மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்துக்கு நிரந்தர வலயக்கல்விப் பணிப்பாளரை நியமிப்பதற்கு நடவடிக்கை – எம்.எஸ்.சுபையிர்

0
254

(எஸ்.அஷ்ரப்கான்)

மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்திற்கு நிரந்தர வலயக்கல்வி பணிப்பாளர் நியமனம் தாமதமாவதால் அவ்வலயத்தின் கல்வித்துறை வீழ்ச்சியடைந்து வருவதாக கிழக்கு மாகாண முன்னாள் அமைச்சரும், ஏறாவூர் நகர பிரதேச ஒருங்கிணைப்புக்குழுவின் இணைத்தலைவருமான எம்.எஸ்.சுபையிர் தெரிவித்தார்.

ஏறாவூர் மாக்கான் மாக்கார் மகா வித்தியாலயத்தில் சாதனை படைத்து பாடசாலைக்கு பெருமை சேர்த்த மாணவர்களை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு அண்மையில் (26) அதிபர் எம்.எம்.எம்.முகைடீன் தலைமையில் அப்பாடசாலை கேட்போர்கூடத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் கௌரவ அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

மட்டக்களப்பு மத்தி கல்வி வலயமானது அதன் உருவாக்கத்திலிருந்து தேசிய ரீதியாகவும், மாகாண ரீதியாகவும் பல சாதனைகளை நிகழ்த்தி வரலாற்றில் பேசப்படுமளவிற்கு திகழ்ந்ததனை யாவரும் அறிவோம். குறிப்பாக, 2011, 2012, 2013 ஆம் ஆண்டுகளில் க.பொ.த சாதாரண தரப்பரீட்சையில் தேசிய மட்டத்தில் முதலாவது வலயமாகவும் இது தெரிவு செய்யப்பட்டது.

கல்வித்துறையிலும், இணைப்பாடவிதான செயற்பாடுகளிலும் படிப்படியாக வளர்ச்சியடைந்து சாதனைகளை படைத்த இக்கல்வி வலயமானது இன்று தேசிய ரீதியில் 7வது இடத்திற்கு பின்தள்ளப்பட்டுள்ளது. தற்போது இவ்வலயத்தினது கல்வி நடவடிக்கைகள் வீழ்ச்சியடைந்துள்ளதனாலே இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக அறிய முடிகிறது. இது மிகவும் கவலையான விடயமாகும்.

இதற்கான காரணங்களை ஆராய்கின்ற போது ஒரு சில மாதங்களில் ஓய்வு பெற்றுச் செல்லக்கூடியவர்களை தற்காலிகமாக வலயக் கல்விப் பணிப்பாளர்களாக நியமிப்பதனால் அவர்கள் தமது கடமையின்போது அதிபர்களையும் ஆசிரியர்களையும் சமாளித்து திருப்திப்படுத்தி மெத்தன போக்கில் செயற்படுகின்ற நிலைமைகளே காணப்படுகிறது. இவ்வாறான போக்கு இவ்வலயத்தின் கல்வி வளர்ச்சிக்கு உகந்ததல்ல என்பதனை சகலரும் உணர்ந்துள்ளனர்.

ஒரு சில மாதங்களில் ஓய்வு நிலைக்கு செல்லுகின்றவர்களை தொர்ந்தும் மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்திற்கு பணிப்பாளர்களாக நியமிக்கின்ற போது அவர்களிடம் எந்த திட்டமிடல்களும் இல்லை, அதேபோன்று எந்தவிதமான ஆற்றல்களும் இல்லை. அவர்களினால் முறையானதும் திருப்திகரமானதுமான சேவைகளை ஒருபோதும் வழங்கவும் முடியாது. அப்படியானால் ஒருபோதும் இந்த வலயத்தினது கல்வித்துறையை முன்னேற்ற முடியாது.

தற்போதுள்ள மட்டக்களப்பு மத்தி வலயக் கல்வி பணிப்பாளரும் இன்னும் சில மாதங்களில் ஓய்வுபெற்றுச் செல்லவுள்ளார். ஆகவே, குறித்த வலயத்திற்கு ஒரு நிரந்தர வலயக்கல்விப் பணிப்பாளரை நியமிப்பதற்கான நேர்முகப்பரீட்சையினை துரிதப்படுத்துமாறும், ஏறாவூர் பற்று பிரதேசத்தில் உள்ள 8பாடசாலைகளில் ஒன்றாக காணப்படும் 1சீ தரமுடைய மாக்கான் மாக்கார் மகா வித்தியாலயத்த்னை ஒரு தேசிய பாடசாலையாக தரமுர்த்தி தருமாறும் கிழக்கு மாகாண ஆளுநரிடம் கோரிக்கை விடுக்கின்றேன்.

மாக்கான் மாக்கார் மகா வித்தியாலயத்தினை தேசிய பாடசாலையாக தரயமுர்த்துமாறு அப்பிரதேச கல்வியலாளர்களும், பொதுமக்களும் நீண்டகாலமாக விடுத்துவரும் கோரிக்கை மிக விரைவில் நிறைவேறும் என நம்புகிறேன். அதற்கான சிபாரிசினை ஜனாதிபதியிடமிருந்து பெற்று ஆளுநரிடம் கையளித்துள்ளேன்.

கடந்த யுத்தத்தின் போது பாதிக்கப்பட்டு பொருளாதாரத்தினை இழந்த எமது சமூகம் இப்போது கல்வியினூடாக தலைநிமிர்ந்து தமது பொருளாதாரத்தினை மீளப்பெற்றுக்கொள்கின்ற ஒரு சூழ்நிலை உருவாகியுள்ளது. குறிப்பாக ஏறாவூர் பிரதேசத்திலே அரச நிருவாக சேவை மற்றும் கல்வி நிருவாக சேவை உத்தியோகத்தர்கள் என பல கல்வியலாளர்கள், புத்திஜீவிகள் உருவாக்கப்பட்டுள்ளனர். இன்று சகலருடைய எதிர்பார்ப்பும் இழக்கப்பட்ட எமது சமூகத்தின் பொருளாதாரத்தினை கல்வியினூடாக கட்டியெழுப்புவதேயாகும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here