ஏறாவூர் பொதுச்சந்தை நிர்மாணப் பணிகளை அலி சாஹிர் மௌலானா தலைமையில் தொடர ஹக்கீம் பொறுப்பளிப்பு.

0
100

(எஸ்.எம்.எம்.முர்ஷித்)

ஏறாவூர் நவீன சந்தைக்கட்டட பணிகளை தொடர்ந்து முன்னெடுப்பதற்கான பொறுப்புக்கள் நகர திட்டமிடல் -நீர்வழங்கல் மற்றும் உயர் கல்வி அமைச்சரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரவூப் ஹக்கீம் அவர்களினால் முஸ்லிம் காங்கிரஸின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் சமூக வலுவூட்டல் இராஜாங்க அமைச்சருமான அலி சாஹிர் மௌலானா அவர்களிடம் அளிக்கப்பட்டுள்ளதுடன் திட்டத்தை முழுமை படுத்த தேவையான மேலதிக நிதியை சமூக வலுவூட்டல் அமைச்சில் இருந்தும் பெற்று கொள்ளுமாறும் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

இதன் பிரகாரம் அடுத்த கட்ட நிர்மாண பணிகளை மேற்கொள்வது தொடர்பிலும் அதில் உள்ள குறைபாடுகளை நிவர்த்திப்பது தொடர்பிலுமான விஷேட உயர் மட்ட கலந்துரையாடல் சமூக வலுவூட்டல் அமைச்சில் இராஜாங்க அமைச்சர் அலி ஸாஹிர் மௌலானா தலைமையில் இடம்பெற்றது.
இதன்போது நகர திட்டமிடல் நீர்வழங்கல் மற்றும் உயர்கல்வி அமைச்சின் மேலதிக செயலாளர் (அபிவிருத்தி) நபீல், மற்றும் அமைச்சின் திட்டமிடல் பணிப்பாளர்கள், பொறியியலாளர்கள், விடயத்துக்கு பொறுப்பான அதிகாரிகள், அரச பொறியியல் கூட்டுத்தாபனத்தின் பிரதம பொறியியலாளர், மேலதிக பணிப்பாளர், திட்ட வடிவமைப்பாளர், தொழிநுட்ப அதிகாரிகள், கட்டடத் திணைக்களத்தின் மாகாண பணிப்பாளர் பொறியியலாளர் சந்திர மோகன் உட்பட பல்வேறு முக்கிய அதிகாரிகளும் கலந்து கொண்டிருந்தனர்.

இதன்போது ஏறாவூர் பொதுச்சந்தை கட்டட நிர்மாண பணிகளை உடனடியாக ஆரம்பித்து எதிர்வரும் ஒக்டோபர் மாதத்திற்குள் மக்களுக்கு கையளிக்க நடவடிக்கை எடுப்பது என தீர்மானிக்கப்பட்டதுடன்இ 2016 திட்ட மதிப்பீட்டறிக்கையின் பிரகாரம் 2019இல் திட்டத்தை தொடர்ந்து முன்னெடுப்பதில் உள்ள நிர்வாக சிக்கல்களை தவிர்க்கும் பொருட்டு மீளமைக்கப்பட்ட புதிய மதிப்பீட்டறிககையை ஒரு வாரத்திற்குள் சமர்ப்பிக்க வேண்டும் என பணிப்புரை விடுக்கப்பட்டதுடன், ஏற்கனவே செய்து முடிக்கப்பட்ட வேலைகளுக்காக நிலுவையில் உள்ள 24மில்லியன் ரூபாய் நிதியை உடனடியாக திறைசேரியில் இருந்து பெற்று வழங்கும் பொறுப்பை இராஜாங்க அமைச்சர் அவர்கள் ஏற்றுக் கொண்டார்கள்.

அத்துடன் தற்போதைய வரைபின் பிரகாரம் ஏற்கனவே தொழிலில் ஈடுபட்ட 44வர்த்தகர்களுக்கு கடைகள் இல்லாமல் போகும் அபாயம் இருப்பதாக ஏறாவூர் பொதுச்சந்தை முஸ்லிம் வர்த்தகர்கள் நலன்புரிச்சங்கத்தினால் விடுக்கப்பட்ட கோரிக்கையை கருத்திற் கொண்டு குறித்த கட்டட தொகுதியினால் எந்த ஒரு வர்த்தகரும் பாதிக்கப்படாத வண்ணம் நான் ஏறாவூர் நகர சபை தவிசாளராக இருந்த நேரத்தில் ஏறாவூர் பொதுச்சந்தை கட்டட நிர்மாணத்திற்காக தயாரித்து வழங்கிய கட்டட வடிமைப்பையும் கருத்திற் கொண்டு யாருக்கும் அநீதி இழைக்கப்படாத வகையில் சந்தைத்தொகுதியை அமைப்பதற்கான மதிப்பீட்டறிக்கையை வழங்குமாறும் அதற்கான மேலதிக நிதியை எமது சமூக வலுவூட்டல் அமைச்சுக்குள் கிழக்கு மாகாண அபிவிருத்திக்கான பண ஒதுக்கீடுகள் இருப்பதால் -அதற்குள் இச்செயற்திட்டத்தை உள்வாங்கி மேலதிக நிதியை வழங்குவதாகவும் ஏறாவூர் மக்களதும் வியாபாரிகளதும் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் பொருட்டு சந்தைக்கட்டட தொகுதியை முழுமைப்படுத்துமாறும் இதன்போது பணிப்புரை விடுக்கப்பட்டது.

கடந்த காலங்களில் குறித்த சந்தை கட்டட நிர்மாண பணிகளின் போது ஏற்பட்ட கால விரயங்கள், அரசியல் ரீதியான இழுத்தடிப்புக்கள் தொடர்ந்தும் ஏற்படா வண்ணம் குறித்த பணியை துரிதமாக சிறப்புடன் முன்னெடுத்து எதிர்வரும் ஒக்டோபர் மாதத்திற்குள் பூரணமாக்கி ஏறாவூர் பொதுச்சந்தையை பிரதேசத்தின் வியாபார கேந்திர நிலையமாக மாற்றி – வலுவிழந்து நிற்கும் பொருளாதாரத்தை கட்டி எழுப்பிட அனைவரும் ஒத்துழைக்குமாறு இராஜாங்க அமைச்சர் அலி சாஹிர் மௌலானா அவர்களால் வேண்டுகோள் விடுக்கப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here