கின்றார்கள் என்பதையும், உலகில் சர்வாதிகாரியாகவும் அட்டூழியக் காரனாகவும் பார்க்கப்பட்ட ஒருவரை முன்னுதாரணமாகக் கொண்டு இலங்கையில் ஆட்சி உருவாக வேண்டுமென்று சிங்கள பெருந்தேசியத்தில் ஒரு பகுதியினர் விரும்புகின்றார்கள் என்பதையும் இது உணர்த்தியது. அத்துடன் மாதுளுவாவே சோபித்த தேரர் போன்றோரின் முன்முயற்சியால் கொண்டுவரப்பட்ட இந்த நல்லாட்சியில் பௌத்த பீடங்கள் பெரிதாக திருப்தியடையவில்லையோ என்ற சந்தேகத்தையும் இச்சம்பவம் ஏற்படுத்திற்று.
இக்கருத்தை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, ஜேர்மன் தூதுரகம் என பல தரப்பினர் விமர்சித்தனர். இதனையடுத்து, தான் ‘அந்த அர்த்தத்தில் சொல்லவில்லை’ என்ற பாணியில் தேரர் விளக்கமளித்தாரேயொழிய, உபால தேரரின் கருத்து தொடர்பில் முக்கிய பௌத்த பீடங்கள் எவ்வித கருத்தையும் வெளியிடவில்லை என்பது கவனிப்பிற்குரியதாக இருந்தது.

விஜயகலாவின் கருத்து

இந்நிலையில், படுகொலை செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் மகேஸ்வரனின் துணைவியும் இராஜாங்க அமைச்சருமான விஜயகலா மகேஸ்வரன், சில தினங்களுக்கு முன்னர் வடக்கில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் தெரிவித்த கருத்து அரசியல் களத்தில் பெரும் சர்ச்சைகளையும் விமர்சனங்களையும் சந்தித்திருக்கின்றது. இது சரியெனவும் பிழையெனவும் வாதப் பிரதிவாதங்கள் இடம்பெற்றுக் கொண்டிருக்க, பாராளுமன்ற உறுப்பினர் விஜயகலா தனது இராஜாங்க அமைச்சை இராஜினாமாச் செய்திருக்கின்றார்.

மேற்படி நிகழ்வில் உரையாற்றிய விஜயகலா மகேஸ்வரன். “விடுதலைப் புலிகள் காலத்தில் நாம் எவ்வாறு வாழ்ந்தோம் என்பதை நாம் உணர்வுபூர்வமாக உணர்கின்றோம். புலிகளை உருவாக்க வேண்டும் என்பதே எமது முக்கிய நோக்கமாகும். அதாவது நாங்கள் உயிருடன் வாழ வேண்டுமென்றால், எமது பிள்ளைகள் நிம்மதியாக வெளியில் சென்று மீண்டும் வீடு திரும்பி வரவேண்டுமாக இருந்தால், வடக்கு – கிழக்கில் தமிழீழ விடுதலைப் புலிகளின் கையோங்க வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

ஒரு இராஜாங்க அமைச்சரான திருமதி;.மகேஸ்வரனின் கருத்து தேசிய அரங்கில் என்றுமில்லாத சர்ச்சைகளையும் விமர்சனங்களையும் ஏற்படுத்தியுள்ளது. பாராளுமன்றத்தில் மரிக்கார் எம்.பி.யே முதலாவதாக இதுபற்றி கேள்வி எழுப்பினார். அதனையடுத்து இது தொடர்பான எதிர்க்கருத்துக்கள் முன்வைக்கப்பட்டதால் அமளிதுமளி ஏற்பட்டது. எனவே விஜயகலாவுக்கு எதிராக விசாரணை நடாத்தி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறி, சபாநாயகர் சபை அமர்வை இடைநிறுத்த வேண்டிய நிலை ஏற்பட்டது. அத்துடன் இக்கருத்து இலங்கையின் அரசியலமைப்பை மீறியுள்ளதாஎன்று வியாக்கியானம் அளிக்குமாறு சட்டமா அதிபர் திணைக்களத்தை சபாநாயகர் கோரியிருக்கின்றார்.

சிங்கள அரசியல் பரப்பிலிருந்து அமைச்சர் விஜயகலாவின் கருத்து முற்றிலும் தவறானது என்றும் அவர் ஒரு அமைச்சராக இலங்கையின் அரசியலமைப்பிற்கும் சத்தியப்பிரமாண வாசகத்திற்கும் முரணாக செயற்பட்டிருக்கின்றார் என்று குறிப்பிட்டு அவர் மீது சட்டநடவடிக்கை எடுக்குமாறு கோரப்பட்டுள்ளது. அத்துடன் இவரை கைது செய்யுமாறு முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

எனவே உடனடியாக பொலிஸ் விஷேட அதிரடைப்படை பிரிவின் கட்டளை தளபதியும், திட்டமிட்ட குற்றங்கள் மற்றும் குற்றவியல் விசாரணைகள் தொடர்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபருமான லத்தீபிடம் இது பற்றிய விசாரணைகள் ஒப்படைக்கப்பட்டுள்ளன. அத்துடன் அவரிடமுள்ள இராஜாங்க அமைச்சை விசாரணைகள் முடிவடையும் வரை மீளப் பெறுமாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை கேட்டுக் கொண்டிருந்த நிலையில், விஜயகலா தானாகவே முன்வந்து இராஜாங்க அமைச்சுப் பதவியை கடந்த வியாழனன்று இராஜினாமாச் செய்திருக்கின்றார்.

இந்த இடத்தில், ஹிட்லர் தொடர்பான கருத்தை ‘நான் அந்த அர்த்தத்தில் சொல்லவில்லை’ என்று அஸ்கிரிய பீடத்தின்; உபால தேரர் சொன்ன விளக்கத்தை ஏற்றுக்கொண்ட நமது அரசியல்வாதிகளுக்கும் பெருந்தேசியத்திற்கும், விஜயகலா மகேஸ்வரன் சொன்ன விளக்கத்தை ஏற்றுக் கொள்ள மனமில்லை என்றே கருத வேண்டியுள்ளது. இங்கு சில விடயங்களை திறந்து பேச வேண்டியிருக்கின்றது.

உலக ஒழுங்கு

உலகத்தில் ஒரு தரப்பினரால் கொடுங்கோலனாக, பயங்கரவாதியாக பார்க்கப்படுகின்ற ஒரு ஆட்சியாளன் அல்லது ஆயுதப் போராளி இன்னுமொரு தரப்பினால் முன்மாதிரி ஆட்சியாளனாக, மீட்பனாக நோக்கப்படுகின்றான் என்ற யதார்த்தத்தை புரிந்துகொள்ள வேண்டும். உலக ஒழுங்கில் இருந்து இதற்கு நிறைய உதாரணங்களை முன்வைக்க முடியும்.

ஹிட்லர் ஒர் சர்வாதிகாரி என்பதிலும் அவர் 20 மில்லியன் மக்களை படுகொலை செய்தார் என்பதிலும் எவ்வித மாற்றுக் கருத்துக்களும் இல்லை. ஆனால் சிலபோதுகளில் சிலவற்றை கட்டுப்படுத்துவதற்கு சர்வ அதிகாரமுள்ள தலைவன் தேவை என்று மேற்குறிப்பிட்ட தேரர் உள்ளடங்கலாக பலர் உணர்ந்துள்ளனர். அத்துடன் “நான் 90 சதவீதமான யூதர்களைக் கொன்றுவிட்டேன். ஏன் இவர்கள் கொல்லப்பட வேண்டியவர்கள் என்பதை நீங்கள் உணர்ந்து கொள்வதற்காக 10 வீதமானவர்களை விட்டுச் செல்கின்றேன்” என்று ஹிட்லர் தனது கடைசிக் காலத்தில் சொன்னார். இதை சில நேரங்களி;ல் முஸ்லிம் உலகு இன்று நினைவ10ட்டுகின்றது எனலாம்.

மகாத்மா காந்தி என்கின்ற தேசபிதாவின் மரணத்திற்காக அழாதவர்கள் யாருமில்லை. அப்போதெல்லாம் அவரைக் கொலை செய்த கோட்சே ஒரு பெரும் கொலைகாரனாக வெறுத்தொதுக்கப்பட்டான். ஆனால், அண்மைக்காலத்தில் ‘கேட்சேயிலும் நியாமிருக்கின்றது’ என்று சொன்னவர்களும் உள்ளனர். இந்தியாவில் கேட்சேக்கு சிலை வைப்பதற்கான முயற்சிகளும் முன்னெடுக்கப்பட்டன.
ஒசாமா பில்லேடனை உலகமே இன்று வரையும் சர்வதேச பயங்கரவாதி என்றுதான் சொல்கி;ன்றது. ஆனால், அவர் மேற்கொண்ட மனிதாபிமானமற்ற படுகொலைகளை இஸ்லாமோ முஸ்லிம்களோ ஒருபோதும் அங்கீகரிக்கவில்லை என்றாலும், உலகில் வாழும் 180 மில்லியன் முஸ்லிம்களில் கணிசமானோர் பில்லேடனை ஒரு தீவிரவாதியாக பார்க்கவில்லை என்றே சொல்ல வேண்டும். பொலிஸ்கார வேடத்தில் இருக்கின்ற இஸ்லாத்திற்கு எதிரான வில்லன்களை எதிர்த்து நின்ற ஒரு ஆயுதப் போராளியாக கருதுபவர்களே அதிகமுள்ளனர்.

ஈராக்கிய முன்னாள் ஜனாதிபதி சதாம் ஹ_சைன், லிபியாவின் புரட்சிகர ஆட்சியாளர் கேர்ணல் கடாபி போன்றோர் தொடர்பில் உலகம் என்ன சொன்னாலும் அமெரிக்காவுக்கும் அதன் நேச நாடுகளுக்கும் சிம்ம சொப்பனமாக இருந்த ஆட்சியாளர்கள் என்றே முஸ்லிம்கள் இந்த ஆளுமைகளை தமது நாட்குறிப்புக்களில் எழுதி வைத்திருக்கின்றனர் என்பதை யாரும் மறுக்கவியலாது. இதுதான் யதார்த்தம்!
நியாமயமான உணர்வு
இராஜாங்க அமைச்சராக இருந்த விஜயகலாவும் இவ்விதமான நிலைப்பாட்டையே கொண்டிருக்கின்றார். அதை அவர் வெளி;ப்படுத்திய இடமும் விதமும் தவறாக இருந்தாலும் அவரது மன உணர்வை யாரும் கேலிக்குட்படுத்த முடியாது.
விஜயகலா எம்.பி. தனதுரையில், அரசாங்கத்திற்கு எதிரான சக்தியாக விடுதலைப் புலிகள் உருவாக வேண்டும் என்றோ தனிநாட்டு கோரிக்கைக்காக போராட வேண்டும் என்றோ குறிப்பிடவில்லை. மாறாக, வடக்கில் இப்போது இடம்பெறுகின்ற வன்முறைகளின் பின்னணியில் நமது பிள்ளைகளுக்கு பாதுகாப்பு வேண்டுமென்றால் புலிகள் எழுச்சிபெற வேண்டும் என்றே கூறியுள்ளார்.

உண்மையில் புலிகள் இருந்த காலத்தில் குற்றங்கள் அறவே இடம்பெறவில்லை என்று கூற முடியாது. தமிழர்கள், விடுதலை வீரர்களாக நோக்குகின்ற விடுதலைப் புலிகளால் முஸ்லிம்களும், சிங்களவர்களும் நிறைய உயிர்; சொத்து இழப்புக்களைச் சந்தித்திருக்கின்றார்கள் என்பதையும் மறுப்பதற்கில்லை. முஸ்லி;ம்களின் பார்வையில் புலிகளின் போராட்டம் நியாயமாக தென்பட்டாலும் பிற்காலத்தில் அதன் வழிமுறையை அங்கீகரிக்கவில்லை என்பதே நிதர்சனமாகும்.
முஸ்லிம்களுக்கும் சிங்கள மக்களுக்கும் இவ்வாறான மோசமான ஒரு மனப்பதிவு காணப்பட்டாலும், அரசாங்கமும் சில வெளிநாடுகளும் பயங்கரவாத முத்திரை குத்தியிருந்தாலும், விடுதலைப் புலிகளை தமிழர்கள் வீரர்களாகவும் மீட்பர்களாகவுமே நோக்கினர் என்பதையும், கணிசமானோர் இந்த நிலைப்பாட்டிலேயே இன்னும் இருக்கின்றனர் என்பதையும் யாரும் மறுதலிக்க இயலாது. இது அவர்களது உள்ளுணர்வுடன் சம்பந்தப்பட்ட விடயம் மட்டுமன்றி 60 வருட உரிமை போராட்டம் மற்றும் 30 வருட ஆயுத போராட்டத்தின் வேட்கையும் ஆகும்.

மேலெழும் கேள்விகள்

இதேவேளை, விஜயகலா மகேஸ்வரனின் உரையில் இருந்து சில தர்க்கவியல் கேள்விகள் எழுவதை தவிர்க்க முடியாதுள்ளது. விஜயகலா ஐ.தே.கட்சியை பிரதிநிதித்துவம் செய்பவர். இந்நிலையில் தமது பாதுகாப்புக்கு புலிகள் போன்ற அமைப்பு வேண்டுமென்று ஒரு பேச்சுக்காவது அவர் சொல்வார் என்றால் இந்த நல்லாட்சி அந்த பாதுகாப்பை வழங்கவில்லை என்ற நிலைப்பாட்டில் உள்ளாரா? வடக்கில் முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் தலைமையிலான மாகாண ஆட்சி பாதுகாப்பு விடயத்தில் தோல்வி கண்டுள்ளது எனச் சொல்ல வருகின்றாரா என்ற கேள்விகளுக்கு விடை காண வேண்டும்.

எவ்வாறிருப்பினும், கட்டுரையின் முன்பகுதியில் குறிப்பிட்டவாறு ஒரு சர்வாதிகாரியாக, பயங்கரவாதியாக நோக்கப்படுபவர்களை முன்னுதாரணமாகக் காட்டியும், புலிகளை உயர்வாகவும் முதன்முதலாக பேசியவர் பாராளுமன்ற உறுப்பினர் விஜயகலா அல்ல என்பதை இங்கு அழுத்தமாக உரைக்க வேண்டியிருக்கின்றது. சிங்கள சமூகத்தில் இருந்தே பலர் இதற்கு முன்னர் விடுதலைப் புலிகளையும் அதன் தலைவர் பிரபாகரனையும் பாராட்டிப் பேசியதை மறந்து விடக் கூடாது. குறிப்பாக, நவீன இனவாத செயற்பாட்டாளரான கலகொட அத்தே ஞானசார தேரர், “தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் உண்மையான வீரன் என்ற உண்மையை ஏற்றுக் கொள்ள வேண்டும்” என்று கடந்த வருடம் சொல்லியிருந்தார்.
ஆனால், அவர் போன்றவர்களை புலிகளை உயர்த்திப் பேசிய போதோ அல்லது ஹிட்லரின் அரசியலை ஒரு முக்கிய தேரர் முன்மாதிரியாகச் சொன்ன போதோ எழாத எதிர்ப்பலைகள்; விஜயகலா மகேஸ்வரன் ஆற்றிய உரைக்கெதிராக மேலெழுந்திருக்கின்றது.

அதுமட்டுமல்ல, சிங்கள பெருந்தேசியத்தின் கோணத்தில் இருந்து பார்த்தால் பிரபகாரனைக் கொல்வதற்கு முக்கிய பங்காற்றிய சரத் பொன்சேகா சிறையில் அடைக்கப்பட்டார். பிரதமர் சொல்லியிருப்பது போல 600 முஸ்லிம், சிங்கள பொலிஸாரின் மரணத்திற்கு காரணமான கருணாவுக்கு பிரதான பெரும்பான்மைக் கட்சியின் பிரதி தலைவர் பதவி கொடுத்து கொண்டாடினர்.
இதுவெல்லாம் நடப்பு அரசியல் காரணங்களுக்காக மேற்கொள்ளப்பட்டது என்பதைத் தவிர வேறு ஏதும் நியாயம் கூற முடியுமா? இன்று கொதித்தெழுகின்றவர்களுக்கு இதுவெல்லாம் கண்ணில் தெரியவில்லையா என்ற கேள்விக்கு விடையளிக்க முடியுமா?
இப்போது முன்வைக்கப்படும் விமர்சனங்களை தமிழ் மக்களை பாதித்திருக்கின்றது என்பது உண்மையே. இந்த தருணத்தில், இந்து விவகார பிரதியமைச்சராக காதர் மஸ்தான் நியமிக்கப்பட்டதற்கு எதிராக முன்வைக்கப்பட்ட விமர்சனங்களும் முஸ்லிம்களின் மனதை இவ்வாறே பாதித்திருக்கும் என்பதை மனதிற் கொள்ள வேண்டும்.

அமைச்சரின் கருத்து

தமிழர்களின் பிரதி பிம்பமாக விஜயகலா என்ற தனிநபர் இவ்வாறான ஒரு கருத்தை வெளிப்படுத்தியதில் பெரிதாக எந்தப் பிரச்சினையும் இல்லை. ஆனால் அவர் தமிழராக, பெண்ணாக இருந்ததற்கு மேலதிகமாக குறிப்பாக ஒரு பாராளுமன்ற உறுப்பினராகவும் இராஜாங்க அமைச்சராகவும் இருந்தார் என்பதே இங்கு சிக்கலை ஏற்படுத்தியிருக்கின்ற விடயமாகும்.
நாட்டில் வாழும் மக்களிடையே சமாதானமும் நல்லிணக்கமும் ஏற்பட்டு வருகின்ற சூழலில் இக்கருத்து கண்டிக்கத்தக்கது என்று எதிர்க்கட்சி தலைவர் குறிப்பிட்டுள்ளார். உண்மைதான், விஜயகலா மகேஸ்வரனின் பேச்சில் தைரியமும் நியாயமும் இருந்தாலும், ஒரு இராஜாங்க அமைச்சர் என்ற விதத்தில் அவர் தனது வார்த்தைகளை கவனமாக உதிர்த்திருக்க வேண்டும். ஒரு பொதுமகன் பேசுவதற்கும் பொறுப்புள்ள அரசாங்க அமைச்சர் பொது மேடையில் பேசுவதற்கும் வித்தியாசம் இருக்கின்றது.
இராஜாங்க அமைச்சராக பதவிவகித்த விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்த கருத்து இலங்கையின் அரசியலமைப்புக்கு பிழையானதா என்பது தற்போது ஆராயப்பட்டு வருகின்றது. விடயமறிந்தவர்களின் கருத்தின் பிரகாரம் அரசியலமைப்பின் 157ஏ மற்றும் 161(டீ) (ஆறாவது அரசியலமைப்பு திருத்தம்) ஆகிய சரத்துக்களே இவ்விடயம் தொடர்பாக குறித்துரைத்துள்ளதாக தெரியவருகின்றது.

அதேநேரம், ஒரு இராஜாங்க அமைச்சராக சத்தியப்பிரமாணம் செய்து கொண்ட போது எடுத்த உறுதிப்பிரமாண வாசகங்களை இது மீறுகின்றதா என்றும் ஆராயப்படலாம் எனக் கூறப்படுகின்றது. எனவே இதற்கமைய இவரது உரை சட்டத்திற்கு உட்பட்டதா இல்லை என தீர்மானிக்கப்படும். அதன்பின்னர், அவருக்கெதிரான நடவடிக்கை பற்றிய முடிவெடுக்கப்படும்.
ஆனால், இதற்கிடையில் விஜயகலாவின் உரையும், அதற்கு ஆதரவான மற்றும் எதிரான கருத்துக்களும் நமது தேசிய அரசியல் அரங்கில் ஒரு ‘அரசியல் விளைவை’ ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றது. அதன்படி இதன்மூலம் விஜயகலா அடுத்த தேர்தலுக்கான முதலீட்டை மேற்கொண்டுள்ளார். தமிழ் அரசியல்வாதிகள் சிலர் இவருக்கு ஆதரவாக கருத்துத் தெரிவித்து, விஜயகலாவுக்கு வரும் ஆதரவை பங்குபோடப் பார்க்கின்றனர்.

பெருந்தேசிய அரசியலில் மஹிந்தவுக்கு இது சாதகமான நிலைமை என்பதுடன் ஜனாதிபதி மைத்திரிக்கு தர்மசங்கடத்தையும் பிரதமர் ரணிலுக்கு தலையிடியையும் ஏற்படுத்தியிருக்கின்றது. சமகாலத்தில் சிங்கள, தமிழ் சக்திகள் வெளியிட்டு வரும் கருத்துக்கள் முஸ்லிம்களுக்கு மனக் கிலேசத்தை ஏற்படுத்தியுள்ளது எனலாம். ஆக மொத்தத்தில் விஜயகலாவின் வார்த்தையின் வலிமையை நாடே அனுபவித்துக் கொண்டிருக்கின்றது

– ஏ.எல்.நிப்றாஸ் (வீரகேசரி)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here