பேசப்பட வேண்டிய பேரங்கள்

0
144

தமது நகர்வுகள் தொடர்பில் அரசியல்வாதிகளால் முன்வைக்கப்படுகின்ற காரணங்களையும், நியாயப்படுத்தல்களையும், கற்பிதங்களையும் சம்பந்தப்பட்ட அரசியல்வாதிகள் தங்களுடைய சாதனைகள் போலவும் அதனை மக்கள் ஏற்றுக் கொண்டு வி;ட்டது போலவும் எண்ணிக் கொள்கின்றனர். ஆனால் நியாயங்கள் வேறு – நியாயப்படுத்தல்கள் வேறு, காரணங்கள் வேறு -கற்பிதங்கள் வேறு என்பது மக்களுக்குத் தெரியும். 92 சதவீதத்திற்கும் அதிகமான எழுத்தறிவைக் கொண்ட ஒரு நாட்டில் வாழ்கின்ற முஸ்லிம்களுக்கு இந்தப் பகுத்தறியும் ஆற்றல் இல்லாதிருக்க முடியாது.

ஒரு தேர்தலுக்கும் அடுத்த தேர்தலுக்கும் இடைப்பட்ட காலத்தில் ஒவ்வொரு வாக்காளனிடம் இருந்தும் கருத்துக்களைப் பெறுவதற்கான எந்தவித கட்டமைப்பையும் கொண்டிராத முஸ்லிம் கட்சிகளும் ஏனைய பெரும்பான்மைக் கட்சிகளின் எம்;.பி.களும் தாம் எடுக்கின்ற தீர்மானங்களை ஒட்டுமொத்த மக்களின் தீர்மானமாகவே பிரதிவிம்பப்படுத்த முனைகின்றனர். சிலவேளைகளில் அவர்கள் அறியாமலேயே தோற்றும் போகின்றனர்.
முஸ்லிம் மக்களுக்காகவும் அவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்தும் செயற்படுகின்ற ஓரிரு அரசியல்வாதிகள் இருக்கின்றார்கள் என்று ஆறுதல் பட்டுக் கொண்டாலும், அநேகமான முஸ்லிம் கட்சிகளும் அரசியல்வாதிகளும் தம்மைச் சுற்றி இருக்கின்ற வட்டத்தையே ‘உலகம்’ என்று நினைத்துக் கொண்டிருப்பதாக தோன்றுகின்றது. ஏட்டுச்சுரக்காய்களை வைத்துக் கொண்டு விருந்து போடலாம் என்பதும், மாயாஜால வார்த்தைகளால் மக்களின் உள்ளத்தை நிரப்பிக் கொண்டு காலகாலத்திற்கும் ஏமாற்று அரசியல் செய்யலாம் என்று நினைப்பதும், இனிமேல் புதுவிதமான அரசியல் மடiமை ரகத்தையே சேரும்.

இருபது வருட பின்னடைவு

கடந்த 20 வருட முஸ்லிம் அரசியலில் முஸ்லிம்கள் உரிமைசார் அரசியலில் ஒரு உருப்படியான அடியைத்தானும் எடுத்து வைக்கவில்லை. அங்குலக் கணக்கான முன்னேற்றங்களே இடம்பெற்றிருக்கின்றன. தனித்துவ அடையாள அரசியலின் விளைநிலமாக இருக்கின்ற வடக்கு, கிழக்கில் மட்டுமன்றி இணக்க அல்லது சங்கம அரசியற் களமாக கருதப்படுகின்ற தென்னிலங்கை அரசியலிலும் இதுதான் யதார்த்தம் என்பதைச் சொல்லாமல் விட முடியாது.
தனித்துவ அடையாளம் என்ற கோட்பாட்டிற்கு அமைவாக ஆரம்பிக்கப்பட்ட முஸ்லிம் கட்சிகள் இன்று பெருந்தேசிய இணக்க அரசியலுக்குள் கரைந்து காணாமல் போய்க் கொண்டிருக்கின்றன என்பது கண்கூடு. “அஷ்ரப் அதைச் செய்தார்” “அதற்கு முன்னர் பதியுதீன் மஹ்மூத், பாக்கீர் மாக்கார், ஏ.சி.எஸ்.ஹமீத் போன்றோர் இவ்வாறான சாதனைகளை நிகழ்த்தினார்கள்” என்று பேசிக் கொண்டிருக்கின்றார்களே தாங்கள் என்ன செய்தார்கள் என்ற சுயவிசாரணையை நடத்தியதாக தெரியவில்லை.
முன்னைய அரசியல் தலைவர்களைச் சொல்லி இன்னும் பெருமை பேசிக் கொண்டிருக்கின்ற முஸ்லிம் கட்சித் தலைவர்களும் அமைச்சர்களாக இருந்தவர்களும் எம்.பி.க்களும், சண்டைபிடித்து தேசியப்பட்டியல் பதவி பெற்றவர்களும் எதனைச் சாதித்திருக்கின்றார்கள் என்று கேட்கத் தோன்றுகி;ன்றது.
முஸ்லிம்களுக்கு தனித்துவமான ஒரு அடையாளத்துடனான அரசியல் வழித்தடம் ஒன்று அவசியம் என்ற அடிப்படையிலேயே தனித்துவ கட்சிகள் தோற்றம் பெற்றன. ஆனால், இரண்டாவது சிறுபான்மையினமான முஸ்லிம்கள் அரசியல் ரீதியாக தனித்துச் செயற்படுவதன் மூலம் ஒப்பீட்டளவில் பெரிய நன்மைகளை அடைந்து கொள்வது நடைமுறைச் சாத்தியமற்றது என்பதை முன்னைய அரசியல்வாதிகள் கண்டுணர்ந்து கொண்டனர். அதனால், தனித்துவ அடையாள அரசியல் பின்னர் இணக்க அரசியலுக்குள் பிரவேசித்தது எனலாம்.

இணக்க அரசியல் என்பதன் மிகப் பிரதான ஆயுதம் அபிவிருத்தி அரசியல் அல்ல. மாறாக அதிலிருக்கும் ‘பேரம் பேசும் சக்தி’ ஆகும். அதனை மர்ஹ_ம் அஷ்ரப் ஓரளவுக்கு உயிர்ப்புடன் வைத்திருந்தார். வெட்டுப்புள்ளியைக் குறைத்தது போன்ற பல சாதனைகளை அவர் அதனூடாக நிகழ்த்திக் காட்டினார். ஆனால், அவருக்குப் பின்னர் முஸ்லிம் கட்சிகள் பேரம் பேசும் ஆற்றலை சமூகத்திற்காக பயன்படுத்தியது மிகக் குறைவு என்றே கூற வேண்டும். அப்படி பேரம் பேசலை மேற்கொண்டிருந்தால். அவ்வாறான அடிப்படையில் இலங்கை முஸ்லிம்களின் என்ன அபிலாஷை நிறைவேற்றப்பட்டிருக்கின்றது? என்ன சமூகச் சாதனை நிகழ்த்தப்பட்டிருக்கின்றது என்று கட்சித் தலைவர்கள் (அவர்களது கட்சிக்காரர்கள் அல்ல) பகிரங்கமாக பொது வெளியில் மக்களுக்கு கூற வேண்டும். அப்படி எதுவும் நடந்ததாகவும் நினைவில் இல்லை.

அநேகமாக, அரசியல்வாதிகளின் ‘நலன்களின்-மோதலே’ (கன்பிளிக்ட் ஒஃப் இன்ட்ரஸ்ட்) இதனைத் தீர்மானித்து வருவதாக குறிப்பிட முடியும். கிட்டத்தட்ட எல்லா அரசியல்வாதிகளும் தமது கட்சியின், பதவியின் அல்லது பைல்களின் நலனைக் கருத்திற் கொண்டு தீர்மானங்கள் எடுக்கப்பட்டதால் மக்களின் நலன்கள் இரண்டாந்தரமாக்கப்பட்டுள்ளன என்பதை விலாவாரியாகச் சொல்ல வேண்டியதில்லை. அந்த அடிப்படையில்,தனித்துவ அடையாள அரசியல் கோலம்குறைந்து கனகாலமாயிற்று. இணக்க அரசியலும் சோபை இழக்கத் தொடங்கிவிட்டது.

தவறவிட்ட வாய்ப்புக்கள்

மூன்று அல்லது நான்கு முகாம்களாக பிளவுபட்டு நின்று அரசியல் செய்கின்ற முஸ்லிம் கட்சிகளுக்கு பேரம்பேசலை மேற்கொண்டு, இந்த சமூகத்தின் அபிலாஷைகளை கட்டம் கட்டமாகவேனும் நிறைவேற்றுவதற்கு கடந்த இரு தசாப்தங்களில் பல சந்தர்ப்பங்கள் கிடைத்தன. அஷ்ரப் மரணித்ததற்கு உடனடுத்ததாகவும், 2005 இலிருந்து 2015 வரையிலுமாக பல தடவை ஆட்சிமாற்றங்கள் ஏற்பட்டன. நம்பிக்கையில்லாப் பிரேரணைகள், சட்டமூலங்கள், வரவு செலவுத் திட்டங்கள், அரசியலமைப்பு திருத்தங்கள், இடைக்கால அறிக்கைகள் என, பெருந்தேசியக் கட்சிகளுக்கு முஸ்லிம் கட்சிகளின் ஆதரவு அவசியமான பல சந்தர்ப்பங்கள் கிடைத்தன.
ஆனால், அவ்வாறான எந்த சந்தர்ப்பமும் முஸ்லிம் சமூகத்தின் நீண்டகால அபிலாஷைகள், தீர்க்கப்படாதுள்ள சிவில் சமூகப் பிரச்சினைகளை தீர்த்து வைப்பதற்காக பேரம்பேசுவதற்கான தருணமாக ஆக்கப10ர்வமான அடிப்படையில் பயன்படுத்தப்படவில்லை என்பது பெரும் கைசேதமாகும் (அப்படியேதும் இருந்தால் அதைப் பொது மக்களுக்கு கட்சிகள் கூற முடியும்) அமைச்சுப் பதவிகளும், பிரதி அமைச்சுப் பதவிகளும் எத்தனை தேசியப் பட்டியல் எம்.பி. தருவீர்கள், வேறென்ன வெகுமதி கிடைக்கும்? என்பதே பெரும்பாலும் பேரம் பேசப்பட்ட விடயமாக அரசியலரங்கில் பேசப்படுவதுண்டு.

உண்மையில், இவ்வாறான சந்தர்ப்பங்களில் பல ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டதாகவும் அதன் அடிப்படையிலேயே குறித்த ஆதரவு வழங்கப்பட்டதாகவும் ஓரிரு முஸ்லிம் கட்சிகள் அவ்வேளைகளில் வியாக்கியானம் கொடுத்தன. வேறு ஏதோ ரகசிய காரணம் ஒன்றை வைத்துக் கொண்டு, மக்களுக்கு ஏதாவது காரணம் ஒன்றை சொல்லியாக வேண்டும் என்பதற்காகவே இவ்வாறு கூறுகின்றார்கள் என அரசியல் நோக்கர்கள் கூறியபோதும் மக்கள் தமது தலைவர்களை நம்பினார்கள். தமது மீட்பர்கள், தம்முடைய அபிலாஷைகளை நிறைவேற்றித் தருவார்கள் என்று எண்ணினார்கள்.

ஒப்பந்தம் செய்தால்

இவ்வாறான சில சந்தர்ப்பங்களில் ஓரிரு உடன்படிக்கை மேற்கொள்ளப்பட்டது என்று ஊர்ஜிதமான தகவல்கள் அப்போது வெளியாகியிருந்தன என்பதையும் மறுப்பதற்கில்லை. அப்படியென்றால், ஆட்சியாளர்களுடன் உடன்படிக்கை செய்து கொண்ட அந்தக் கட்சி அல்லது அரசியல்வாதி ஒற்றைக்காலில் நின்று அதைப் பெற்றுக் கொடுத்திருக்க வேண்டும். இல்லாவிட்டால் ஆதரவை வாபஸ் பெற்றிருக்க வேண்டும். ஆனால், இலங்கை முஸ்லிம் அரசியலில் தேர்தல் நெருங்கும் காலங்களைத் தவிர, வாக்குறுதி மீறப்படுகின்ற காலங்களிலோ, முஸ்லிம்களின் ஜனநாயகம், உரிமை மீறப்படுகின்ற தருணங்களிலோ முஸ்லிம் கட்சிகளோ எம்.பி.க்களோ ஆதரவை விலக்கிக் கொண்டதாகவோ, பதவியை இராஜினாமாச் செய்ததாகவோ சரித்திரக் குறிப்புக்கள் எதுவும் கிடையாது.
இப்படி ஒரு நஞ்சுவட்ட அரசியல் கலாசாரத்தை உருவாக்கி விட்டு, இப்போது உடன்படிக்கை செய்து என்ன பலன்? எத்தனை முறை செய்திருக்கின்றோம், ஆனால் அவர்கள் அதை நிறைவேற்றி இருக்கின்றார்களா? என்ற தொனியில் அரசியல்வாதிகள் நம்மிடம் கேட்பதைக் காண்கின்றோம். இது ஆடத்தெரியாதவரின் மேடை என்றுதான் கூற வேண்டும்.
உண்மையாகவே வேறு எந்த வெகுமதியையும், பதவி பட்டங்களையும் முன்னிலைப்படுத்தாமல் ஒரு அரசியல் கட்சி அல்லது பலம்பொருந்திய முஸ்லிம் எம்.பிக்கள் தரப்பொன்று அரசாங்கத்துடன், பெரும்பான்மைக் கட்சியுடன் உடன்படிக்கை எதனையும் செய்து கொள்ளுமாக இருந்தால் அது நிறைவேற்றப்பட வேண்டும். அதுதான் அரசியல் பலம் என்பது! அவ்வாறு நடக்காவிட்டால் முஸ்லிம் அரசியல்வாதிகள் தமது ஆதரவை வாபஸ் பெற்றால், பதவியை இராஜினாமாச் செய்தால் ஆட்சியாளர்களுக்கு ஒரு பயம் வரும். ‘இவர்களை ஏமாற்றினால் நம்மை கவிழ்த்து விடுவார்கள’; என்று, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை கருதுவது போல் முஸ்லிம் கட்சிகளிடமும் ஜாக்கிரதையாக இருப்பார்கள்.
ஆனால், என்ன நடந்தாலும் போகமாட்டோம் என்பது போல அரசாங்கத்திலேயே சங்கமமாகி இருந்தால், அரசாங்கம் எந்த வாக்குறுதியையும் வழங்கிவிட்டு மிக லாவகமாக முஸ்லிம்களை ஏமாற்றிவிடும். இதுதான் இப்போது முஸ்லிம்களுக்கு நடந்து கொண்டிருக்கின்றது. ஆனால், ஒப்பந்தமே செய்யாமல் இருந்துவிட்டு நாம் ஒப்பந்தம் செய்தோம். ஆனால் அவர்கள் நிறைவேற்வில்லை என்று கூறுகின்ற அரசியல் நடிகர்களை எந்த வகைக்குள் உள்ளடக்குவது எனத் தெரியவில்லை.

தற்போதைய வாய்ப்பு

இந்தப் பின்புலத்தோடு, இலங்கையின் தற்போதைய அரசியல் சூழலை நோக்க வேண்டியிருக்கின்றது. இலங்கையில் (ஐ.தே.க. ஊடாக) பாராளுமன்ற உறுப்பினர்களைக் கொண்டுள்ள இரு பிரதான முஸ்லிம் கட்சிகளும், ஐ.தே.க.மற்றும் சுதந்திரக் கட்சியின் எம்;.பி.க்களான முஸ்லிம் அரசியல்வாதிகளும் ரணில் விக்கிரமசிங்கவுக்கு அல்லது மஹிந்த ராஜபக்ஷவிற்கு ஏன் ஆதரவளிக்கின்றார்கள் என்ற காரணகாரியத்தை, பேரம் பேசும் சக்தியை அடிப்படையாகக் கொண்டு ஆராய வேண்டியுள்ளது.
குறுக்குவெட்டாகப் பார்த்தால், இலங்கை முஸ்லிம்களின் அனுபவப்படி மஹிந்தவும், ரணிலும், மைத்திரியும் ஆட்;சியாளர்கள் என்ற வகையில் ஒன்றுதான். பேருவளையில் வந்தது இரத்தம் என்றால் திகணவில் வந்தது தக்காளிச் சட்னி அல்ல. திகணவில் உடைக்கப்பட்டது பள்ளிவாசல் என்றால் தென்னிலங்கையில் தாக்கப்பட்டது வெறும் கற்களும் சீமெந்தாலும் கட்டப்பட்ட கட்டிடங்களும் அல்ல. எல்லாம் ஒரே வலிதான். எனவே, ஓடோடிச் சென்று எந்த பெருந்தேசியத் தலைவரையும் காப்பாற்ற வேண்டிய எந்தத் தேவையும் சாதாரண முஸ்லிம் பொது ஜனங்களுக்கு கிடையாது. அதுபோலவே யாரையும் எதிரியாக்க வேண்டியதும் இல்லை.
இப்போது இலங்கையில் ஏற்பட்டுள்ள அதிகாரப் போரில் ஆட்சியை நிறுவுவதற்கு, பெரும்பான்மையை நிரூபிப்பதற்கு என்று எல்லா நகர்வுகளுக்கும் சிறுபான்மைக் கட்சிகளின் ஆதரவையே சிங்கள பெருந்தேசியம் நம்பியிருக்கின்றது. தாம் ஆட்சியில் இருந்த காலங்களில் முஸ்லிம்களின் அபிலாஷைகளை நிறைவேற்றவில்லை என்றாலும், அநியாயங்களுக்கு இடமளித்திருந்தாலும், ஐ.தே.கட்சியும் சுதந்திரக் கட்சியும் உதவி கேட்டு முஸ்லிம் கட்சிகளிடமே ஓடிவருவதை காண முடிகின்றது.
இந்நிலையில், இரு பிரதான முஸ்லிம் கட்சிகளும் பதவி கவிழ்க்கப்பட்ட முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவளிக்கும் நிலைப்பாட்டை அறிவித்துள்ளன. மறுபுறத்தில், எம்.பி.கள் எதுவுமில்லாத முஸ்லிம் கட்சி மஹிந்த ராஜபக்ஷவுக்குப் பின்னால் நிற்கின்றது. கட்சிகளின் முடிவுக்கு பல காரணங்களும் உள்ளன. ஆனால் அவை நியாயங்களா என்பது தர்க்கவியலுக்குரியது.
இரு முஸ்லிம் கட்சிகளும் நடுநிலை வகிப்பதில்லை என்ற முடிவுக்கு வந்துவிட்ட பிறகு, இரண்டில் ஒன்றை தேர்ந்தெடுத்தேயாக வேண்டியது தவிர்க்க முடியாதது. அந்தவகையில், ரணில் விக்கிரமசிங்கவை ஆதரிக்கும் முடிவை இரு கட்சிகளும் எடுத்திருக்கின்றன. அது வேறுவிடயம். ஆனால், என்ன கோரிக்கைகளை முன்வைத்து இந்த ஆதரவு வழங்கப்படுகி;ன்றது என்பதை மக்களுக்காக கேட்க வேண்டியிருக்கின்றது. அதற்காக மஹிந்தவை ஆதரிக்க வேண்டும் என்று கூறவில்லை.
இந்த சந்தர்ப்பத்தில், அதாவது ஐ.தே.க.வுக்கு ஆதரவளித்தல் எனும் புள்ளியில் முஸ்லிம் காங்கிரஸிற்கும் மக்கள் காங்கிரஸிற்கும் இடையில் ஏற்பட்டுள்ள உறவு இதற்கு முன்னரே முஸ்லிம்களுக்கு அநியாயங்கள் இழைக்கப்பட்ட போது, முஸ்லிம்களின் ஜனநாயகம் மீறப்பட்ட போது, இனக்கலவரங்கள் ஏற்பட்ட போது, முஸ்லிம்களின் வாக்குகள் அநியாயமாக பிரிந்தபோது ஏற்பட்டிருக்க வேண்டியது. என்றாலும், ஏதோ ஒருபுள்ளியில் சந்தித்திருக்கி;ன்றார்கள் என்பது மிகவும் பாராட்டத்தக்கதும் மகிழ்ச்சி;க்குரியதும் ஆகும்.

கோரிக்கைகளின் அடிப்படையில் இப்போது, இரு பெரும்பான்மைக் கட்சிகளுக்கும் சிறுபான்மைக் கட்சிகளின் ஆதரவு தேவைப்படுகின்றது. அதை அவர்கள் தமிழ், முஸ்லிம் கட்சிகளிடம் கோரியும் இருக்கின்றனர். வெளிச் சக்திகளின் ஊடுருவல், கருத்துவேற்றுமை போன்ற காரணங்களால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சிறு வெடிப்பைச் சந்தித்திருந்தாலும், தனது கொள்கையில் ஓரளவுக்கு உறுதியாக இருப்பதாகவே தெரிகின்றது.
மக்கள் விடுதலை முன்னணியைப் போல தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்திருந்தாலும் பிரதமராக ரணில் விக்கிரமசிங்கவை ஆட்சிக்கு கொண்டு வருவதற்கு ஆதரவாக வாக்களிப்பதற்கு இன்னும் முடிவெடுக்கவில்லை. அக்கட்சி சார்பாக வெளியிடப்படுகின்ற கருத்துக்களைப் பார்க்கும் போது, அவ்வாறு ரணிலை ஆதரவளிக்கும் முடிவை எடுத்தாலும், இனப் பிரச்சினை தீர்வு, வடக்கு-கிழக்கு இணைப்பு போன்ற நிபந்தனைகளை முன்வைத்து உடன்படிக்கை ஒன்றை மேற்கொள்ளும் சாத்தியமே இருக்கின்றது.
நிலைமை இப்படியிருக்க, முஸ்லிம் கட்சிகள் ஏன் ‘சும்மா’ தமது ஆதரவைத் தெரிவிக்க வேண்டும் என்ற நியாமான கேள்வி ஒன்று மேலெழுகின்றது. இதற்கு நன்றிக்கடன் என்று யாரும் கூறும் அளவுக்கு முஸ்லிம்களின் கடந்த கால அனுபவங்கள் இல்லை. இதனை ‘ஜனநாயகத்தை காப்பாற்றுதல்’ என்றும் கூற முடியாது. அப்படிக் கூறினால் கடந்தகாலத்தில் முஸ்லிம்களின் ஜனநாயகம் மீறப்பட்ட போது ஐ.தே.க. (சுதந்திரக் கட்சி) போன்ற கட்சிகள் அதனை எவ்வாறு கையாண்டன என்பதற்கும், அவ்வேளையில், முஸ்லிம் அரசியல்வாதிகள் இதே வேகத்துடன் செயற்பட்டார்களா என்ற துணைக் கேள்விகளுக்கும் பதிலளிக்க நேரிடும்.
எனவே, மேலே நாம் குறிப்பிட்டது போல பேரம் பேசுவதற்கு கிடைத்திருக்கின்ற ஒரு வாய்ப்பாகும். இதனை முஸ்லிம் கட்சிகள் மிகச் சிறப்பாக பயன்படுத்த வேண்டும் என்றே கூற விளைகின்றேன். அந்த வகையில், ஏதோ ஒரு கட்சி ரணில் விக்கிரமசிங்கவுடன் உடன்பாடு கண்டிருப்பதாக பேசப்படுகின்ற போதிலும்,. அதுமக்கள் சார்பு விடயங்களை உள்ளடக்கியதாக, பகிரங்மகாக மேற்கொள்ளப்படாதவிடத்து அதனை நம்பி. முஸ்லிம்கள் இன்னுமொருமுறை ஏமாற முடியாது.
ஒருவேளை அவ்வாறு ஏதும் செய்யப்பட்டிருந்தால் அதை வெளிப்படையாகக் கூற வேண்டும். அவ்வாறு நியாயங்கள் எதனையும் கூறாமையாலேயே தேவையற்ற கதைகள் மேலெழத் தொடங்குகின்றன என்பதை நினைவிற் கொள்ளவும்.
ஆக, அற்புதமான ஒரு வாய்ப்பை காலம் நமக்குத் தந்திருக்கின்றது. முஸ்லிம் கட்சிகள் சும்மா போய், வெற்றுக் காரணங்களுக்காகவும் அரசியல் இலாபங்களுக்காகவும் ஆதரவளிக்கக் கூடாது. முஸ்லிம்கள் ஒருபோதும் தமிழர்களைப் போல பெரிய தீர்வுகளை கோரப் போவதில்லை. தமது இன, மத கௌரவம், இருப்பு, அரசியல் உரிமை, சிவில் விவகாரங்கள் தொடர்பான அபிலாஷைகளே முஸ்லிம்களுக்கு இருக்கின்றன எனவே அவற்றை முன்வைத்து ஆதரவளிக்கும் அல்லாவிடின் ஆதரவளிக்காமல் விடும் முடிவை எடுக்க வேண்டும்.
வடக்கு முஸ்லிம்களுக்கு இருக்கின்ற ஹெக்டேயர் கணக்கான காணிப்பிரச்சினை, கிழக்கில் இருக்கின்ற ஒன்றரை இலட்சம் ஏக்கருக்கும் அதிகமான காணிகளின் பிரச்சினை, வட மாகாண முஸ்லிம்களின் மீள்குடியேற்றம், தென்னிலங்கை முஸ்லிம்களுக்கு நடக்கின்ற புறக்கணிப்புக்கள் மற்றும் இருப்புசார் நெருக்கடிகள், இனவாத ஒடுக்குமுறைக்கு எதிரான நடவடிக்கையும் அளுத்கமை, அம்பாறை, திகண கலவரங்களுக்கு முழுமையாக பரிகாரம் காணல், இனப் பிரச்சினை தீர்வு என்று ஒன்று கொடுக்கப்பட்டால் அதில் நியாயமான பங்கு, அரச நிறுவனங்களால் சுவீகரிக்கப்பட்டுள்ள காணிகளை விடுவித்தல், திருமலை, மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டத்தின் வட்டமடு போன்ற இடங்களில் உள்ள காணி முரண்பாடுகளை தீர்த்தல், நுரைச்சோலை வீட்டுத் திட்டத்தை பகிர்ந்தளித்தல், காணி அதிகாரங்களுடனான புதிய நி;ர்வாக மாவட்டம், முஸ்லிம்களின் மத அடையாளத்தை பாதுகாத்தல்…. உள்ளடங்கலாக இங்கு சொல்லப்படாத இன்னும் எத்தனையோ அபிலாஷைகள் முஸ்லிம்களுக்கு இருக்கின்றன.
இவைதான் உண்மையிலேயே பேசப்பட வேண்டிய பேரங்கள். இவற்றை முன்னிறுத்தியே தமது தீர்மானத்தை முஸ்லிம் கட்சிகள் எடுக்க வேண்டும்.இச் சந்தர்ப்பத்தில் இதில் ஒரு சிலவற்றையேனும் முன்வைத்து, அதன்படி ஒப்பந்தம் செய்து, அதனை மக்களுக்கு வெளிப்படையாகச் சொல்லி இந்த ஆதரவை அளிக்க வேண்டும். இரு கட்சிகளும் சேர்ந்து அதைச் செய்தால் இன்னும் பலமாக இருக்கும்;.இல்லாவிட்டால், பெருந்தேசியம் இன்னுமொரு தடவை முஸ்லிம்களின் தலையில் மிளகாய் அரைக்கும்.
வேறெந்த பொல்லாப்புமில்லை!

– ஏ.எல்.நிப்றாஸ் (வீரகேசரி 25.11.2018)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here