மாகாண சபை தேர்தலும் முஸ்லிம் கட்சிகளின் நிலைப்பாடும்.

0
331

(நாச்சியாதீவு பர்வீன்)

மாகாண சபை தேர்தல் எவ்வாறு நடத்தப்பட வேண்டும் என்பதே இன்றைய அரசியல் களத்தின் பிரதான பேசுபொருளாகும்.புதிதாக கொண்டுவரப்பட்ட மாகாண சபை தேர்தல்கள் திருத்தச் சட்டமூலத்திற்கு முஸ்லிம் கட்சிகள் ஒருதலை பட்சமாக நிபந்தனையற்ற ஆதரவினை வழங்கியதாக பரவலாக பேசப்பட்டது. முஸ்லிம் கட்சிகளின் இந்த செயற்பாடானது பொதுமக்கள் மத்தியில் பலத்த கண்டனத்தையும், விமர்சனத்தையும் உண்டுபண்ணியுள்ளது என கூறப்படுகின்றது. இந்த தேர்தல் முறையில் இருக்கின்ற பிரதிகூலங்களை கணக்கில் கொள்ளாமல் முஸ்லிம் கட்சிகள் செயற்பட்டதாக அரசியல் ரீதியாக முஸ்லிம் அரசியல் களத்தில் பேசப்பட்டது. ஆனால் மாகாண சபைத்தேர்தலினை முன்னர் நாடாத்திய அந்த பழைய முறைக்கே நடாத்த வேண்டும் என்பதில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிடிவாதமாக நின்றது. இதனை அக்கட்சியின் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம் பாராளுமன்றத்திலும், வெளியிலும் பகிரங்கமாக கூறினார். இதன்பின்னர் தாமும் பழைய தேர்தல் முறையையே ஆதரிப்பதாக அமைச்சர் றிஷாத்தும் அறிக்கை விட்டார். என்னதான் இவ்விரு முஸ்லிம் கட்சிகளும் இவ்வாறு வெளிப்படையாக பேசினாலும் மாகாண சபைகள் திருத்த சட்டமூலத்திற்கு நிபந்தனையற்ற ஆதரவு வழங்கியவர்கள் என்ற கலங்கத்தினை முஸ்லிம் கட்சிகளுக்கு ஏற்படுத்தும் பியத்தனத்தில் சிலர் தீவிரமாக இயங்கிவருகின்றனர்.

முஸ்லிம் கட்சிகளில் பிரதானமானது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசாகும் அதற்காக அமைச்சர் ரிஷாட் பதியுதீனுடைய அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியினை புறந்தள்ளி முஸ்லிம் அரசியல் தொடர்பில் கதையாடல்களை நிகழ்த்த முடியாது. ஆனால் இவ்விரு முஸ்லிம் கட்சிகளும் கடந்த உள்ளூராட்சி தேர்தல் தொடர்பாக அல்லது எதிர்வரும் மாகாண சபை தேர்தல் தொடர்பாக அரசுடன் செய்து கொண்ட ஒப்பந்தங்கள் மற்றும் வாக்காளர்களை தெளிவுபடுத்தும் விளிப்பூட்டும் நிகழ்வுகள்இ இந்த தேர்தல்களினால் சிறுபான்மையினருக்கு குறிப்பாக முஸ்லிம் சமூகத்திற்கு ஏற்படவுள்ள சாதகபாதகங்கள் தொடர்பிலான பிரச்சாரங்கள் போன்றவற்றை செய்துள்ளனவா? அல்லது இந்த தேர்தல் முறை தொடர்பில் எவ்விதமான அடிப்படை அறிவும் இல்லாமல் எழுந்தகமாக ஆதரவு தெரிவித்தனவா? என்கின்ற நியாமான பலகேள்விகள் எழுவதற்கான நியாயங்கள் இருக்கின்றன.

மக்களின் வாக்குகளை பெற்று தெரிவானவர்கள் பொதுமக்களின் இவ்வாறான நியாமான சந்தேகங்களை நிவர்த்தி செய்யவேண்டிய தார்மீக பொறுப்புடையவர்களாகின்றனர். இந்த விடயம் தொடர்பில் அதாவது உள்ளூராட்சி சபைகள் தேர்தலின் போதான எல்லைப்பிரிப்பில் முஸ்லிம்கள் செறிவாக வாழுகின்ற பிரதேசங்களில் நியாமான முறையில் வட்டார எல்லைகள் பிரிக்கப்படவில்லை என்பதனையும், மாகாண சபைத்தேர்தல்களுக்கான எல்லைப்பிரிப்பில் முஸ்லிம் பிரநிதித்துவத்தின் எண்ணிக்கையை குறைக்கும் வகையில் எல்லைகள் பிரிக்கப்பட்டுள்ளன போன்ற விடயங்களை மிகத்தெளிவாக கூறியது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ். அதுமாத்திரமல்ல மாகாண சபைகளுக்கான எல்லைப்பிரிப்பு தொடர்பில் பல மக்கள் தெளிவுபடுத்தல் கூட்டத்தொடர்களை நடாத்தி இந்த விடயத்தில் மக்களை தெளிவுபடுத்தும் வேலைத்திட்டங்களை மேற்கொண்டது.

குறிப்பாக கிழக்கு மாகாண மக்களை தெளிவூட்டும் வகையில் மட்டக்களப்பு ஈஸ்ட் லகூன் ஹோட்டலில் உள்ளூராட்சி மன்றங்கள் மற்றும் மாகாண சபைகள் எல்லைப்பிரிப்பில் உள்ள பாதகங்கள் தொடர்பில் விரிவான விளக்கவுரையினை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஏற்பாடு செய்து நடாத்தியது. அவ்வாறே கிழக்குக்கு வெளியே கொழும்பு விளையாட்டு அமைச்சின் கேப்போர் கூடம் மற்றும் முஸ்லிம் காங்கிரசின் தலைமைபீடமான தாருஸ்ஸலாம் ஆகியவற்றில் இதுதொடர்பில் வெவ்வேறான கருத்தரங்குகளை செவ்வனே செய்து முடித்தது. அவ்வாறே பிராந்தியங்களில் உள்ள கட்சிசார்பான அரசியல் பிரமுகர்களுக்கு பல்வேறு விளக்கக்கூட்டங்களை வைத்து அவர்களை இது தொடர்பிலான கருத்துக்களை பதிய தூண்டியது.

மாகாண தொகுதி எல்லைப்பிரிப்பு தொடர்பில் பொதுமக்களின் கருத்துக்களை பதியும் செயலணியானது ஒவ்வொரு மாவட்டத்தின் மாவட்ட அரசாங்க அதிபர் காரியாலயத்திலும் பொதுமக்கள் கருத்துக்களை பதிந்தபோது அந்த செயலணியின் முன்சென்று தமது கருத்துக்களை சுதந்திரமாக பதிகின்ற விடயத்தில் பொதுமக்களை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தூண்டியது. இதன் பயனாக வடகிழக்கை தாண்டி குருநாகல்,புத்தளம்,அனுராதபுரம், களுத்துறை,கம்பஹா ஆகிய மாவட்டங்களில் முஸ்லிம்களின் விகிதாசாரத்திற்கு ஏற்ப மாகாண சபை பிரதிநிதித்துவத்தை பெறுவதில் சிக்கல் இருப்பதனை மாகாண தொகுதி எல்லைப்பிரிப்பு தொடர்பில் பொதுமக்களின் கருத்துக்களை பதியும் செயலணியின் முன் எழுத்து மூலம் பதியப்பட்டது. எனவே நடந்து முடிந்த உள்ளூராட்சி மன்ற தேர்தலாகட்டும், இப்போது சர்ச்சிக்குள்ளாகியுள்ள மாகாண சபை தேர்தலாகட்டும் இவைகள் தொடர்பில் மிகத்தெளிவான நிலைப்பட்டியினை கொண்ட ஒரு முஸ்லிம் கட்சியாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசை மாத்திரமே சுட்ட முடியும். இந்த விடயம் தொடர்பில் வேறு முஸ்லிம் கட்சிகள் எதுவும் காத்திரமான பங்களிப்பினை செய்யவில்லை என்பது இங்கு ஞாபகத்தில் கொள்ளவேண்டிய முக்கிய விடயமாகும்.

மாகாண சபைகள் தொகுதிப்பிரிப்பில் இத்தனை குளறுபடிகள் இருந்தமை தெளிவாக தெரிந்தும் முஸ்லிம் சமூகத்திற்கு பொறுப்பு கூறவேண்டிய ஒரு கட்சி என்ற வகையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஏன் மாகாண சபை தேர்தல்கள் திருத்தச் சட்டமூலத்திற்கு பாராளுமன்றத்தில் ஆதரவு வழங்கியது என்பது சந்தேகத்தை உண்டுபண்ணும் கேள்வியாகும். தேசிய அரசாங்கம் ஒன்றின் பங்காளிக்கட்சியாக இருக்கின்றபோது இவ்வாறான சங்கடமான நிலைமை தோன்றுவது சில சந்தர்ப்பங்களில் தவிர்க்க முடியாத ஒன்றாகிப்போய்விடுகின்றது. அரசாங்கத்தின் பங்காளிக்கட்சி என்கின்ற வகையில் அந்த அரசாங்கத்தின் ஸ்தீரத்தன்மையை பாதுகாப்பதில் அந்தக்கட்சிகளுக்கும் ஒரு தார்மீக பொறுப்பு இருக்கின்றது. சமர்ப்பிக்கப்படுகின்ற பிரேரணைகளைகளுக்கு எதிராக வாக்களிப்பதனையும் பார்க்க அந்த பிரேரணையில் இருக்கின்ற சாதக பாதகங்கள் தொடர்பில் தாம் சார்ந்த அரசுடன் பேசி நியாயமான பாத்தியத்தை பெற்றுக்கொள்வதே சமயோசிதமாகும். அந்த சமயோசித வேலையை தான் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் செய்துள்ளது. இதில் வெளிப்பார்வைக்கு முஸ்லிம் சமூகக்கத்திற்கான பின்னைடைவு போன்ற ஒரு தோற்றப்பாடு வெளிப்பட்டாலும் அரசியலில் காய் நகர்த்துவதில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தூரச்செயற்படுவதை இதன் மூலம் நிறுவியுள்ளது.

இதற்க்கு நல்ல உதாரணம் கடந்த சிலநாட்களுக்கு முன்னர் ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினரினால் பிரதமருக்கு எதிராக கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணையின் போது ஸ்ரீலங்கா முஸ்லிம்காங்கிரஸ் தரப்பு சில நிபந்தனைகளுடன் அந்த பிரேரணைக்கு எதிராக வாக்களித்தது. அந்த நிபந்தனைகளில் மிக முக்கியமான ஒன்றாக முஸ்லிம் மாவட்ட அரசாங்க அதிபர் ஒருவரை நியமிக்கவேண்டும் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும். பிரதமருடன் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் செய்துகொண்ட ஒப்பந்தத்தை யாரும் வெளியே சொல்லவில்லை அது ரகசியமாகவே இருந்தது. அரசல்புரசல்களாக இன்னின்னவைகளை உள்ளடக்கிய ஒப்பந்தமாகவே இருக்கக்கூடும் என அனுமானிக்கப்பட்டாலும் அவைகள் வெறும் யூகங்களாகவே கருதப்பட்டன. இந்த யூகங்களை மெய்ப்படுத்தும் வகையில் அண்மையில் முஸ்லிம் காங்கிரசின் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற மன்சூரின் காரசாரமான பாராளுமன்ற உரை அமைந்தது.

அம்பாறையிலும்,கண்டி திகன பிரதேசத்திலும் திட்டமிட்டே உருவாக்கப்பட்ட இனவாத செயற்பாடுகள் தொடர்பில் பாராளுமன்றத்தில் தனது அதிருப்தியை தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் மன்சூர் பிரதமருக்கெதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை எதிர்த்து வாக்களிக்க சில நிபந்தனைகளை முன்வைத்தாக பகிரங்கமாக கூறினார். அதில் முஸ்லிம் மாவட்ட அரசாங்க அதிபர் ஒருவரை நியமிக்கவேண்டும் என்ற நிபந்தனை பிரதானமானது என்பதனையும் சுட்டிக்காட்டினார். இன்று அந்த நிபந்தனை சாத்தியப்பட்டிருக்கின்றது. மறுதலையாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அந்த பிரேரணையை ஆதரித்து வாக்களித்திருந்தால் ஆளும்தரப்போடு முரண்படவேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்கும்.அதுமட்டுமல்ல அந்த பிரேரணையானது முஸ்லிம் காங்கிரஸ் ஆதரித்தாலும்இஎதிர்த்தாலும் முடிவுகள் பிரதமருக்கு சாதகமாகவே அமைந்திருக்கும். எனவே தெரிந்து கொண்டே வீணாக வறட்டுத்தனமான முடிவுகளை எடுப்பதிலும் தீர்க்கதரிசனமாக எடுக்கின்ற முடிவுகளில் சமூகத்திற்கு நன்மையுள்ளமை இதன் மூலம் மீண்டும் நிரூபிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில்தான் மாகாண சபை தேர்தல்கள் திருத்தச் சட்டமூலத்திற்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவாக வாக்களித்ததனை நோக்கவேண்டியுள்ளது. வெறுமனே மேலோட்டமாக கணிக்கின்றபோது அரசியல் ரீதியான செயற்பாடுகளை அனுமானிக்க முடியாது. அத்தோடு ஆழமான அரசியல் செயற்பாடுகளுக்கு சாணக்கியமான அணுகுமுறைகளும், தெளிவான பார்வையும் அவசியமாகும் அது சில நேரங்களில் சமூகத்திற்கு பாதகமான விளைவை கொண்டுவருவது போன்ற தோற்றப்பாட்டினை உண்டுபண்ணினாலும் அந்த தோற்றப்பாடானது வெறும் மாயத்தோற்றமே.

முஸ்லிம் கட்சிகள் மீது பொய்யான பரப்புரையை மேற்கொள்கின்ற பொறுப்பற்ற சிலர் எப்போதும் முஸ்லிம் அரசியலின் வகிபாகத்தை கொச்சைப்படுத்தியே வந்துள்ளனர். நிகழ்கால அரசியல் போக்கில் ஆழமான அறிவற்ற இவர்களின் மேலோட்டமான பார்வை மக்கள் மத்தியில் பிழையான எண்ணக்குவிப்புகளுக்கு ஆதாரமாக ஒருபோதும் அமையாது.குறிப்பாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் எனும் முஸ்லிம்களின் அறுதிப்பெரும்பான்மையை கொண்ட தேசிய கட்சியின் மீது தொடுக்கப்படும் நியாயமற்ற குற்றச்சாட்டுக்களை இவ்வாறே நோக்கவேண்டியுள்ளது.இது தொடர்பில் கொழும்பு மாவட்ட ஐக்கிய தேசிய கட்சி பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் பாராளுமன்றத்தில் மிகத்தெளிவாக தனது உரையில் தெரிவித்தார்.

சிறுபான்மை சமூகத்தின் மத்தியில் குறிப்பாக முஸ்லிம் சமூகத்தின் மத்தியில் குழப்ப நிலையை உண்டுபண்ணியுள்ள மாகாண சபைகள் தொடர்பிலான புதிய திருத்தமானது முஸ்லிகளுக்கு பாதிப்பற்றது என்று அதற்க்கு பொறுப்பான அமைச்சர் பைசர் முஸ்தபா கூறியுள்ளதோடு அதனை எதிர்க்கின்ற முஸ்லிம் அமைச்சர்களையும் அவர் சாடியுள்ளார். இந்த விடயத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் விடடாப்பிடியான அழுத்தமானது அரசாங்கத்தை மீண்டும் சிந்திக்க வைத்துள்ளதாகவே தோன்றுகிறது. ஏனென்றால் ஆளும் தரப்பில் பங்காளியாக இருக்கின்ற அநேகமான சிறுபான்மை கட்சிகள் இதிலுள்ள பாதகங்களை புரிந்துள்ளன. எனவே அவைகள் முஸ்லிம் காங்கிரசின் குரலுக்கு ஒத்திசைவாகவே தமது முடிவுகளை எடுக்கும். அது அரசின் நிலையான ஸ்தீர தன்மைக்கு நல்ல ஒன்றாக அமையாது என்பதனை தேசிய அரசாங்கத்தின் இரண்டு தலைவர்களும் அறிந்துள்ளார்கள். எனவே இந்த விடயத்தில் முஸ்லிம் காங்கிரஸ் கொண்டுள்ள அதே நிலைப்பாட்டை ஏனைய சிறுபான்மை சமூக கட்சிகளும் எடுக்க வேண்டிய நிர்பந்தமே இப்போது எழுந்துள்ளது அதுதான் சிறுபான்மை கட்சிகளின் ஆயுளை அதிகரிக்கும்.

சுமார் 43 முஸ்லிம் மாகாண சபை உறுப்பினர்களை பெறவேண்டிய நிலையில் புதிய மாகாண சபைகள் திருத்த சட்டம் அமுலுக்கு வருமேயானால் வெறும் 13 பேர்கள் மட்டுமே மாகாண சபைக்கு முஸ்லிம் சமூகம் சார்பில் தெரிவாகும் சாத்தியமுள்ளதாக அமைச்சர் ஹக்கீம் அண்மையில் பாராளுமன்றத்தில் தனது எதிர்ப்பை மிகத்தெளிவாக பதிந்தார். அவரது வரலாற்று சிறப்புமிக்க அந்த உரைதான் முஸ்லிம் சமூகத்தின் தலையில் எழுதப்படவிருந்த அடிமை சாசனத்தை இல்லாமல் ஆக்கியது எனலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here