குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு விசாரணைக்கு செல்ல அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் உட்பட நால்வருக்கு நீதிமன்றம் தீர்ப்பு

0
125

(எஸ்.எம்.எம்.முர்ஷித்)

இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் மற்றும் அவரது மகன் ஹிராஸ் அஹமட், வாகரை பிரதேச சபை உறுப்பினரும் மட்டக்களப்பு பல்கலை கழகத்தின் முகாமையாளர் எஸ்.தாஹீர், அபுல்ஹசன் ஆகியோரது மீது லங்கா பில்டேர்ஸ் கோப்பரடிவ் சொஸையிட்டி என்ற நிறுவனத்தின் தலைவர் பிரபாத் உக்வத்தவினால் வாழைச்சேனை மாவட்ட நீதிவான் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் விசாரணை இன்று புதன்கிழமை எடுத்துக் கொள்ளப்பட்ட போது எதிர்வரும் 2018.12.07ம் திகதி வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

கொழும்பு குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் செய்யப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில் வாழைச்சேனை நீதவான் நீதி மன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் இரண்டாவது தவணை இன்று புதன்கிழமை வாழைச்சேனை மாவட்ட நீதிவான் நீதிமன்ற நீதிபதி ஏ.சி.றிஸ்வான் முன்னிலையில் எடுத்துக் கொள்ளப்பட்ட போது இதன் அடுத்த விசாரணை 2018.12.07ம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக நீதவான் அறிவித்துள்ளார்..

சந்தேக நபர்கள் இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் மற்றும் அவரது மகன் ஹிராஸ் அஹமட், வாகரை பிரதேச சபை உறுப்பினரும் மட்டக்களப்பு பல்கலை கழகத்தின் முகாமையாளர் எஸ்.தாஹீர்; றவூப் என்றழைக்கப்படும் அபுல்ஹசன் ஆகிய நால்வரும் எதிர்வரும் 2018.10.09ம் திகதி காலை 9.00 மணிக்கு கொழும்பு குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு சமூகமளித்து தங்களது வாக்கு மூலங்களை பதிவு செய்யுமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

100 மில்லியன் ரூபா பெறுமதியான நிர்மானப் பணிகளுக்கான இயந்திரங்கள் மற்றும் உபகரணங்களை கடத்தியமை தொடர்பாக வாழைச்சேனை நீதிவான் நீதிமன்றில் 2018.08.14ஆம் திகதி வெள்ளிக்கிழமை வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

பொலிஸ்மா அதிபர் மற்றும் குற்றப்புலனாய்வு தினைக்களத்தினால் செய்யப்பட்ட முறைப்பாட்டிற்கு அமைய வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. கடந்த ஆண்டு பெப்ரவரி மாதம் 20ஆம் திகதி பிரதிவாதிகளினால் நிர்மானப் பணிகளில் ஈடுபட்டிருந்த ஊழியர்கள் விரட்டியடிக்கப்பட்டு, பொருட்கள் கடத்தப்பட்டுள்ளதாக மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான சட்டத்தரணிகள் குறிப்பிட்டிருந்தனர்.

இது குறித்து வாழைச்சேனை பொலிஸ் நிலையத்திலும் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. எனினும் கட்டிட நிர்மான நிறுவனத்திற்கு எவ்வித தீர்வும் கிட்டாத நிலையில் பொலிஸ்மா அதிபர் ஊடாக குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு முறையிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

சவூதி அரேபிய நிதி உதவியின் கீழ் கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள ஜெயந்தியாய பிரதேசத்தில் நிர்மானிக்கப்பட்டு வருகிறும் மட்டக்களப்பு தனியார் பல்கலைக் கழகத்தினை “லங்கா பில்டேர்ஸ் கோப்பரடிவ் சொஸையிட்டி” என்ற நிறுவனம் மேற்கொண்டு வந்த வேலைகளை அதன் ஒப்பந்தத்தை இரத்துச் செய்து இதன் கட்டுமானப் பணிகள் பிரிதொரு நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட நிலையில் நிறுவனத்தின் தலைமையை பொறுப்பேற்றிருந்த இராஜங்க அமைச்சர் அவரது மகன் மற்றும் இருவருக்கு எதிராக நிர்மானப் பொருட்களை கடத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.

மேற்படி வழக்கில் ஜனாதிபதி சட்டத்தரணி நசீம்கிம்மத், சட்டத்தரணி எம்.எம்.முகமட் ராசீக் ஆகியோர்களும் மன்றில் தோன்றியிருந்தனர்.

இவ்வழக்கில் இராஜங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் பாராளுமன்ற அமர்வு காரணமாக வருகை தரவில்லை என்பதுடன், இதில் ஹிராஸ் அஹமட்;, முகம்மட் தாஹீர் மற்றும் அபுல்ஹசன் ஆகிய மூவரும் சமூகமளித்தனர்.

இவ்வழக்கு தொடர்பில் சந்தேக நபர்களான இராஜங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் மற்றும் அவரது மகன் ஹிராஸ் அஹமட்;, முகம்மட் தாஹீர் மற்றும் அபுல்ஹசன் ஆகிய நான்கு பேரையும் தலா ஒருவருக்கு இரண்டு இலட்சம் ரூபா பிணையிலும் அதேபோல தலா ஒருவருக்கு 25 இலட்சம் ரூபா பெறுதியான இரண்டு பேர் சரீரப்பிணையிலும் கடந்த மாதம் 19.09.2018ம் திகதி வாழைச்சேனை மாவட்ட நீதிவான் நீதிமன்ற நீதிபதி விடுதலை செய்தமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here