தேசத்தின் நலனில் அக்கறையில்லாமல் முஸ்லிம் கட்சிகள் செயற்படுகின்றன: முன்னாள் அமைச்சர் சுபையிர்

0
148
(எஸ்.அஷ்ரப்கான்)
நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் ஸ்தீர சூழ்நிலையில், பிளவுபட்டுள்ள தேசிய கட்சிகளை ஒற்றுமைப்படுத்தி, நாட்டினுடைய அரசியல், பொருளாதார வளர்ச்சிக்குப் பங்களிப்பு செய்யும் வகையில், முஸ்லிம் கட்சிகள் முன்மாதிரியாக நடந்துகொள்ளும் ஒரு நல்ல சந்தர்ப்பத்தினை தவறவிட்டுள்ளது என கிழக்கு மாகாண முன்னாள் அமைச்சர் எம்.எஸ்.சுபையிர் தெரிவித்தார்.
கிழக்கு மாகாண முன்னாள் அமைச்சர் சுபையிரின் மக்கள் பணிமனையில் இன்று (9) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது கருத்துத் தெரிவிக்கையிலே, அவர் மேற்கன்டவாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
முஸ்லிம் அரசியல் தலைவர்கள் நாட்டின் தேசிய நலனில் அக்கறையின்றி, தமது கட்சியின் நலனை மாத்திரம் கருத்திற்கொண்டு செயற்பட்டுக் கொண்டிருக்கின்றன. தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடியில் குறிப்பாக தமது பாராளுமன்ற உறுப்பினர்களை பாதுகாக்கும் பொருட்டும், பெரும்பான்மை குறித்து கணக்குப்பார்த்தும், காலத்தை கடத்துவதற்குமாகவே முஸ்லிம் கட்சி தலைவர்களும், பாராளுமன்ற உறுப்பினர்களும் உம்ரா எனும் போர்வையில் மக்கா சென்றுள்ளனர். இது அவர்களின் சுயநலத்தினையே வெளிப்படுத்தியுள்ளது.
தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் ஸ்தீரத்தன்மையில், ஜனாதிபதி அரசியலமைப்பை மீறி ஜனநாயகத்திற்கு விரோதமாக செயற்பட்டதாக முஸ்லிம் கட்சி தலைமைகளும், அதன் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலரும் கூறுகின்றனர். இந்தவிடயம் அரசியலமைப்புக்கும், ஜனநாயகத்திற்கும் உட்பட்டது என இந்த நாட்டிலே வாழும் மக்களில் பெரும்பாலானோர் கூறுகின்றனர். எது எவ்வாறாயினும் நாடு இக்கட்டான சூழ்நிலைக்கு தள்ளப்பட்டிருக்கும் இக்காலப்பபகுதியில் நாட்டிலே இருந்துகொண்டு அவற்றுக்கு சரியான தீர்வு கான்பதற்கு முஸ்லிம் தலைமைகள் முயற்சித்திருக்க வேண்டும்.
குறிப்பாக, கடந்த காலங்களிலே இந்த நாட்டிலே சிறுபான்மை சமூகங்களுக்கு எதிரான பல்வேறு கசப்பான சம்பவங்கள் நிகழ்ந்திருக்கின்றன. அரசியலமைப்பு மீறப்பட்ட சம்பவங்களும் கடந்த காலங்களில் இடம்பெற்றுள்ளன. அப்போது வாய் திறந்து பேசாது மௌனமாக இருந்த முஸ்லிம் கட்சிகள், இப்போது மாத்திரம் பேசுவது அவர்களின் பிற்போக்கு சிந்தனையை வெளிப்படுத்தியுள்ளது.
கடந்த நல்லாட்சி அரசாங்கத்திலே பிரதமராக இருந்த ரணில் விக்கிரமிங்கவுடைய பலவீனப்போக்கு, அவரது செயற்பாடு குறித்து அதிருப்தியுற்ற ஜனாதிபதி ஐக்கிய தேசிய கட்சியினுடைய முக்கியஸ்தர்களான சஜித் பிரேமதாச மற்றும் கரு ஜெயசூரிய போன்றவர்களை அழைத்து பிரதமர் பதிவியினை பொறுப்பேற்குமாறு கூறியுள்ளார். இந்த சம்பவத்தினை சஜித் பிரேமதாசவும் ஏற்றுள்ளார். குறித்த அரசாங்கத்திலே அமைச்சரவை அமைச்சர்களாக இருந்த இரு முஸ்லிம் தலைவர்களுக்கும் இந்த விடயம் தெரியாமல் போனமை வியப்பாகவுள்ளது.
முஸ்லிம் சமூகத்திற்கு எந்த வகையிலும் உதவி செய்யாத ஐக்கிய தேசிய கட்சியையும், ரணில் விக்கிரமசிங்கவையும் முஸ்லிம் தலைவர்கள் ஆதரிப்பது வரலாறாகும். ஐக்கிய தேசிய கட்சியின் நீண்டகால நண்பர்களாக இருக்கும் முஸ்லிம் தலைமைகளும், முஸ்லிம் கட்சிகளின் பாராளுமன்ற உறுப்பினர்களும், இந்த நாட்டிலே இடம்பெற்ற மத்திய வங்கி பாரிய கொள்ளை சம்பவம் தொடர்பில் இதுவரை வாய்திறந்து ஒரு வார்த்தை கூட பேசவில்லை. ஆனால் இப்போது அவர்கள் வாய்திறந்து ஜனநாயகம் பற்றி பேசுவது வியப்பாகவுள்ளது.
நாடு இன்று பல்வேறு நெருக்கடிகளுக்குள் சிக்கியுள்ள நிலையில், வட, கிழக்கு உள்ளிட்ட நாட்டின் ஏனைய பகுதிகளில் வெள்ள அனர்த்தம் ஏற்பட்டு மக்கள் நிர்க்கதிக்குள்ளாகியுள்ள போது, தேசத்தின் நலன், இறைமை, பொருளாதாரம், மக்களின் பாதுகாப்பு குறித்து கவனம் செலுத்த வேண்டிய பொறுப்புள்ள முஸ்லிம் தலைமைகள் தமது சுயநலத் தேவையினை மாத்திரம் கருதி உம்ரா சென்றிருப்பது இன்று நாட்டில் பெரும் விமர்சனத்தினை ஏற்படுத்தியுள்ளது. அவர்கள் இந்த சந்தர்ப்பத்திலே சுற்றுலா சென்றுள்ளதாக பெரும்பான்மை சமூகம் தப்பான அபிப்பிராயத்தை கொண்டுள்ளது.  இந்தவிடயம் சமூக ஊடகங்களில் பேசுபொருளாக மாறியிருப்பதனையும் அவதானிக்க முடிகிறது.
தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடி சூழ்நிலையில் நல்லாட்சிக்கு பங்களித்தவர்கள் என்ற வகையில், முஸ்லிம் கட்சித் தலைவர்கள் இந்நாட்டு பௌத்த சபைகளிடம் சென்று தேசிய கட்சிகளை ஒற்றுமைப்படுத்துவதற்கு, முயற்சிகளை செய்திருக்க வேண்டும். அவ்வாறாவது முயற்சிகளை செய்திருந்தால் இந்நாட்டிலுள்ள பெரும்பான்மை மற்றும் சிறுபான்மை சமூகங்கள் அவர்களை பாராட்டி இருக்கும். அவ்வாறு கிடைத்த ஒரு நல்ல சந்தர்ப்பத்தினை முஸ்லிம் கட்சிகள் தவறவிட்டமை கவலையான விடயமாகும்.
நாட்டினதும் நாட்டு மக்களினதும் பாதுகாப்பு குறித்து முஸ்லிம் கட்சிகள்  சிந்திக்காது, தேர்தல் ஒன்றினூடாக எவ்வாறு வெற்றிபெறுவது, பதவிகளை பெற்றுக்கொள்வது, குறித்தே கவனம் செலுத்தி செயற்படுகின்றது. முஸ்லிம் கட்சிகளிடம் இப்போது எந்தவொரு திட்டமுமில்லை. அவர்கள் முஸ்லிம் சமூகம் தொடர்பில் எந்தவொரு தீர்வுத் திட்டத்தினையும் ஆட்சியாளர்களிடம் முன்வைக்கவுமில்லை. எனவே, தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடி சூழ்நிலையில் முஸ்லிம் தலைமைகள் சிந்தித்து செயற்பட வேண்டும். முஸ்லிம் தலைமைகள் விடுகின்ற தவறு இந்த நாட்டில் வாழும் முஸ்லிம் சமூகத்திற்கு பின்னடைவையே ஏற்படுத்தும் எனவும் அவர் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here