மூதூர் ஆயுள்வேத மத்திய மருந்தகம் கிராமிய வைத்தியசாலையாக தரமுயர்த்தப்படும்

0
204

(எம்.எஸ்.எம்.ஸாகிர்)

மூதூர் ஆயுள்வேத மத்திய மருந்தகத்தை கிராமிய வைத்தியசாலையாக தரமுயர்த்துவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்வதாக கிழக்கு மாகாண சுதேச மருத்துவ திணைக்களத்தின் ஆணையாளர் வைத்திய கலாநிதி திருமதி ஸ்ரீதர் தெரிவித்தார்.

மூதூர் ஆயுள்வேத மத்திய மருந்தக பொறுப்பதிகாரி வைத்தியர் எச்.எம்.ஹாரீஸின் தலைமையில் இடம்பெற்ற ஆயுள்வேத மத்திய மருந்தகத்தின் 21ஆவது வருட நிறைவு விழாவில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு பேசுகையிலே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் அங்கு தெரிவிக்கையில், ஆண்கள், பெண்களுக்குரிய மருத்துவ விடுதிகள் (ward) மருந்து களஞ்சியசாலை மற்றும் வைத்தியர்கள் தங்குவதற்கான தங்குமிட விடுதி என்பவற்றை அமைப்பதற்குரிய ஏற்பாடுகளையும் செய்வதாக நிகழ்வின் போது பொதுமக்களுக்கு உறுதியளித்தார்.

1997 ஜூலை 23ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட மூதூர் ஆயுள்வேத மத்திய மருந்தகம் திருகோணமலை மாவட்டத்தின் பழமை வாய்ந்த மருந்தகமாக இருக்கின்றது. மிகக் கூடுதலான மக்கள் தொகையைக் கொண்ட பிரதேசமாக மூதூர் காணப்படுகின்றது. எனவே மேலதிக சிகிச்சைகளைப் பெற்றுக் கொள்வதற்காக, மூதூரிலிருந்து சுமார் 40 கிலோமீற்றர் தூரம் கப்பல்துறை வைத்தியசாலைக்கு செல்வதிலுள்ள சிரமங்களை தவிர்ப்பதற்காகவும், கிராமிய வைத்தியசாலையாக மூதூர் ஆயுள்வேத மத்திய மருந்தகம் மாற்றப்பட வேண்டியமையின் தேவையும், அவசியமும் பற்றி மூதூர் ஆயுள்வேத மத்திய மருந்தக பொறுப்பதிகாரி வைத்தியர் எச்.எம்.ஹாரீஸ் தனது தலைமை உரையில் தெரிவித்தார்.

நிகழ்வில், மருந்தகம் தரம் உயர்த்தல் சம்பந்தமான மஹஜர் ஒன்று அறபா நகர் கிராம அபிவிருத்தி சங்க தலைவரினால் கிழக்கு மாகாண சுதேச மருத்துவ திணைக்களத்தின் ஆணையாளருக்கு வழங்கப்பட்டது.

பொதுமக்கள் மத்தியில் ஆரோக்கியமான உணவு பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் போசனை உணவு மற்றும் இலைக்கஞ்சியும் நிகழ்வின் போது வழங்கப்பட்டது. அத்தோடு, விசேட அதிதியாக கலந்து கொண்ட மூதூர் பிரதேச சபை தவிசாளரிடம் மருந்தகத்திற்கு தேவையான காணியைப் பெற்றுத் தருமாறு வேண்டுகோள் ஒன்றும் முன்வைக்கப்பட்டது.

நிகழ்வில் விசேட அதிதியாக மூதூர் பிரதேச சபை தவிசாளர் எம்.எம்.அரூஸ், மூதூர் அனைத்து பள்ளிவாயல் சம்மேளனத்தின் தலைவர் உட்பட வைத்தியர்கள்இ கிராம அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் என பெரும் எண்ணிக்கையானவர்கள் நிகழ்வில் கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here