அந்த ஏழு நாட்களும் உயர்நீதிமன்ற தீர்ப்பும்

0
175

“எனது காதலி உங்களது மனைவியாகலாம். உங்களது மனைவி எனக்கு ஒருபோதும் காதலியாக முடியாது”.
1980களின் முற்பகுதியில் கே. பாக்கியராஜ் திரைக்கதை வசனம் எழுதி, இயக்கி, நடித்த அந்த ஏழுநாட்கள் திரைப்படத்தின் இறுதிக் காட்சியில் கதாநாயகன் தீர்க்கமாகச் சொல்லி விட்டு வெளியேறும் வார்த்தைகள்தான் இவை.
“இன்னும் ஏழு நாட்களுக்குள் நாட்டில் ஏற்பட்டிருக்கின்ற நெருக்கடி நிலைக்கு தீர்வு காண்பேன்” என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அறிவித்து, அந்தக் காலஅவகாசம் முடிவடையும் தறுவாயில், பாராளுமன்றக் கலைப்புக்கு எதிராக உயர்நீதிமன்றம் வழங்கியிருக்கின்ற தீர்ப்பு பற்றிய செய்தி கிடைத்தவுடன், ஏனோ பாக்கியராஜின் கிளைமேக்ஸ் வசனங்கள் ஞாபகத்திற்கு வந்து போகின்றன. அவ்வசனங்களை இலங்கை அரசியலில் எதற்கு உவமானமாகச் சொல்ல முடியும் என்பது, அரசியல் அறிவுள்ள வாசகர்களுக்கு புரியும்.
அந்த ஏழு நாட்கள் திரைக்கதையின் படி பாக்கியராஜ் காதலித்த பெண்ணை வேறொருவர் திருமணம் முடிக்கின்றார். முதலிரவிலேயே அவள் தற்கொலைக்கு முயற்சி செய்கின்றார். காரணத்தை அறிந்த கணவர், தனது மனைவியை அவளது முன்னாள் காதலனுடன் சேர்;த்து வைக்க முயற்சிக்கின்றார். உச்சக் கட்ட காட்சியில் இருவரையும் நேரெதிரே சந்திக்க வைத்து நீங்கள் சேர்ந்து வாழுங்கள் நான் விலகிக் கொள்கின்றேன் என்கிறார் ராஜேஷ். கதாநாயகனுக்கு அதுவிருப்பமில்லை.
எனவே வேண்டுமென்றே…அப்படியென்றால் தாலியை அகற்றுங்கள் என்கின்றார் கதாநாகயன். ஆனால் நடிகையான அம்பிகாவோ தனது தாலியைக் கழற்ற மறுக்கின்றார். கணவரும் சம்பிரதாயத்தை அறுத்தெறிய தயங்குகின்றார். ‘திருமண உறவுக்கு ஒரு சம்பிரதாயம் இருக்கின்றது சேர். அந்த சம்பிரதாயத்தை அறுத்தெறிந்து விட்டு வாழ முடியாது என்று தனது முடிவுக்கு காரணத்தை சொல்லி விட்டு, ஆரம்பத்தில் கூறிய வார்த்தைகளை கூறியவராக, பாக்கியராஜ் தனது பெட்டியுடன் தொலைதூரம் செல்கின்றார்.

விடாப்பிடி அரசியல்

அந்த ஏழு நாட்கள் திரைப்படத்தின் மேற்குறிப்பிட்ட மூன்று கதாபாத்திரங்கள் போல இலங்கை அரசியலின் பிரதான கதாபாத்திரங்கள் அமையவில்லை. தனது மனைவியின் உணர்வுகளைப் புரிந்து கொண்டு நெகிழ்ச்சியுடன் செயற்பட்ட கணவன் போலவோ, சம்பிரதாய வரண்முறைகளை மீறாத மனைவி போலவோ அல்லது காலநியதியை ஏற்றுக் கொண்டு விட்டுக் கொடுத்த கதாநாயகன் போலவோ நமது நாட்டின் அரசியல் கதாபாத்திரங்கள் அமையவில்லை.
ஆயினும் (பிந்திய சம்பவங்களின்படி), நீதிமன்றத் தீர்ப்பு அப்படியான ஒரு கதாபாத்திரத்தை உருவாக்கியது எனலாம். நீதிமன்ற தீர்ப்பின் பின்னர் யதார்த்தங்களைப் புரிந்தவராக, மஹிந்த ராஜபக்ஷ பிரதமர் பதவியில் இருந்து விலகி வெளியேறிச் செல்வது – ஏனோ ‘அந்த ஏழுநாட்கள்’ திரைப்படத்தின் இறுதிக் காட்சியில், சம்பிரதாய நியதிகளுக்காக தனது காதலியையும் அவரது கணவனையும் விட்டுச் செல்லும் பாக்கியராஜை நினைவுபடுத்திற்று.
நாட்டு மக்களுக்கு இந்த நெருக்கடிகள் வேண்டாம் நான் ஒதுங்கிக் கொள்கின்றேன், கரு ஜயசூரியவை அல்லது சஜித் பிரேமதாசவை நியமித்துக் கொள்ளுங்கள் என்று ரணில் விக்கிரமசிங்க நினைக்கவில்லை. நான்தான் இந்தப் பிரச்சினையின் துரும்புச் சீட்டாக இருக்கின்றேன் எனக்கு பதவியில்லாவிட்டாலும் பரவாயில்லை நாட்டில் ஸ்திரத்தன்மை வரட்டும் என்று மஹிந்த ராஜபக்ஷ ஒதுங்கிக் கொள்ளவில்லை. ரணில் செய்த தவறுகளால்தான் ஆத்திரத்தில் இப்படிச் செய்து விட்டேன். ஆனால் விளைவுகள் மக்களைத் தாக்குகின்றன என்ற அடிப்படையில் ஜனாதிபதி சிறிசேனவும் தனது பிடிவாதத்திலிருந்து இறங்கி வரவில்லை.
ஐக்கிய தேசியக் கட்சி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கும் இடையிலான அதிகாரப் போர், எதிர்காலத்தில் ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்ற கனவுடன் இருக்கின்ற பொதுஜனப் பெரமுணவின் உட்பிரவேசத்தையடுத்து மிகத் தீவிரமடைந்திருக்கின்றது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவே மஹிந்த ராஜபக்ஷவுக்கு பிரதமர் பதவியை வழங்கினாலும், எந்திரன் திரைப்பட ரோபோ போல, மஹிந்த, மைத்திரியின் பூரண கட்டுப்பாட்டுக்குள் இல்லை. இந்நிலையில், மூன்று கட்சிகளுக்கு இடையிலான அதிகார வெறி என்பது, இப்போது மைத்திரி – மஹிந்த – ரணில் ஆகியோருக்கு இடையிலான கௌரவ யுத்தமாக உருவெடுத்திருக்கின்றது.
இந்தப் பின்னணியில் நாட்டு மக்களின் நலன், நாட்டின் அரசியல், சமூக மற்றும் பொருளாதார ஸ்திரத்தன்மைகள் குறித்து பிரதான தலைமைகளோ ஆட்சியதிகாரத்திற்காக கயிறிழுப்பவர்களோ கவலைப்படுகின்ற மாதிரி தெரியவில்லை. இன்று ஆளுக்காள் குற்றம் சுமத்துகின்ற ஜனாதிபதிக்கும், ரணில் விக்கிரமசிங்கவுக்கும் ஆணை வழங்கினார்கள் என்பதை கடந்த மூன்று வருடங்களாக இருவருமே உணர்ந்து அதற்கேற்றாற்போல் வெளிப்படையாகவே செயற்பட்டார்கள் என்பதை அவர்களால் கூட அடித்துக் கூற முடியாத நிலையே காணப்படுகின்றது.
அதுபோல, இன்னும் ஆட்சிக் கனவுடன் இருக்கின்ற முன்னாள் ஜனாதிபதி என்ற வகையில் சிறுபான்மை மக்களின் உணர்வுகளை மஹிந்த தரப்பும் இன்னும் படித்து முடியவில்லை என்றே தோன்றுகின்றது. இந்தக் கட்டத்திலேயே உயர்நீதிமன்றம் கடந்த வியாழக்கிழமை மாலை வரலாற்று முக்கியத்துவமிக்க தீர்ப்பொன்றை அறிவித்திருக்கின்றது.

ஏகமனதான தீர்ப்பு

இலங்கையின் அரசியலமைப்பின் பிரகாரம், ஒரு பாராளுமன்றத்தின் காலம் நான்கு வருடங்களும் ஆறு மாதங்களும் முடிவடைவதற்கு முன்னர் அதனை கலைப்பதற்கு ஜனாதிபதிக்கு அதிகாரம் கிடையாது என்றும், அதன்படி இவ்வருடம் நவம்பர் 9ஆம் திகதி பாராளுமன்றத்தை கலைப்பதாக ஜனாதிபதி விடுத்த வர்த்தமானி அறிவித்தல் சட்டமுரணானது என்றும் பிரதம நீதியரசர் நளீன் பெரேரா தலைமையிலான ஏழுபேர் கொண்ட நீதியரசர்கள் குழாம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
இலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடிகளுடன் தொடர்புபட்ட மேலும் பல வழக்குகள் நிலுவையில் உள்ள போதிலும் கூட, சில விடயங்களுக்கு முடிவு கிடைப்பதற்கான ஒரு கதவை இந்த தீர்ப்பு திறந்து விட்டுள்ளது. இந்த தீர்ப்பின்படி, நவம்பர் 09ஆம் திகதியிடப்பட்ட 2096ஃ70ஆம் இலக்க வர்த்தமானி அறிவித்தல் இரத்தாகியுள்ளதுடன், அத்திகதிக்கு முன்பிருந்த பாராளுமன்றம் மீண்டும் நடைமுறைக்கு வந்திருக்கின்றது.
இவ்வாறு பாராளுமன்றம் கலைக்கப்பட்டதால் தமது அடிப்படை உரிமை மீறப்பட்டுள்ளதாக சமர்ப்பிக்கப்பட்ட பல மனுக்கள் மீதான வழக்கின் மேற்படி தீர்வு அறிவிக்கப்பட்டுள்ளமை ஜனநாயகம் மற்றும் நீதியின் ஆட்சி மற்றும் நீதித்துறையின் சுயாதீனம் என்பவை பற்றிய நம்பிக்கையை பரவலாக பொதுமக்களிடம் ஏற்படுத்தியிருக்கின்றது. அத்துடன், நியாயம் என்பது நிறைவேற்றதிகாரத்திற்கு எதிரானதாக இருந்தாலும் அதனை அடித்துச் சொல்வதற்கு நீதியரசர்கள் தைரியம் பெற்றிருப்பதையும் எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது.
இந்த நாட்டில் உள்ள மூவின மக்களும் குறிப்பாக முஸ்லிம்களும் தமிழர்களும் என்ன நினைக்கின்றார்கள், அவர்கள் எவ்வாறான அரசியற் சூழலை வேண்டி நிற்கின்றார்கள் என்ற கவலை முஸ்லிம், தமிழ் மற்றும் சிங்கள அரசியல்வாதிகளில் 99 சதவீதமானோருக்கு கிடையாது. அவர்கள் தமது ‘கல்லாப் பெட்டிகளிலும்’ ‘அரசியல் வியாபாரத்திலுமே’ குறியாக இருக்கக் காண்கின்றோம்.

முஸ்லிம்களின் நிலை

ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும் பௌத்த சிங்கள மக்கள் பாதிக்கப்படப் போவதில்லை. அதேபோல் தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஓரளவுக்கேனும் காரியம் சாதிப்பதில் குறியாக இருக்கின்றது. இந்த முறை ரணில் விக்கிரமசிங்க மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு விடயத்திலும் ஏதோ எழுத்து மூல உடன்பாடுகள் எட்டப்பட்டதாக தமிழ் எம்.பி. ஒருவர் கூறியிருக்கின்றார். அப்படியாயின் தமிழ் சமூகமும் தப்பிப் பிழைத்துவிடலாம். ஆனால் யார் ஆட்சிக்கு வந்தாலும் அதிகமாக பாதிக்கப்படப் போவது மூன்றாவது பெரும்பான்மையினமான முஸ்லிம்கள்தாம். இதற்கு காரணம் முஸ்லிம் அரசியல்வாதிகளின் போக்காகும்.
தாம் சார்ந்து நிற்கின்ற பெருந்தேசியக் கட்சிக்கு முட்டுக் கொடுத்துக் கொண்டு, துதிபாடிக் கொண்டு இருக்கின்ற முஸ்லிம் கட்சிகள் மற்றும் முஸ்லிம் அரசியல்வாதிகளின் பண்புதான் முஸ்லிம்களின் அபிலாஷைகள் நிறைவேறாமல் போனதற்கு அடிப்படைக் காரணமாகும். தமிழ் தேசியக் கூட்டமைப்பு போல சந்தர்ப்பத்தை பயன்படுத்தி முஸ்லிம்களின் உரிமைகள், அபிலாஷைகள் ஒன்றைத்தானும் நிறைவேற்றிக் கொள்ள முஸ்லிம் கட்சிகள் இம்முறையும் எழுத்துமூல உடன்பாடு கண்டதாக தெரியவில்லை. ஆக மொத்தத்தில் இம்முறையும் முஸ்லிம்கள் கறிவேப்பிலைதான்.
மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக்காலத்தில் அதாவுல்லாவும், றவூப் ஹக்கீமும், றிசாட் பதியுதீனும் அந்த ஆட்சியாளரை சரிகண்டு பல நகர்வுகளுக்கு ஆதரவளித்ததுடன் அதற்கு காரணங்களையும் சொன்னார்கள். அதேபாணியிலேயே இன்று ஜனநாயகம் என்ற அடிப்படையில் இரு பிரதான முஸ்லிம் கட்சிகளும் ரணில் விக்கிரமசிங்கவை எந்த நிபந்தனையுமின்றி ஆதரிக்கின்றன. தேசிய காங்கிரஸ் தலைவர், மஹிந்த ராஜபக்ஷவுக்கு சார்பாக கடிதம் எழுதுகின்றார்.
முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகள் இடம்பெற்ற போது நிறைவேற்று அதிகாரத்தை மஹிந்த ராஜபக்ஷவோ அல்லது இப்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவோ இந்தளவுக்கு உச்சமாக பயன்படுத்தவில்லை. அவ்வாறே பாதுகாப்பு அமைச்சராக இருந்த ரணில் விக்கிரமசிங்க இன்று ஜனநாயகம் பற்றிப் பேசுகின்றார் என்றாலும், முஸ்லிம்களின் ஜனநாயகத்தையும் இன, மத உரிமையையும் நிலைநாட்டுவதற்கு இந்தளவுக்கு எம்.பி.க்களின் ஆதரவுப் பலத்தை நாடியவருமல்ல. சுருக்கமாக சொன்னால், பெருந்தேசிய அரசியலிலும்; முஸ்லிம் அரசியலிலும் இருக்கின்ற ‘சுளகுகள் எல்லாம் தனக்கு தனக்கென்று வரும்போது படக்குபடக்கென’ அடித்துக் கொள்வதைக் காண்கின்றோம்.
சரியாகப் பார்த்தால் இந்த அரசியல் அதிகாரப் போர் என்பது நாட்டு மக்களின் நலனை நாடுகின்ற செயற்பாட்டாளர்களின் பார்வையில் உண்மையில் ஒரு தர்ம யுத்தம் என்றே சொல்ல வேண்டும். இந்நிலைமையில் இலங்கையின் அரசியலமைப்பிற்கு தீர்ப்பிற்காக வியாக்கியானம் செய்யும் நியாயாதிக்கம் உயர்நீதிமன்றத்திற்கே உள்ளதென சட்டமறிந்தோர் கூறுகின்றனர். அந்த அடிப்படையில், உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு யாருக்கு சந்தோசத்தை, யாருக்கு வயிற்றுவலியை ஏற்படுத்தியிருந்தாலும் அதை விமர்சிக்க முடியாது. அது நீதிமன்றத்தை அவமதிக்கின்ற குற்றமாகக் கூட அமையலாம்.

எழும் கேள்விகள்

எனவே, நீதிமன்றத்தின் தீர்ப்பை நாம் ஏற்றுக் கொள்கின்றோம். இருப்பினும் அந்த புள்ளியிலிருந்து பல கேள்விகள் எழுகின்றன. அதாவது, அரசியலமைப்புக்கு அமையவே பாராளுமன்றத்தை கலைத்துள்ளதாக ஜனாதிபதியும் முன்னாள் பிரதமரும் கூறிவந்தனர். அரசியலமைப்பின் மொழிமெயர்ப்பு; பற்றியெல்லாம் பெரும் விளக்கங்கள் கொடுக்கப்பட்டுக் கொண்டிருந்தன.
ஆனால் கடைசியில் அரசியலமைப்பின்படி ஜனாதிபதி செயற்படவில்லை என்று உயர்நீதிமன்றம் தீர்ப்பெழுதியிருக்கின்றது. வழக்கமாக உயர்நீதிமன்ற நீதியரசர் குழாத்தின் தீர்ப்புக்கள் 4இற்கு 3 அல்லது மூன்றிற்கு 2 என்ற அடிப்படையிலேயே அதிகமாக எட்டப்படுவதுண்டு. ஆனால் இந்த வழக்கில் நீதியரசர்கள் குழாத்திலிருந்த 7 நீதியரசர்களும் ஒருமித்த நிலைப்பாட்டை எடுத்து, இது அரசியலமைப்பு முரணான நடவடிக்கை என தீர்த்திருக்கின்றனர் என்பது கவனிப்பிற்குரியது.
அப்படியாயின் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் (மற்றும் மஹிந்த ராஜபக்ஷவின்) சட்ட ஆலோசர்கள் அவரை பிழையாக வழிநடாத்தியிருக்கின்றார்களா என்ற கேள்விக்கும், இலங்கையின் அரசியலமைப்பை உயர் மட்டத்தில் இருக்கின்ற சட்டமறிந்தோரே விளங்கிக் கொள்ளாதநிலையில் சாதாரண மக்களின் நிலை என்ன என்பதும் நம்முன்னே விரிகின்ற வினாக்களாகும்.
எது எப்படியிருப்பினும், உயர்நீதிமன்றத் தீர்ப்பின்படி செயற்படுவதே இப்போதிருக்கின்ற ஒரேயொரு தெரிவாகும். அப்படிப் பார்த்தால், பாராளுமன்றம் வெள்ளிக்கிழமையிலிருந்தே பழைய நிலைக்கு திரும்பியிருக்கின்றது. பாராளுமன்றம் கலைத்தது தவறு என்பதால், வர்த்தமானி வெளியிடப்பட்டதில் இருந்து தீர்ப்பு அறிவிக்கப்பட்ட காலம் வரைக்கும் பாராளுமன்றத்தில் இடம்பெற்ற நடைமுறைகள், பிரேரணை நிறைவேற்றங்கள் சட்ட அந்தஸ்துடன் ஏற்றுக் கொள்ளப்பட வேண்டிவரும் என்று விடமறிந்தோர் சுட்டிக்காட்டுகி;ன்றனர்.
மஹிந்த ராஜபக்ஷ பிரதமர் பதவியை வகிப்பதற்கு எதிரான வழக்கின் தீர்ப்பு அறிவிக்கப்படவில்லை. ஆயினும் பாராளுமன்றக் கலைப்பு சட்டமுரண் என அறிவிக்கப்பட்டுள்ளதாலும் பெரும்பான்மைப் பலத்தை கொண்டிருக்கின்ற ஒருவரை நியமிப்பதே சம்பிரதாயமாக இருப்பதாலும் ரணில் விக்கிரமசிங்கவை மீண்டும் பிரதமராக நியமிக்க வேண்டும் என்று ஐ.தே.முன்னணி ஜனாதிபதியை நோக்கி கோரிக்கை விடுத்துள்ளது. அதுவே இப்போது நடந்திருக்கின்றது.
ஜனாதிபதியின் கருத்து
ஆனால், ரணில் விக்கிரமசிங்கவை பிரதமாராக நியமிக்கவே மாட்டேன் மீPண்டும் ஒரு தடவை பழைய பல்லவியை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சொல்லியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மஹிந்த ராஜபக்ஷவை நியமித்ததும் தவறு என்றும் நீதிமன்றம் உத்தரவிடும் சாத்தியமிருக்குமாயின், இப்போது வழங்கப்பட்டுள்ள தீர்ப்பின் வழிசென்று, மீண்டும் பிரதமராக ரணில் விக்கிரமசிங்கவை அல்லது அந்தக் கட்சியைச் சேர்ந்த ஒருவரை நியமிக்க ஜனாதிபதி முன்வருவராயின் இன்னும் அவர்மீதான மதிப்புக்குறைவதை தவிர்த்துக் கொள்ளக் கூடியதாக இருக்கும். அதனை உணர்ந்தே அவர் மீண்டும் ரணில் விக்கிரமசிங்கவை பதவியில் அமர்த்தியுள்ளார்.
ஆனால் இவ்விடத்தில் ஒன்றைக் கவனிக்க வேண்டும். அதாவது நான்கரை வருடங்களுக்கு முன் பாராளுமன்றத்தை கலைத்தமை அரசியலமைப்பு முரணானது என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளமை, நீதி இன்னும் உயிர்ப்புடன் இருப்பதை வெளிக்காட்டுவதுடன் ஜனநாயகத்திற்கு கிடைத்த வெற்றி என்றும் கருத முடியும். ஆயினும், ரணில் விக்கிரமசிங்கவோ ஐக்கிய தேசியக் கட்சியோ நீதியான, ஜனநாயக பூர்வமான கட்சி என்பது இத்தீர்ப்பின் அர்த்தமல்ல.
ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சியிலிருந்த போதே யாழ்ப்பாண நூலகம் எரிக்கப்பட்டது, வடக்கில் இருந்து முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டனர், பள்ளிவாசல்கள் படுகொலைகள் இடம்பெற்றன. ரணில் விக்கிரமசிங்க அதிகாரத்தில் இருந்த வேளையில்தான் அண்மையில் திகண கலவரங்களும் நடந்தேறின. எனவேää சுதந்திரக் கட்சியைப் போலவே ஐ.தே.க.வும் முற்றுமுழுதாக சிறுபான்மையினரின் ஜனநாயகத்தை பாதுகாக்கும் கட்சியல்ல.
நிலைமை இவ்வாறிருக்க, உயர்நீதிமன்றத்தின் சுயாதீனத்தில் தாக்கம் செலுத்தாமல் செயற்பட்டமைக்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை அதே ஜனநாயகத்தின் பெயரால் பாராட்ட வேண்டும். உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு அவர் மதிப்பளித்துச் செயற்பட வேண்டும் என்பதுடன், மறுபுறுத்தில் ரணிலை நியமிக்கமாட்டேன், அவர் நாட்டுக்கு பொருத்தமற்றவர் என்று மைத்திரி தொடர்ச்சியாக கூறி வருகின்ற கருத்தின் உள் அர்த்தத்தையும் பாரதூரத்தையும் ஆராய்ந்து பார்க்க வேண்டும். இது விடயத்தில் உண்மைகண்டறியும் ஆய்வொன்றை நாட்டு மக்கள் மேற்கொள்ள வேண்டியுள்ளது.

உண்மை கண்டறிதல்

இலங்கையின் அரசியலமைப்பில் ஜனாதிபதிக்குப் பிடித்தவர், அவரது நன்மதிப்பைப் பெற்றவர் ஒருவரே பிரதமராக நியமிக்கப்பட முடியும் என்று எங்காவது குறிப்பிடப்பட்டுள்ளதாக அறிய முடியவில்லை. அந்த அடிப்படையில் இந்தத் தீர்ப்பை மதிப்பதுடன், பிரதமர் பதவி தொடர்பான நீதிமன்ற தீர்ப்பின் பிரகாரமும் செயற்பட வேண்டிய தார்மீக கடமையை ஜனாதிபதி போன்றோர் கொண்டிருக்கின்றனர். அதனை ஜனாதிபதி வேறுவழியில்லாமல் போன கடைசிக் கட்டத்திலாவது செய்திருக்கின்றார்.
அதேபோன்று இப் பிரச்சினையை தீர்ப்பதற்கு ரணில் விக்கிரமசிங்க விட்டுக் கொடுப்பை செய்ய வேண்டிய நிலைமை ஏற்படும் போது அந்த நெகிழ்ச்சிப் போக்கை அவரும் கடைப்பிடிக்க வேண்டும். அந்த வகையில் வேறு சில ஆட்சியாளர்கள் போல தான் பதவியாசை பிடித்தவன் இல்லை என்பதை உலகுக்கு காட்டுவதற்காகவேனும் அவர் அக் கட்சியில் இருக்கின்ற வேறு ஒருவருக்கு பிரதமர் பதவி கிடைக்க (எதிர்காலத்திலாவது) வழிவிட்டுக் கொடுக்கலாம். ஏனென்றால், நாட்டில் ஏற்பட்டுள்ள நிலைமைகளுக்கு ஜனாதிபதி மற்றும் மஹிந்த ராஜபக்ஷ போன்றோரைப் போலவே ஐ.தே.க. தலைவருக்கும் சமபங்கு இருக்கின்றது என்பதை மறுக்க முடியாது.
ஓக்டோபர் 26ஆம் திகதி வெள்ளிக்கிழமை, புதிதாக மஹிந்த ராஜபக்ஷவை பிரதமராக நியமித்தன் மூலம் நாட்டின் அரசியலில் அடுத்தடுத்து பெரும் குழப்பங்கள் ஏற்பட்டன. இந்த நாட்டின் பிரதமராக பதவி வகிக்க ரணில் தகுதியற்றவர் என்ற அடிப்படையிலேயே ஜனாதிபதி அப்படியான ஒரு தீர்மானத்தை மேற்கொண்டிருந்தார். அந் வெள்ளிக்கிழமை ஜனாதிபதி மேற்கொண்ட இரவுநேர மூலோபாய புரட்சியின் தொடர் நிகழ்வான இழுபறிகளுக்கு தீர்வாக ஏதாவது அபூர்வம் நடந்து விடாதா என மக்கள் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் எதிர்பார்த்து ஏமாற்றமடைந்தனர்.
இப்பின்னணியில் இலங்கையின் அரசியல் களம் சூடுபிடித்திருந்த நிலையில், இன்னும் ஏழு நாட்களுக்குள் இப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதாக ஜனாதிபதி அறிவித்தார். அதன்பிறகு அவர் சில நடவடிக்கைகளை எடுத்திருந்தார் என்பது உண்மையே ஆனாலும் அது தீர்வுக்கு நேரடிக் காரணமாக அமையவில்லை. இதற்கு சமாந்திரமாக, உயர்நீதிமன்றம் சுமார் பல நாட்களாக மேற்படி மனுக்கள் மீதான பரிசீலனை, விசாரணைகளை மேற்கொண்டு நாட்டில் இப்பிரச்சினை தொடங்கி 47ஆவது நாளில், தீர்ப்பை அறிவித்திருக்கின்றது. எனவே, எல்லோரும் அதனை மதித்து செயற்படுவதே பக்குவப்பட்ட அரசியலுக்கு அழகாகும்.
ஆனபோதும், இலங்கையில் அரசியல் குழப்பங்களும் அதிகார இழுபறிகளும் நீதிமன்ற தீர்ப்பினாலோ அல்லது விட்டுக் கொடுப்புக்களின் மூலமாகவோ, அடுத்த தேர்தல் வரைக்கும் முடிவுக்கு வரப் போவதில்லை என்பது வேறுகதை!

– ஏ.எல்.நிப்றாஸ்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here