வழிதவறிய இணக்க அரசியல்

0
486

கால்பந்தாட்ட போட்டி முடிவடைந்த பிறகு வெற்றிபெற்ற அணி வெற்றிக் கிண்ணத்தை தூக்கிக் கொண்டு போய்விடும். அந்த அணியை வெற்றிக் கொண்டாட்டங்களும் தோல்வியடைந்த அணிகளை கவலைகளும் சூழ்ந்து கொள்ளும். ஆனால் ஒன்றரை மணித்தியாலமாக ஆடுகளத்தில் விளையாடிய அணிகளுக்கும் அதற்கு வெளியே போட்டியை உன்னிப்பாக பார்த்துக் கொண்டிருந்த ரசிகர்களுக்கும் குறியாக இருந்த ‘காற்பந்து’, கவனிப்பார் யாருமற்று மைதானத்தின் மூலையில் கிடக்கும்.
தேர்தல் காலத்தில் முஸ்லிம் கட்சிகளாலும் அரசியல்வாதிகளாலும் தூக்கிப் பிடிக்கப்படுகின்ற முஸ்லிம்களின் அபிலாஷைகள், உரிமைகள் தேர்தல் முடிந்த பிறகு ஒரு காற்பந்தைப் போலவே மூலையில் போடப்பட்டு விடுகின்றன. அரசியல்வாதிகள் வெற்றியால் கிடைத்த பதவியையும் அதன் வழிவந்த வரப்பிரசாதங்களையும் எடுத்துக் கொண்டு போய்விடுகின்றார்கள். பிறகென்ன, இன்னுமொரு ஆட்டம் தொடங்கும் வரைக்கும் அவர்களுக்கு முஸ்லிம்களின் அபிலாஷைகள் எனும் ‘காற்பந்து’ அவசியப்படுவதில்லை.

பயணம் மறந்து

முஸ்லிம்களின் அரசியல் இலக்கு, அதற்கான பாதை என்பன என்னவென்று தெரியாமலேயே இன்றைய முஸ்லிம் அரசியல் நகர்ந்து கொண்டிருக்கின்றது. அத்துடன் போக வேண்டிய பயணத்தின் தூரத்தையும் சென்றடைய வேண்டிய இலக்கையும் மறந்து, வீதி ஓரங்களில் நிற்கின்ற மரங்களுக்கு கீழே ஓய்வெடுத்துக் கொண்டும் சுகபோகங்களில் லயித்துக் கொண்டும் நேரத்தைப் போக்காட்டுகின்ற வேலையைத்தான் முஸ்லிம் அரசியல்வாதிகள் மேற்கொள்கின்றார்கள் என்பதை உணர்வதற்கு, பெரிய அரசியல் அறிவு அவசியமில்லை.
பாதை தவறிப் பயணித்தல் என்பது வேறு, தவறான பாதையில் பயணித்தல் என்பது வேறு. சரியான வழியில் செல்ல நினைத்தும் தவிர்க்க முடியாத காரணத்தால் தமக்குத் தெரியாமலேயே பயணித்தலே பாதை தவறிப் பயணித்தல் என்பதாகும். ஆனால் தவறான பாதையில் பயணித்தல் என்பது வேண்டுமென்றே தவறான பாதையை தெரிவு செய்தல் அல்லது சற்றுதூரம் சென்ற பிறகாவது அதனை உணர்ந்து கொண்ட பின்னரும் அவ்வழியிலேயே போதல் ஆகும்.

சிங்களப் பெருந்தேசிய அரசியலும் சரி தமிழ் குறுந்தேசிய அரசியலும் சரி தமது இலக்குகளை நோக்கியே பயணித்துக் கொண்டிருக்கின்றன. பெருந்தேசிய அரசியல் என்பது எப்போதும் பௌத்த மக்களின் அபிலாஷைகளை வென்றெடுக்கும் வழியிலேயே செல்கின்றது. ஆயுதப் போராட்டம் முடிவடைந்தாலும் இன்றும் தமிழர்களின் உரிமையை வென்றெடுப்பதற்கான விடுதலைப் போராட்டம் முற்றுப் தொடர்ந்து கொண்டுதானிருக்கின்றது.
தமிழர்களுக்குள் இன்று இத்தனை கட்சிகள், பிளவுகள், அணிகள் உருவாகியிருந்தாலும் ஆளுக்காள் முரண்படுவதைப் போல தோன்றினாலும் அவர்களின் அபிலாஷை, உரிமை என்று வரும் போது சம்பந்தனும், டக்ளஸ் தேவானந்தாவும், மனோ கணேசனும், கருணாவும் அநேகமாக ஆனந்தசங்கரியும் பல விடயங்களில் கருத்தியல் ஒருபுள்ளியை நோக்கி நெருங்கி வருவார்கள் என்பதை மறந்து விடக் கூடாது. ஆனால், அப்படியான ஒரு நிலைமை முஸ்லிம் அரசியலில் இல்லை.

மாறிய இலக்கு

முஸ்லிம்களுக்கு என்று தனித்துவ அடையாளத்துடனான அரசியல் கட்சிகள் ஏன் உருவாக்கப்பட்டது அதன் உண்மையான இலக்குகள் என்ன என்பதை முஸ்லிம் அரசியல் தலைவர்களோ அவர்களது தளபதிகளோ அறியாதவர்கள் என்று சொல்ல முடியாது. ஆனால் தங்கள் வசதிக்காக வேறு ஒரு இலக்கை அவர்கள் சிருஷ்டித்திருக்கின்றார்கள். முஸ்லிம் அடையாள அரசியலின் இறுதியிலக்கு அபிவிருத்தி என்ற தோரணையில் ஒரு அணியினர் பயணிக்கின்றனர். இன்னுமொரு தரப்பினர் அபிவிருத்தி என்றும் உரிமையும் என்றும் வாய்ச்சவாடல் விட்டுக் கொண்டு வெறும் வார்த்தைகளால் வயிற்றை நிரப்பிக் கொண்டிருக்கின்றனர். இந்தப் போக்கு முஸ்லிம் அடையாள அரசியலின் இலக்கை அடைய வழிவகுக்க மாட்டாது என்பதை அழுத்தமாகக் கூற வேண்டும்.

இப்போதிருக்கின்ற முஸ்லிம் தலைவர்களை விட பன்மடங்கு படித்த, அறிவுள்ள, பண்பான முஸ்லிம் சமூக அரசியல் தலைவர்கள் சுதந்திரத்திற்கு முன் – பின்னரான காலகட்டத்தில் இருந்திருக்கின்றார்கள். இவர்கள் செய்யாத பல பணிகளை அவர்கள் நிகழ்த்தி விட்டுச் சென்றிருக்கின்றார்கள். அவர்கள் தேசியத் தலைவர்களாகவோ கட்சித் தலைவர்களாகவோ இருக்கவில்லை. ஆனாலும் முஸ்லிம்கள் மனதில் தமது உரிமைகள் பற்றிய ஒரு குறையிருந்தது.

முஸ்லிம் அரசியல் என்பது ஆரம்பத்தில் ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் சுதந்திரக் கட்சியோடு பயணப்பட்;டது. தனிச் சிங்கள சட்டம் இயற்றப்பட்ட காலத்திற்குப் பின்னர் மேலெழுந்த தமிழ் பேசும் ‘சிறுபான்மை இனங்கள்’ என்ற உணர்வு முஸ்லிம்களை தமிழ்த் தேசிய அரசியலோடு கைகோர்த்து நடக்கச் செய்தது. ஆயினும் ஆயுத இயக்கங்கள் முன்கையெடுத்த பிறகு தமிழ்த் தேசியத்தின் பாதையில் சென்று, முஸ்லிம்களின் இலக்கை, அபிலாஷைகளை அடைய முடியாது என்பதை உணர்;ந்து கொண்டோம். தனிவழியில் பயணிக்க தலைப்போட்டோம். அதற்கான வாகனம்தான் தனித்துவ அடையாள அரசியலும் முஸ்லிம் காங்கிரஸும் ஆகும்.
முஸ்லிம் தேசியம் கோட்பாட்டை அறிஞர் சித்திலெப்பை உள்ளடங்கலாக பலர் முன்னிறுத்திச் செயற்பட்டனர். பிற்காலத்தில் முஸ்லிம் தேசியத்தின் அபிலாஷைகளை முன்வைத்த ஓரிருவருள் எம்.ஐ.எம். மொஹிதீன் முக்கியமானவர். தனித்துவ அடையாள அரசியலின் ஊடாக எம்.எச்எம்.அஷ்ரஃப் அதை பிரசாரப்படுத்தியது மட்டுமன்றி குறிப்பிடத்தக்க வெற்றியும் கண்டார் என்றுதான் சொல்ல வேண்டும். ஆனால் பிறகு என்ன நடந்தது?
அஷ்ரஃபின் பாசறையில் வளர்ந்தவர்கள் எனச் சொல்லப்படுகின்ற ஒவ்வொருவரும் புதுப்புது கட்சிகளை தொடங்க, அஷ்ரஃ;ப் ஆரம்பித்த கட்சி சிக்கிச் சின்னாபின்னமாகியது. முஸ்லிம்களுக்கு ஏன் தனித்துவ அடையாள அரசியலும்ää தனியான கட்சி ஒன்றும் அவசியப்பட்டது? அப்படியானால் அதற்கான இலக்கு என்ன ? பாதை என்ன ? என்பது பற்றியெல்லாம் எந்தப் புரிதலும் இல்லாமலேயே இன்று முஸ்லிம் கட்சிகளும் மக்களும் கால்போன போக்கில் பயணித்துக் கொண்டிருப்பதை காண முடிகின்றது.

தனித்துவ அடையாளம்

முஸ்லிம்கள் தனியான தேசியம், தேசிய இனம் ஆகும். முஸ்லிம்கள், இஸ்லாமிய தமிழர் என்பதையோ அல்லது தமிழ் பேசும் சமூகம் என்ற பொதுமைப்படுத்தலுக்குள் வருவதையோ ஏற்றுக் கொள்ள முடியாது. சிங்களம் பேசுகின்ற முஸ்லிம்களும் இருக்கின்றனர் என்பதுடன் இஸ்லாமியர் ஒருவர் எந்த அடிப்படையிலும் தமிழர் ஆக இயலாது.
தமிழர்களும் சிங்களவர்களும் முஸ்லிம்களுக்கு நெருங்கிய உறவுகள் என்பதில் மாற்றுக் கருத்துக்கள் கிடையாது. ஆனால் முஸ்லிம்களுக்கு என்று தனியான மத நம்பிக்கை, கலாசார, இனத்துவ அடையாளங்கள், கலாசாரப் பின்னணி, பண்பாடுகள் உள்ளன. சிங்களவர்களும் தமிழர்களும் அரபு பேசும் ஒரு காலம் வந்தாலும், அவர்கள் எவ்வாறு முஸ்லிம்கள் ஆகிவிட முடியாதோ அதுபோலவே ஒருகாலத்திலும் முஸ்லிம்கள், தமிழர்கள் என்ற பொதுமைக்குள் வர முடியாது.
இந்த நாட்டில் சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்கள் ஒன்றுசேர்ந்து வென்றெடுக்க வேண்டிய எத்தனையோ விடயங்கள் இருக்கின்றன. அதேபோல் இம்மூன்று இனங்களுக்கு மட்டுமன்றி ஏனைய சிறு இனங்களுக்கும் பிரத்தியேக பிரச்சினைகள் இருக்கின்றன. அந்த அபிலாஷைகள் ஒவ்வொன்றும் வேறுபட்டவையும் தனித்தன்மை வாய்ந்தவையுமாகும். அந்த வகையில் சிங்கள பெருந்தேசியத்தோடோ தமிழ் தேசியத்தோடோ முஸ்லிம்கள் இணைந்து சென்றால் அவற்றை வென்றெடுக்க முடியாது என்பதை, தனித்துவ அடையாள அரசியலுக்கு முன்னரோ முஸ்லிம்கள் உணர்ந்து விட்டனர்;.

பழைய பல்லவி

வேறு இனங்களை மையமாகக் கொண்டு செயற்படும் கட்சியில் பதவி பட்டங்களைப் பெற்றுக் கொண்டு முஸ்லிம் சமூகத்திற்காக குரல் கொடுக்கவும் இந்த சமூகத்தின் உரிமைகள், அபிலாஷைகளை வென்றெடுக்கவும் முடியாது என்ற பட்டறிவின் ஊடாக உருவாக்கப்பட்டதே உண்மைக்குண்மையான தனித்துவ அடையாள அரசியல் கோட்பாடு எனலாம். ஆனால் இன்று மீண்டும் நாம் பழைய பல்லவிகளையே பாடிக் கொண்டு, பழைய குருடியின் வீட்டு வாசலில் தவங்கிடக்கின்ற அரசியலைத்தான் செய்து கொண்டிருக்கின்றோம் என்பதைச் சொல்லாமல் விட முடியாது. இதில் எந்த முஸ்லிம் அரசியல்வாதியும் விதிவிலக்கல்லர்.

ஒரு காலத்தில் தனித்துவ அடையாள அரசியலின் சின்னமாக பார்க்கப்பட்ட ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் இன்றைய நிலைபற்றி தனியாகச் சொல்ல வேண்டியதில்லை. கடந்த அரசாங்கத்தில் மு.கா. மஹிந்த சார்பு நிலைப்பாட்டை எடுத்திருந்தது. இப்போது ஐக்கிய சுதந்திர முன்னணியில் அங்கம் வகிக்கின்ற சமகாலத்தில் அதன்தலைவர் றவூப் ஹக்கீம் மஹிந்த ராஜபக்ஷவுடனும் தொடர்பில் இருக்கின்றாரோ என்ற சந்தேகத்தை அண்மையில் வெளியான புகைப்படமொன்று கிளப்பியிருக்கின்றது.
மக்கள் காங்கிரஸ் கட்சியும் கடந்த ஆட்சியில் ராஜபக்ஷாக்களோடு ஒட்டி உறவாடியது. இன்று சுதந்திரக் கட்சியோடு தாமரை இலைமேல் தண்ணீர் போல இருந்துகொண்டு ஐக்கிய சுதந்திர முன்னணியில் அங்கம் வகிக்கின்றது. தேசிய காங்கிரஸ் கடந்த ஆட்சியில் கடைசி வரையும் மஹிந்தவிற்கு நன்றியுடையதாக இருந்தது. இப்போதும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பிரதான அங்கத்துவக் கட்சிகளுள் ஒன்றாக அங்கம் வகிக்கின்றது.

ஏனைய முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஐ.தே.க மற்றும் சு.க. ஊடாக பிரதிநிதித்துவ அரசியலில் இருக்கின்றனர். குறிப்பாக 21 முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களில் ஒருவர்தானும் எதிர்க்கட்சி ஆசனத்தில் இல்லை. ஆக, நிகழ்கால முஸ்லிம் அரசியல் என்பது முற்றுமுழுதாக ஆளும்கட்சி சார் இணக்க அரசியலுக்குள் மூழ்கி இருக்கின்றது அல்லது மூச்சுத் திணறும் அளவுக்கு மூழ்கடிக்கப்பட்டிருக்கின்றது.
இணக்க அரசியல் என்பது நல்லதொரு கோட்பாடே, எல்லாம் அளவோடு இருக்கும் வரைக்கும்! பெரும்பான்மைக் கட்சிகளில் கலந்து, கரைந்து போகின்ற அரசியலை விட, தனிவழியில் பயணிக்கும் முஸ்லிம் அடையாள அரசியலே சிறந்தது என்ற நிலைப்பாட்டின் அடிப்படையிலேயே தனித்துவ கட்சிகள் ஆரம்பிக்கப்பட்ட போதிலும், நேரடியாக ஒரு பெரும்பான்மைக் கட்சியில் அங்கத்துவம் பெறாமல் தனியான முஸ்லிம் கட்சி ஒன்று அல்லது அரசியல்வாதி ஒருவர் பெரும்பான்மைக் கட்சியுடன் கொள்கை இணக்க அடிப்படையில் இணைந்து பணியாற்ற முடியும் என்பதில் மாற்றுக் கருத்துக்கள் கிடையாது. மறைந்த மு.கா.வின் ஸ்தாக தலைவர் அதை ஓரளவுக்கு செய்து காட்டினார் எனலாம். அதாவது உரிமைகளுக்காக துணிச்சலாக குரல் கொடுத்துக் கொண்டே சமூகத்திற்கு பயனளிக்கும் அபிவிருத்திகளையும் மேற்கொண்டார். அந்த இடத்தை நிரப்ப முஸ்லிம் அரசியல்வாதிகள் முயற்சி செய்து கொண்டிருக்கின்ற போதும் இன்றுவரையும் அந்த வெற்றிடம் இன்னும் காலியாகவே இருக்கக் காண்கின்றோம்.

அபிவிருத்தியும் உரிமையும்

அபிவிருத்தி அரசியல், உரிமை அரசியல் என்ற இரு விடயங்களும் முஸ்லிம்களுக்கு அவசியமானவையே. ஆனால் இரண்டில் எது முதன்மையானது என்று வருகின்ற போது தனித்துவ அடையாள அரசியலின் தாரக மந்திரமான உரிமை அரசியலுக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும். அது இன்றுவரையும் நடக்காத காரணத்தினாலேயே முஸ்லிம்கள் தமது அரசியல், இன மத, சுய உரிமைகளை இழந்து நிற்பதுடன் தமது அபிலாஷைகளையும் நிறைவேற்றிக் கொள்ள முடியாத நிலை தோன்றியிருக்கின்றது.

அபிவிருத்தி அரசியல் என்று பார்த்தால் அண்மைக்கால கிழக்கின் அபிவிருத்தி அரசியலில் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாவும் ஏ.எல்.எம்.அதாவுல்லாவும் குறிப்பிடத்தக்கவர்கள். அவர்களைத் தவிர பாரிய அபிவிருத்தி திட்டங்களை கொண்டு வந்தவர்களை காண்பதரிது. வீதிக்கு மின்விளக்கு பொருத்துதல், தமது அமைச்சின் கீழுள்ள நிறுவனத்தின் கிளை திறத்தல், தெருக்களுக்கு கொங்கிறீட் போடுதல், வடிகான் கட்டுதல், சுற்றுமதில் அமைத்தல், பணம் வாங்கிவிட்டு இரண்டு மூன்று பேருக்கு தொழில் கொடுத்தல், வீட்டுப்பாவனைப் பொருட்களும் உலர் உணவும் வழங்குதல் எல்லாம் காத்திரமான அபிவிருத்தி அரசியலுக்குள் வராது.
அதுபோல, உரிமை அரசியலிலும் முஸ்லிம் அரசியல்வாதிகள் சோபிக்கவில்லை. முஸ்லிம் காங்கிரஸ், மக்கள் காங்கிரஸ், தேசிய காங்கிரஸ், நல்லாட்சிக்கான தேசிய முன்னணி உள்ளடங்கலான கட்சிகள் தனித்துவ அடையாள அரசியலின் இலட்சணத்தைக் கொண்டவையாக தம்மைக் கட்டமைத்து, எதையும் சாதித்தாக சொல்ல முடியாது.
அதேநேரம் இந்தப் பணியை செய்வார்கள் என்ற எதிர்பார்ப்பில்ää 12 கொள்கைப் பிரகடனங்களின் அடிப்படையில் முஸ்லிம் கூட்டமைப்பு உருவாக்கப்பட்ட போதும்ää உருப்படியான ஒரு அடியைத்தானும் கூட்டமைப்பு இன்னும் முன்னோக்கி எடுத்து வைக்கவில்லை. அடுத்த மாகாண சபை தேர்தலில் களம் இறங்குமென எதிர்பார்க்கப்படுகின்ற புத்திஜீவிகள் அணி அதைச் செய்யும் என்று நம்புவதற்கான முகாந்திரங்களும் இப்போது கிடையாது.

முஸ்லிம்கள் இழந்தவை

இந்த நக்குண்டு நாவிழந்த அரசியலால் முஸ்லிம்கள் இழந்ததும் இழந்து கொண்டிருப்பதும் கொஞ்சநஞ்சமல்ல. யுத்தகாலத்தில் முஸ்லிம்களுக்கு இழைக்கப்பட்ட மனித உரிமை மீறல்களுக்கு நீதி நிலைநாட்டப்படவில்லை. இனப் பிரச்சினைத் தீர்வில் முஸ்லிம்களின் பங்கு உறுதிப்படுத்தப்படவில்லை. வடக்கு, கிழக்கு இணைப்பு பற்றிய கதைக்கு முற்றுப்புள்ளி வைக்க இயலவில்லை. அரசியலமைப்பு மறுசீரமைப்பில், தேர்தல் முறை மாற்றத்தால், எல்லை நிர்ணயத்தால் ஏற்பட்டுக் கொண்டிருக்கும் இழப்புக்களை தவிர்க்க இன்னும் இயலவில்லை.
முஸ்லிம்களின் இரண்டு இலட்சம் ஏக்கருக்கும் அதிகமான காணிகள் சார்ந்த பிரச்சினை இருக்கையில், 21 எம்.பிக்களும் சேர்ந்து 21 ஏக்கர் காணியைத் தானும் மீட்டெடுக்க வல்லமையில்லை. நுரைச்சோலை வீட்டுத் திட்டத்தை இன்னும் பகிர்ந்தளிக்க வக்கில்லை. வடபுல மக்களை மீள் குடியேற்ற முடியவில்லை. துருக்கித் தொப்பிக்காக போராடிய சமூகத்தால், பள்ளிவாசல்களை, சொத்துக்களை, அபாயாவை, ஹலாலை காப்பாற்ற முடியவில்லை.
முஸ்லிம்களின் இன, மத, அடிப்படை உரிமைகள் மீறப்படுகின்ற போதும், முஸ்லிம்களுக்கு பாதகமான சட்டவாக்க ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படுகின்ற போதும் தைரியமாக வாயைத் திறந்து பேசுவதற்கு ‘எதுவோ ஒன்று’ தடுக்கின்றது. அல்லது அடக்கி வாசிக்க வேண்டியுள்ளது. இத்தகைய இழப்புக்களுக்கெல்லாம் – அளவுகடந்த, தவறான வழியில் பயணிக்கும் இணக்க அரசியலே அடிப்படைக் காரணமாகியிருக்கின்றது என்பதை நமது முஸ்லிம் அரசியல்வாதிகள் ஏற்றுக் கொள்வார்களா?

எதற்காக தனிக்கட்சி

இணக்க அரசியல் என்ற பெயரில் அமைச்சுப் பதவிகளை, அரை அமைச்சு, தேசியப் பட்டியல்களை எடுத்துக் கொண்டு வாழாவிருப்பது என்றால்…………… எதற்காக தனித்துவ அடையாள அரசியல்? ஏதற்காக தனிக்கட்சி? ஏதற்காக இந்த வேடம்?
கட்டுரையில் முன்பகுதியில் குறிப்பிட்டது போல பெருந்தேசியக் கட்சிகளில் அமைச்சு, எம்.பி. பதவியை வகித்தவர்களும் இது போன்ற அல்லது இதைவிட அதிகமான சேவைகளை முஸ்லிம்களுக்கு செய்திருக்கின்றார்கள். ஆனால் பெருந்தேசியம் மற்றும் தமிழ்த் தேசியத்தை எதிர்க்க வேண்டிய இடத்தில் எதிர்த்தேனும் முஸ்லிம்களின் அபிலாஷைகள், உரிமைகளை வென்றெடுப்பதற்காகவே தனி அடையாள அரசியல் அவசியமாகியது.
எனவே, முஸ்லிம் அரசியலானது மாமூல் அரசியலை தாண்டி, பயணிக்க வேண்டியுள்ளது. சின்னச் சின்ன அபிவிருத்திகளையும் ஒரு வட்டார உறுப்பினர் கொடுக்கின்ற நன்கொடைப் பொருட்களையும் கொடுப்பதற்கு முஸ்லிம் அடையாள அரசியல் கோஷம் அவசிமில்லை என்பதை முதலில் விளங்கிக் கொள்ள வேண்டும். அமைச்சுப் பதவிகளையும், வரப்பிரசாதங்களையும் சுகித்துக் கொண்டும், அது இல்லாது போய்விடக் கூடாது என்ற அச்சத்தில் மௌனமாக இருந்து கொண்டும் காலத்தை இழுத்தடிப்பதற்கு முஸ்லிம் கட்சிகள் தேவையில்லை.
எனவே, முஸ்லிம் அரசியல்வாதிகள் முதலாவதாக தங்களது சொந்த நிகழ்ச்சி நிரல்களுக்குள் இருந்தும், பெருந்தேசியக் கட்சிகளின் முகவர் போல செயற்படுவதில் இருந்தும் முதலில் வெளியில் வர வேண்டும். மற்றெந்த விடயங்களையும் விட முஸ்லிம்களின் அரசியல் அபிலாஷைகள், உரிமைகளுக்கே முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். அதற்காக எதையும் துறக்க தயாராக இருக்க வேண்டும். சும்மா, பேய்க்காட்டக் கூடாது.
முஸ்லிம் மக்கள்; உண்மையிலேயே சமூக அக்கறையுள்ள அரசியல்வாதிகளையும் தலைமைகளையும் சரியான முறையில் தெரிவு செய்யாத வரை முஸ்லிம் கட்சிகளின் ஊடான முஸ்லிம் தனித்துவ அடையாள அரசியல் தொடர்ந்தும் இலக்குத் தவறிய வழயில் பயணிப்பதை தடுக்க முடியாது. அதை நீங்கள் ‘எமது தலைவிதி’ என்று கழிவிரக்கம் கொள்வீர்கள்.
– ஏ.எல்.நிப்றாஸ் (வீரகேசரி 22.07.2018)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here