பாவமன்னிப்பு!

0
395

வீட்டாருக்கு விருப்பமில்லை என்பதால் மதுபானம் அருந்துவதில்லை என்றோ, புகைப்பதில்லை என்றோ வாக்குறுதியளித்திருந்த நபர்கள் ஏதாவது சந்தர்ப்ப சூழ்நிலைகளால் அக்காரியத்தை செய்து விடுவதுண்டு. அவ்வாறு செய்துவிட்டு வீட்டுக்கு வந்து அவர்கள் அதை மறைப்பதற்காக காட்டுகின்ற பாசாங்கிலேயே அந்தத் தவறு பிடிபட்டுவிடும். அப்போது அவர்கள் “இன்று கடைசி நாள் இனி இவ்வாறு செய்யவே மாட்டேன்” என்று சத்தியம் செய்வார்கள். அப்பாவித்தனமாக கூனிக் குறுகி நிற்பார்கள். வீட்டாரும் மன்னிப்பு வழங்கி விடுவார்கள். ஆனால் அது கடைசித்தரமாக இருக்கும் என்பதற்கு எந்த உத்தரவாதங்களும் இருப்பதில்லை.

முஸ்லிம்களுக்கு விருப்பமில்லாத, பாதகமான, சமூக அரசியலுக்கு குந்தகமான செயல்களை ஏதோ காரணத்திற்காக செய்து விட்டு, பெரும் வியாக்கியானங்கள், நியாயங்களை எல்லாம் கூறிய முஸ்லிம் அரசியல்வாதிகள், பின்னர் அது தவறு என உணர்ந்து தாம் தவறு செய்து விட்டதாக தலையில் அடித்துக் கொள்வதும் தம்மீதே கழிவிரக்கம் கொண்டு தலைகவிழ்ந்து நிற்பதும், நமது மக்கள் பாவமன்னிப்பு வழங்கி விடுவதும் வழக்கமாகவே நடந்து கொண்டிருக்கின்றது. இதுவும், முதற்தடவையும் அல்ல கடைசித் தடவையும் அல்ல.

மனிதர்கள் தவறுகளுக்கு மத்தியில் வாழ்பவர்கள் என்பதுடன், நாம் நினைப்பது போல் அரசியல் என்பது அவ்வளவு லேசுபட்ட தொழில் அல்ல. அந்த வகையில் கிட்டத்தட்ட எல்லா அரசியல்வாதிகளும் சமூகம் சார்ந்த அரசியலில் கொஞ்சமாகவேனும் நல்லது செய்திருக்கின்றார்கள் என்பதுடன் தவறிழைத்தும் இருக்கின்றார்கள். தமது பட்டம், வரப்பிரசாதங்கள், அப்போதிருந்த அரசியற் சூழல், பிடிவாதம், அறியாமை எனப் பல காரணங்களுக்காக மக்களுக்கு நன்மையளிக்காத எத்தனையோ நகர்வுகளுக்கு ஆதரவளித்திருக்கின்றார்கள். ஆனால், முஸ்லிம் அரசியல் பரப்பில் ஒரு சிலர் மாத்திரமே தவறுகளைப் பொறுப்பேற்க வேண்டும் என்று கூறி, இன்னுமொரு தரப்பினர் விலகிக் கொள்கின்ற போக்கு தொடர்பாக, புதிய தேர்தல் முறைமை சர்ச்சையை முன்னிறுத்தி பேச வேண்டியிருக்கின்றது.

யார் யார் பொறுப்பு

முஸ்லிம் அரசியல் கட்சித் தலைவர்கள், அமைச்சர்கள், பிரதியமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை உறுப்பினர்கள், பிரதேச சபை தவிசாளர்கள் மற்றும் இப்பதவிகளில் முன்னர் பதவி வகித்தவர்கள் என பெரும்பாலானோர் தம்மளவில் சமூகத்திற்கு பாதகமான பல காரியங்களில் ஈடுபட்டிருக்கின்றார்கள் என்பதை யாரும் மறுக்கவியலாது. தவறு எனத் தெரிந்து உள்நோக்கத்துடன் செய்த காரியங்களும், சரி என நினைத்துச் செய்து விட்டு பின்னர் பிழை என உணர்ந்த காரியங்களும் இதில் உள்ளடங்கும்.
இங்கு முதலாவதாக கவனிக்கப்பட வேண்டிய விடயம், முஸ்லிம் அரசியல்வாதிகள் என்ற பிரிவினருள் முஸ்லிம் கட்சித் தலைவர்களும் அதன் எம்.பி.களும் மற்றுமுள்ள முக்கிய அரசியல்வாதிகளும் பிரதானமானவர்கள் என்றாலும், உண்மையில் சுதந்திரக் கட்சி, ஐ.தே.கட்சி உள்ளடங்கலாக எல்லாக் கட்சிகள் ஊடாகவும் பிரதிநிதித்துவ அரசியலில் இருந்த, இருக்கின்ற எல்லாரும் முஸ்லிம் அரசியல்வாதிகளே. அவர்களுக்கும் பொறுப்பிருக்கின்றது. இதிலிருந்து யாரும் விட்டு விலகியிருக்க முடியாது.

இருபத்தைந்து வருடங்களுக்கு முன்னர் தவறுகள் இடம்பெற்றிருக்குமாயின் அதற்காக எம்.எச்.எம்.அஷ்ரஃப் மீது மட்டும் குற்றம் சுமத்த முடியாது என்பதுடன் அப்போதிருந்த ஐ.தே.க., சு.க அரசியல்வாதிகளும் கூட அதற்கு வகைசொல்ல வேண்டியவர்களே ஆவர். அதுபோலவே, அண்மைக்காலத்தில் முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட சட்டவாக்கங்கள், இனவாதத்திற்கு எதிராக சட்டம் அமுல்படுத்தப்படாமை, முஸ்லிம்களின் தனித்துவ அடையாளங்கள் பறிபோனமை போன்ற இழப்புக்களுக்கு றவூப் ஹக்கீமும்; றிசாட் பதியுதீனும், ஏ.எல்.எம். அதாவுல்லாவும் சிலவேளைகளில் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாவும் மட்டுமே பொறுப்பாளிகள் அல்லர் என்பதை முஸ்லிம்கள் முதலில் விளங்கிக் கொள்ள வேண்டும்.

முஸ்லிம்களின் உரிமைகள், அபிலாஷைகளை நிலைநாட்டுவதில் முஸ்லிம் கட்சித் தலைவர்களுக்கும் முக்கிய அரசியல் தலைவர்களுக்கும் பிரதான பொறுப்பிருக்கின்றது என்பதை மறுப்பதற்கில்லை. ஆனால் அதற்காக எல்லாக் குற்றச்சாட்டுக்களையும் அவர்கள் தலையில் மட்டும் போட்டுவிட்டு தப்பித்துவிடுதல் நியாயமில்லை என்பதே எமது நிலைப்பாடாகும். எனவே, முஸ்லிம் கட்சித் தலைவர்களுக்கு இருப்பதற்கு சரிசமமான பொறுப்பும் கடமையும் முஸ்லிம் பெயர்களோடு பாராளுமன்றத்தில் இருக்கின்ற எல்லா (21) எம்.பி.க்களுக்கும் மாகாண சபை உறுப்பினர்கள் மற்றும் முன்னாள் அரசியல்வாதிகளுக்கும் இருக்கின்றது என்பதை இக்கட்டுரை அழுத்தமாக உரைக்க விரும்புகின்றது.

தவறுகளின் பட்டியல்

முஸ்லிம் அரசியல்வாதிகள் எடுத்த நிலைப்பாடுகளின் காரணமாக சமூகத்திற்கு எப்போதாவது நன்மைகள் கிடைத்தது போல எத்தனையோ பாதகங்களும் நடந்திருக்கின்றன. பாதகமான விளைவுகள் ஏற்பட்டால் அவர்களது நகர்வு தவறானதாக வகைப்படுத்தப்படுகின்றது. அதாவது, முஸ்லிம் அரசியல்வாதிகள் சரியா, பிழையா என்பதை கடைசியில் கிடைக்கப் பெறும் பெறுபேறுகள்;தான் தீர்மானிக்கின்றன.
இப்படிப் பார்த்தால் இலங்கை இந்திய ஒப்பந்த காலத்தில் பெருந்தேசிய கட்சிகளின் அங்கம் வகித்த முஸ்லிம் அரசியல்வாதிகள் எடுத்த நிலைப்பாடு, புலிகளுடனான ஒப்பந்தத்தில் இடம்பெற்ற தவறுகள், நோர்வே பேச்சுக்களில் கோட்டை விட்டமை, மஹிந்த ராஜபக்ஷ ஆட்சியில் இனவாதம் ருத்ரதாண்டவம் ஆடிக் கொண்டிருந்த போது அமைச்சு மற்றும் எம்.பி.கதிரைகளில் பசைபூசியது போல ஒட்டிக் கொண்டிருந்தமை, பள்ளிவாசல்கள் உடைக்கப்பட்ட போது அறிக்கை அரசியல் நடாத்தியமை, அபாயாவும் ஹலாலும் கேள்விக்குள்ளாக்கப்பட்ட போது பொறுமைகாக்கச் சொன்னமை எல்லாம் முஸ்லிம் அரசியல்வாதிகள் சமூகத்திற்கு பாதகமாக எடுத்த தவறான நிலைப்பாடுகள்தாம்.

18ஆவது திருத்தத்தை மேற்கொண்டு மஹிந்த ராஜபக்ஷ இன்னுமொரு முறை ஆட்சிபீடமேற ஆதரவளித்தமை, திவிநெகுமவுக்கு ஆதரவளித்தமை, மஹிந்தவுடன் கடைசி வரையும் ஒட்டிக் கொண்டிருந்தமை, மஹிந்த தவறு என்பதற்காக மைத்திரியும் ரணிலும் முஸ்லிம்களை காப்பார்கள் என்ற முடிவுக்கு வந்தமை, எல்லை நிர்ணயத்தில் தவறுகளை திருத்தாமை, அரசியலமைப்பு மறுசீரமைப்பில் முஸ்லிம்களின் அபிலாஷையை உள்ளடக்க அழுத்தம் கொடுக்காமை, 20ஆவது திருத்தத்திற்கு கிழக்கு மாகாண சபையில் ஆதரவளித்தமை என்பனவும் தவறுகள்தான்.
இந்த பட்டியல் தொடரில் தேர்தல் முறைமை மாற்றம் என்பது கடைசியாக வந்த விடயமே தவிர, முஸ்லிம் அரசியல்வாதிகள் விட்ட முதலாவது தவறு இதுவல்ல. நிச்சயமாக கடைசித் தவறாகவும் இருக்கப் போவதில்லை. அத்துடன், தவறுகள் என்று வரும்போது அதற்குப் பொறுப்புக் கூறுபவர்களாக ஒரு சில அரசியல்வாதிகள் மட்டுமே இருக்க வேண்டும் என்பதில்லை. இதனை மனதிற் கொண்டே ஏனைய அரசியல்வாதிகள் தமது கருத்துக்களை முன்வைக்க வேண்டும்.

புதிய தேர்தல்முறை

நாட்டில் புதியதொரு தேர்தல் முறைமையை நடைமுறைப்படுத்துவதற்கான முன்னெடுப்புக்கள் பல வருடங்களாக மேற்கொள்ளப்பட்டன. கடைசியாக ‘விகிதாசாரத்திற்குள் தொகுதி’ என்று விபரிக்கப்படும் கலப்பு தேர்தல் முறைமையை நடைமுறைப்படுத்துவதற்கு இணக்கம் காணப்பட்டது. குறிப்பாக உள்ளுராட்சி மன்ற தேர்தல்களுக்கு 60இற்கு 40 என்ற விகிதசமன் அடிப்படையிலும் மாகாண சபை தேர்தல்களுக்கு 50இற்கு 50 என்ற அடிப்படையிலும் வாக்கெடுப்பு நடாத்த முடிவெடுக்கப்பட்டது.
இதுதொடர்பான சட்டவாக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்ட போது ‘இப்பேர்ப்பட்ட புதிய முறைமைக்கு ஆதரவாக வாக்களிக்க வேண்டாம்’ என்று முஸ்லிம் மக்கள் மன்றாட்டமாக கேட்டுக் கொண்டனர். முஸ்லிம் சமூக செயற்பாட்டாளர்களும் வலியுறுத்தியிருந்தனர். ஆனால் வழக்கம்போல முஸ்லிம் கட்சித் தலைவர்கள் உள்ளடங்கலாக பெருமளவிலான முஸ்லிம் எம்.பி.கள் இதற்கு ஆதரவாக வாக்களித்திருந்தனர். அதுமட்டுமன்றி, ‘இந்தப் புதிய முறைமை முஸ்லிம்களுக்கு மிகவும் சாதகமானது’ என்றும் மேதாவித்தனமான கற்பிதங்களைக் கூறினர். ஆனால் ஒரு சில மாதங்களுக்குள்ளேயே அவர்களது நிலைப்பாடு தலைகீழாக மாறியுள்ளதைக் காண்கின்றோம்.

மாகாணங்களின் கீழுள்ள தொகுதிகளின் எல்லைகளை மீள்நிர்ணயம் செய்யும் அறிக்கை பொறுப்பான அமைச்சருக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் முஸ்லிம்களின் பிரதிநிதித்துவங்களைத் தக்கவைக்கும் விதத்தில் முஸ்லிம் பெரும்பான்மை தொகுதிகளும் இல்லை இரட்டை அங்கத்தவர் தொகுதிகளும் இல்லை. இந்நிலையில் 50இற்கு 50 அடிப்படையில் மாகாண சபைத் தேர்தல் நடைபெற்றால் முஸ்லிம் பிரதிநிதித்துங்களின் எண்ணிக்கை அரைவாசியை விடவும் குறைவடையும் என்பது தெட்டத்தெளிவாக தெரிகின்றது. அத்துடன், இந்த கலப்பு முறை மேலும் பல நடைமுறைச் சிக்கல்களையும் உள்ளடக்கியது என்பதை அண்மையில் நடைபெற்ற உள்ளுராட்சி மன்றத் தேர்தல் அனுபவ ரீதியாக உணர்த்தியிருக்கின்றது.
இதுபோன்ற காரணங்களால் முஸ்லிம் கட்சித் தலைவர்கள் உள்ளடங்கலாக மலையக மற்றும் சிறு கட்சிகளின் தலைவர்கள் ‘பழைய முறையிலேயே தேர்தல் நடாத்த வேண்டும்’ என்று கருத்தை தெரிவித்து வருகின்றனர். முன்னுக்குப் பின் முரண்நகையான நிலைப்பாடுகளை எடுப்பது ஒரு தவறான முன்மாதிரி என்பதில் மறுபேச்சுக்கே இடமில்லை. முஸ்லிம் பெரும்பான்மைத் தொகுதிகள் அமைவது சாத்தியமில்லை என்பது முன்னமே தெரிந்திருக்க, 50இற்கு50 முறைமைக்கு கையுயர்த்தியது முஸ்லிம் அரசியல் அறிவிலித்தனத்திற்கு இன்னுமொரு எடுத்துக் காட்டாக கொள்ளப்படலாம்.

தேசிய அரசியலில் மஹிந்த ராஜபக்ஷ அணிக்கு சாதகமானது என கருதப்படும் புதிய முறையை கூட்டு எதிர்க்கட்சி ஆதரிக்கின்றது. மக்கள் விடுதலை முன்னணி எப்போதும் புதிய முறைக்கே ஆதரவாக இருந்து வருகின்றது. ஆனால், ஐக்கிய தேசியக் கட்சி பழைய முறைக்கு திரும்புவது என்ற முடிவுக்கு தற்போது வந்திருக்கின்றது. ஆனால் சட்டத் திருத்தம் எதுவும் இன்னும் மேற்கொள்ளப்படவில்லை.
இரு கருத்துக்கள்
இந்நிலையில், இது தொடர்பாக கருத்துத் தெரிவித்துள்ள உள்ளுராட்சி மாகாண சபைகள் அமைச்சர் பைஸர் முஸ்தபா மேற்குறிப்பிட்ட முஸ்லிம் அரசியல்வாதிகளை ‘முனாபிக்’ (நயவஞ்சக) அரசியல்வாதிகள் என்று வர்ணித்துள்ளார். அவர் கூறுவது பொருத்தமான உவமானமாகவே இருக்கலாம். அது வேறு விடயம். ஆனால் இந்த தேர்தல் முறைமைக்கு ஆதரவளித்துவிட்டு இப்போது எதிர்க்கும், முஸ்லிம் கட்சித் தலைவர்களும் முஸ்லிம் கட்சிகளின் பாராளுமன்ற உறுப்பினர்களும் மட்டும்தான் இதுவிடயத்தில் தவறு இழைத்திருக்கின்றார்களா? முஸ்லிம் சமூகத்திற்கு நயவஞ்சகம் புரிந்தவர்கள் அவர்கள் மட்டுந்தானா? என்ற கேள்வி இவ்விடத்தில் தவிர்க்க முடியாமல் மேலெழுகின்றது.

புதிய தேர்தல் முறைமைக்கு கண்ணைமூடிக் கொண்டு கையை உயர்த்தியது உள்ளடங்கலாக கணிசமான வரலாற்றுத் தவறுகளுக்கு முஸ்லிம் தனித்துவக் கட்சித் தலைவர்களும் எம்.பி.களும் மாகாண சபை உறுப்பினர்களும் துணைபோயிருக்கின்றார்கள் என்பதே யதார்த்தம். ஆனால், இது அவர்களின் கடமை மட்டுந்தானா, ஏனைய கட்சிகளின் ஊடாக பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவம் செய்யும் பைசர் முஸ்தபா போன்ற முஸ்லிம் அமைச்சர்கள் மற்றும் எம்.பி.க்களுக்கு இது விடயத்தில் பொறுப்பில்லையா என்ற கேள்விக்கு விடை தேட வேண்டியிருக்கின்றது.
இன்று முஸ்லிம் எம்.பி.க்கள் எல்லோரும் ஆளும் தரப்பிலேயே அங்கம் வகிக்கின்றனர். எனவே, முஸ்லிம்கள் தொடர்பான சட்டவாக்கம் மேற்கொள்ளப்படுகின்ற போது, தீர்மானம் எடுக்கப்படும் போது, முஸ்லிம் கட்சித் தலைவர்கள், அக்கட்சிகளின் முக்கிய ஓரிரு எம்.பிக்களுக்கு மட்டும் அவ்விடயம் பொறுப்பல்ல. ஐ.தே.கட்சியிலும் சுதந்திரக் கட்சியிலும் அங்கம் வகிக்கின்ற முஸ்லிம் எம்.பி.க்கள் எல்லோருக்குமே அது கூட்டுப்பொறுப்பு என்பதை மறந்து விடக் கூடாது. எனவே, அவர்கள் நயவஞ்சகம் செய்தார்கள் என்று கூறும் பைஸர் முஸ்தபா போன்றோர், புதிய தேர்தல் முறைமையில் முஸ்லிம்களின் உறுப்புரிமையை உறுதிப்படுத்த தன்னைப்; போன்ற ஏனைய முஸ்லிம் எம்.பி.க்கள் என்ன செய்திருக்கின்றோம் என்று சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
இதேவேளை, முஸ்லிம் கூட்டமைப்பின் தலைவரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான எம்.ரி.ஹசன்அலியும் இது தொடர்பான கருத்தை தெரிவித்துள்ளார். அதாவது, புதிய தேர்தல் முறைமைக்கு கையுயர்த்தி விட்டு இப்போது பழைய முறைமையை வேண்டிநிற்கும் றவூப் ஹக்கீம் உள்ளிட்ட முஸ்லிம் அரசியல்வாதிகள் மக்களிடம் மன்னிப்புக் கோர வேண்டும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

‘நீண்டகால கலந்தாய்வின் பின்னரே புதிய தேர்தல் முறைமை கொண்டு வரப்பட்டது. ஆனால் எல்லை மீள் நிர்ணயத்தில் முஸ்லிம்களுக்கு இதில் பாதிப்பிருக்கின்றது. எனவே புதிய முறையிலேயே தேர்தல் நடத்துவது என்றால் எல்லை மீள்நிர்ணய தவறுகள் சீர்செய்யப்பட வேண்டும். அதேபோன்று பழைய முறையில் தேர்தல் நடத்துவது என்றாலும், முன்னைய தொகுதி நிர்ணயத்தில் உள்ள முஸ்லிம்களுக்கு பாதகமான விடயங்கள் மறுசீரமைக்கப்பட வேண்டும்’ என்பது ஹசனலியின் நிலைப்பாடாக இருப்பதாக தெரிகின்றது.
பெரும் எதிர்பார்ப்புக்களோடு உருவாக்கப்பட்ட முஸ்லிம் கூட்டமைப்பின் (ஐ.ம.கூ.) தலைவரான ஹசன்அலி முஸ்லிம்களின் அபிலாஷைகள், உரிமைகளோடு சம்பந்தப்பட்ட விடயமான திகண, கண்டி கலவரங்கள் தொடர்பாக ஏதோ காரணத்திற்காக இவ்வாறான பகிரங்க அறிக்கையை வெளியிட்டதை காணக் கிடைக்கவில்லை என்றபோதும், இப்போது தேர்தல் முறைமை விடயத்தில் முஸ்லிம் அரசியல்வாதிகள் ‘மன்னிப்புக் கேட்க வேண்டும்’ என்று கோரும் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளமை கவனிப்பிற்குரியது.

பிராயச்சித்தம் தேவை

முஸ்லிம் தலைவர்கள் மன்னிப்பு கேட்க வேண்டும் என்பதில் நூறு சதவீத நியாயமிருக்கின்றது. ஆனால் முஸ்லிம்களுக்கு இழைத்த முன் – பின்னான தவறுகளுக்கு முஸ்லிம் தலைவர்கள் பிரதான பொறுப்பாளிகள் என்றாலும், எல்லா அரசியல்வாதிகளுக்கும் இதில் சிறியதும் பெரியதுமான பங்கிருக்கின்றது என்பதை மறந்து விட முடியாது. அந்த அடிப்படையில், மன்னிப்பு கேட்பது என்றால் எல்லா முஸ்லிம் அரசியல்வாதிகளுமே மக்களிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும். இதில் ஹசனலி போன்றோரும் உள்ளடங்கலாம். அதாவது முஸ்லிம் கட்சித் தலைவர்கள் மட்டுமன்றி அவர்களுக்கு முட்டுக் கொடுத்துக் கொண்டிருந்த இரண்டாம் நிலைத் தலைவர்கள், எம்.பி.கள் என எல்லோரும் மக்கள் மன்றத்தில் மன்னிப்புக் கேட்க வேண்டியவர்களே.

ஏனென்றால், இந்தக் கட்டுரையின் மேற்பகுதியில் குறிப்பிட்டவாறு தனித்துவ அடையாள அரசியல் ஆரம்பிப்பதற்கு முன்பிருந்து, இலங்கை இந்திய ஒப்பந்த காலம் மற்றும் யுத்தகாலம் தொட்டு இன்றைய நிலைமாறுகாலம் வரைக்கும் முஸ்லிம் சமூகம்சார் அரசியலில் பல முஸ்லிம் அரசியல்வாதிகள் தவறுகளையும் நயவஞ்சகத் தனத்தையும் ஏமாற்று அரசியலையும் மேற்கொண்டு தவறிழைத்திருக்கின்றார்கள். எனவே காலகாலமாக நடந்த இப்பேர்ப்பட்ட தவறுகளுக்கு கட்;சித் தலைவர்களான ஹக்கீமும், றிசாட்டும், அதாவுல்லாவும் பிரதான காரணிகள் என்றாலும் அவர்கள் மட்டுமன்றி, எல்லா அரசியல்வாதிகளும் இதற்குப் பொறுப்புக் கூற வேண்டியவர்கள் என்பதை தடித்த எழுத்துக்களால் எழுத விரும்புகின்றேன்.
அந்த வகையில் பார்த்தால், இவற்றோடு சம்பந்தப்பட்டவர்களான உயிருடன் உள்ளää மறைந்த, ஓய்வுநிலை மற்றும் தற்போது அதிகாரத்தில் உள்ள முஸ்லிம் கட்சித் தலைவர்கள், பிராந்தியத் தலைவர்கள் உள்ளடங்கலாக கிட்டத்தட்ட எல்லா அரசியல்வாதிகளுமே முஸ்லிம் மக்களின் முன்னால் முட்டுக்காலிட்டு பாவமன்னிப்பு கோர வேண்டிய நிலை வரும்.

ஆளுக்காள் அறிக்கை விடுவது முக்கியமல்ல என்பதுடன் மன்னிப்புக் கேட்டால் தவறு, சரிப்படுத்தப்பட்டு விடாது. மன்னிப்பு கேட்பவர்கள் அதன்பின் சமூகத்திற்கு தவறு இழைக்காதவர்களாக இருக்க வேண்டும். ஆனால் மக்கள் மன்னித்து விடுவார்கள் என்ற அசட்டுத் துணிச்சல் கட்சித் தலைவர்கள் தொடக்கம் பிரதேச சபை உறுப்பினர்கள் வரை எல்லோரையும் மீண்டும் மீண்டும் தவறு செய்ய துணிவூட்டுகின்றது. இது அரசியல்வாதிகளுக்கும் அழகல்ல, மக்களுக்கும் அழகல்ல, ஒவ்வொரு சீசனிலும் வழங்கப்படுகின்ற பாவமன்னிப்புக்கும் அழகானதல்ல.
எனவே, தூரநோக்கற்ற விதத்தில் சிந்திப்பதும் ஆட்சியாளர்களை மகிழ்விப்பதற்காக மக்கள் நலனுக்கு முரணாக செயற்படுவதும், பின்னர் வந்து கற்பிதம் கூறி மன்னிப்புக் கேட்பதுமான அரசியல் பாணி நிறுத்தப்பட வேண்டும். முஸ்லிம் மக்கள் விடயத்தில் தவறுகள் இடம்பெறக் கூடாது என்பதுடன், இடம்பெற்ற தவறுகளுக்கு யார்மீதாவது பழியைப் போட்டுவிட்டோ, பாவமன்னிப்பின் மூலமோ தப்பித்துக் கொள்ளாமல்…… அதற்கு பிராயச்சித்தம் தேடப்பட வேண்டும்.

அதிகாரத்தில் உள்ள கட்சித் தலைவர்கள், அதிகாரமில்லாத கட்சித் தலைவர்கள் உள்ளடங்கலாக ஆட்சியில் உள்ள ஒவ்வொரு முஸ்லிம் எம்.பி.க்கும் மட்டுமன்றி ஓய்வுநிலை அரசியல்வாதிகளுக்கும் ஒவ்வொரு முஸ்லிம் பொதுமகனுக்கும் இருக்கின்ற கூட்டுப் பொறுப்பாகவே சமூக அரசியலை பார்க்க வேண்டும். அந்த வகையில், எந்த முறையில் தேர்தல் நடந்தாலும் முஸ்லிம்களின் பிரதிநிதித்துவம் உறுதிப்படுத்தப்பட வேண்டும்.
சும்மா, வாயால் வடை சுட்டுக் கொண்டிருக்கக் கூடாது.

– ஏ.எல்.நிப்றாஸ் (வீரகேசரி – 29.07.2018)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here