‘கலைத்து விளையாடுதல்’

0
181

சதுரங்க விளையாட்டில் அல்லது லூடோ, டாம் என அழைக்கப்படுகின்ற விளையாட்டுக்களில் காய்களை நகர்த்தி விளையாடுகின்ற சில ஆட்டக்காரர்கள், தம்மால்; சரியாக விளையாடி வெற்றிபெற முடியாமல் போய் விடுமென்றோ, விளையாடுபவர்களின் சூட்சுமத்தை புரிந்து கொள்ள முடியாமலோ, அல்லது இவ்விளையாட்டு கடைசியில் பெரும் பிரளயத்துக்குள் வந்து முடியுமென்றோ கருதுகின்ற சந்தர்ப்பத்தில்….. அப்படியே காய்களைக் கலைத்து, விளையாட்டைக் குழப்பியடிப்பதை சிறுவயதிலிருந்து நாமறிவோம்.

இலங்கையின் அரசியல் ஆடுகளத்தில் ஜனாதிபதி மைத்திரிப்பால சிறிசேன செப்டம்பர் 26 வெள்ளிக்கிழமை முதல் வரை ஆடிய ஆட்டமும் அதற்கிடையில் பாராளுமன்றத்தைக் கலைக்கப்பட்டதையும், இல்லையில்லை இது சரிப்பட்டு வராது என்று பாராளுமன்ற தீர்மானங்களை மறுதலிக்கின்ற பாங்கையும் பார்க்கின்ற போது மேற்சொன்ன உவமானமே ஞாபகத்திற்கு வருகின்றது.

ஆனால் இவ்வாறு குழப்பியடிக்கும் ஆட்டக்காரர்களின் தற்சார்பு நியாயங்கள் எவ்வாறாக இருந்த போதும் விளையாட்டை அவதானித்துக் கொண்டிருக்கின்ற பெரியவர்கள் தொடர்ந்து விளையாடுமாறு பணிப்பார்கள். ஆடுபலகையை ஒழுங்கு செய்து, காய்களை அடிக்கி ஏற்கனவே விட்ட இடத்திலிருந்து விளையாடி ஏதாவதொரு முடிவைக் காண வேண்டிய நிலை ஏற்படுவதுண்டு. அவ்வாறாதொரு நிர்ப்பந்தத்துக்குள்ளேயே நாட்டின் ஜனாதிபதியும், சர்ச்சைக்குரிய பிரதமர்களும் இருப்பதாகச் சொல்ல முடியும்.

ஜனாதிபதி மைத்திரிப்பால சிறிசேன இரவோடு இரவாக மஹிந்த ராஜபக்ஷவைப் பிரதமராக நியமித்து விட்டு ரணில் விக்கிரமசிங்கவை வெளியேற்றிய அந்த தருணத்திலிருந்து தொடங்கிய அதிரடி மாற்றங்களும் எதிர்பராத் திருப்பங்களும் ஒரு நீளமான கிளைமாக்ஸ் காட்சிகள் போல நீண்டு கொண்டேயிருக்கின்றன.

எல்லோரும் ஒன்றே

இந்த நாட்டு மக்களைப் பொறுத்தமட்டில் அதிலும் குறிப்பாக சிறுபான்மை முஸ்லிம்களைப் பொறுத்தவரையில் எல்லா ஆட்சியாளர்களும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகளே. சிலர் அதிகமாக ஊறியிருப்பார்கள், சிலர் குறைவாக ஊறியிருப்பார்கள் என்பது மட்டுமே வேறுபாடு. அதைவிடுத்து முஸ்லிம்களால் தலையில் வைத்துக் கொண்டாடப்படுவதற்கோ, அரசியல் அடைக்கலம் கொடுத்து காப்பாற்றப்படுவதற்கோ தேவையான இலட்சணத்தை, நாட்டின் பிரதான மூன்று பெரும் தலைவர்களுமே கிட்டத்தட்ட இழந்து விட்டிருக்கின்றார்கள். யாருக்கு கோபம் வந்தாலும் இதுதான் நிதர்சனமாகும்.
நிலைமை இவ்வாறிருக்க, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை பதவி நீக்கியமை கடுமையான விமர்சனங்களுக்கு உள்ளாகியிருந்த போதிலும் அவர் பக்கத்தில் தற்சார்பு நியாயங்கள் இருக்கவே செய்கின்றன. மத்திய வங்கி பிணைமுறி மோசடிக்குப் பி;ன்னால் நின்றமை, தன்னை கொலை செய்யும் சதித்திட்டத்திற்கு ஆசீர்வாதம் அளித்தமை போன்ற விடயங்களில் ரணில் விக்கிரமசிங்க மீது அவர் கடுமையாக சந்தேகம் கொண்டுள்ளார். அத்துடன் எப்போதும் கௌரவத்தை எதிர்பார்க்கும் மைத்திரி, ரணில் தரப்பிடமிருந்து தனக்கு அது கிடைக்கவில்லை என்று கருதியதும் இந்த அதிரடி நகர்வுகளுக்கு மிக முக்கியமான காரணம் எனலாம். ஆகவே அவர் ஒரு புத்திசாலி அரசியல்வாதியா எனத் தெரியவில்லை. ஆனால் அசட்டுத் துணிச்சல்காரர் என்பதில் எவ்வித சந்தேகமும் கிடையாது.

இவ்வாறு இரவோடிரவாக பிரதமரை மாற்றுவதற்காக தனது உச்சபட்ச அதிகாரத்தை ஜனாதிபதி பயன்படுத்தியமை கடுமையான விமர்சனங்களுக்கு உள்ளாகியது. பிரதமரை மாற்றும் முடிவு ஏதோ அடிப்படையில் சரி என எடுத்துக் கொண்டாலும் அதனைச் செய்த விதமும், அதற்கான தெரிவும் கணிசமான மக்களால் ஏற்றுக் கொள்ளப்படவில்லை. ஆனால், மைத்திரியின் முதலாவது தெரிவாக மஹிந்த ராஜபக்கஷ இருக்கவில்லை என்பதும் சஜித் பிரேமதாச மற்றும் கரு ஜயசூரிய பிரதமர் பதவியை பொறுப்பேற்க மறுத்தபின்னரே மஹிந்தவை நியமித்துள்ளார் எனத் தெரிந்ததும், மைத்திரி செய்தது இன்னும் அதிகமானோருக்கு நியாயம் போல தெரிந்தது.

உண்மையில் சஜித், கரு போன்றோருக்கு ஜனாதிபதி இவ்வாறு செய்யப் போகின்றார் என்பது முன்னமே தெரிந்திருக்கின்றது. எனவே, இதுபற்றி ரணில் விக்கிரமசிங்கவிடம் சொல்லி, ஜனாதிபதியுடன் உரையாடச் செய்திருக்கலாம். அல்லது அவரிலோ கட்சியின் பதவிகளிலோ மாற்றத்தை கொண்டு வந்து, ஜனாதிபதியை சற்று ஆசுவாசப்படுத்தியிருக்கலாம். ஆனால், அவ்வாறு நடக்கவும் இல்லை, மேட்டுக்குடி அரசியல் போக்கை ரணில் மீள்வாசிப்பு செய்யவும் இல்லை என்பது அவரை இப்படியான ஒரு இக்கட்டுக்குள் தள்ளியிருக்கின்றது.
எனவே, பிரதமரை மாற்றியது சரியா பிழையா என்பதை, பாராளுமன்றத்தை செயன்முறைகளின ;ஊடாக தீர்மானிப்பதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உடன் பாராளுமன்றத்தை கூட்டி இருக்க வேண்டும். இதற்கு முன்னர் பல தடவை ஜனாதிபதிகள் சபையை ஒத்திவைத்திருக்கின்றார்கள் என்பது உண்மைதான். ஆனால் குழப்பங்களுக்கு முடிவு கட்டும் வகையில், உடனடியாக பாராளுமன்றத்தை கூட்டாமல் விட்டதே, மைத்திரியில் நகர்வுகள் சறுக்கத் தொடங்கிய புள்ளி எனலாம்.
பெரும்பான்மை இல்லாத நிலையிலேயே ரணில் விக்கிரமசிங்கவை பிரதமராக நியமித்தது போல மஹிந்தவையும் நியமித்தது அரசியலமைப்புக்கு உட்பட்டது என்றே எடுத்துக் கொள்வோம். இத்தனை சட்ட ஆலோசகரை வைத்திருக்கின்ற ஒரு நாட்டின் ஜனாதிபதி, சிலர் சொல்வது போல் அறியாத்தனமாக அதைச் செய்திருக்கமாட்டார். ஆனால், 113 பேரின் ஆதரவை எடுக்க முடியுமாக இருந்தால்தான் அந் நியமனத்தை செய்திருக்க வேண்டும். ஆனால் கடைசி மட்டும் அது சாத்தியப்படவில்லை என்பதுதான், மைத்திரியை ஒரு முட்டுச் சந்துக்குள் கொண்டுபோய் நிறுத்தியிருக்கி;ன்றது.

‘டீல்’ படலம்

113 பெரும்பான்மையை நிரூபிக்க ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி (ஐ.ம.சு.மு) யும் ஐக்கிய தேசியக் கட்சியும் கடுமையான பிரயத்தனங்களை மேற்கொண்டன. உண்மையில் இரு கட்சிகளிடமும் கைவசம் பெரும்பான்மைப் பலம் இருக்கவில்லை. சிறு மற்றும் சிறுபான்மைக் கட்சிகளே அதனைத் தீர்மானிக்கும் சக்திகளாக இருந்தன.
இந்தக் கட்டத்தில்தான், இலங்கையின் அரசியல் வரலாற்றில் முன்னொருபோதும் இல்லாத அளவுக்கு பேரம்பேசல்கள் இடம்பெற்றன. பல கோடி ரூபா பணத்திற்கும் அமைச்சு, பிரதியமைச்சுப் பதவிகளுக்கும் எம்.பி.க்களை பேரம் (டீல்) பேசும் ஒலிப்பதிவுகள் சாதாரண மக்களின் கைகளுக்கும் சென்றன. ரங்கே பண்டார எம்.பி. போன்றோர் அதனை பகிரங்கமாகவே சொன்னார்கள். மஹிந்த தரப்பில் மட்டுமன்றி ரணில் தரப்பிலும் இவ்வாறான வெகுமதிகள் வழங்கப்பட்டதாக குற்றம் சாட்டப்படுகின்றது. எனவே பல பாராளுமன்ற உறுப்பினர்கள் கோடிகளுக்காக கட்சி மாறினார்கள் அல்லது அதே காரணத்திற்காக மாறாமல் இருந்தனர்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பு இம்முறை உடைக்கப்பட்டது. அதிலிருந்த ஒரு பாராளுமன்ற உறுப்பினர் பிரதியமைச்சுப் பதவியோடு அந்தப் பக்கம் சென்றார். வேறு தமிழ் எம்.பி.கள் ஓரிருவரும் பல்டி அடித்தனர். இதற்கிடையில், இவ்வாறு தமிழ் எம்.பி.க்களை கட்சி மாறச் செய்வதற்குப் பின்னால் இந்தியாவின் பிரபல அரசியல் சக்தி ஒன்று செயற்பட்டுள்ளதாக தகவல்கள் கசிந்திருக்கின்றன.

சமகாலத்தில், முஸ்லிம் கட்சிகளுடனும் பேச்சுக்கள் இடம்பெற்றன. மஹிந்த ராஜபக்ஷவின் பக்கம் எம்.பி.க்களின் தொகை அதிகரிக்கத் தொடங்கியதும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ{ம் அகில இலங்கை மக்கள் காங்கிரஸும் சற்று தடுமாறித்தான் போயின என்பதே உண்மை. மஹிந்தவை ஆதரிப்பதற்கும் நிறையவே நியாயமான காரணங்கள் முஸ்லிம் கட்சிகளுக்கு இருந்தன என்பதும் யார் ஆட்சிக்கு வந்தாலும் முஸ்லிம் கட்சிகள் அந்தப் பக்கம் போய்ச் சேரும் என்பதும் நாமறிந்த சங்கதிகளே.
ஆனால், ஐக்கிய தேசியக் கட்சியோடு கலந்தால்தான் இக்கட்சிகளால் தேர்தலில் இன்னும் அதிக வாக்குகளை ஜொலிக்க முடியும் என்பது களநிலைமை தெரிந்தோருக்கு புரியும். குறிப்பாக, தேர்தல் ஒன்று நடைபெறவுள்ள நிலையில், மு.கா.வின் தலைவர் றவூப் ஹக்கீம் கண்டியில் ஐ.தே.க.வில் போட்டியிட்டாலேயே வெல்ல முடியும். வன்னியில் மக்கள் காங்கிரஸ் தலைவர் தனது சொந்த கட்சியில் போட்டியிடலாம் என எடுத்துக் கொண்டாலும் அக்கட்சிக்கு நிலையான வாக்காளர் தளமொன்று இப்போதுதான் உருவாகி வருகின்ற நிலையில் அக்கட்சி தற்சமயம், ஐ.தே.க. வாக்கு வங்கிகளையே தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளது.

அத்துடன், மஹிந்த ராஜபக்ஷவை விமர்சித்து மக்கள் ஆணையைப் பெற்ற நாம் அவரை ஆதரித்தால் மக்கள் தம்மை கடுமையாக விமர்சிப்பார்கள் என்றும் அது அடுத்த தேர்தலில் தாக்கம் செலுத்தும் என்றும் இரு தலைவர்களும் நினைத்திருக்கக் கூடும். அதேபோல் ஜே.வி.பி. தனது நிலைப்பாட்டை ஏற்கனவே அறிவித்திருந்த நிலையில் வியாழேந்திரன் எம்.பி. கட்சி மாறியதை தொடர்ந்து தமிழ் கூட்டமைப்பு மஹிந்தவுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்தது. எனவே, ரணில் விக்கிரமசிங்கவே பெரும்பான்மையை நிரூபிப்பார் என்றும் அவருடனேயே இருக்க வேண்டும் என்றும் முஸ்லிம் கட்சிகள் இறுதி முடிவெடுத்தன என்று சொல்லலாம்.

பாராளுமன்ற கலைப்பு

ஆனால் என்னதான் எம்.பி.க்கள் ஏலமிடப்பட்டிருந்தாலும் கூட வாக்கெடுப்பு நடத்தப்படும் வரைக்கும் எதுவும் நிச்சயமற்றதாகவே இருந்தது. குறிப்பாக மைத்திரி – மஹிந்த தரப்பினால் பெரும்பான்மையை நிரூபிப்பது மிகச் சிரமமானதாக இருந்தது. இந்த தருணத்தில்தான் எதிர்பாராத விதமாக ஜனாதிபதி பாராளுமன்றத்தைக் கலைத்தார். கோடிக் கணக்கான ரூபாவுக்கு எம்.பி.கள் விலை பேசப்பட்டமை, சபாநாயகரின் முன்-பின் முரணான கடிதங்களே இதற்கு முக்கிய காரணம் என ஜனாதிபதி, நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில் குறிப்பிட்டிருந்தாலும், இங்கு குறிப்பிடாத பிரதான காரணத்தை மக்கள் அறியாதவர்களல்லர்.
என்னதான் நிறைவேற்று அதிகாரத்தை குறைத்தாலும், நான்கரை வருடங்கள் வரை பாராளுமன்றத்தை கலைப்பதற்கு அரசியலமைப்பில் கட்டுப்பாடு இருந்தாலும், இவற்றையெல்லாம் தாண்டி விஷேட சந்தர்ப்பங்களில் பயன்படுத்தக் கூடிய தனக்கு சாதகமான இரு உறுப்புரைகளைப் பயன்படுத்தி அவர் பாராளுமன்றத்தை கலைத்தார். உண்மையிலேயே, புதிய பிரதமரை நியமித்ததை விடவும் மக்கள் மத்தியில் அதிகமாக விமர்சிக்கப்பட்ட நடவடிக்கையாக இதனை குறிப்பிட முடியும்.
ரணில் விக்கிரமசிங்கவை பதவியிலிருந்து அகற்றும் தனது ‘பிளான் ஏ’ வெற்றியளிக்காமையால் அடுத்தடுத்த திட்டங்களை (பிளான்களை) மைத்திரிபால சிறிசேன நடைமுறைப்படுத்தினார். அதாவது, ஒன்றைச் சரிசெய்வதற்கு இன்;னும் பலவற்றைச் செய்ய வேண்டிய ஒரு கௌரவப் பிரச்சினைக்கு அவர் ஆளானார் எனலாம். அதன்படி பாராளுமன்ற ஒத்திவைப்பும் (பிளான் பி) சரிப்பட்டு வராமையால் பாராளுமன்றத்தை கலைக்கும் ‘பிளான் சி’ இனை கையாண்டார் என்றால் மிகையில்லை.

அரசியலமைப்பின் சட்ட ஏற்பாடுகளைக் குறிப்பிட்டே ஜனாதிபதி பாராளுமன்றத்தைக் கலைத்தார். ஆனாலும், இதன் பின்னணிக் காரணங்களும் அரசியல் சூழமைவுகளும் இலங்கையின் அரசியல் பரப்பில் பெரும் கொதிநிலையை ஏற்படுத்தியது. ஜனாதிபதியின் தைரியம், அவரது உரிமை என சிலர் இவ்விடயத்தைப் பார்த்தனர். ஆனால், இது ஜனநாயக மீறல் என்ற கோஷங்கள் அதைவிட வலுவாக மேலெழுந்தன.

ஜனநாயக கோஷம்

ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவளிக்கும் முடிவை ஏற்கனவே அறிவித்திருந்த முஸ்லிம் காங்கிரஸ், மக்கள் காங்கிரஸ் கட்சிகளும் இந்த விடயத்தில் நீதிமன்றத்தை நாடி இருந்தமை சமூகத்தால் உற்றுநோக்கப்பட்ட விடயமாகும். இதனை ஜனநாயகத்திற்கான போராட்டம் என்று அவர்கள் வர்ணித்திருந்தனர். கடும்போக்கு வாக்குகள் மஹிந்த சார்பாக இருக்கின்ற போது அவரை எதிர்ப்பது மட்டுமன்றி ஜனாதிபதியின் அறிவிப்புக்கு எதிராக நீதிமன்றத்திற்கும் செல்வதும், நீண்டகால அடிப்படையில் முஸ்லிம்களுக்கு இடர்களை ஏற்படுத்தக் கூடிய நடவடிக்கையாக அமையலாம்.
அதனையும் மீறி முஸ்லிம் கட்சிகள் ஜனநாயகத்திற்காகத்தான் குரல் கொடுக்கின்றார்கள் என்றால் அது மிகவும் வரவேற்புக்குரியது. ஆனால், முன்னைய ஆட்சியிலும், இந்த ஆட்சியிலும் முஸ்லிம்களின் ஜனநாயகம் கேள்விக்குள்ளாக்கப்பட்ட போது, இனவன்முறைகள் மற்றும் மத ரீதியான ஒடுக்குமுறைகளுக்கு எதிராக ஏன் இவர்கள் நீதிமன்றம் செல்லவில்லை என்ற கேள்வி இப்போது முன்வைக்கப்படுகின்றது. அதேபோல், இன்று மஹிந்தவிற்கு ஆதரவாக அணிதிரட்டும் தேசிய காங்கிரஸ் தலைவர் அதாவுல்லா ஏன் முஸ்லிம்களுக்கு எதிராக அநியாயங்கள் இடம்பெற்ற போது அவ்விதம் செய்யவில்லை என்ற விமர்சனமும் ஒரு சிலரால் முன்வைக்கப்படுகின்றது. இக்கேள்விகள் இரண்டிலும் நியாயங்கள் இல்லாமலில்லை.
உயர்நீதிமன்றில் இந்த பாராளுமன்ற கலைப்புக்கு எதிராக 12 அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. கலைப்புக்கு ஆதரவாக 5 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. மனுக்களை பரிசீலனைக்கு எடுத்துக் கொண்ட உயர்நீதிமன்றம் கடந்த 13ஆம் திகதி, ஜனாதிபதியின் பாராளுமன்றத்தை கலைத்து தேர்தலை நடாத்தும் வர்த்தமானி அறிவித்தலுக்கு டிசம்பர் 7ஆம் திகதி வரை இடைக்கால தடையுத்தரவை வழங்கி உத்தரவிட்டது.

நம்பிக்கையில்லா தீர்மானம்

இந்த அடிப்படையில் கடந்த 14ஆம் திகதி பாராளுமன்றம் கூடிய போது அக்கிராசன உரையை நிகழ்த்துவதற்காக ஜனாதிபதி வந்திருக்காத நிலையில், புதிய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டு வரப்பட்டது. இப்பிரேரணைக்கு ஆதரவாக 122 உறுப்பினர்கள் ஒப்பமிட்டதையடுத்து, நம்பிக்கையில்லா பிரேரணை நிறைவேற்றப்பட்டது. இது பற்றிய ஆவணங்களை ஜனாதிபதிக்கு சபாநாயகர் அனுப்பினார்.
இதனை ஏற்றுக்கொண்டு தொடர்ந்தும் ரணில் விக்கிரமசிங்கவை பிரதமராக செயற்பட ஜனாதிபதி இடமளிக்கலாம் என்று எதிர்பார்கப்;பட்டது. ஆனால், 14ஆம் திகதி இடம்பெற்ற பாராளுமன்ற நடைமுறைகள் அரசியலமைப்பு, நிலையியற் கட்டளைகள், சம்பிரதாயங்களுக்கு முரணானதாக அமைந்துள்ளது என்று ஜனாதிபதி பதில் கடிதமொன்றை எழுதியதில் இருந்து, அந்த நம்பிக்கையில்லா பிரேரணையின் முடிவை அவர் ஏற்கவில்லை என்பது தெளிவானது.
இதேவேளை ஜனாதிபதி, ரணிலுக்கு அப்பதவியை கொடுக்கமாட்டார் என்றும் வேண்டுமென்றால் வேறு ஒருவருக்கு கொடுப்பது பற்றி சாதகமாக பரிசீலிக்கலாம் என அன்றிரவு தகவல்கள் வெளியாகியிருந்தன. ஆதலால், அவ்வாறு வேறு ஒருவருக்கு வழங்கும் அறிவிப்பை ஜனாதிபதி விடுக்கலாம், அல்லது பாராளுமன்றத்தை ஒத்திவைக்க நடவடிக்கை எடுக்கலாம், சர்வஜன வாக்கெடுப்பை முன்மொழியலாம், பிரதமர் மஹிந்த தனது பதவியை ராஜினாமாச் செய்யலாம் என்ற ஊகங்கள் வெளியாகியிருந்தன.

சபையில் அமளி

ஆனால். மறுதினம் 15ஆம் திகதி பாராளுமன்றம் கூடிய போது எவ்வித சலனங்களும் இன்றி சபைக்கு வந்திருந்த சர்ச்சைக்குரிய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ விஷேட உரையொன்றை நிகழ்த்தினார். சபாநாயகரின் நடவடிக்கைகக்கு தனது ஆட்சேபத்தை தெரிவித்த மஹிந்த, தேர்தலொன்றுக்கு அழைப்பு விடுத்து உரையை நிறைவு செய்தார். அதன்பின் எழுந்த ஐ.தே.க.வின் லக்ஷ்மன் கிரியெல்ல எம்.பி., பிரதமர் மஹிந்தவின் உரைமீது நம்பிக்கையின்மை தொடர்பாக வாக்கெடுப்பு நடத்த வேண்டுமென கோரினார்.
இதற்கமைய வாக்கெடுப்பை நடத்த முற்பட்ட வேளையில் சபையில் பெரும் அமளிதுமளி ஏற்பட்டது. வெளிநாட்டு தூதுவர்கள், இராஜதந்திரிகள் பார்த்துக் கொண்டிருந்த சபை அமர்வில் மக்கள் பிரதிநிதிகள் இவ்வாறு சண்டியர்கள் போல நடந்து கொண்டதை, நேரலையின் ஊடாக பார்;த்த நாட்டுமக்கள் வெட்கித் தலைகுனிந்தனர். அரசியலமைப்பை, அரசியலைத் தெரிந்தவர்களுக்கு அடிப்படை ஒழுக்கமும் பொறுமையும் தெரியவில்லை என்பது அன்று மீண்டும் நிரூபணமானது.
இலங்கையில் நடைபெற்று வரும் அடுத்தடுத்த சம்பவங்கள் அதிலும் குறிப்பாக இரண்டு நாட்கள் பாராளுமன்றத்தில் இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பில் உலக நாடுகள் கடுமையான தொனியில் கவலை தெரிவித்துள்ளன. இது இலங்கை ஜனநாயக குடியரசின் ஜனாதிபதிக்கும் பெரும் தர்மசங்கடமாகிப் போயுள்ளது எனலாம். அதனால் அவர் தனது பிடிவாதத்தில் இருந்து சற்று இறங்கி வந்திருப்பதாக தோன்றுகின்றது.
நம்பிக்கையில்லாப் பிரரேரணையில் முன்வைக்கப்பட்ட முதலாவது விடயத்தை தவிர்த்து, மற்ற விடயத்தை வாக்கெடுப்புக்கு விடுமாறும் பெயர் சொல்லி வாக்கெடுப்பை நடத்துமாறும் தன்னைச் சந்தித்த கட்சித் தலைவர்களிடம் கூறினார். அத்துடன், பாராளுமன்றத்தை ஒத்திவைப்பதில்லை என்றும், பாராளுமன்ற சம்பிரதாயங்களை மதிப்பதற்கும் அவர் உடன்பட்டார். அதன்படி, வெள்ளிக்கிழமை மீண்டும் வாக்கெடுப்பு இடம்பெற்றது. ஆனால், ஆளும் கட்சி எம்.பி.க்கள் மீண்டும் பாராளுமன்றத்தையும் சபா பீடத்தையும் போர்க்களமாக மாற்றியிருந்தனர். அதற்கிடையில் மிக தைரியமாக சபைக்கு வந்த சபாநாயகர், நம்பிக்கையில்லா பிரேரணை மீது நடத்திய இரண்டாவது வாக்கெடுப்பையும் ஜனாதிபதி ஏற்றுக் கொள்ளவில்லை. பாராளுமன்றம் என்ற உயரிய சபையில் எடுக்கின்ற தீர்மானங்கள் தொடர்பில் யாரிடமும் சமரசத்திற்குப் போகத் தேவையில்லை என்று சட்டம் அறிந்தோர் கூறி வருகின்ற நிலையில், முரண்பாடுகளை களையும் நல்லெண்ணத்துடன் இன்னும் பேச்சுக்கள் தெடர்ந்தவண்ணமுள்ளன.
உண்மையில், ஜே.வி.பி. சொன்னது போல, மஹிந்தவுக்கு எதிராகவும் ஜனாதிபதியின் வர்த்தமானி அறிவித்தலுக்கு எதிராகவும் எழும்பிய குரல்கள், ஜனநாயகத்திற்கான ஆதரவே தவிர ரணில் விக்கிரமசிங்கவுக்கான ஆதரவு கிடையாது. அந்தவகையில், மக்களுக்கு பிரச்சினைகள் வரும்போது ஒன்றுசேராத முஸ்லிம் தலைமைகள் இப்போது சேர்ந்திருப்பது ஜனநாயகத்திற்காக மட்டும்தானா என்று மக்கள் கேட்கின்றனர். அதேபோன்று, முஸ்லிம்களின் என்ன அபிலாஷையை முன்வைத்து மஹிந்தவுக்கு ஒரு தரப்பும் ரணிலுக்கு இன்னுமொரு தரப்பும் ஆதரவளிக்கின்றீர்கள் என்ற கேள்விக்கும் பதிலளிக்க வேண்டியுள்ளது.
அரசாங்கம் என்பது மக்களுக்கானது. ஆனால் நாட்டில் மக்களுக்கான ஆட்சி நடப்பதாக தெரியவில்லை. மாறாக, மைத்திரிபால சிறிசேனவின் பிடிவாதம், மஹிந்த ராஜபக்ஷவின் பதவி ஆசை, ரணில் விக்கிரமசிங்கவின் மேட்டுக்குடி மனநிலை ஆகியவற்றுக்கு இடையிலான அதிகார யுத்தமே இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றது. இதற்கிடையில் நாட்டுமக்கள் சிக்குண்டு நசுக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள். இந்நிலைமை முடிவுக்கு கொண்டு வரப்பட வேண்டும்.
வேட்டி பற்றிய கனவுகளோடு மக்கள் இருக்கையில், உங்களது அதிகாரச் சண்டைக்காக, இருக்கின்ற கோவணத்தையும் உருவி விடக் கூடாது.

– ஏ.எல்.நிப்றாஸ் (வீரகேசரி 18.11.2018)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here