ஊடகவியலாளர் ஒருவரின் செய்தி ஒரு நாட்டின் ஆட்சியை மாற்றக்கூடிய வலிமை கொண்டது – இலங்கைக்கான துருக்கி நாட்டுத் தூதுவர் துங்கா ஒஸ்குகடார்

0
286

(றியாத் ஏ. மஜீத்)

ஊடகவியலாளர்கள் யாருக்கும் பயமில்லாமல் தைரியமாக செய்திகளை எழுதவேண்டும் என இலங்கைக்கான துருக்கி நாட்டுத் தூதுவர் துங்கா ஒஸ்குகடார் ஊடகவியலாளர்களிடம் கேட்டுக்கொண்டார்.

கல்முனை மாநகர சபையின் முன்னாள் முதல்வரும், லங்கா அசோக் லேலண்ட் நிறுவனத்தின் தலைவருமான கலாநிதி சிராஸ் மீராசாஹிப்பின் ஏற்பாட்டில் இலங்கைக்கான துருக்கி நாட்டுத் தூதுவர் துங்கா ஒஸ்குகடாருக்கும் தேசிய ஐக்கிய ஊடகவியலாளர்கள் ஒன்றியத்தினருக்குமிடையில் சிநேகபூர்வ சந்திப்பு கொழும்பிலுள்ள துருக்கி நாட்டு தூதுவராலயத்தில் வியாழக்கிழமை (26) இடம்பெற்றது.

இச்சந்திப்பில் தேசிய ஐக்கிய ஊடகவியலாளர்கள் ஒன்றியத்தின் (நுஜா) தேசியத் தவிசாளர் றியாத் ஏ. மஜீத், தலைவர் எஸ்.எம்.அறூஸ், பொருளாளர் சுல்பிக்கா ஷரீப், ஊடகவியலாளர்களான ஏ.எஸ்.எம்.முஜாஹித், எம்.எம்.ஜபீர், எம்.றபீக், ஈழமதி ஜப்பார், எஸ்.எம்.கியாஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

துருக்கி தூதுவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,

ஊடகவியலாளர்கள் தைரியமாக செய்திகளை எழுதுகின்ற போது அவர்கள் அரசியல் தலைவர்களால் அச்சுறுத்தலுக்கு உள்ளாகும் ஊடகச் கலாச்சாரம் காணப்படுகின்றது. இதனை கட்டுப்படுத்த வேண்டும். இதற்கு எதிராக ஊடக சங்கங்கள் செயற்பாட வேண்டும்.

ஊடகத்துறைக்குள் இளம் ஊடகவியலாளர்களை உள்வாங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர்களுக்கான பயிற்சி நெறிக்கான புலமைப்பரிசில்கள் மற்றும் வெளிநாட்டு ஊடகச் செயலமர்வுகளில் கலந்து கொள்வதற்காக வாய்ப்புக்கள் என்பவற்றை எமது தூதுவராலயம் செய்துதரும் அதற்காக முயற்சிகளை எடுக்குமாறு நுஜா ஊடக அமைப்பிடம் கேட்டுக்கொண்டார்.

ஊடகவியலாளர் ஒருவரின் செய்தி ஒரு நாட்டின் ஆட்சியை மாற்றக்கூடிய வலிமை கொண்டது. எனவே ஊடகவியலாளர்கள் தங்களது பணிகளை சமூகப் பொறுப்புடன் மேற்கொள்ள வேண்டியுள்ளது. மக்களின் பிரச்சினைகளை ஊடகங்கள் வாயிலாக கொண்டு வந்து அவர்களுக்கு தீர்வினை பெற்றுக்கொடுப்பதும் உங்கள் பணிகளாகும். ஊடகவியலாளர்கள் தங்களது ஊடக ஒழுக்கக் கோவையினை பின்பற்றி தங்களது செய்திகளை எழுதவேண்டும். செய்திகளை மட்டும் எழுதுகின்ற ஊடகவியலாளராக இல்லாமல் தேடல்கள் மூலம் புலனாய்வு செய்திகளையும் எழுகின்ற ஊடகவியலாளராகவும் தங்களை வளர்த்துக்கொள்ள வேண்டும் எனவும் சுற்றிக்காட்டினார்.

இலங்கையில் மக்கள் மத்தியில் காணப்படும் இன ரீதியான பார்வையினை ஊடகவியலாளர்கள் மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும். இனங்களுக்கு மத்தியில் நற்புறவினையும்இ நல்லிணக்கத்தையும் கட்டியெழுப்புகின்ற வகையில் தங்களது செய்திகளை வெளியிடவேண்டும். ஊடகவியலாளர்கள் நடுநிலையாக செயற்பட வேண்டும்.

நுஜா ஊடக அமைப்பு நாட்டிலுள்ள மூவின ஊடகவியலாளர்களையும் உள்வாங்கி செயற்படுவதானது வரவேற்கத்தக்கது. ஊடகவியலாளர்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படும் போது அதற்கெதிராக போராட்டங்கள் நடத்தியமை அமைப்பின் தைரியமான செயற்பாட்டினை வெளிக்காட்டுகின்றது. இதனை கடந்த கால தங்ளது செயற்பாடுகளை பார்க்கின்ற போது என்னால் உணர முடிகின்றது. எமது தூதுவராலயமும் நாட்டின் வடக்கு, கிழக்கு மற்றும் தெற்கு உட்பட சகல பிரதேச ஊடகவியலாளருக்கும் உதவிகளை செய்யவுள்ளோம் எனத் தெரிவித்த அவர் நுஜா ஊடக அமைப்பின் கோரிக்கைகளையும் நிறைவேற்றித் தருவதாக வாக்குறுதியளித்தார்.

நுஜா ஊடக அமைப்பின் தவிசாளர் றியாத் ஏ.மஜீத், தலைவர் எஸ்.எம்.அறூஸ் அமைப்பின் 15வது வருடாந்த மாநாடு எதிர்வரும் ஒக்டோபர் மாதம் கிழக்கில் இடம்பெறவுள்ளது இதில் தூதுவர் கலந்து கொள்ள வேண்டும் எனக் கேட்டுக் கொண்டதிற்கமைவாக துருக்கி தூதுவர் நிச்சயமாக கலந்து கொள்வதாக இதன்போது உறுதியளித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here