ஐக்கிய அரபு இரச்சியத்துக்கும் இலங்கைக்கும் இடையிலான உறவினை பலப்படுத்துவது சம்பந்தமாக ஹிஸ்புல்லாஹ் பேச்சு

0
249

”நீண்ட காலமாக சிறந்த முறையில் பேணப்பட்டு வந்த ஐக்கிய அரபு இரச்சியத்துக்கும் இலங்கைக்கும் இடையிலான உறவினை மேலும் பலப்படுத்த வேண்டும்” என நெடுஞ்சாலைகள் மற்றும் வீதி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் கலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் ஐக்கிய அரபு இராச்சியத்தின் இலங்கைக்கான தூதுவர் முஹம்மட் அலி இப்ராஹீம் அல் முஅல்லாவிடம் கோரிக்கை விடுத்தார்.

ஐக்கிய அரபு இராச்சியத்துக்கும் இலங்கைக்கும் இடையிலான உறவினை மேலும் பலப்படுத்துவது சம்பந்தமான உத்தியோகபூர்வ கலந்துரையாடலொன்று இன்று வியாழக்கிழமை நெடுஞ்சாலைகள் மற்றும் வீதி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் கலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்வுக்கும் ஐக்கிய அரபு இராச்சியத்தின் இலங்கைக்கான தூதுவர் முஹம்மட் அலி இப்ராஹீம் அல் முஅல்லாவுக்கும் இடையில் தூதுவராலயத்தில் இடம்பெற்றது.

இதன்போது, இலங்கைக்கும் – ஐக்கிய அரபு இராச்சியத்துக்கும் இடையிலான நெருக்கமான உறவை மேலும் பலப்படுத்துவது சம்பந்தமாகவும் குறிப்பாக வர்த்தக, கல்வி, பொருளாதார ரீதியிலான உறவினை கட்டியெழுப்புவது சம்பந்தமாகவும் கலந்துரையாடப்பட்டது.

அத்துடன், இலங்கையின் அபிவிருத்திக்கும், இன நல்லிணக்க முயற்சிகளுக்கும் ஐக்கிய அரபு இராச்சியம் வழங்கி வருகின்ற ஒத்துழைப்புக்கும் – பங்களிப்புக்கும் இதன்போது நன்றி தெரிவித்த இராஜாங்க அமைச்சர், இலங்கையில் சிறுபான்மையாக வாழ்கின்ற முஸ்லிம்களின் உள்ளக விவகாரங்களில் ஐ.அ.இ. காட்டுகின்ற கரிசனைக்கு நன்றி தெரிவித்தார்.

இதேவேளை, யுத்தத்தால் பாதிக்கப்பட்ட கிழக்கு மாகாண மக்களின் அபிவிருத்தியிலும் அதிக அக்கறை செலுத்துமாறும், குறிப்பாக கிழக்கு மாகாண முஸ்லிம்களின் நலன்களில் அதிக கவனம் செலுத்துமாறும் கோரிக்கை விடுத்தார்.
இராஜாங்க அமைச்சரின் கோரிக்கைக்கு அமைய எதிர்காலத்தில் கிழக்கு மாகாணத்துக்கு விஜயம் செய்து அங்குள்ள நிலைவரங்கள் தொடர்பில் ஆராய்வதாகவும், இராஜாங்க அமைச்சரின் முயற்சியால் காத்தான்குடியில் அமைக்கப்பட்டுள்ள முஸ்லிம்களின் பூர்வீக நூதனசாலை மற்றும் அமைக்கப்பட்டு வருகின்ற பல்கலைக்கழகம் என்பன சமூகத்துக்கு பயன்தரக்கூடி முயற்சிகள் என தனது பாராட்டுக்களையும் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here