அவுஸ்திரேலியாவில் கைது செய்யப்பட்ட மாணவனை அமைச்சருடன் தொடர்புபடுத்தி தவறான பிரசாரம்.

0
207

(அகமட் எஸ். முகைடீன்)

ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்புடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் அவுஸ்திரேலியாவில் பொலிஸாரால் கைது செய்யப்பட்ட மாணவர், அமைச்சர் பைசர் முஸ்தபாவின் உறவினராக இருந்தாலும் அவருக்கும் அமைச்சருக்கும் எந்த தொடர்புகளும் இல்லை. கைது செய்யப்பட்ட இளைஞருடன் அமைச்சரை தொடர்புபடுத்தி ஊடகங்கள் தவறான பிரச்சாரங்களை முன்னெடுத்து வருகின்றன. இது முஸ்லிம்களுக்கு எதிரான சதியாகும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதித் தலைவரும் அரச தொழில் முயற்சி மற்றும் கண்டி நகர அபிவிருத்தி பிரதி அமைச்சருமான சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் தெரிவித்தார்.

நேற்று உலக வர்த்தக மத்திய நிலையத்தில் நடைபெற்ற ஊடக மாநாட்டில் கலந்துகொண்டு உரை நிகழ்த்துகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் தொடர்ந்தும் உரை நிகழ்த்துகையில் தெரிவித்ததாவது. அவுஸ்திரேலியாவில் கல்வி கற்கும் இளம் இலங்கை மாணவர் ஒருவர் ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்புடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் அவுஸ்திரேலியாவில் கைது செய்யப்பட்டுள்ளார். அவரது கைது சம்பந்தமாக அவர் ஒரு முஸ்லிம் என்பதற்காக இலங்கையில் ஊடகங்கள் மிகப் பெரிய அளவில் பிரசாரம் செய்கின்றன. முஸ்லிம் சமூகத்தின் மீது சந்தேகத்தை ஏற்படுத்துவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அவர் கைது செய்யப்பட்டுள்ளது ஒரு யுத்த பிரதேசத்தில் அல்ல. சிரியாவிலோ அல்லது ஐ.எஸ்.ஐ.எஸ். நிலை கொண்டுள்ள ஈராக்கிலோ அல்ல. அவுஸ்திரேலியாவிலே கைது செய்யப்பட்டுள்ளார். அவர் ஆயுதத்துடன் அல்லது யுத்த அபாய நிலையில் கைது செய்யப்படவில்லை. அவர் ஒரு பல்கலைக்கழக மாணவர். அவருக்கு எதிரான விசாரணைகளை அவுஸ்திரேலியாவில் பொலிஸார் மேற்கொண்டுள்ள நிலையில் அவரின் உறவினர் அமைச்சர் பைசர் முஸ்தபா என்ற வகையில் அவர் அந்த மாணவருக்கு உறுதுணையாக இருக்கிறாரோ என்ற வகையில் பேசப்படுகிறது.

அமைச்சர் பைசர் முஸ்தபா நாட்டின் அபிவிருத்திக்காகப் பாடுபடுபவர். நாட்டின் தேசிய பாதுகாப்பில் அக்கறையுள்ள ஒருவர். கடந்த ஆட்சியிலும் தேசிய பாதுகாப்புக்காக முக்கிய பங்களிப்புச் செய்தவர். நிச்சயமாக அவருக்கும் இந்த மாணவருக்கும் இடையில் தொடர்பாடல் கூட இருந்திருக்க முடியாது.

அமைச்சர் பைசரின் மனைவியின் உறவினர் என்ற ஒரே காரணத்திற்காக அவரை சர்வதேச மற்றும் உள்ளுர் ஊடகங்கள் குறி வைத்து தாக்குகின்றன. அவர் சக அமைச்சர் என்ற வகையில் நிலைமையை நான் தெளிவுபடுத்த வேண்டும். அந்த இளைஞன் உறவினர் என்பதற்காக அமைச்சர் இதன் பின்னணியில் உள்ளார், பங்களிப்புச் செய்துள்ளார் என்பது தவறாகும்.

அவர் இந்த மனக் குழப்பத்திலிருந்து விடுதலை பெற்று தனது கடமைகளைத் தொடர்வதற்கு ஊடகங்கள் உதவி புரிய வேண்டும். இந்தப் பிரச்சினை தொடர்பில் பொலிஸ் மா அதிபர் மற்றும் பாதுகாப்புச் செயலாளரைச் சந்தித்து பேசவுள்ளோம்.

இன்பராசா மற்றும் தேசிய சுதந்திர முன்னணியைச் சேர்ந்த முஸம்மில் என்போர் தெரிவித்துள்ள குற்றச்சாட்டுக்கள் மற்றும் அவுஸ்திரேலியாவிலுள்ள இலங்கை மாணவர் தொடர்பில் சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ள கருத்துக்கள் தொடர்பில் இலங்கை முஸ்லிம்கள் பெரும் பதற்றத்தில் இருக்கிறார்கள். இன்பராசாவின் கருத்துக்கள் ஒரு இனத்துக்கு எதிரான வெறுப்புப்பேச்சாகும். ஏன் பொலிஸார் இது தொடர்பில் நடவடிக்கை எடுக்கவில்லை? சாதாரண ஒருவர் பேசியிருந்தால் பொலிஸார் நடவடிக்கை எடுத்திருப்பர். 2 மில்லியன் முஸ்லிம்களைக் குறி வைத்து இன்பராசா கருத்து வெளியிட்டும் அவருக்கு எதிராக எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

கடந்த இரு வாரங்களாக நாம் பொறுமையாக இருந்தோம். முஸ்லிம் அமைச்சர்கள் ஆயுதம் வைத்திருக்கவில்லை என்பதை பொலிஸார் நாட்டு மக்களுக்கு தெளிவுபடுத்தியிருக்க வேண்டும். சில பொலிஸ் அதிகாரிகள் இவர்களை இயக்குகிறார்களா என்ற சந்தேகம் எமக்கு ஏற்பட்டுள்ளது.

அவுஸ்திரேலிய இலங்கை இளைஞருக்கு கல்விச் செலவுக்காக அமைச்சர் பணம் அனுப்பியுள்ளார் என்பது இனவாத செயலுக்காக பணம் அனுப்பப்பட்டுள்னது என பிரசாரம் செய்யப்படுகிறதே என்ற ஊடகவியலாளரின் கேள்விக்கு பதிலளிக்கையில்: வழமையாக கல்வி நடவடிக்கைகளுக்காக நிதி உதவி கோரும்போது அரசியல்வாதிகள் எவரும் உதவுவது வழமையாகும். அதை தவறெனக் கூற முடியாது.

நாட்டின் நலனில் அக்கறையுள்ள அமைச்சரை குறிவைப்பது தவறாகும். பல அரசியல்வாதிகள் இயக்கங்களுடன் தொடர்புபட்டு இருந்திருக்கிறார்கள். அவர்களுக்கு இவ்வாறான அழுத்தங்கள் பிரயோகிக்கப்படவில்லை என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here