கசக்கும் தேனிலவும் துளிர்க்கும் காதலும்

0
337

ஆசை அறுபது நாள் மோகம் முப்பது நாள் என்று சொல்வார்கள். அதுபோல நல்லாட்சியுடனான தேனிலவு முஸ்லிம் கட்சிகளுக்கு கசக்கத் தொடங்கியிருக்கின்ற சூழலில், அடுத்து வரும் தேர்தல்களில் தாம் யாருக்கு ஆதரவளிப்பது, எவ்வாறான கூட்டுக்களை அமைப்பது என்பது குறித்து இப்போதே சிந்திக்கத் தொடங்கி விட்டனர்.
சிலருக்கு கோத்தா காய்ச்சலும் சிலருக்கு மஹிந்த காதலும் ஏற்பட்டிருக்கின்றது. பலருக்கு மைத்திரி-ரணில் ஒவ்வாமை ஏற்பட்டிருப்பதாகவும் தெரிகின்றது. இந்தப் பின்புலத்தில், அடுத்த மாகாண சபை மற்றும் ஜனாதிபதித் தேர்தலை முன்னிட்டு இரகசிய சந்திப்புக்களையும் காய்நகர்த்தல்களையும் மேற்கொண்டு வருகின்றனர்.
பொதுவாக நாட்டு மக்களுக்கும் குறிப்பாக சிறுபான்மையினருக்கும் ஒரு ஆட்சி மீது 5 அல்லது 10 வருடங்களில் ஏற்படுகின்ற அதிருப்தி நல்லாட்சியின் மீது முஸ்லிம்களுக்கு அதனை விட குறைந்த காலத்திலேயே ஏற்பட்டிருக்கின்றது என்பதை சொல்லாமல் இந்தக் கட்டுரையை எழுதவியலாது. இதற்குப் பிரதான காரணம், நல்லாட்சியின் குறைவான செயலாற்றல் குறுங்காலத்திலேயே வெளிப்பட்டமை என்றால் மிகையில்லை.
ஐக்கிய தேசியக் கட்சி தொடர்ச்சியான தோல்விகளைக் கண்டு வந்த நிலையில் சுதந்திரக் கட்சியின் தலைவராக இருந்த மஹிந்த ராஜபக்ஷ இரண்டாவது தடவை ஜனாதிபதியாக பதவி வகித்ததுடன், மூன்றாவது தடவையும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் துணிச்சலையும் பெற்றிருந்தார். இந்த சந்தர்ப்பத்திலேயே இன்று வரை தீர்க்கப்படாதிருக்கின்ற தம்புள்ளை பள்ளிவாசல் விவகாரம் சூடுபிடித்தது. அதற்கடுத்ததாக அளுத்கமையில் இனவாதம் கொழுத்தி விடப்பட்டது.
ஆட்சிமாற்ற பொறி
நாட்டில் இன்றிருக்கின்ற நிலையில் தமிழர்களை உணர்வெழுச்சி கொள்ளச் செய்வது கடினம் என்றபடியாலும், தமிழர்கள் மீது அடக்குமுறை ஒன்றை பிரயோகித்து எதையாவது சாதிக்க விரும்பினால் சர்வதேசம் கேள்வி கேட்கும் என்ற நிலைமை இருக்கின்றமையாலும் முஸ்லிம்களை வைத்து ஆட்சி மாற்றம் ஒன்றை நிகழ்த்த உள்நாட்டு சக்திகள் திட்டமிட்டன. வெளிநாடுகளின் பங்களிப்பும் இதில் இருந்தது.
இலங்கையில் நடந்த, நடக்கின்ற இன, மத அடிப்படையிலான எல்லாக் கலவரங்களுக்குப் பின்னாலும் ஒரு அரசியல் ஒழிந்துகொண்டு இருப்பதைப் போல முஸ்லிம்களின் அடையாளங்கள் மீதான வன்முறைகளிலும் ஒரு ஆட்சிமாற்ற சதி பின்புலமாக இருந்திருக்கின்றது என்பதும், அதற்கான பொறியே தம்புள்ளை பள்ளிவாசல் விவகாரம் என்பதும் பின்னர் தெரியவந்தது. இந்த இனவாத சக்திகள் சுயமாக ஒரு நிகழ்ச்சி நிரலைக் கொண்டிருப்பதோடு, உள்நாட்டு, வெளிநாட்டு எஜமானர்களின் ஒப்பந்த அடிப்படையிலான காரியங்களையும் நிறைவேற்றியிருக்கின்றார்கள் என்பதை முஸ்லிம்கள் உணர்ந்து கொள்ள நீண்டகாலம் எடுக்கவில்லை.
கத்தியை எடுத்தவன் கத்தியால் அழிவான் என்று சொல்வார்கள். எஸ்.டபள்யு.ஆர்.டி. பண்டாரநாயக்க ஒரு சாதுவான இனவாதத்தை வளர விட்டார். அவரது ஆசீர்வாதத்துடன் வளர்ந்த இனவாதத்தின் படி பண்டாரநாயக்க பயணிக்காத போது ஒரு பிக்குவின் கையில் ஆயுதமேந்திவந்து அவ் இனவாதம் அவரது உயிரைப்பறித்தது. அதேபோல், பின்னணியில் யார் இருந்தாலும், மஹிந்த ராஜபக்ஷ சூடம் காட்டிய இனவாத சக்திகளே அவரது தோல்விக்கு வித்திட்டன. இதேபோன்றதொரு பின்னடைவை நல்லாட்சி அரசாங்கமும் சந்தித்திருக்கின்றது.
முஸ்லிம்களின் பங்கு
நல்லாட்சி உருவாக முஸ்லிம்கள் முக்கிய பங்களிப்பை வழங்கினார்கள். ரணில் விக்கிரமசிங்க வல்லவர் என்றோ, மைத்திரிபால சிறிசேன சாதித்துக் காட்டுவார் என்றோ நினைத்து முஸ்லிம்கள் வாக்களிக்கவில்லை. மாறாக, மஹிந்தவுக்கு மாற்றீடான, ஒப்பீட்டளவில் சிறந்த தெரிவாக இவர்களது நல்லாட்சி இருந்தது என்பதாலேயே முஸ்லிம்கள் வாக்களித்தார்கள். இது மக்களின் முடிவு. தேசிய காங்கிரஸ் தலைவர் அதாவுல்லா போன்றோர் மஹிந்த பக்கம் நின்றது போல் றவூப் ஹக்கீமும், றிசாட் பதியுதீனும் அந்தப் பக்கம் நின்றிருந்தாலும் முஸ்லிம்கள் மைத்திரியை ஆதரிக்கும் நிலை அன்றிருந்தது.
ஐக்கிய தேசிய முன்னணியின் தேர்தல் பிரச்சாரம் அப்பேர்ப்பட்டதாக இருந்தது. ஐ.தே.க., முஸ்லிம்களுக்கு எதிரான இனவாதத்தை சந்தைப்படுத்தியது. இனவாதிகளை நாய்க் கூண்டில் அடைப்போம் என்று வாய்ச்சவாடல் விட்டார்கள். எனவே இதனை நம்பி முஸ்லிம்களும், ரணில் விக்கிரமசிங்க தமக்கு இனப்பிரச்சினைக்கான தீர்வுப் பொதியை தருவார் என்றெண்ணி தமிழர்களும் வாக்களித்தார்கள் எனலாம்.

ஆனால், சில காலம் ஓய்வெடுத்த இனவாத சக்திகள் அம்பாறையிலும் திகண மற்றும் கண்டிப் பிரதேசங்களிலும் பெரும் இனக் கலவரங்களை திட்டமிட்டு கட்டவிழ்த்து விட்டன. ஒலுவிலுக்கு வந்த பிரதமர் அம்பாறைக்கு செல்லாமல் கொழும்புக்கு பறந்தார். கண்டியில் பல மணிநேரத்தின் பின்னரே சட்டம் சரியாக இயங்கத் தொடங்கியது. நிலைமையை முழுமையாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர இரண்டு நாட்கள் எடுத்தன.
இனவாதத்தின் இரண்டாம்நிலை செயற்பாட்டாளர்கள் ஒருசிலர் கைதானபோதும் பிரதான சூத்திரதாரிகள் என அடையாளப்படுத்தப்பட்டோர் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகளுக்காக நாய்க்கூண்டில் அடைக்கப்படவும் இல்லை, இனவாதத்திற்கு முற்றுப் புள்ளி வைக்கப்பட்டதாக நிம்மதியடையவும் முடியவில்லை.
நல்லாட்சியின் இந்த மெத்தனப் போக்கு முஸ்லிம்களை கடுமையான விசனத்தை தோற்றுவித்துள்ளது. ‘கண்டி போன்ற இடங்களில் வன்முறைகளை செய்து முடிப்பதற்கு அரசாங்கம் மறைமுகமாக காலஅவகாசம் வழங்கிவிட்டு பின்னர் கட்டுப்படுத்தியதாக’ ஐ.ம.சு.மு.அங்கத்துவக் கட்சியான தேசிய காங்கிரஸ் தலைவர் அதாவுல்லா அண்மையில் கூறியிருந்தமை இவ்விடத்தில் நினைவுக்கு வருகின்றது.
ஆட்சியில் அதிருப்தி
நல்லாட்சி நிறுவப்பட்ட போது மஹிந்த ராஜபக்ஷவோ அல்லது ஏனைய ராஜபக்ஷக்களோ இனி நமக்கு ஒரு தெரிவாக இருக்கமாட்டார்கள் என்ற நிலைப்பாட்டை முஸ்லிம்கள் எடுத்திருந்தனர். அதாவுல்லா போன்றோரின் தேர்தல் தோல்விக்கு இதுவும் காரணமாகியது. ஆனால் மஹிந்த மற்றும் கோத்தபாயவின் ஆசீர்வாதத்துடனேயே இனவாதிகள் செயற்படுகின்றார்கள் என்று முன்னர் விமர்சித்தவர்களின் ஆட்சிக்காலத்திலும் இனவாதம் கோலோச்சுமாக இருந்தால், அவர்களுக்கும் இவர்களுக்கும் பெரிய வித்தியாசங்கள் இல்லை என்ற நிலைக்கு முஸ்லிம்கள் வந்திருக்கின்றனர்.
பிரபல நடிகரின் திரைப்படம் பற்றிய அபரிமிதமான எதிர்பார்ப்புக்கள் ஏற்பட்டிருந்த நிலையில் அந்தப் படம் வெளியான பிறகு எல்லாம் சப் என்று ஆகிவிடுவதைப் போல நல்லாட்சியும் பெரிதாக ஜொலிக்கவில்லை என்றுதான் கூற வேண்டும். மக்களின் எதிர்பார்ப்புக்கள் நிறைவேறாமல் ஒரு வகையான மந்தமான ஆட்சியே இடம்பெற்றுக் கொண்டிருப்பதை ஒவ்வொரு பொதுமகனும் உணர்ந்து கொண்டிருக்கின்றார்கள்.
மறுபுறத்தில், ‘உண்மையிலேயே 2013இல் இனவாதத்தை தூண்டிவிட்டவர்கள் ஆட்சிமாற்றமொன்றை அவாவி நின்றவர்களே’ என்ற பிரசாரங்களை பொதுஜன பெரமுண மேற்கொண்டு வருகின்றது. அத்துடன் முஸ்லிம்களை நோக்கி நேசக்கரம் நீட்டும் நடவடிக்கைகளை மஹிந்தவும் ஏனைய ராஜபக்ஷக்களுக்கும் கனகச்சிதமாக செய்து வருகின்றார்கள். நல்லாட்சியில் ஏற்பட்டுள்ள மேற்சொன்ன நிலவரங்கள் முஸ்லிம்களை தமது நிலைப்பாடுகளில் இருந்து சற்று இறங்கி வர வைத்துள்ளன எனலாம்.
மஹிந்த இனி நமக்கு ஒரு தெரிவே இல்லை என்று சொன்ன முஸ்லிம் அரசியல்வாதிகள், மற்றும் முஸ்லிம் மக்கள், மஹிந்த அணியும் அடுத்தடுத்த தேர்தல்களில் ஒரு மாற்றுத் தெரிவாக பரிசீலிக்கப்படலாம் என்ற நிலைப்பாட்டுக்கு வந்திருப்பதாக தெரிகின்றது. அந்த வகையில் இவ்வாறான ஒரு இடத்திற்கு முஸ்லிம்களை அழைத்து வருவதில் மஹிந்த அன்ட் கோ சாணக்கியமான வெற்றியை அடைந்திருக்கின்றது என்றுதான் சொல்ல வேண்டும்.
அரசாங்கம் அடுத்த வருடம் ஜனவரிக்கு முன்னதாக மாகாண சபைத் தேர்தலொன்றை நடாத்தப் போவதாக கூறி வருகின்றது. நல்லாட்சியின் ஆட்சிக்காலம் முடிவடைய இன்னும் ஒன்றரை வருடங்களுக்கு குறைவான காலமே இருப்பதால் அதற்கிடையில் இன்னுமொரு விஷப் பரீட்சைக்குச் செல்லாமல், நேரடியாக ஜனாதிபதி மற்றும் பாராளுமன்ற தேர்தல்களை நடாத்துவதற்கு அரசாங்கம் மனக் கணக்கு போடலாம் என்று ஊகிக்க முடிகின்றது. அவ்வாறான ஒரு நிலை வருகின்ற போது, நாம் யாரை ஆதரிப்பது என்ற சிந்தனையே, முஸ்லிம் கட்சிகளும் அரசியல்வாதிகளும் இப்போது மந்திராலோசனைகளையும் காய்நகர்த்தல்களையும் மேற்கொள்ள காரணமாகியிருக்கின்றது.
முக்கோணப் போட்டி
நாட்டில் தற்போதிருக்கின்ற நிலைவரப்படி சுதந்திரக் கட்சிக்கும் ஐக்கிய தேசியக் கட்சிக்கும் பொதுஜனப் பெரமுணவுக்கும் இடையில் ஒரு முக்கோண அதிகாரப் போட்டி இருக்கின்றது. கூட்டு ஆட்சி எதிர்பார்த்தளவுக்கு வெற்றியளிக்காது என்பதை பட்டுணர்ந்து இருக்கின்றமையால் தனியான ஆட்சியை நிறுவும் கனவு எல்லா பெரும்பான்மைக் கட்சிகளிடமும் இருக்கின்றது. எவ்வாறிருப்பினும், இன்னுமொரு சுற்றுக்காக மைத்திரி – ரணில் தரப்பு இணைந்து பொதுவான ஒருவரை ஜனாதிபதி வேட்பாளராக களமிறக்கலாம். அல்லது தனித்தனி ஜனாதிபதி வேட்பாளர்களை முன்னிறுத்தும் வாய்ப்பும் உள்ளது.
ஆனால் நாடு இப்படியே போனால் கூட்டிணைந்த ஐ.தே.முவுக்கும் சு.க.வுக்கும் (அதாவது நல்லாட்சிக்கு) கிடைக்கும் வாக்குகளின் எண்ணிக்கை குறைவடைய அல்லது அதிகரிக்காமல் இருக்க நிறையவே வாய்ப்பிருக்கின்றது என்று அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர். அதுமட்டுமன்றி, இந்நிலைமை இன்னும் தீவிரமடைந்தால் கணிசமான பெரும்பான்மை மக்களும் முஸ்லிம்களும் 2015 ஆம் ஆண்டைப் போல் திரளாக மீண்டும் ஒருமுறை இந்தக் கூட்டுக்கு வாக்களிப்பார்களா என்பது நிச்சயமற்றதாகவே இருக்கின்றது.
இந்தப் பின்புலத்தில் மஹிந்த தரப்பின் வேட்பாளர் குறித்த எதிர்பார்ப்பு மேலோங்கியுள்ளதுடன், அப்பச்சியின் நகர்வுகள் உன்னிப்பாக நோக்கப்படுவனவாகவும் அமைந்திருக்கின்றன. மஹிந்த ராஜபக்ஷ அரசியலமைப்பில் 18ஆவது திருத்தத்தை கொண்டு வந்து 3ஆவது தடவை போட்டியிட்டு தோல்வியடைந்து விட்டார். எனவே இந்த அரசியலமைப்பின் படி இன்னுமொரு முறை அவரால் இலங்கையின் ஜனாதிபதியாக வர இயலாது. எனவே தனது குடும்பத்தை சேர்ந்த ஒருவரை அல்லது தனது சகா ஒருவரை ஜனாதிபதியாக ஆக்கிவிட்டு தான் பிரதமராக இருந்து கொண்டுää ஒரு நிழல் ஜனாதிபதி போல ஆட்சியை ஆட்டுவிக்க மஹி;ந்த கனவு காண்கின்றார் என்பது ரகசியமல்ல.
அந்த அடிப்படையில் அவரால் முன்னிறுத்தப்படக் கூடிய வேட்பாளர்களாக கோத்தாபய ராஜபக்ஷ, பசில் ராஜபக்ஷ, சமல் ராஜபக்ஷ, சிரந்தி ராஜபக்ஷ ஆகியோரின் பெயர்கள் பரவலாக பேசப்படுகின்றன. குறிப்பாக மஹிந்த தனது குடும்பத்தைச் சேர்ந்த ஒருவரையே வேட்பாளராக நிறுத்துவார் என நம்பப்படுகின்றது. இதற்குப் புறம்பாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்கவும் களமிறங்கலாம்.
எது எப்படியிருப்பினும் சம்பிக்க ரணவக்க அடுத்த தேர்தலில் ஜனாதிபதி வேட்பாளராக களமிறக்கப்படுவார் என்றும் ஆருடம் கூறப்படுகின்றது. ஏனெனில், மஹிந்த அணியானது கடும்போக்கு சிங்களவர்களை மட்டும் அளவுக்கதிகமாக நம்பியிருந்து தேர்தலில் தோற்றுப் போனது. மறுபுறத்தில் ஐ.தே.மு. கடும்போக்கு பௌத்தர்களை தம்வசப்படுத்துவதில் சாதிக்கவில்லை என தன்னளவில் உணர்கின்றது. எனவே கடும்போக்கு வாக்குகளையும் சூசகமாக பெற்றுக் கொள்ளும் வகையிலேயே கோத்தபாயவோ, பசிலோ, சம்பிக்கவோ அல்லது வேறு யாருமோ அந்தந்த கட்சிகளால் களமிறக்கப்படலாம் என்று அனுமானிக்க முடிகின்றது.
மைத்திரி – ரணில் ஆட்சியை நம்பி வாக்களித்த மக்கள் அதிருப்தியடைந்திருப்பது ஒருபுறமிருக்க, முஸ்லிம் அரசியல்வாதிகளும் கட்சித் தலைவர்களும் பகிரங்கமாகவே அரசாங்கத்தை விமர்சிக்கத் தொடங்கி கனநாளாயிற்று. ஜனாதிபதியிலும் பிரதமரிலும் முஸ்லிம் அரசியல் தலைவர்கள் கடுமையாக அதிருப்தியுற்றுள்ளனர். சிறு தமிழக் கட்சிகளின் நிலையும் இதுதான்.
உடன்படிக்கையின் அடிப்படையிலேயே ஆதரவளிக்கின்றோம் என்றும், நல்லாட்சி வந்தால் முஸ்லிம்களின் அபிலாஷைகளை நிறைவேற்றுவோம் என்றும் சொன்ன ஹக்கீம், றிசாட் பதியுதீன் உள்ளிட்ட முஸ்லிம் கட்சித் தலைவர்களும் எம்.பி.க்களும் இப்போது மெல்லவும் முடியாமல் துப்பவும் முடியாமல் வாயடைத்துப் போயுள்ளனர். முஸ்லிம்களுக்கு ஆட்சியாளர்களால் நடக்கின்ற அநியாயம் போதாது என்று, முஸ்லிம்களுக்கு பாதகமாக சட்டமூலங்கள், திருத்தங்களுக்கு முஸ்லிம் அரசியல்வாதிகளும் கூட்டத்துடன் கோவிந்தா போட்டு ஆதரவளித்து விட்டு பின்னர், அது பிழையான முடிவு என்று ஒப்பாரி வைக்கின்றனர்.
இந்நிலையில், மஹிந்த ராஜபக்ஷவின் ஆதரவு அணி அடுத்த முறை ஆட்சியைக் கைப்பற்றுவதற்கான போட்டியில் பலமான நிலையில் இருப்பதற்கான நிகழ்தகவுகள் அதிகரித்துள்ள ஒரு சூழ்நிலையில் சில நாட்களுக்கு முன்னர் கோத்தபாய காய்ச்சல் ஒன்று ஏற்பட்டிருந்தது. இப்போது அது மஹிந்த மீதான காதலாக பரிணாமம் எடுத்திருக்கின்றது.
ஊடலும் கூடலும்
தேசிய காங்கிரஸ் தலைவர் அதாவுல்லா மஹிந்தவுடன் எப்போதும் உறவுடன் இருந்தார். அவரை ரகசியமாகச் சந்தித்தார். ஆனால் ஒரு கட்டத்தில் மஹிந்தவை புகழ்பாடினால் அதாவுல்லாவின் செல்வாக்கு குறைந்து விடும் நிலையிருந்தது. எனவே அதனை அவர் தவிர்த்திருந்தார். ஆனால் இப்போது நிலைமை மாறியிருக்கின்றது. மஹிந்தவை சந்திப்பதும், கோத்தாபய பற்றிப் பேசுவதும் பெரும் சமூகத் துரோகமாக பார்க்கப்படுவதில்லை என்ற நிலை உருவாகியிருக்கப்பதை காண முடிகின்றது.
இம்முறை நோன்புகாலத்தில் கோத்தபாய மற்றும மஹிந்த போன்றோர் நடத்திய இப்தார் நிகழ்விலும் அதற்கு முன்-பின்னுமாக பல முஸ்லிம் அரசியல்வாதிகள் இவ்விருவரையும் சந்தித்து பேசியுள்ளனர். சிலரை சனக் கூட்டத்தின் மத்தியில் வைத்து பேசியுள்ளார் மஹிந்த. வேறு சிலரை உள்ளே அழைத்துப் பேசியிருப்பதாக அறிய முடிகின்றது.
இதன் தொடராக, முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் றவூப் ஹக்கீம் உள்ளிட்டோர் கடந்த வாரம் மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்து உரையாடிய புகைப்படம் நவீன ஊடகங்களில் பேசுபொருளாக மாறியிருக்கின்றது. உண்மையில் அந்த சந்திப்பு தேர்தல் முறைமை பற்றியதாக அமைந்திருந்ததாக கூறப்படுகின்ற போதிலும், ‘மஹிந்த ஆட்சியமைப்பது குறித்த சந்திப்பாகவே’ சிலர் இதைச் சித்திரித்ததை அவதானிக்க முடிந்தது.
ஹக்கீம் மட்டுமல்ல பல முஸ்லிம் அரசியல்வாதிகள் செயற்பாட்டாளர்கள் ,ஓய்வுநிலை அரசியல்வாதிகள் மஹிந்த அணியை சந்தித்துக் கொண்டுதான் இருக்கின்றார்கள். மஹிந்த அணியை மட்டுமன்றி எல்லா தரப்பினருடனும் மந்திராலோசனைகளை நடத்திக் கொண்டும் இருக்கின்றனர்.
ஆனால் எந்த பெரும்பான்மைக் கட்சியால், யார் ஜனாதிபதி வேட்பாளராக முன்னிறுத்தப்படுவார் என்பதும், யாரை ஆதரிக்கலாம் என்பதும் இன்னும் பரிசீலனை நிலையிலேயே இருக்கின்றது என்பதுடன், முஸ்லிம் கட்சிகள் மற்றும் அரசியல்வாதிகளிடம் தெளிவான இறுதி நிலைப்பாடுகளும் இன்னும் எட்டப்படவில்லை. ஆனால் கோத்தபாய ஜனாதிபதி வேட்பாளராக வருவதை மக்கள் காங்கிரஸ் தலைவர் றிசாட், தேசிய காங்கிரஸ் தலைவர் அதாவுல்லா போன்ற முக்கிய தலைவர்கள் விரும்பவில்லை என நம்பகமாக அறிய முடிகின்றது. மு.கா. தலைவரின் நிலைப்பாடு தெளிவில்லை என்றாலும், அவரும் அந்த நிலைப்பாட்டுக்கே கடைசியில் வந்து சேர்வார்.
அதாவது முஸ்லிம் கட்சிகள் ஒருவேளை மைத்திரி, ரணில் தரப்புக்களை ஆதரிக்கலாம் என்பது போலவே மஹிந்த அணியையும் ஆதரித்தாலும். ஆனால் மஹிந்த அணியில் மேற்சொன்ன நபர் அல்லாத வேறு ஒருவரையே முஸ்லிம் கட்சிகள் ஆதரிக்கும் வாய்ப்புள்ளது. ஐ.தே.முன்னணியாலோ அல்லது வேறு கட்சிகளாலோ சம்பிக்க போன்ற ஒருவர் நியமிக்கப்பட்டாலும் இவ்வாறான நிலைப்பாட்டையே முஸ்லிம் கட்சிகள் பெரும்பாலும் எடுக்க வாய்ப்பிருக்கின்றது.
ஆனால், முஸ்லிம்களின் விருப்பு வெறுப்புக்களை மீறி, நாம் விரும்பாத ஒருவர் ஆட்சிக்கு வரும் நிலைமை ஏற்பட்டால் அல்லது நாம் வாக்களிக்காத ஒருவர் ஜனாதிபதியாக தெரிவானால் நமது நிலைமை என்ன??? என்ற திகில் நிறைந்த கேள்வியும், முஸ்லிம்கள் பற்றிச் சிந்திக்கின்ற அரசியல் தலைவர்களின் மனதில் ஏற்பட்டுள்ளது.
இவ்விடத்தில் முஸ்லிம்களின் அரசியல் நின்று நிதானித்து முடிவெடுக்க வேண்டும். அதாவதுää நல்லாட்சி வெற்றியளிக்கவில்லை என்பதற்காக மஹிந்த ஆட்சியின் தவறுகள் எல்லாம் சரி என்று ஆகிவிடாது. மஹிந்த ஆட்சி பிழை என்பதற்காக மைத்திரி-ரணில் கூட்டாட்சிதான் இதற்கு தீர்வு என்று அப்போது எடுத்த முடிவு சரியானதுதானா என்ற ஒரு மனக்குழப்பம் முஸ்லிம்களுக்கு ஏற்பட்டுள்ளது. இப்போது இந்த ஆட்சி சரிப்பட்டு வராது என்பதற்காக அவசரப்பட்டும், நிர்ப்பந்தத்தின் பெயரிலும், உணர்ச்சி வசப்பட்டும் பிழையான ஒரு தரப்புக்கும் ஆதரவளிக்கும் நிலைப்பாட்டை முஸ்லிம்கள் எடுத்துவிடக் கூடாது. இது ஒரு தீர்க்கமான தருணம்!

– ஏ.எல்.நிப்றாஸ் (வீரகேசரி – 19.08.2018)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here