ஓட்டமாவடி பிரதேச சபையினால் அனர்த்த மீட்பு பணியில் ஈடுபடுவதற்கான குழு அமைப்பு

0
134

(எஸ்.எம்.எம்.முர்ஷித்)

ஓட்டமாவடி பிரதேச சபையின் தவிசாளர் ஐ.ரி.அஸ்மி அவர்களின் தலைமையில் தற்போது நிலவி வரும் சீரற்ற காலநிலை தொடர்பாகவும், சபையின் தற்போதைய நிதி, நிர்வாக நடவடிக்கைகள் தொடர்பாகவும் சபையின் உத்தியோகத்தர்கள், ஊழியர்களுடனான கலந்துரையாடல் சபா மண்டபத்தில் நடைபெற்றது.

இக்கலந்துரையாடலில் தனது அவசர அழைப்பினை ஏற்று பொது மக்களது நலன் கருதி வெள்ள அனர்த்த மீட்புப் பணியில் சிறப்பாக செயற்பட்ட ஊழியர்களுக்கு தனது நன்றிகளை தவிசாளர் தெரிவித்தார்.

சீரற்ற காலநிலை காரணமாக எமது பிரதேச மக்கள் பல அசௌகரிகங்களை எதிர்நோக்குகின்றனர். எதிர்வரும் நாட்களில் இந்நிலை நீடிக்குமானால் வெள்ள அனர்த்தங்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் காணப்படுவதனால் அதனை எதிர்கொள்வதற்கும் அனர்த்தங்களில் இருந்து எமது மக்களை பாதுகாப்பதற்காகவும் நாம் அனைவரும் இருக்க வேண்டுமென தவிசாளர் இதன்போது கேட்டுக் கொண்டார்.

இதன்போது தவிசாளர் உட்பட பிரதேச சபை உத்தியோகத்தர்கள், ஊழியர்கள் அடங்களாக அனர்த்த மீட்பு பணியில் ஈடுபடுவதற்கான குழு ஒன்று அமைக்கப்பட்டு பின்வரும் தயார்படுத்தல்களும் மேற்கொள்ளப்பட்டன.

அனர்த்தங்களின் போது துரிதமாக செயற்படுவதற்கு என முன்னெச்சறிக்கையாக இயந்திர படகுகள், தோணிகள் என்பன தயார்நிலை வைத்தல், அவசர நிலைமைகளின் போது மக்களினை மீட்பதற்கான போக்குவரத்து குழு, முதலுதவிக் குழு நியமிக்கப்பட்டது.

அனர்த்த சேவைகளுக்கான துரித தொலைபேசிச் சேவை (Hotline) அறிமுகம் செய்யப்பட்டு அதற்கான உத்தியோகத்தர்களும் நியமிக்கப்பட்டனர், இப்பணிகனை இடையூறுகளின்றி முன்னெடுப்பதற்கு தேவையான வாகன வசதிகள் ஏற்படுத்தப்பட்டன.

சபையின் உத்தியோகத்தர்கள், ஊழியர்கள் அனைவரும் தற்போதைய நிலைமை சீராகும் வரை மனிதாபிமானத்துடன் எமது மக்களுக்கான இப்பணிகளை அர்ப்பணிப்புடன் செய்வதற்கு முன்வருமாறு தவிசாளர் தனது வேண்டுகோளாக இச்சந்தர்ப்பத்தில் முன்வைத்தார்.

அனர்த்த நிலமைகளின் போது அற்பணிப்புடன் தாம் செயற்படவுள்ளதாக தவிசாளர் முன்னிலையில் உத்தியோகத்தர்கள், ஊழியர்கள் உறுதிமொழிந்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here