மீராவோடை தாருஸ்ஸலாமில் இடம்பெற்ற இஜ்திமாவில் பெருந்திரளானோர் பங்கேற்பு.

0
726

(எச்.எம்.எம்.பர்ஸான்)

றாபிதது அஹ்லிஸ் ஸுன்னாவின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு மாவட்ட இஜ்திமா மீராவோடை தாருஸ்ஸலாம் ஜும்ஆப் பள்ளிவாயலில் நேற்று (21) வெள்ளிக்கிழமை மிகவும் சிறப்பாக இடம்பெற்றது.

றாபிதது அஹ்லிஸ் ஸுன்னாவின் நிறைவேற்றுக்குழு உறுப்பினரும், கல்குடா ஜம்இய்யது தஃவதில் இஸ்லாமியாவின் நிருவாகத் தலைவரும், மர்கஸ் அந்நூர் அரபுக் கல்லூரியின் அதிபருமாகிய அஷ்ஷெய்க் ஏ.ஹபீப் காசிமி அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கிழக்கு மாகாணத்தின் பல பகுதிகளிலிருந்தும் பெருந்திரளானோர் கலந்து கொண்டிருந்தனர்.

சிறப்பானமுறையில் நடைபெற்ற இவ் இஜ்திமா நிகழ்வில் உளத்தூய்மையே வெற்றிக்கு வழி எனும் தலைப்பில் கிண்ணியா சுமைய்யா பெண்கள் அரபுக் கல்லூரியின் அதிபர் அஷ்ஷெய்க் எம்.ஏ.முகம்மது ரபீஸ் மதனி அவர்களும் முஸ்லிம் விவாக விவாகரத்துச் சட்ட சீர்திருத்த முன்மொழிவுகள் தொடர்பான விளக்கத்தினை பரகஹதெனிய தாறுத் தவ்ஹீத் அஸ்ஸலபியா அரபுக் கல்லூரியின் விரிவுரையாளர் கலாநிதி அஷ்ஷெய்க் அம்ஜத் ராஸிக் மதனி அவர்களும் பித்அத்தும் அதன் ஆபத்தும் எனும் தலைப்பில் றாபிதது அஹ்லிஸ் ஸுன்னாவின் ஆலோசகரும் உண்மை உதயம் மாத இதழ் பிரதம ஆசிரியருமான அஷ்ஷெய்க் எஸ்.எச்.இஸ்மாயில் ஸலபி ஆகியோர்கள் முதல் அமர்வில் வளவாளர்களாக கலந்து கொண்டு உரையாற்றினார்கள்.

இரண்டாவது அமர்வு மஃரிப் தொழுகை முதல் இரவு 9.30 வரை இடம்பெற்றது இதில் தலைமையுரையினை றாபிதது அஹ்லிஸ் ஸுன்னாவின் பொதுத் தலைவரும், கொழும்பு பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளரும், வைத்தியக் கலாநிதியுமான அஷ்ஷெய்க் எஸ்.எம்.ரயீசுதீன் ஷரஈ அவர்கள் வழங்கினார். அதனை தொடர்ந்து சமூகத்தை சீரழிக்கும் சமூகக் கொடுமைகள் எனும் தலைப்பில் இறக்காமம் பிரதேச செயலகத்தின் உளவள ஆலோசகர் அஷ்ஷெய்க் ஏ.எல்.பைசல் மதனி அவர்களும் அஹ்லுஸ் ஸுன்னா வல் ஜமாஅத் என்போர் யார்? எனும் தலைப்பில் றாபிதது அஹ்லிஸ் ஸுன்னாவின் பிரதித் தலைவரும் மருதமுனை தாறுல் ஹுதா அரபு இஸ்லாமிய கற்கைகளுக்கான மகளிர் கல்லூரியின் பணிப்பாளருமான கலாநிதி அஷ்ஷெய்க் எம்.எல்.முபாரக் மதனி ஆகியோர்கள் உரையாற்றினார்கள். நிகழ்ச்சித் தொகுப்பினை கல்குடா ஜம்இய்யது தஃவதில் இஸ்லாமியாவின் பிரதித் தலைவர் எஸ்.எச்.அரபாத் சஹ்வி அவர்கள் நடாத்தியமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here