எல்லாம் அரசியல்தான்

0
168

(றிழா)

நாட்டில் அரசியல் சிக்கல் தோற்றுவிக்கப்பட்டு, அதை முடிவுறுத்திக் கொள்வதால் தான் தோற்றுப் போய்விடுவேனா என்ற அச்சத்தில் ஜனாதிபதி இருப்பதை அவர் நாளாந்தம் விடுக்கும் செய்திகளிலிருந்து தெளிவாக விளங்கமுடிகிறது. நெல்சன் மன்டேலாவுக்கு ஒப்பிட்டு பிரச்சாரம் செய்யப்பட்ட ஜனாதிபதி ஸ்ரீசேன இந்த அரசியல் குழப்பத்தை தோற்றுவித்து தனது ஒட்டுமொத்த கௌரவத்தை முழுமையாக இழந்துள்ளார்.

ஆட்சி மாற்றம் ஒன்றை ஏற்படுத்துவது என்பது, உலகளவில் பெரும் சவாலான ஒன்றாக இருகிற நிலையில், எதுவித திட்டமிடலுமின்றி ஜனாதிபதியும் அவரது சகாக்களும் பிரதமர் பதவியை கைமாற்றியது, அவர்களது அரசியல் முதிர்வின்மையையே கட்டுகிறது. அரசியல் எதிரியாக இருந்த மகிந்த ராஜபக்ச அவர்களை தன்னைவிடவும் பலமானவர் என்கிற நம்பிக்கை, ஜனாதிபதி ஸ்ரீசேன அவர்களிடம் ஆழமாக பதிந்துள்ளதை தெளிவாக உணரச் செய்கிறது.

இவ்வாறான நிலை ஏற்படும் என்று மகிந்த ராஜபக்சவும் அவரது அரசியல் திட்டவாதிகளும் உணரமுடியாது போனது அவர் குறித்த மிகப் பெரும் பின்புல அரசியலை கேள்விக்குட்படுத்த வேண்டியுள்ளது. இது ராஜக்ச குடும்ப அரசியலுக்கு புதிய சவால் என்பதையும் அவர்கள் விளங்கிக் கொண்டுள்ளார்கள் என்பதை மகிந்த ராஜபக்சவின் இறுதியான பாராளுமன்ற உரையில் தெளிவாக புரிகிறது.

அரசமைப்பு மீறல் இடம்பெற்றுள்ளதின் மூலம் ஜனாநாயகம், இறைமை, மக்களாட்சி சிதைக்கப்பட்டுள்ளது என்பது வெளிப்படையான உண்மை என்பதால் மக்கள் ஜனாதிபதி மீது அவநம்பிக்கை கொண்டுள்ளது இலங்கை அரசியலில் முக்கிய திரும்பம் என்பதும் இங்கு சொல்லியாகவேண்டும். ரணில் எப்போதும் மெச் விளையாடாமல் கப் தூக்குபவர் என்பது இதிலும் உண்மையாகிவிட்டது. சரிந்து போய் இருந்த ஜக்கிய தேசிய கட்சியின் ஆதரவினை இந்த தருணத்தில் அவர்கள் மீளவும் கட்டமைத்துக் கொள்கிறார்கள்.

இது ஒருபுறமிருக்க, பாராளுமன்ற உறுப்பினர்கள் பாராளுமன்றத்திற்குள் நடந்து கொண்டவை பற்றி பல உணர்ச்சிவசமான விமர்சனங்கள் முன்வைக்கப்படுவதை பார்க்கக் கிடைக்கிறது. பாராளுமன்ற உறுப்பினர்கள் நடந்து கொண்ட வக்கிர உணர்வுகள் பற்றிய கதைகள் தான் தெரு எங்கும் கதைக்கப்படுகிறது. இருப்பினும், இதை விட மோசமான சம்பவங்களை தேர்தல் காலங்களில் நிகழ்த்திய, அதை திட்டமிட்டு தனது அடிவருடிகளுக்கு கொடுத்தவர்கள் பாராளுமன்றத்தில் இவ்வாறு நடந்து கொண்டது என்பதை புதிதாக பேசி பயனில்லை.

எத்துனை உயிர் பறிப்புகள், வால் வெட்டுக்கள், சொத்துச் சேதங்கள், குண்டு வீச்சுக்கள் என எல்லாவற்றையும் நிகழ்த்தி பாராளுமன்ற கதிரையை தக்கவைக்க முனையும் அரசியல் வாதிகளுக்கு இது ஒன்றும் புதிதல்ல என்பது, மக்கள் உணரவேண்டிய யதார்த்தங்களாகும். மக்காவில் ஒன்றாக பேரீச்சம் பழம் சாப்பிட்ட இவர்களை நம்பி சண்டையிட்டுக் கொண்ட ஆதரவாளர்கள் இன்னமும் முகம் பார்க்காது வாழ்வதை அவர்களது அரசியல் முதலீடாகவே இன்னமும் நினைக்கிறார்கள் போலும்.

யாருடன் இணைந்தால் தமது பாராளுமன்ற கதிரையை தக்கவைத்துக் கொள்ளலாம் என்பது அவர்களுக்கு நன்றாகத் தெரியும். அவர்கள் அதில் வெற்றியும் காண்கிறார்கள். எதிர்வரும் தேர்தலிலும் இதுதான் நடக்கவுள்ளது. மக்களும் இவர்களை நம்பி மீண்டும் வாக்களிக்கத்தான் போகிறார்கள். ஆனால், தீர்க்கப்படாத பொதுப் பிரச்சினைகள் நாற்பட்ட புண்ணாக ஆறாமலே இருப்பதை யாரறிவார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here