ஊடகத்துறையில் உயர் கற்கை நெறிகளை ஆரம்பிக்க நடவடிக்கை எடுப்பேன் – உபவேந்தர் நாஜிம்

0
191

(எஸ்.அஷ்ரப்கான்)

ஊடகவியலாளர்களின் நன்மை கருதி தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் ஊடகத்துறை டிப்ளோமா மற்றும் ஊடகத்துறையில் பட்டப்படிப்பு கற்கை நெறியினை ஆரம்பிக்க நடவடிக்கை எடுப்பேன் என தென்கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் எம்.எம்.எம்.நாஜிம் நுஜா ஊடக அமைப்பினரிடம் உறுதியளித்துள்ளார்.

தென்கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் எம்.எம்.எம்.நாஜிம் இரண்டாவது தடவையாகவும் உபவேந்தராக ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டு அவர் தனது கடமைகளைப் பொறுப்பேற்கும் நிகழ்வு (23) வியாழக்கிழமை தென்கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் காரியாலயத்தில் இடம்பெற்றது.

இதனைத் தொடர்ந்து தென்கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் எம்.எம்.எம்.நாஜிம் மற்றும் தேசிய ஐக்கிய ஊடகவியலாளர் ஒன்றியத்தின் (நுஜா) தேசியத் தவிசாளர் றியாத் ஏ. மஜீத் தலைமையிலான ஊடகவியலாளர்கள் குழுவினருக்குமிடையில் சந்திப்பு இடம்பெற்றது.

இச்சந்திப்பில் தென்கிழக்கு பல்கலைக்கழக சமூகவியல் துறைத் தலைவரும் மாணவர் நலன்புரி பணிப்பாளருமான கலாநிதி றமீஸ் அபூவக்கர், நுஜா ஊடக அமைப்பின் தலைவர் எஸ்.எம்.அறூஸ், செயலாளர் பைசல் இஸ்மாயில் மற்றும் ஊடகவியலாளர்களான எஸ்.அஷ்ரஃப்கான், எம்.றமீஸ், ஏ.அமீர், எஸ்.ரீ.ஜமால்தீன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

ஊடகவியலாளர்களின் நன்மை கருதியும் அவர்களின் தொழில் வல்லமையை மேலும் அதிகரிக்க தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் ஊடகத்துறை டிப்ளோமா மற்றும் ஊடகத்துறையில் பட்டப்படிப்பு கற்கை நெறி ஆகிய கற்கை நெறிகளை ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்குமாறு நுஜா ஊடக அமைப்பினர் கோரிக்கை விடுத்தனர். இதனை ஏற்று உரையாற்றும் போதே உபவேந்தர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

ஊடகத்துறை டிப்ளோமா கற்கை நெறிக்கான விண்ணப்பங்கள் பல்கலைக்கழக வெளிவாரிப் பட்டப்படிப்பு பிரிவினால் கோரப்பட்டு கற்கை நெறிக்கான முற்பணங்கள் ஊடகவியலாளர்களினால் செலுப்பட்டு இன்றுவரை இக்கற்கை நெறி ஆரம்பிக்கப்படவில்லை எனவும் கடந்த 16 வருடங்களாக இக்கற்கை நெறி நடாத்தப்படாமல் நீண்டு கொண்டு செல்வதாகவும் இதனால் ஊடகவியலாளர்களும், ஊடகத்துறைக்குள் பிரவேசிக்க எண்ணியுள்ளவர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர் என நுஜா ஊடக அமைப்பினர் உபவேந்தரிடம் சுட்டிக்காட்டினர்.

இதன்போது கருத்துத் தெரிவித்த உபவேந்தர்,

இப்பிராந்திய ஊடகவியலாளர்களின் நன்மை கருதியே ஊடகத்துறை டிப்ளோமா கற்கை நெறியினை ஆரம்பிப்பதற்கான விண்ணப்பங்கள் பல்கலைக்கழத்தினால் கோரப்பட்டன. இருந்தும் சில காரணங்களால் அப்பாடநெறி ஆரம்பிக்கப்படவில்லை. இருந்தபோதிலும் டிப்ளோமா பாடநெறியினை உடன் ஆரம்பிக்க நடவடிக்கை எடுப்பேன் என உறுதியளித்தார்.

மேலும் ஊடகத்துறையில் பட்டப்படிப்பு கற்கை நெறியினை ஆரம்பிப்பது தொடர்பில் தான் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் ஆலோசனையையும் அனுமதியினையும் பெறவேண்டியுள்ளது. இதற்கான அனுமதி பெறுவதற்கான சகல நடவடிக்கையினை எடுப்பதாகவும் தெரிவித்தார்.

பல்கலைக்கழக நிர்வாகத்திலும், அபிவிருத்தி நடவடிக்கைகளிலும் மாற்றத்தைக் கொண்டுவர முயற்சித்தேன். இதனால் நான் பாரிய சவால்களையே எதிர்கொண்டேன் எனத் தெரிவித்த அவர் ஊடகவியலாளர்கள் இப்பல்கலைக்கழக கல்வி முன்னேற்றத்திற்கும்இ அபிவிருத்திற்கும் தங்களது பங்களிப்பினை வழங்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.

இதே வேளை பல்கலைக்கழகம் சார் கல்வி நடவடிக்கைகள் தொடர்பில் எதிர்காலத்தில் பல்வேறு வேலைத் திட்டங்கள் இடம் பெறவுள்ளதாகவும் இதற்காக ஊடகத் துறையினர் மற்றும் பல்கலைக்கழக சமூகமும் தனக்கு ஒத்துழைக்க முன்வர வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்தார். உபவேந்தர் நஜீம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here