சட்டவாக்கத்துறையைச் சேர்ந்தவர்கள் நிறைவேற்றுத்துறைக்கு விட்டுக்கொடுத்தார்களா?

0
155
(எஸ்.அஷ்ரப்கான்)
அரசியலமைப்பு இருந்தும் அதைக்காலுக்குள்போட்டு மிதித்து அரசியலமைப்பே இல்லாத ஒரு நாடுபோன்று இலங்கையை மாற்றமுனைகின்றார் ஜனாதிபதி. அரசியலமைப்பில் அவருக்கு வழங்கப்படாத அதிகாரத்தையெல்லாம் அவர் பாவிக்கின்றார் என சட்ட முதுமானி வை.எல்.எஸ்.ஹமீட் தெரிவித்துள்ளார்.
அண்மையில் பாராளுமன்றத்தில் நடைபெற்ற குழப்பம், பிரச்சினைகள் தொடர்பாக ஊடகங்களுக்கு விடுத்துள்ள அறிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அவர் குறிப்பிடும் போது,
அரசியலமைப்பை காலுக்குள் போட்டுமிதித்து ஜனாதிபதி ஆடுகின்ற அராஜகத்தாண்டவம் சபாநாயகரின் துணிச்சலான எதிர்வினையால்தான் ஓரளவு கட்டுப்பாட்டுக்குள் இருந்துவந்தது. அதற்காக சபாநாயகரைப் பாராட்டியே ஆகவேண்டும். குறிப்பாக 14/11/2018 அன்று அத்தனை இடையூறுக்கு மத்தியிலும் நம்பிக்கையில்லாப் பிரேரணையை நிறைவேற்றிய தைரியம் அதீதமானதாகும்.
இன்றைய பிரச்சினை ரணிலையோ, சஜித்தையோ, இன்னுமொருவரையோ பிரதமராக்குவதல்ல. அது இரண்டாவது விடயம். இன்றைய முதலாவது பிரச்சினை அரசியலமைப்பைப் பாதுகாப்பதாகும். ஒரு நாட்டுப்பிரஜைகளைப் பொறுத்தவரை இறைவனுக்கடுத்ததாக, முதலாவது பாதுகாப்பு அரசியலமைப்பாகும். அரசியலமைப்பு இல்லையென்றால் அங்கு சர்வாதிகாரமும் அராஜகமும்தான் தலைதூக்கும். பிரித்தானியா இதற்கு விதிவிலக்கு என்றபோதிலும் கூட.
அந்த அரசியலமைப்பு இருந்தும் அதைக்காலுக்குள்போட்டு மிதித்து அரசியலமைப்பே இல்லாத ஒரு நாடுபோன்று இலங்கையை மாற்றமுனைகின்றார் ஜனாதிபதி. அரசியலமைப்பில் அவருக்கு வழங்கப்படாத அதிகாரத்தையெல்லாம் அவர் பாவிக்கின்றார்.
பெரும்பான்மை இருப்பவரை பிரதமராக நியமிக்க வேண்டியது அரசியலமைப்பு ரீதியாக ஜனாதிபதியினுடைய கடமை. ஆனால் ரணிலுக்கு பெரும்பான்மை இருந்தாலும் நியமிக்கமாட்டேன்; என்கின்றார். அதாவது ரணிலை எனக்குப் பிடிக்கவில்லை; எனவே, இந்தவிடயத்தில் அரசியலமைப்பை மதிக்கமாட்டேன்; என்கின்றார்.
பிரதமருக்கு பெரும்பான்மை இல்லாதபோது அவரை நீக்குகின்ற அதிகாரம் ஜனாதிபதிக்கு இருக்கின்றது. ஆனால் பெரும்பான்மை இழந்ததற்காக அல்ல, மாறாக ரணிலைப் பிடிக்கவில்லை; என்பதற்காக எப்போதோ, ரணிலை நீக்கி கரு ஜயசூர்யவையோ அல்லது சஜித்தையோ நிமிக்க தான் ஏற்கனவே முயற்சிசெய்ததாகக் கூறுகின்றார். அவ்வாறாயின் பிரதமருக்கு பெரும்பான்மை இருந்தாலும் இல்லாவிட்டாலும் எனக்குப் பிடிக்கவில்லையாயின் நீக்குவேன்; என்று பகிரங்கமாக கூறுகின்றார்.
நாளை, ஒருதேர்தலில் ஏதோ ஒரு கட்சிக்கு அறுதிப்பெரும்பான்மையை மக்கள் வழங்கினாலும் அந்தக்கட்சியின் தலைவரைப் பிடிக்கவில்லையென்றால் அவரை நியமிக்கமாட்டேன். அல்லது நயமித்ததன்பின் அவரை பிடிக்கவில்லையென்றால் அவரிடம் பெரும்பான்மை இருந்தாலும் நீக்குவேன்; என்கின்றார்.
இந்த நாடு ஜனாதிபதியின் தனிப்பட்ட சொத்துமல்ல. அரசியலமைப்பு சட்டம் சினிமாக்கதையுமல்ல. இதனை அனுமதித்தால் நாளை வருகின்ற ஜனாதிபதிகளும் இதனையே செய்வார்கள். மக்கள் ஒரு கட்சிக்கு அதன் தலைவர் பிரதமராக வருவார்; என்ற நம்பிக்கையில் வாக்களித்து பெரும்பான்மையை வழங்கினால்,  அவர் நியமிக்கப்படாவிட்டால் அந்த வாக்கின் பெறுமதியென்ன? எதற்காகத் தேர்தல்?
அதேபோல்தான் தனக்கு அதிகாரமில்லாத நிலையில் பாராளுமன்றத்தைக் கலைக்கின்றார். நாளை தேர்தல் நடைபெற்று தனது கட்சிவெற்றிபெறாவிட்டால் நாளை மறுதினமே நாடாளுமன்றத்தைக் கலைக்கமாட்டார்; என்பது என்ன நிச்சயம்? அல்லது எதிர்கால ஜனாதிபதிகள் அவ்வாறு செய்யமாட்டார்கள்; என்பது நிச்சயம்? இவ்வாறான ஒரு சூழ்நிலையில் தேர்தலின் பெறுமதியென்ன? நல்லவேளை உயர்நீதிமன்றம் தலையிட்டு ஒரு ஆறுதலைத் தந்திருக்கின்றது.
அவ்வாறுதான் பிரதமரை நீக்குவதற்கும் புதிய பிரதமரை நியமிப்பதற்கும் ஜனாதிபதிக்கு அதிகாரம் இருந்தபோதிலும் ஜனாதிபதியின் பிரதமர் நியமனத்தை ஏற்றுக்கொள்வதா? நிராகரிப்பதா? என்பதைத் தீர்மானிக்கும் அதிகாரம் பாராளுமன்றத்திற்கு இருக்கின்றது. அது மக்கள் வழங்கிய அதிகாரம். அவர்கள் மக்கள் தெரிவுசெய்த பிரதிநிதிகள்.
பெரும்பான்மை இல்லாத ஒருவரைப் பிரதமராக நியமித்துவிட்டு அதனை பாராளுமன்றம் ஏற்றுக்கொள்வதா? நிராகரிப்பதா? என்று தீர்மானிக்கின்ற அதன் அதிகாரத்தைச் செயற்படுத்த விடாமல் பாராளுமன்றத்தை இழுத்து மூடுகிறார்.
இறுதியாக ஒருவாறாக பாராளுமன்றத்தைத் திறந்தால் அதில் பிரதமருக்கு நம்பிக்கை இருக்கின்றதா? இல்லையா? என்று பாராளுமன்றம் தீர்மானித்து விடக்கூடாது; என்பதற்காக தனது கட்சிக்காரர்களே கூச்சலும் குழப்பமும் செய்ய அதற்கு மத்தியிலும் பாராளுமன்றம் பிரேரணையை நிறைவேற்றினால் ஏற்றுக்கொள்ள மாட்டேன்; என்கின்றார். நாளை அவருக்கெதிராக குற்றப்பிரேரணை நிறைவேற்றினாலும் ஏற்றுக்கொள்ள மாட்டேன்; என்றுகூறமாட்டார்; என்பது என்ன நிச்சயம்?
இவ்வாறு அரசியலமைப்பில் என்ன எழுதியிருந்தாலும் கவலையில்லை. நான் வைத்ததுதான் சட்டம் என்று தாண்டவமாடுகின்றார். இந்நிலையில் இந்த யாப்பைப் பாதுகாக்காவிட்டால் இந்நாடு என்னாகும்.
இந்தப்பின்னணியில்தான் இரண்டாவது தடவையாகவும் (16/11/2018) கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணையைப் பார்க்கவேண்டும்.
சபாநாயகர்  ஒரு பிரேரணை வெற்றிபெற்றதாக அத்தாட்சிப்படுத்திவிட்டால் அது இறுதியானதும் முடிவானதுமாகும். ( final and conclusive). ஜனாதிபதி ஏற்றுக்கொள்ளாதது அரசியலமைப்புக்கு விரோதமாகும். இது தொடர்பாக இதற்கு முன்னைய கட்டுரையில் பார்த்தோம்.
அவ்வாறு இருக்க சபாநாயகரும் கட்சித்தலைவர்களும் இன்னுமொரு வாக்கெடுப்புக்கு ஏன் ஏற்றுக்கொண்டார்கள்?  அதற்கு முதல்நாள் “ இந்தப்பாராளுமன்றத்தில் யாரும் பிரதமரும் இல்லை, அமைச்சரும் இல்லை. எல்லோரும் பாராளுமன்ற உறுப்பினர்களே! என்று அறிவித்த சபாநாயகர் பிரமருக்கெதிராக எவ்வாறு மீண்டுமொரு வாக்கெடுப்புக்கு ஒத்துக்கொண்டார்? இல்லாத பிரதமருக்கெதிராக எவ்வாறு நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவரமுடியும்?
இதன்மூலம், பாராளுமன்றம் நிறைவேற்றுகின்ற பிரேரணையை அரசியலமைப்புக்கு முரணாக நிராகரிக்கின்ற அதிகாரம் ஜனாதிபதிக்கு இருப்பதை சபாநாயகரும் கட்சித்தலைவர்களும் ஏற்றுக்கொண்டிருக்கின்றார்கள். அதேநேரம் பாராளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்டு சபாநாயகரால் அத்தாட்சிப்படுத்தப்பட்ட ஒரு பிரேரணை இறுதியானதும் முடிவானதுமல்ல. ஜனாதிபதி நிராகரித்தால் மீண்டும் மீண்டும் நிறைவேற்றலாம்; என்பதை ஏற்றுக்கொண்டதன்மூலம் பாராளுமன்றத்தின் உயர்தன்மை கீழிறக்கப்பட்டிருக்கின்றது. அதனால் ஜனாதிபதி தனது கட்சிக்காரர்கள் மீண்டும் பாராளுமன்றத்தில் குழப்பநிலையை தோற்றுவிக்க இரண்டாம் முறை நிறைவேற்றிய பிரேரணையையும் நிராகரித்திருக்கின்றார்.
ஏற்கனவே நிறைவேற்றிய பிரேரணை நிராகரிக்கப்பட்டதை ஏற்றுக்கொண்டு மீண்டும் பிரேரணை கொண்டுவந்து நிறைவேற்றிவிட்டு  இப்பொழுது அவர் மீண்டும் நிராகரிக்கும்போது அதை சட்டவிரோதம் என எவ்வாறு கூறமுடியும்?
இதுவரை ஜனாதிபதியின் அட்டகாசத்திற்கெதிராக பாராளுமன்றம் ஒரு கேடயமாக நிற்கும்; என்று மக்கள் நம்பினார்கள். சபாநாயகரின் அதீத தைரியம் அதற்கு மேலும் வலுசேர்த்தது. இன்று அந்தப்பாராளுமன்றத்தின் தீர்மானங்களையே செல்லாக்காசாக்கும் ஜனாதிபதியின் நிலைப்பாட்டிற்கு விட்டுக்கொடுத்து அந்த நம்பிக்கையையும் சிதைத்துவிட்டார்கள்.
ஜனாதிபதியுடன் எவ்வாறாவது சமரசம்பேசி, சில விட்டுக்கொடுப்புகளைச் செய்தாவது இந்தப்பிரச்சினைக்கு ஒரு தீர்வுகாணத்தானே வேண்டும்; என்று சிலர் கருதுகின்றார்கள். அவ்வாறு பாராளுமன்றத்தின் அதிகாரத்தையே விட்டுக்கொடுத்து தீர்வுகண்டுவுட்டார்களா? என்ற கேள்வி ஒருபுறம் இருக்க, விட்டுக்கொடுப்பதற்கும் சமரசம் பேசுவதற்கும் இது தனியார் கம்பனியுமல்ல, யாரினதும் தனிப்பட்ட சொத்துப் பிரச்சினையுமல்ல. அல்லது ரணில் என்ற ஒரு தனிநபரை பிரதமராக்குகின்ற பிரச்சினையுமல்ல.
துரதிஷ்டவசமாக, இந்த ஆதரவுக்கட்சிகள் அவ்வாறுதான் நினைக்கின்றார்கள். அதனால்தான் பாராளுமன்றத்தின் அதிகாரத்தையே பந்தாடவிழையும் ஜனாதிபதிக்கு விட்டுக்கொடுத்து மீண்டும் வாக்கெடுப்புக்கு உடன்பட்டார்கள்.
இங்கு இருக்கின்ற பிரச்சினை அரசியலமைப்பைப் பாதுகாப்பது. அரசியலமைப்புத்தான் சட்டவாக்குத்துறைக்கும், நிறைவேற்றுத்துறைக்கும் நீதித்துறைக்கும் அதிகாரங்களை வழங்கி அவற்றிற்கு வரையறையையும் வகுத்திருக்கின்றது. அந்த அரசியலமைப்பை நிறைவேற்றுத்துறை காலுக்குள்போட்டுமிதிக்க இன்று சந்தர்ப்பம் வழங்கினால், எப்படியாவது ரணிலையோ, யாரையோ பிரதமராக்குவதற்காக அரசியலமைப்பு மீறலை விட்டுக்கொடுப்பு என்றபெயரில் அனுமதித்தால் எதிர்காலத்தில் வருகின்ற ஒவ்வொரு ஜனாதிபதியும் அதையே பின்பற்றலாம்.
அதன்பின்பு பாராளுமன்றம் தேவையில்லை. கட்சிகள் தேவையில்லை. ஜனாதிபதியை மட்டும் தெரிவுசெய்துவிட்டால் அவருக்கு யாருடைய முகம் பிடிக்கின்றதோ அவரைப் பிரதமராக நியமித்து ஆட்சி செய்யலாம். எனவே, இங்கு விட்டுக்கொடுப்பு, பேச்சுவார்த்தையினூடாகத் தீர்வு என்பவற்றிற்கப்பால் ஜனாதிபதிக்கு அரசியலமைப்பில் இதுதான் உங்கள் இடம் என்பதை சட்டத்தின்மூலமே காட்டவேண்டும். சமாதானத்தின்மூலம் அல்ல.
இங்கு சமாதானம் என்ற சொல்லின் தாற்பரியத்தைப் புரிந்துகொள்ளவேண்டும். சமாதானம் என்பது இரு தரப்பிற்கிடைப்பட்ட பிரச்சினையைத் தீர்த்துவைப்பது. அது இரு தரப்பும் அரசியலமைப்பின் வரையறைக்குள் செயற்படும்வரை, அவர்களுக்குள் ஏதாவது பிரச்சினை இருந்தால் சமாதான, விட்டுக்கொடுப்புடன் கூடிய பேச்சுவார்த்தையே சிறந்தவழி.
இங்கு மீறப்படுவது அரசியலமைப்பு.,விட்டுக்கொடுப்பென்பது அரசியலமைப்பை மீறுவதற்கு வழங்குகின்ற அங்கீகாரம் என்றால் மீறுகின்றவருக்கும் மீறுவதற்கு உரிமை இல்லை. விட்டுக்கொடுக்கின்றவர்களுக்கும் விட்டுக்கொடுக்க உரிமை இல்லை.
இலங்கையில் அரசியலமைப்புச் சட்டம் என்பது மக்கள் மக்களுக்கு வழங்கியதாகும்.
Grundnorm
எந்தவொரு சட்டத்திற்குமான வலிவுத்தன்மை (  validity ) இன்னுமொரு ‘மூலத்திலிருந்து’ வருகின்றது. அந்த ‘மூலத்திற்கான’ சட்டவலிவு இன்னுமொரு ‘மூலத்திலிருந்து’ வருகின்றது. அது இன்னுமொரு ‘மூலத்திலிருந்து’ வருகின்றது. இவ்வாறு இறுதியாக ஒரு ‘மூலம்’ வரும். அந்த மூலத்தை Grundnorm அல்லது fundamental அல்லது basic norm என்று அழைக்கப்படும்.
உதாரணமாக, உப சட்டவதிகள், சுற்றுநிரூபங்களுகளுக்கான அதிகாரம் பாராளுமன்ற சட்டங்களிலிருந்து வருகின்றது. அவ்வாறு இல்லாவிட்டால் அவை செல்லுபடியாகாது.  பாராளுமன்ற சட்டங்களுக்கான அதிகாரம் அரசியல்யாப்பில் இருந்து வருகின்றது.
நம்மிடம் இருப்பது திருத்தங்களுடனான 78 ம் ஆண்டு யாப்பாகும். இதற்கான அதிகாரம் 72ம் ஆண்டு யாப்பில் இருந்து வருகின்றது. இங்கு மக்கள் அதிகாரம் வழங்கினார்கள்; என்று கூறலாம். அது சரியானது. ஆனால் அந்த அதிகாரத்தை 72ம் ஆண்டு யாப்பிற்கமையத்தான் வழங்கினார்கள். எனவே, 78ம் ஆண்டு யாப்பிற்கான ‘மூலம்’ 72ம் ஆண்டு யாப்பாகும்.
72ம் ஆண்டு யாப்பிற்கான ‘மூலம்’ எது? அது சோல்பரி யாப்பாக இருந்திருக்க வேண்டும். அதன் அடிப்படையில்தான் அன்று அவர்கள் பாராளுமன்ற உறுப்பினரானார்கள். திரு S W R D பண்டாரநாயக அவர்கள் புதிய யாப்பு ஒன்றை உருவாக்குவதற்காக ஒரு தெரிவுக்குழுவைக்கூட அமைத்தார். அங்கு இரண்டு பிரச்சினைகள் எழுந்தன.
ஒன்று முழுமையான ஒரு புதிய யாப்பை உருவாக்குவதற்கு சோல்பரி யாப்பின் சரத்து 29 தடையாக இருந்தது. அடுத்தது சோல்பரி யாப்பு ‘மூலமாக’ இருந்தால் முடியரசாகவே இருக்கவேண்டும். குடியரசாக முடியாது. எனவே, அவரது முயற்சி தோல்வியில் முடிந்தது.
சோல்பரி யாப்பின் ‘மூலம்’ பிரித்தானிய பாராளுமன்றத்தின் சட்டவாக்க அதிகாரம். பிரித்தானிய பாராளுமன்ற சட்டவாக்க அதிகாரத்தின் ‘மூலம்’ பல படிகளைத்தாண்டி பிரித்தானிய மன்னர்களின் அதிகாரம்…. இவ்வாறு அதுவொரு தொடர் சங்கியிலியாகப் போகும். சில சமயங்களில் Grundnorm ஐக் கண்டுபிடிப்பதே சிரமமாகும். ஆனாலும் Grundnorm இருக்கும்.
இலங்கையில் 72ம் ஆண்டு யாப்பு சோல்பரி யாப்பைத் தழுவவில்லை. அதனால் அந்த யாப்பும் அதனடிப்படையில் வந்த இன்றைய யாப்பு அதனடிப்படையில் உருவான சட்டங்கள் theoretically வலுவானதா? என்ற கேள்வி இன்னும் இருக்கின்றது.
புரட்சிகள் வெற்றியடைந்தால் சட்டபூர்வம், தோல்வியடைந்தால் சட்டவிரோதம் என்பார்கள். அந்த வகையில் சோல்பரி யாப்பின் தடைகளைத் தாண்டுவதற்காக 70 ஆண்டு மக்களின் ஆணையின் பிரகாரம் அன்று தெரிவுசெய்யப்பட்டவர்கள் சோல்பரியாப்பின்கீழ் பாராளுமன்ற உறுப்பினர்களாக செயற்பட்ட அதேவேளை நவரங்ககல மண்டபத்தில் அரசியல் நிர்ணயசபை உறுப்பினர்களாகவும் செயற்பட்டு சோல்பரி அரசியல்யாப்பின் தொடர்பைமுறித்து 72ம் ஆண்டு யாப்பை ஒரு புரட்சிகரமுறையில் உருவாக்கினார்கள். ( இந்த புரட்சி வெற்றிபெற்ற விடயத்திற்குள் இங்கு செல்ல முயற்சிக்கவில்லை) அதனால்தான் இலங்கை அரசியல் யாப்பு Autochthonous Constitution
எனப்படுகிறது. இதன் பிரதான அம்சம் break in legal continuity, அதாவது சட்டத்தொடர்பில் முறிவு.
எனவே, 72ம் ஆண்டைய யாப்பிற்கு Grundnorm இல்லை. அதனை உறுதிப்படுத்துவதற்காகத்தான் ‘இறைமை மக்களுடையது, பிரிக்க முடியாதது என்று சரத்து 3 இல் எழுதினார்கள். மட்டுமல்ல, அதனுடைய முன்னுரையில் ( Preamble ) “ மக்களாகிய நாங்கள் எங்களுக்கு வழங்குகின்ற அரசியல் யாப்பு “ என்று குறிப்பிடப்பட்டிருக்கின்றது. அதனடிப்படையில் 78 ம் ஆண்டு யாப்பும் மக்கள் தங்களுக்குத் தாங்களே வழங்கியதுதான். இன்று இலங்கைச் சட்டங்களின் Grundnorm 72ம் ஆண்டு யாப்புத்தான்.
இப்பொழுது இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு வருவோம்.
பாராளுமன்றத்திற்கு எத்தனை பிரேரணைகளும் கொண்டுவருகின்ற, எத்தனை தடவையும் நிறைவேற்றுகின்ற, எந்த உறுப்பினருக்கு ஆதரவாகவோ, எதிராகவோ கொண்டுவருகின்ற உரிமை பாராளுமன்றத்திற்கு இருக்கின்றது. ஆனால் அது வெளியில் செலுத்துகின்ற தாக்கம் என்ன என்பதற்கு சட்ட அடிப்படை வேண்டும்.
அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை என்பது சரத்து 48(2) உடன் சம்பந்தப்பட்டது. அந்தப்பிரேரணை நிறைவேற்றப்பட்ட கணமே சரத்து 48(2) செயற்பட ஆரம்பித்துவிடும். அது செயற்பட்டவுடன் அமைச்சரவை கலைந்துவிடும். பிரதமரும் பதவியிழந்து விடுவார்.
14ம் திகதி சபாநாயகர் பிரேரணை நிறைவேற்றப்பட்டதாக அறிவித்தார். அக்கணமே சரத்து 48(2) செயற்பாட்டிற்கு வந்துவிட்டது. அமைச்சரவை கலைந்து பிரதமரும் பதவியிழந்துவிட்டார். அவர்கள் ராஜினாமா செய்யவேண்டிய அவசியமுமில்லை. அவர்களை நீக்கவேண்டிய அவசியமுமில்லை. இல்லாத பதவியை ராஜினாமா செய்யவும் முடியாது, நீக்கவும் முடியாது. இது அரசியலமைப்பின் நிலைப்பாடு.
எனவே, அரசியலமைப்பின் இந்த நிலைப்பாட்டை ஏற்றுக்கொள்ள மறுப்பதன்மூலம் மக்களின் அரசியலமைப்பை ஏற்றுக்கொள்ள ஜனாதிபதி மறுக்கின்றார். இந்நிலையில் சட்டவாக்கத்துறையைச் சேர்ந்தவர்கள் தனது நிலைப்பாட்டில் உறுதியாக நின்றுகொண்டு ஜனாதிபதியை அரசியலமைப்பின் படி செயற்பட வற்புறுத்த வேண்டும். மக்களின் அரசியல்யாப்பிற்கிணங்க சில பணிகளைச் செய்வதற்கு நியமிக்கப்பட்ட ஒரு அதிகாரிதான் ஜனாதிபதி. அவர் மக்களின் அரசியல்யாப்பை மீறமுடியாது.
சட்டவாகத்துறையைச் சேர்ந்தவர்கள்  செய்தது என்ன? நீங்கள் அரசியல்யாப்பை  மறுத்ததை அங்கீகரிக்கின்றோம்; என்பதுபோல் பாராளுமன்றத்தின் முடிவை அவர் நிராகரித்ததை ஏற்றுக்கொண்டு இன்னுமொரு வாக்கெடுப்புக்கு போயிருக்கிறார்கள். சரத்து 48(2) செயற்பட்டு அரசு இல்லையென்றாகிவிட்டபின்னர் அரசுக்கெதிராக மீண்டும் நம்பிக்கையில்லாப் பிரேரணை என்றால் யார் அந்த அரசு. அவர்களை மீண்டும் நியமித்தது யார்?
அல்லது ஏற்கனவே செயற்பட்டுவிட்ட சரத்து 48(2) மீண்டும் பின்னோக்கித்தள்ளும் தத்துவம் யாருக்கு இருக்கின்றது? எனவே, சட்டவாக்கத்துறையைச் சேர்ந்தவர்களும்  மக்களின் அரசியல்யாப்பை மீறிவிட்டார்கள். நிறைவேற்றுத்துறையின் அட்டகாசத்தை தடுத்துநிறுத்தி மக்களின் யாப்பை பாதுகாக்கவேண்டிய சட்டவாக்கத்துறையைச் சேர்ந்தவர்கள் நிறைவேற்றுத்துறைக்குப் பணிந்து யாப்பை மீறிவிட்டார்கள்.
ஒருமுறை ஜனாதிபதியின் நிராகரிப்பை சட்டவாக்கத்துறையைச் சேர்ந்தவர்கள் ஏற்றுக்கொண்டதால் மீண்டும் அவர் சட்டவாக்கத்துறையின் தீர்மானத்தை நிராகரித்திருக்கின்றார். அதை எவ்வாறு பிழையெனக் கூறமுடியும். எனவே, மக்களுக்கு எஞ்சியிருக்கின்ற ஒரேயொரு நம்பிக்கை நீதித்துறை மாத்திரம்தான்.
இங்கு ஒரு வாதம் முன்வைக்கப்படுகிறது. அதாவது 14ம் திகதி கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணையில் முதலாம் பந்தியில் முன்னாள் பிரதமரை நீக்கியது பிழை எனக்குறிப்பிடப்பட்டிருந்ததாகவும் தனது செயற்பாட்டை பாராளுமன்றம் எவ்வாறு கேள்விக்குட்படுத்த முடியும்; என ஜனாதிபதி கேள்வியெழுப்பியதாகவும் அதனால் அந்த பந்தியை  நீக்கிவிட்டு மீண்டும் பிரேரணை கொண்டுவர உடன்பட்டதாகவும் கூறப்படுகிறது.
முதலாவது இங்கு கவனிக்க வேண்டியது தனது செயலைப் பாராளுமன்றம் கேள்விக்குட்படுத்த முடியாது ஆனால் பாராளுமன்றத்தின் செயலை தான் கேள்விக்குட்படுத்தலாம்; என்ற அவரது நிலைப்பாட்டை ஏற்றுக்கொண்டு மறுவாக்கெடுப்பிற்கு சம்மதித்துவிட்டு வந்திருக்கிறார்கள்; என்பது.
அடுத்தது, உண்மையில் குறித்த பிரேரணைக்கு அந்தப் பந்தி அவசியமற்றதுதான். ஆனால் இங்கு சரத்து 48(2) இற்குத் தேவையானது பிரேரணையில் வேறு என்னென்ன விடயங்கள் சேர்க்கப்பட்டதென்பதல்ல. அரசின்மீது பாராளுமன்றம் நம்பிக்கையீனம் வெளியிட்டிருக்கின்றதா? இல்லையா? என்பதுதான். நம்பிக்கையீனம் வெளியிட்டகணமே அரசு கலந்துவிட்டது.
எனவே, அரசியலமைப்பைப் பாதுகாக்கவேண்டுமானால் ஜனாதிபதி புதிய பிரதமரையும் அமைச்சரவையையும் நியமிக்கவேண்டும். தார்மீகரீதியில் அதிகூடிய ஆசனங்களைக்கொண்ட கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க பிரதமராக நியமிக்கப்பட வேண்டும். ஆனாலும் அவருக்குப் பெரும்பான்மை இல்லை, என்ற அடிப்படையிலேயே அவர் நீக்கப்பட்டார் ( சட்டத்தின் பார்வையில்). எனவே, ரணில் பெரும்பான்மை நிரூபிப்பது தவறல்ல.
இந்நிலையில் அவரால் 113 ஐக் காட்டமுடியுமானால் ஜனாதிபதி மறுக்கமுடியாது. மறுத்தால் நீதிமன்றத்தை நாடுவதைத்தவிர வேறு வழியில்லை. இந்த 113 ஐப் பெறுகின்ற விடயத்தில் த தே கூட்டமைப்பும் ஜே வி பி யும் ஒத்துழைக்க வேண்டும். இது ரணிலைப் பிரதமராக்குவதென்பதல்ல. ஜனாதிபதியின் ஏதேச்சதிகாரத்தை உடைத்து அரசியலமைப்பைப் பாதுகாப்பதாகும். இங்கு சஜித்தோ அல்லது வேறுயாரோ பிரதமராக நியமிக்கப்பட்டாலும் அரசியலமைப்பு மீறலில் ஜனாதிபதி வெற்றிபெற்று விடுவார். அரசியல் யாப்பு தோல்வியடைந்துவிடும். அது பொதுவாக நாட்டிற்கும் குறிப்பாக சிறுபான்மைக்கும் எதிர்காலத்தில் ஆபத்தாக முடியும்.
எனவே, இந்த இரு கட்சிகளும் ரணில் என்றோ,ஐ தே கட்சியென்றோ பாராமல் அரசியல்யாப்பைப் பாதுகாக்கும் போராட்டமாக இதனைக்கருதி ஒத்துழைப்பு வழங்கவேண்டும். ஜனாதிபதியின் இந்த எதேச்சதிகாரத்தை முறியடித்தபின் மூன்று மாதத்திலோ ஆறுமாதத்திலோ தேவையெனில் 2/3 பெரும்பான்மை மூலம் முடிந்தால் தேர்தலுக்கு செல்லலாம்.
எனவே, அரசியலமைப்பைப் பாதுகாப்பது தற்போது இந்த இரு கட்சிகளிடமுமே தங்கியிருக்கின்றது. எனவே , அவசரமாக செயற்படுமாறு ஜனநாயகத்தின் பெயரால் இந்நாட்டின் எதிர்காலத்திற்காக வேண்டுகிறோம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here