மீண்டுமொரு இனக்கலவரம் தேவைதானா…..?

0
124

முப்பது வருட கால யுத்தம் முடிவடைந்து தற்போதுதான் ஒரு தசாப்தம் பூர்த்தியாகிய நிலையில் மீண்டும் கிழக்கிலங்கையில் இன்னுமொரு இனக்கலவரத்தை உண்டுபண்ணுவதற்கு அமைச்சுப் பதவிகளுக்காகவும்இசொகுசு வாழ்க்கைக்காகவும் தனது சமூகத்தையே காட்டிக் கொடுத்த கருணா அம்மானின் அடியாட்கள் முஸ்தீபுக்களை மேற் கொண்டு அதில் சிலதில் தோல்வியும் கண்டுள்ளார்கள்.

அதற்கு உதாரணம் தான் நேற்றைய தினம் கருணா அம்மானின் அடியாட்களால் மேற் கொள்ளப்பட்ட ஹர்த்தால் தினத்துக்கு நடு நிலையாக சிந்திக்க கூடிய தமிழ் சகோதரர்கள் முதல் கொண்டு முஸ்லிம்களும் அவர்களின் கடையடைப்பு பேரணிக்கு செவிசாய்க்காது தங்களுடை வியாபாரத்தளங்களை வழமை போன்று நேற்றைய தினமும் கொண்டு சென்றுள்ளதானது இனவாதத்தை கக்கும் சிலருக்கு சிறந்த பாடமாகும்.

மக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தி தமிழ்,முஸ்லிம் மக்களிடத்தில் பிளவுகளை உண்டு பண்ணி அதன் மூலம் இவர்கள் அடைய முனைவதுதான் என்ன….? தாங்கள் செய்த கொலைகளையும்,கொள்ளைளையும் மறைப்பதற்காக தற்போதைய கிழக்கு ஆளுனர் பதவியை காரணம் காட்டி அரசாங்கத்திற் கெதிராக மக்களை திசை திருப்பி அடுத்த முறை ஜனாதிபதித் தேர்தலிலாவது மஹிந்த ராஜபக்சவை வெற்றி பெற வைக்க வேண்டும் என்பதே இவர்களின் பகல் கனவே அன்றி வேறில்லை.

தனது சுயலாபத்துக்காக அப்பாவி தமிழ் மக்களை ஏவி விட்டு எரியும் நெருப்பில் எண்ணையை ஊற்றப் பார்க்கிறார். கருணா அம்மான் இவர் யார் அரசியலில் இவரின் வகிபாகம் என்ன…? அவரால் தமிழ் மக்கள் அடைந்த பலன் தான் என்ன…? என்பதை தற்போதாவது சற்று நிதானமாக தமிழ் சகோதரர்கள் சிந்திக்க வேண்டும்.

உலகத்தின் புள்ளி விபரம் சொல்கின்றது. இன்று தீவிரவாதிகளாவும்,கொள்ளைக்காரர்களாகவும், மதுவுக்கும், மாதுவுக்கும் அடிமைப்பட்டவர்களாவும் இருப்பவர்களில் அநேகர் யாரென்றால் சிறு வயதிலயே நாடு பிடித்தல், இனத்தை பரப்புதல் என்ற பெயர்களில் நடந்த யுத்தங்களில் தாய், தந்தையை இழந்து வாழ்ந்த அநாதைகள் தானாம். அவ்வாரான அநாதைகளாக தனது பிள்ளைகளையும் விட்டுச் செல்வதற்கு எந்த தாய்,தந்தையாவது விரும்புவார்களா…?

அன்பார்ந்த தமிழ் சகோதரர்களே….!!! சற்று சிந்தியுங்கள் எமது நாளைய தலைமுறையின் எதிர் காலத்தை கருத்திற் கொண்டாவது நாம் ஒற்றுமையுடனும், மத நல்லிணக்கத்துடனும் வாழ வேண்டும்.
அதனை விடுத்து பீதியுடனும், நிம்மதியற்றும் எமது ஒவ்வொரு நிமிடத்துடனும் கழிக்கும் மீண்டுமொரு இனக்கலவரம் தேவைதானா……?

வை.எம்.பைரூஸ்
வாழைச்சேனை

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here