மாற்றம்

0
352

(எம்.எம்.ஏ.ஸமட்)

உலகம் மாற்றத்தை நோக்கி நகர்ந்துகொண்டிருக்கிறது. மாற்றம் என்றதொரு சொல்லே இற்றைக்கு பத்து வருடங்களுக்கு முன்னர் அமெரிக்காவின் ஜனாதிபதியாக பராக் ஒபாமாவை மாற்றியது. மாற்றங்கள் காலத்தினதும், சூழலினதும் தேவைக்கேற்ப மாற்றமடைவது அவசிமாகவுள்ளது. தற்போதை அரசாங்கம் பல்வேறு துறைகளில் மாற்றங்களைச் செய்து வருகிறது. அந்தவகையில் இலங்கையின் கல்வித்துறையும் மாற்றம் காண வேண்டி தேவை காணப்படுகிறது.

தற்போதைய பாடசாலைக் கல்வி முறைமையானது ஆசிரியர் மையக் கல்வி முறைமையிலிருந்து மாணவர் மையக் கல்வி முறைமைக்கு மாற்றப்பட்டுள்ளது. கற்றல். கற்பித்தல் செயற்பாடுகள் முழுக்க முழுக்க ஆசிரியர்களின் பங்களிப்புடனானது என்ற நிலையிலிருந்து, ஆசிரியர்களின் உதவியோடு மாணவர்கள் அவர்களாவே முயற்சி செய்து கற்றுக்கொள்ளுதல் என்றதொரு நிலை இந்த மாணவர் மையக் கற்றல் முறையின் மூலம் உருவாக்கப்பட்டுள்ளது.
மாற்றமடைந்து வரும் நவீன உலகின் கல்வித்திட்டங்களுக்கு ஏற்ப இலங்கையின் கல்வித்துறையிலும் காலத்திற்குக் காலம் மாற்றம் ஏற்படுத்தப்படுகிறது. பாடசாலைக் கலைத்திட்டங்கங்களும் காலத்தின் கல்வி மேம்பாடு கருதி மாற்றத்திற்குள்ளாகிறது. ஆனால், இந்த மாற்றங்களின் இலக்குகள் வெற்றியடைந்துள்ளனவா? இதற்கான பொறிமுறைகள் உரியமுறையில் உரியவர்களினால் நடைமுறைப்படுத்தப்படுகின்றனவா? மாறி மாறி ஆட்சி செய்யும் அரசாங்கங்களினால்; கல்வித்துறையில் ஏற்படுத்தப்படுகின்ற மாற்றங்கள் முறையாக முன்னெடுக்கப்படுகின்றனவா? அதற்கான ஏதுவான வழிகாட்டல்கள் பின்பற்றப்படுகின்றனவா? அல்லது இக்கல்வித்துறை நவீன சவால்களுக்கு முகம்கொடுக்கும் வகையில் மேலும் மாற்றப்பட வேண்டுமா என்பன தொடர்பில் கல்விப்புலம் ஆய்வை வேண்டிநிற்கிறது.

ஏனெனில், தற்போதைய பாடசாலைக் கல்வித்திட்டத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ள மாற்றங்கள் அதனால் முன்னெடுக்கப்பட்டுள்ள கற்றல், கற்பித்தல் முறைமைகள் எதிர்பார்த்த இலக்கை அடையவில்லை அல்லது வெற்றி அளிக்கவில்லை என்ற விமர்சனம் பொதுவாக முன்வைக்கப்படுகிறது. ஆசிரயர்களின் உதவியோடு மாணவர்கள் செயற்பாட்டுப் பொறிமுறைகளுடன் கற்றல் நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும். சுயகற்றலுக்கான தேடல்களில் முனைப்புக்காட்ட வேண்டும் என்பதை நோக்காகக் கொண்ட இந்த மாணவர் மையக் கற்றல் முறைமையானது ஆரம்பப் பாடசாலை மாணவர்களின் கற்றல் செயற்பாடுகளுடன் ஒப்பிட்டு நோக்குகையில், இம்முறைமை பெற்றார் மையக் கல்வி முறைமையாக மாற்றப்பட்டுள்ளதா எனச்; சிந்திக்கச் செய்துள்ளது.

ஏனெனில், ஆரம்பப் பிரிவு மாணவர்களுக்கு வழங்கப்;படுகின்ற செயன்முறைக் கல்விச் செயற்பாடானது பெற்றோர்களுக்கு அழுத்தம் கொடுப்பதாகவே அமைந்துள்ளதைக் காண முடிகிறது. பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளின் கல்விச் செயற்பாடுகளில் அக்கறைகொள்ள வேண்டும் என்பதை ஊக்குவிப்பதற்காக இச்செயற்பாடுகள் அமைந்தாலும், ஒரு செயன்முறைப் பயிற்சியுடன் தொடர்பான கல்வி நடவடிக்கைக்காக பிள்ளைகளினால் பெற்றோர்கள் வலிந்து செயற்படச் செய்யப்படுகிறார்கள். அச்செயன்முறைப் பயிற்சிக்காக அவர்கள் பெற்றோர்களிலேயே தங்கியிருக்கிறார்கள்.

பாடசாலைக் கல்வி முறைமை இவ்வாறு உள்ள நிலையில், பரீட்சை முறைமையும் ஞாபக சக்திக்கு மாத்திரம் முன்னுரிமை வழங்குவதாகவே காலம் காலமாக இருந்து வருகிறது. இலங்கையில் இலவசக் கல்வி முறை அறிமுகப்படுத்தப்பட்டது முதல் இப்பரீட்சை முறைமைகளே பின்பற்றப்பட்டு வருகிறது. இப்பரீட்சை முறைமைகள் பலருக்கு எதிர்காலத்தை இல்லாமல் செய்வதாகவும் அமைகிறது. ஆனால், தற்போது தொழில்நுட்பக் கல்வி பாடசாலைகளில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதன் பயனாக அத்துறையைத் தெரிவு செய்யும் மாணவர்கள் தொழில்நுட்ப அறிவுடன் கூடிய தொழில் வாய்ப்பை பாடசாலைக் கல்வி நிறைவின் பின்னர் பெற்றுக்கொள்வதற்கான சந்தர்ப்பம் ஏற்படுத்தப்பட்டிருப்பது கல்வித்துறை மாற்றம் கண்டு வருவதை உணர்த்திநிற்கிறது.
இருப்பினும், இலவச வகுப்பறைக் கல்வி வாய்ப்பானது எழுத்தறிவு கொண்டோரின் எண்ணிக்கையை இலங்கையில் அதிகரித்துள்ளது. தற்போதைய இலங்கையின் எழுத்தறிவு வீதம் 98 வீதமாகவுள்ளது என்பதும் இது தெற்காசிய நாடுகள் அனைத்தை விடவும் அதிக வீதத்தைக் கொண்டது என்பதும் இலங்கை மக்களாகிய எம்மைப் பெறுமையடையச் செய்கிறது. இருந்தபோதிலும், நமது கல்வி முறைமையிலும் பரீட்சை முறைமையிலும் மேலும் மாற்றம் செய்யப்பட வேண்டிய தேவையுள்ளது என்பது உணரப்படுவதோடு அதற்கான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படுவது அவசியம் என்பதும் வலியுறுத்தப்படுகிறது.

தேசிய பரீட்சைகளும் வடக்குக் கிழக்கும்

ஒரு மொழி, இரு மொழி மும்மொழிப் பாடசாலைகளென மொழி அடிப்படையில் வகுக்கப்பட்டுள்ள சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம் பாடசாலைகள் என மொத்தமாக ஏறக்குறைய பத்தாயிரம் அரச மற்றும் அரச சார்ப்புடைய பாடசாலைகள் இயங்குகின்றன. இவற்றில் அண்ணளவாக நான்கு மில்லியன் மாணவர்கள் கல்வி கற்பதுடன் கிட்டதட்ட 2,30,000 ஆசிரியர்கள் கற்பித்தல் பணியில் ஈடுபடுகின்றனர். இவற்றுடன் சர்வதேச பாடசாலைகளும் அரச அங்கீகாரத்துடன் செயற்படுகின்றன. இந்நிலையில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களிலேயே அதிகளவிலான தமிழ் மொழிப் பாடசாலைகள் காணப்படுகின்றன. வடக்கு மாகாணத்தில் 880 தமிழ் மொழிப்பாடசாலைகளும் கிழக்கு மாகாணத்தில் 791 பாடசாலைகளும் உள்ளமை குறிப்பிடத்தக்கது. இவ்வாறு அதிகளவு தமிழ் மொழிப் பாடசாலைகளை இவ்வரு மாகாணங்களும் கொண்டுள்ளபோதிலும் தேசிய பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் இவ்விரு மாகாணங்களும் பின்னடைவிலேயே காணப்படுகின்றன. கடந்த 2015 மற்றும் 2016ஆம் ஆண்டுகளின் தேசிய பரீட்சைப் பெறுபேறுகள் இவற்றுக்குச் சான்றாகவுள்ளன.

இவ்வாறாள நிலையில் ஒவ்வொரு வருடமும் ஏறக்குறைய மூன்று இலட்சம் மாணவர்கள் நாடு பூராகவுமுள்ள அரச பாடசாலைகளில் தரம் ஒன்றுக்கு ; அனுமதிக்கப்படுகின்றனர். அவ்வாறு அனுமதிக்கப்படுகின்ற மாணவர்கள் அவர்களின் 10 அல்லது 12 வருட கால பாடசாலைக் கல்வி நடவடிக்கையின்போது ஐந்தாம் தரப் புலமைப் பரிசில் பரீட்சை, க.பொ.த சாதாரண தரப் பரீட்சை, உயர்தரப் பரீட்சை ஆகிய மூன்று தேசிய பரீட்சைகளுக்குத் தோற்றும் சந்தர்ப்பம் கிடைக்கின்றது. தற்போது அமுலிலுள்ள 13 வருட கட்டாயக் கல்வித்திட்டம் தேசிய பரீட்சைகளுக்கு அனைத்து பாடசாலை மாணவர்களும் தோற்றும்; சந்தர்ப்பத்தை வழங்கியிருக்கிறது. இருப்பினும், இம்மூன்று பரீட்சைகளுக்கும் தோற்றும் மாணவர்கள் அனைவரும் இப்பரீட்சைகளில் சித்தியடைவதில்லை.
பரீட்சைத் திணைக்களத்தின் தகவல்களின் பிரகாரம் கடந்த 2015ஆம் ஆண்டு நடைபெற்ற ஐந்தாம் தரப் புலமைப் பரிசில் பரீட்சைக்குத் தோற்றிய 333,672 பரீட்சார்த்திகளில் 2,36,398 மாணவர்கள் 70 புள்ளிகளைக் பெற்றிருந்தனர். இவர்களில் 54,690 பரீட்சார்த்திகள் 70க்கும் அதிகமான புள்ளிகளை இரு பரீட்சைத்தாள்களுக்குமாகப் பெற்றிருந்தனர்.
இருப்பினும், ஓன்பது மாகாணங்களிலிருந்தும் இப்பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்களில் தகைமை பெற்ற மாணவர்களின் எண்ணிக்கையுடன் ஒப்பிடுகைளில், வடக்கு, கிழக்கு மாகாணங்களிலிருந்து தோற்றி இப்பரீட்சையில் சித்தித் தகைமை பெற்ற மாணவர்களின் எண்ணிக்iயானது மாகாண மட்ட அடிப்படையில் நோக்குகின்றபோது 8வது மற்றும் 9வது இடங்களில் முறையே கிழக்கு மற்றும் வடக்கு மாகாணங்கள் காணப்படுகின்றன.

அவ்வாறு 2016ஆம் ஆண்டு நடைபெற்ற க.பொ.த சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகளும் இவ்விரு மாகாணங்களுக்கும் 8ஆம் மற்றும் 9ஆம் இடங்களையே பெற்றன. பரீட்சை அடைவு மட்டப் பின்னடைவானது இவ்விரு மாகாணங்களினதும் கல்வி அதிகாரிகளினால் அதிபர்கள் மற்றும் ஆசிரியர்களை தொடர்ச்சியான வழிகாட்டல்கள் மற்றும் விழிப்புணர்வுகளுக்கு உட்படுத்தியிருக்கிறது. குறிப்பாக கிழக்கு மாகாண ஆசியர்கள் தொடர்ச்சியாக பாட விடயங்கள் குறித்த தொடர்ச்சியான விழிகாட்டல்களுக்கும், மதிப்பீடுகளுக்கும் உட்படுத்தப்பட்டிருப்பது இம்மாகாணத்தின் பரீட்சை அடைவு மட்டங்களை அதிகரிக்க வழிவகுத்தாலும் அவை ஆசிரயர்களை அழுத்தங்களுக்கு உள்ளாக்கிவிடுமோ எனற் அச்சமும் கிழக்கு கல்விப் புலத்தில் காணப்படுவதையும் குறிப்பிட்டாக வேண்டும். இம்மாகாணத்தின் பாடசாலை அடைவ மட்டத்தில் அதிகரித்த மாற்றத்தை ஏற்படுத்துவதற்கான நடவடிக்கை போன்று ஆசிரியர்களின் உளப்பாங்கில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கான நடவடிக்கைளும் சமாந்திரமாக முன்னெடுக்கப்படுவத அவசியமாகவுள்ளது என்பதை குறிப்பாக முஸ்லிம் பாடசாலைகளில் சமகாலத்தில் ஏற்பட்டு பதவிக் கதிரைகளுக்கான போட்டி நன்கு புலப்படுத்தி நிற்கிறது என்பதையும் சுட்டிக்காட்ட வேண்டும்.
இந்நிலையில், இவ்வருடத்திற்கான தரம் ஐந்துக்கான புலமைப் பரிசில் பரீட்சை எதிர்வரும் ஆகஸ்ட் 5ஆம் திகதியும் உயர்தரப் பரீட்சை ஆகஸ்ட் 6ஆம் திகதியும் நடைபெறவுள்ளன. தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சைக்கு 3,55,321 மாணவர்கள் தோற்றவுள்ளதுடன் இதில் 2,67,765 சிங்கள மொழிமூலப் பரீட்சார்த்திகளும், 87,556 தமிழ் மொழி மூல பரீட்சார்த்திகளும் தோற்றவுள்ளனர். அவ்வாறு, நாடளாவிய ரீதியில் 2,44,146 பாடசாலைப் பரீட்சார்த்திகளும், 77,323 தனிப்பட்ட பரீட்சார்த்திகளும் உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றவுள்ளனர்.

இவ்வாறு நடைபெறும் தேசிய பரீட்சைகளில் ஒன்றான புலமைப் பரிசில் பரீட்சையில் தகைமை பெறும் மாணவர்களில்; 30 ஆயிரம் மாணவர்களே புலமைப் பரீசில்களுக்கு உரித்தாகுகின்றனர். அவர்களில் 15 ஆயிரம் பேர் மாத்திரமே புலமைப் பரீசில் கொடுப்பனவு வழங்குவதற்கு தெரிவுசெய்யப்படுகின்றனர் என்பது இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.

ஒவ்வொரு வருடமும் கல்விப் பொதுத்தராதார உயர்தரப் பரீட்சைக்குச் சராசரியாக 2,50,000 மாணவர்கள் தோற்றுகின்றனர். இவர்களில் ஏறக்குறைய 150,000 மாணவர்கள் பல்கலைக்கழக அனுமதிக்கு தகைமை பெறுகின்றபோதிலும் பல்கலைக்கழகங்களில் காணப்படும் மனித வள மற்றும் பௌதீக வளப் பற்றாக்குறையின் நிமித்தம் ஏறக்குறைய 22,000 முதல் 25,000 வரையிலான மாணவர்களே இலங்கையிலுள்ள 17 தேசிய பல்கலைக்கழகங்களிலுமுள்ள கற்கை நெறிகளுக்காக ஒவ்வொரு வருடமும் உள்ளவாங்கப்படுகின்றனர். அண்ணளவாக ஒரு இலட்சம் மாணவர்கள் இப்பரீட்சையில் சித்தியடையத் தவறுவதுடன் ஒரு இலட்சத்திற்கு மேற்பட்டோர் பல்கலைக்கழக அனுமதியைப் பெறுவதற்குத் தமைமை இருந்தும் அவர்களால் தேசிய பல்கலைக்கழகங்களில் அனுமதிபெற முடியாதுள்ளது. இவர்களில் சிலர் தனியார் பல்கலைக்கழகங்களில் இணைந்து பட்டப்படிப்பை தொடர்ந்தாலும் பலரினால் அதற்கான வாய்ப்பு வசதிகள் இன்றி எதிர்கால வாழ்வின் இலக்கை அடைந்துகொள்ள முடியாதவர்களாக உள்ளதை சமூக மட்டத்தில் உற்றுநோக்கக் கூடியதாகவுள்ளது.

இதனால்தான், தற்போதைய பாடத்திட்டமும், பரீட்சை முறையும் மாற்றியமைக்கப்பட வேண்டும். இவை மிகக் கொடியவை. இப்பரீட்சையில் சித்தியடைத் தவறுகின்றவர்கள் அவர்களது எதிர்காலம் இலக்குகளின்றி பயணிக்;கிறது என்ற குற்றச்சாட்டுகள் தொடர்ச்சியாக முன்வைக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் பரீட்சகைளுக்குத் தோற்றும் மாணவர்கள் அப்பரீட்சைகளை சிறப்பாக முகம்கொடுப்பதற்கான வழிகாட்டல்கள் அனுபவிக்க வழிகாட்டல் ஆலோசனையாளர்களினால் ஆலோசனைக்கு உட்படுத்துவது மாணவர்கள் சிறந்த பரீட்சை அடைவுகளைப் பெற்றுக்கொள்ள வழிவகுக்கும்.

பரீட்சைக்கால வழிகாட்டால்

பாடசாலைக் கல்விப் பரப்பில் புதிய மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டாலும், பாடசாலைக் கல்வி வாழ்;க்கையில் மாணவர்கள் பெறுகின்ற பரீட்சை பெறுபேறுகள், அவற்றினால் ஏற்படுகின்ற தோல்விகள் அவர்களது எதிர்காலத்தை சூனியமாக்காது வளமுள்ளதாக்குவதற்கான சிறந்த வழிகாட்டல்களும், உளவளத்துணையும் பரீட்சைக்காலங்களில் மாத்திரமின்றி தொடர்ச்சியாக வழங்கப்படுவது அவசியமாகும்.
அந்தவகையில், இன்னும் சில நாட்களில் பரீட்சையை எதிர்நோக்கவுள்ள மாணவர்கள் எவ்வாறு பரீட்சைக்கு முகம் கொடுக்க தங்களை தயார்படுத்த வேண்டும் என்ற ஆலோசனைகள் ஏற்கனவே வழங்கப்பட்டிருந்தாலும் அவற்றை இந்நாட்களில் மீட்டிக்கொள்வது அவர்கள் நம்பிக்கையுடனும், பரீட்சைக்கால அச்சமின்றியும் பரீட்சைக்குத் தோற்றவும், எழுததவும் உதவியாக அமையும்..
பரீட்சார்த்திகளான மாணவர்கள், பரீட்சைக்கால தங்களது உடல்நலம் குறித்து அக்கறை கொள்ள வேண்டும். இதில் பிரதானமாக உணவு விடத்தில் கூடிய அக்கறை கொள்ள வேண்டும். வேண்டத்தகாத உடல் உபாதைகளை உண்டாக்கும் உணவு வகைகளைத் தவிர்துக்கொள்வது ஆரோக்கியத்துடன் பரீட்சைக்கு முகம்கொடுக்க பேருதவியாக அமையும்.

ஓவ்வொரு பரீட்சார்த்தியும் பரீட்சைக்குத் தோற்றுவதற்கான பல்வேறு கற்றல் முறைமைகளைப் பின்பற்றி தங்களைத் தயார்படுத்துவதற்கு அதிகளவு நேரங்களைச் செலவிடுவர். இருப்பினும், பரீட்சைக்கு முதல்நாள் இரவு நீண்ட நேரம் கண்விழித்துக் கற்றல் என்பது ஆரோக்கியமான செயற்பாடாக அமையாது. பரீட்சை மண்டபத்தில் ஒவ்வொரு கணப்பொழுதும் சுறுசுறுப்பாகவும், வினைத்திறனுடனும் செயலாற்ற வேண்டி ஏற்படுவதனால் முதல் நாளின் இரவில் அதிக நேரம் விழித்துக் கற்பது சாதகமாக அமையாது.
அத்துடன், பரீட்சை வினாக்களுக்கு விடையெழுதுவதற்காக பயன்படுத்தும் நேரத்திலும் கவனம் செலுத்துவதோடு, விடயளிப்பதற்கான ஒழுங்குகள், பரீட்சை மண்டப ஒழுங்குகள் என்பவற்றையும் பரீட்சார்த்தி மாணவர்கள் கடைபிடிப்பது அவசியமாகும். இவை தேவையற்ற பிரச்சினைகளை எதிர்நோக்குவதிலிருந்தும் தவிர்ந்து கொள்வதற்கு வழிவகுக்கும். இவ்வாறு பரீட்சைக்கு மாணவர்கள் தயார்படுத்தப்பட்டாலும் பரீட்சை முறையிலும் கல்வித்துறையிலும் மாற்றம் வேண்டுமென்ற குரல்கள் மிக நீண்டகாலமாக எழுப்பப்பட்டு வருகின்றன.

மாற்றமும் இலக்கும்

கடந்த ஆட்சிக்காலத்தில் கல்வித்துறையில் அரசியல் நலன்கள் அல்லது வேறு தேவைகள் கருதி சிற்சில மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்ட போதிலும் அம்மாற்றங்கள் நவீன கல்வி உலகின் சவால்களுக்கு ஏற்றதாக வடிவமைக்கப்படவில்லை என்ற கருத்துக்கள் கல்விப் புலத்தில் முன்வைக்கப்பட்டன.
காலத்திற்குக் காலம் அரசாங்கங்கள் மாறுகின்றபோது கல்விக் கொள்கைகளும் மாற்றமடைகின்றமை சமநிலையற்ற தன்மையை கல்விப் புலத்தில் ஏற்படுத்துவதோடு அவற்றின் தாக்கத்தை வளரும் கல்விச் சமூகம் எதிர்நோக்க வேண்டியும் ஏற்படுகிறது. குறிப்பாக காலத்திற்குக் காலம் மாற்றப்படுகின்ற பாடசாலைக் கல்வித்திட்டச் செயற்பாடுகள் பாடசாலை மாணவர்களிடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்துவதை குறிப்பிடலாம். 1988ஆம் ஆண்டு காலப்பகுதியில் ஏற்படுத்தப்பட்டிருந்த க.பொ.த சாதாரண பரீட்சைக்கான ஆறு பாடத்திட்டத்தினால் பல மாணவர்கள் பாதிக்கபபட்டமையை இங்கு சுட்டிக்காட்டுவதோடு; மீண்டும் க.பொ.த சாதாரண தரத்திற்கு ஆறு பாடங்கள் அறிமுகப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளமைiயும் கோடிட்டுக் காட்ட வேண்டியுள்ளது.

சிறந்த கல்வியினூடாக சிறந்த சமுதாயத்தை உருவாக்குதல் என்ற இலக்குடன் பாடசாலைக் கல்வி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன. இருப்பினும், இக்கல்வி நடவடிக்கைககள் சமகாலத்தில் மாற்றத்தை வேண்டி நிற்கிறது. மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு அழுத்தமாக அமையாத, வேண்டத்தகாத எதிர்பார்ப்புக்களை ஏற்படுத்தாத காலத்திற்குக் காலம் ஏற்படும் அரசாங்கங்களின் தேவைகளுக்குட்படாத கல்விக் கொள்கையும், கல்வித்திட்டமும்  பரீட்சை முறைமைகளும் ஏற்படுத்தப்படுவது இன்றியமையாததாகவுள்ளது.
எதிர்கால சவால்களுக்கு முகங்கொடுக்கக்கூடிய வகையில் கல்வித்துறை மாற்றமடைய வேண்டும். இந்த மாற்றத்திற்கான முன்நகர்வுகளை தற்போதைய அரசாங்கம் முன்னெடுத்துள்ளமை கல்விப்புலத்தில் ஓரளவு நம்பிக்கையை ஏற்படுத்தியிருக்கிறது. சகல மாணவர்களுக்கும்; 13 வருட பாடசாலைக் கல்வியைக் தொடரும் சந்தர்ப்பம் கட்டாயம் வழங்கப்பட வேண்டும் என்ற பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் கல்வித்துறை மாற்றத்திற்கு ஏற்ப பாடசாலைக் கல்வியைத் தொடரும் சகல மாணவர்களும் 13 வருட கால பாடசாலைக் கல்வி வாழ்க்கை முடிந்தவுடன் அவர்களின் எதிர்கால வாழ்க்கையைத் தீர்மானிக்கும் கல்வித்துறையைத் தெரிவு செய்யவதற்கான வழிகாட்டலும் சந்தர்ப்பமும் வழங்கப்படுவது இன்றியமையாதது.

ஏனெனில், தற்போதுள்ள கல்வித்துறையின் குறைபாடுகள் மாணவர்கள் அவர்களது எதிர்காலத்தை தீர்மானிக்க முடியாத நிலைகளை உருவாக்கி இருப்பதாக கல்வி நிபுணத்துவவாளர்களினால் கூறப்பட்டு வருகின்ற நிலையில், கல்வித்துறை மாற்றம் காணுவதுடன் அம்மாற்றத்தினூடாக ஏற்படுத்தப்படும் சந்தர்ப்பங்கள் மாணவர்கள் என்ற எதிர்கால சந்ததியினர் அவர்களின் வளமான எதிர்கால இலக்கை அடைந்துகொள்ளக் கூடிய வழியை ஏற்படுத்த வேண்டும் என்பதே வளமான கல்விப்புலத்தின் எதிர்பார்ப்பாகவுள்ளது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here