கெகிராவை சஹானாவின் மறைவு நிரப்பமுடியாத வெற்றிடமாகும்.

0
290

(நாச்சியாதீவு பர்வீன்)

இலக்கியம் என்பது சுகமான அனுபவம், இந்த சுகத்தை அனுபவிக்கின்ற பாக்கியம் இலக்கியவாதிகளுக்கு மட்டுமே கிடைத்துள்ள வரமாகும். அந்த வகையில் எழுத்தாளன் அவன் வாழுகின்ற சமூகத்தின் அடையாளமாக கருதப்படுகிறான். தான் வாழுகின்ற சூழலை,காலத்தை அடுத்த பரம்பரைக்கு காவிச்செல்கின்ற அறிய பணியினை எழுத்தாளன் ஆற்றுகிறான் இதனால்தான் என்னவோ எழுத்தாளன் காலத்தின் கண்ணாடியாக கணிக்கப்படுகிறான். ஒரு பரம்பரையின் வாழ்வியல் நடத்தை கோலங்களை மிக நுணுக்கமாகவும்,அழகாகவும் பதிந்து வைக்கின்ற ஆற்றல் படைப்பாளிகளிடம் மாத்திரமே இருக்கிறது. இந்த வரைவிலக்கணங்களை மெய்ப்படுத்துகின்ற ஆழமான பணியினை அநுராதபுரத்தின் ஆளுமைமிக்க பெண் படைப்பாளியான கெகிராவை சஹானா நிறூபித்து வருகிறார்.

ஈழத்து இலக்கியப்பரப்பையும் தாண்டி, சர்வதேசம் மட்டுக்கும் தனது காத்திரமான எழுத்துக்களால் தமிழ் இலக்கியப்பரப்பில் மிகவும் அறியப்பட்ட படைப்பாளி கெகிராவை சஹானா. பாடசாலைக்காலங்களிலேயே மிகுந்த வாசிப்பும், தீவிர தேடலும் கொண்ட கெகிராவை சஹானா தனது எழுத்துக்களுக்காக தேசியத்திலும்,சர்வதேசத்திலும் பரிசில்களையும் பாராட்டுக்களையும் பெற்றவர்.
அநுராதபுரத்தின் தமிழ் இலக்கிய வரலாற்றில் கலாபூஷணம் அன்பு ஜவஹரஷா அவர்களின் பங்களிப்பு புரக்கணிக்க முடியாத ஒன்றாகும். அன்பு ஜவஹர்ஷாவை தொடர்ந்து ஏற்பட்ட இடைவெளியை அவ்வப்போது சிலர் நிரப்ப முயற்சி செய்த போதும் அவர்கள் காலவெளியில் காணாமல் போயினர். அந்த இடைவெளியை நிரப்பிய பெருமை கெகிராவை சஹானாவையே சாரும்.
தான் வாழுகின்ற சூழலில் கண்டத்தையும், கேட்டதையும் இலக்கியமாக்குகின்ற சிறந்த யுக்தி கெகிராவை சஹானாவின் எழுத்துக்களை வாசிக்கின்றவர்களுக்கு இலகுவில் உணர்ந்து கொள்ள முடியும்.
1980 களுக்குப்பிறகான ஈழத்து இலக்கிய பரப்பினை ஆராயும் போது கெகிராவை சஹானாவை தவிர்த்து பேசமுடியாது என்பது எனது தனிப்பட்ட அபிப்பிராயம்.
எனது பாடசாலைக்காலங்களிலே இவரின் பல சிறுகதைகளை தினகரன் வாரமஞ்சரியில் நான் வாசித்திருக்கிறேன். அப்போதுகளில் அநுராதபுரத்தின் இலக்கிய இருப்பை உறுதிப்படுத்துமுகமாக பலர் எழுதிக்கொண்டிருந்தனர். அன்பு ஜவர்ஹர்ஷா, ராசிக் பரீட், வன்னிமகள்,கெகிராவை சஹானா போன்றவர்களின் ஆக்கங்கங்கள் அவ்வப்போது தேசிய பத்திரிகைகளில் பிரசுரமாகின. அந்த வரிசையில் இன்று மட்டுக்குக்கும் தொடர்ச்சியாக இலக்கியம் செய்கின்ற சிறந்த ஆளுமைகளின் கலாபூஷணம் அன்பு ஜவஹர்ஷா மற்றும் கெகிராவை சஹானா ஆகியோரை அடையாளப்படுத்த முடியும்.

இது வரை ஒன்பது நூல்களை வெளியிட்டுள்ள இவரின் முதலாவது நூல் ஒரு தேவதைக்கனவு எனும் சிறுகதை தொகுதியாகும். 1992 ஆம் ஆண்டு வெளிவந்த இந்த சிறுகதைத்தொகுதியானது பெண்ணியம் சார்ந்த சில கதைகளையும், சமூகத்தில் புரையோடிப்போயிருக்கின்ற அவலங்களை மிக லாவகமாக படம்பிடித்துக்காட்டுகின்ற வகையிலும் அமைந்திருந்தன. அனுராதபுரம் தமிழ் இலக்கியப்புலத்தில் வெளியாகிய முதலாவது சிறுகதை தொகுதி இதுவாகும். பல்வேறுபட்ட விமர்சகர்களாலும் பெரிதும் விதந்துரைக்கப்பட்ட இந்த தொகுதி மிகக்காத்திரமான சிறுகதைகளை கொண்டுள்ளது.
தமிழக பிரபல்ய எழுத்தாளர் ஜெயகாந்தனுடன் மிக நெருக்கமான இலக்கிய தொடர்பை பேனியவர்களில் கெகிராவை சஹானா முதன்மையானவர். இவரை பட்டை தீட்டி இவரது ஆக்கங்களுக்கு தளம் அமைத்துக்கொடுத்தவர்களில் மல்லிகையும்,அதன் ஆசிரியர் டொமினிக் ஜீவாவும் மிகமுக்கியமான பங்கினை வகிக்கின்றனர்.

இதுவரைக்கும் 10 நூல்களை வெளியிட்டு இருக்கும் கெகிராவை சஹானா சத்தமில்லாமல் சாதனை படைத்துவரும் ஒரு சாதானைப் பெண் என்றால் அது மிகையாகாது அவரது படைப்புகளை நோக்குமிடத்து..

(1). ஒரு தேவதைக் கனவு. ( சிறுகதை- 1992)
(2) இன்றைய வண்ணத்திப்பூச்சிகள். (கவிதை -2004)
(3) ஒரு கூடும் இரு முட்டைகளும் (குறுநாவல் -2009)
(4) சூழ ஓடும் நதி (ஜெயகாந்தன் பற்றிய ஆய்வு-2010)
(5) இருட்தேர் (கவிதை-2011)
(6) மான சஞ்சாரம் ( பத்தி எழுத்து-2011)
(7) முடிவில் தொடங்கும் கதைகள் (சிறுகதை-2012)
(8) அன்னையின் மகள் (நாவல்-2014)
(9) ஊமையின் பாஷை (சிறுகதை-2014)
(10) புதிய தரிசனங்கள்- (கட்டுரை – 2017)

போன்ற நூல்களை அவர் ஈழத்து இலக்கியப்பரபிற்க்கு தந்துள்ளார்.
அநுராதபுரம் போன்ற சிங்களப்பெரும்பான்மை சமூகம் வாழுகின்ற ஒரு பிரதேசத்திலிருந்து கொண்டு தாராளமாக தமிழ் இலக்கியம் படைக்கும் கெகிராவை சஹானா பற்றி திரு டொமினிக் ஜீவா அவர்கள் அடிக்கடி விதந்துரைப்பதை நான் பல தடவைகள் கேட்டிருக்கிறேன்.

இவரது சிறுகதைகள் இரண்டு முறைகள் தகவம் அமைப்பினரால் சிறந்த சிறுகதையாக தெரிவு செய்யப்பட்டு பரிசு வழங்கப்பட்டது, அவ்வாறே யாழ் கலை இலக்கியப் பேரவையும் இரண்டு தடவைகள் இவரது சிறுகதைகளுக்காக பாராட்டி கெளரவித்து உள்ளது.
சூழ ஓடும் நதி (ஜெயகாந்தன் பற்றிய ஆய்வு-2010) ஆய்வு நூலுக்கு எழுத்தாளர் ஊக்குவிப்பு மையத்தின் தமிழியல் விருந்து கெளரவிக்கப்பட்டார்.
2002 ஆம் ஆண்டு இலங்கை இஸ்லாமிய இலக்கிய ஆய்வகம் நடாத்திய உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாட்டில் சிறந்த இலக்கிய செயற்பாட்டாளருக்கான விருது இவருக்கு வழங்கப்பட்டது.
அநுராதபுர மாவட்டத்தின் தமிழ் இலக்கிய செயற்பாடுகளின் மிகமுக்கிய பங்காளியான இவர் தொழில் ரீதீயாக ஆசிரியராக கடமையாற்றி தற்போது ஓய்வு பெற்றுள்ளார்.

இவரது எழுத்துலகம் பிரகாசிக்க இவரின் கணவனின் பங்களிப்பு சிலாகிக்க தக்கது.
இவரது சில கதைகளிலும்,பல கவிதைகளிலும் ஆசிரிய மாணவர்கள் பற்றிய ஆழமான அடையாளப்படுத்தல்களை அவதானிக்க முடியும். அமைதியாக ஓடுகின்ற ஒரு ஆற்றினைப்போல இவரது படைப்புலகமும்,இலக்கியப்பயணமும் மிகவும் பசுமையாகவும் சலசலத்து ஓடிக்கொண்டிருக்கிறது. சமூகத்தில் புரையோடிப்போயிருக்கின்ற அவலங்களை,இலாவகமாக வாசகர்களுக்காக வடிகட்டித்தருக்கின்ற கெகிராவை சஹானா எனும் இலக்கிய ஆளுமை தொடர்ந்தும் இதே வேகத்துடன் இயங்க வேண்டுமென்பதே எமது பிரார்த்தனையாக இருந்தது ஆனால் இறைவனின் நாட்டம் வேறுவிதமாக இருந்துள்ளது. அவன் நாட்டதினால் ஒரு பூந்தோட்டம் உறங்கிறது. எல்லாம் வல்ல இறைவன் அவரை பொருந்திக்கொள்வதோடு அவருக்கு உயர்தரமான சொர்கத்தை உவந்தளிப்பானாக.
(ஜீவநதியில் கெகிராவ சஹானா பற்றி நான் எழுதிய கட்டுரையின் திருத்தப்பட்ட வடிவம். நன்றி ஜீவநதி)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here