எமது முஸ்லிம் சமுதாயம் அதாலபாதளத்திற்கு சென்று கொண்டிருக்கின்றது – அஷ்ஷெய்க் என். பீ. எம். அபூபக்கர் சித்தீக் மதனி

0
952

(இக்பால் அலி)

இன்றைய எமது முஸ்லிம் சமுதாயம் அதாலபாதளத்திற்கு சென்று கொண்டிருக்கின்றது. இளைஞர் யுவதிகள் பச்சிளம் குழந்தைகள் கூட போதைக்கு அடிமையாகக் கூடிய நிலையில் இருந்து கொண்டு இருக்கின்றனர். இது எமது உடலை சிலிர்க்க வைக்கின்றது. இந்த சமூகம் போதைக்கு அடிமையாகி விட்டால் இந்த சமூதாயத்தின் நிலைப்பாடு தான் என்ன? அவர்களுக்கு அல்லாஹ்வைப் பற்றிய அச்சத்தை மார்க்கம் பற்றிய விளக்கத்தையும் அல்லாஹ்வினால் ஹராமாக்கப்பட்ட போதை வஸ்தைத் தொடமாட்டேன் என்ற உணர்வை ஒவ்வொரு முஸ்லிம்களுடைய உள்ளத்திலும் பதிய வைக்க வேண்டிய தேவை இருக்கிறது. இது உங்கள் தோள்களில் சுமக்கப்பட்டு இருக்கின்றது. இந்த நாட்டில் வாழும் பெரும்பான்மையின சமூகம் கூட எங்களை ஒரு கேள்விக்குறியாகப் பார்த்துக் கொண்டு இருக்கின்றது. இப்படியான நிலை எமது சமுதாயத்தில் நீடிக்கும் எனில் நிச்சயமாக எமது சமுதாயம் மிகவும் மோசமான நிலைக்கு தள்ளப்பட்டு விடும். எனவே இதில் இருந்து எமது முஸ்லிம் சமதாயத்தைப் பாதுகாக்க வேண்டிய பொறுப்பும் கடமையும் மாக்கம் கற்ற உலமாக்களிடத்திலே இருக்கின்றது என்று ஜமாஅத் அன்சாரிஸ் சுன்னத்தில் முஹம்மதிய்யாவின் நிறைவேற்றுப் பணிப்பாளர் அஷ்ஷெய்க் என். பீ. எம். அபூபக்கர் சித்தீக் மதனி தெரிவித்தார்.

தாருத் தவ்ஹீத் அஸ்ஸலபிய்யா கலாபீடத்தின் தாயிரத்துஸ் ஸலபியீன் பழைய மாணவர் சங்கத்தின் வருடாந்த பொதுக் கூட்டமும் விசேட விளையாட்டு நிகழ்வும் புத்தளம் கார்டன் வியூ விருந்துபசார மண்டபத்தில் பழைய மாணவர் சங்கத்தின் தலைவர் அஷ்ஷெய்க் எஸ். எச். எம். இஸ்மாயீல் தலைமையில் இடம்பெற்றது இந்நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்ட ஜமாஅத் அன்சாரிஸ் சுன்னத்தில் முஹம்மதிய்யாவின் நிறைவேற்றுப் பணிப்பாளர் அஷ்ஷெய்க் என். பீ. எம். அபூபக்கர் சித்தீக் மதனி இவ்வாறு இதனைத் தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து பேசுகையில்

ஒரு மனிதனுக்கு பொறுப்பைக் கொடுப்பதாக இருந்தால் அந்த மனிதனைப் பற்றிய நம்பிக்கை உள்ளத்தில் ஏற்பட வேண்டும். உங்களுடைய செயற்பாடுகள் எல்லாம் நம்பிக்கையை ஏற்படுத்தக் கூடியதாக இருக்கின்றது. எனவே அந்த நம்பிக்கை வீண் போய் விடக் கூடாது. நாம் ஆரம்பித்த அரபுக் கல்லூரிகளை எல்லாம் எப்படி வழிநடத்திச் செல்வது என்று சிந்தித்துக் கொண்டிருக்கின்ற வேளையில் இந்தக் கல்லூரியை இதில் கற்று வெளியேறியவர்கள் இந்தக் கல்லூரிக்கு துணையாக இருந்து ஊக்கப்படுத்தி முன்னெடுத்துச் செல்லும் திட்டங்களை வெளிக்காட்டும் போது உண்மையிலேயே மனதில் இருந்த கவலையெல்லாம் கலைந்து விடும் நிலையில் உள்ளன.
இந்தக் கல்லூரி என் மீதும் உங்கள் மீதும் சுமத்தப்பட்ட அமானிதம் ஆகும். இந்தக் கலாபீடத்தின் முன்னேற்றத்திற்காக நீங்கள் முன்வைத்துள்ள நல்ல திட்டங்கள் எமக்கு நம்பிக்கை ஊட்டக் கூடியதாக உள்ளது. நிச்சயமாக எங்களுடைய மரணத்திற்குப் பின்னாலும் மிகவும் சிறப்புடன் இந்தக் கல்லூரி முன்னெடுத்துச் செல்லப்படும் என்பதை நாங்கள் நம்பிக்கை கொள்கின்றோம்.
அறிவு ஞானத்தை அல்லாஹ் தான் நாடியவர்களுக்கே கொடுக்கின்றான். எவர்கள் அறிவு ஞானம் கொடுக்கப் பெற்றார்களோ ஏராளனமான அறிவுகளைப் பெற்றுக் கொண்டவர்கள் என்று அல்லாஹ் கூறுகின்றான்.

எந்த மனிதனுக் அல்லாஹ்த ஆலா மனதனுக்கு நலனை நாடுகின்றானோ அவனுக்கு அல்லாஹ் தஆலா மார்க்கத்திலே விளக்கத்தைக் கொடுக்கின்றான் என்று நபி நாயகம் (ஸல்) அவர்கள் கூறுகின்றார்கள். ஏராளனமான ஹதீஸ்கள், குர்ஆன் வசனங்கள் அறிவை சுமந்தவர்கள் பற்றி சிறப்பைக் கூறுபவைகளாகவே வந்துள்ளன. அறிவைச் சுமந்தவனுடைய ஒரு ஆலிமின் அந்தஸ்து என்னவென்றால் சமுதாயத்தில் இருக்கின்ற ஆகக் குறைந்த படித்தரத்தில் இருக்கக் மனிதனுக்கும் உயர்ந்த தரத்தில் இருக்கக் கூடிய நபி (ஸல்) அவர்களுக்கும் இடையில் இருக்க வேண்டிய வேறுபாடே ஆகும். இப்படி அறிவைச் சுமந்தவர்களுக்கு அல்லாஹ் தஆலா வழங்;கியுள்ளான் என்று நபி நாயகம் (ஸல்) அவர்கள் தெரிவிக்கின்றார்கள். இந்த அறிவைச் சுமந்தவர்களுக்காக வானத்திலுள்ள மலக்குகள் தங்களுடைய இறக்கைகளை கீழே வைத்து அவர்களுக்கு மரியாதை செய்கின்றார்கள். இந்த உலமாக்களுக்காக கடலிலுள்ள மீன்கள் பிரார்த்தனை செய்கின்றன. நுளம்புகள் கூட பிரார்த்தனைகள் செய்கின்றன.

எனவே இவ்வளவு சிறப்புமிக்கவர்கள் இந்த அவையிலேயே எத்தனையோ அமானிதங்களைச் சுமந்தவர்களாக இருக்கின்றோம். அமானிதங்களை அதற்கு உரியவர்களிடத்தில் ஒப்படைத்து விடுங்கள். நாம் சுமந்து இருக்க வேண்டிய அமானிதம் யாருமே சுமக்க முடியாத அமானிதம் ஆகும். அதுதான் குர்ஆன் சுன்னாவுடைய ஒளி. குர்ஆன் சுன்னாவுடைய விளக்கம். குர்ஆன் சுன்னாவின் மூலம் கிடைத்த மார்க்க அறிவாகும். நாளை மறுமையில் கேள்விகள் கேட்கப்படும் முன்னால் ஒப்படைத்து விட்டோம் எனில் எங்களால் தப்பிக் கொள்ள முடியும். நான்கு விசயங்கள் பற்றி மனிதன் விசாரிக்கப்பட்டு அதற்குரிய பதிலை வழங்காத பட்சத்தில் அவர்களுடைய இரண்டு கால்களும் அசைக்கப்பட மாட்டாது என்று நபி நாயகம் (ஸல்) அவர்கள் சுட்டிக் காட்டிவிட்டு அதில் ஒன்றாக அவர் கற்ற கல்வியைக் கொண்டு என்ன செய்தான் அதனைக் கொண்டு மற்றவர்களுக்கு எப்படி எத்தி வைத்தான் என்று கேட்கப்படும் என்பதையும் அதில் ஒன்றாகக் குறிப்பிடுகின்றார்கள். இந்த அடிப்படையில் நாம் நாளை மறுமையில் கேள்வி கேட்கப்பட்டு அந்த கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாத நிலைக்கு தள்ளிவிடப்படாமல் இந்த இடத்திலேயே சிந்தித்து உணர்ந்து இந்த அமானிதத்தை சுமந்து இருக்கக் கூடிய நாம் எப்படியாவது முயற்சி செய்து உரியவர்களுக்கு ஒப்படைக்க வேண்டிய தேவை எங்களுக்கு இருந்து கொண்டு இருக்கின்றது. நாம் எல்லோரும் கையோர்த்து நாம் எல்லோரும் ஒற்றுமையாக இருந்து எமது உள்ளத்தில் இருக்கக் கூடிய கசடு, வஞ்சகம், மோசமான குணங்களை எல்லாம் துடைத்து எறிந்து விட்டு தூய்மையோடு அல்லாஹ்வுக்காக இந்தப் பணியை முன்னெடுக்க வேண்டும்.
எனவே நாம் சுமந்த அமானிதத்தை ஒப்படைக்க வேண்டிய ஒன்றாக இருந்து கொண்டு இருக்கின்றோம். எமக்கிடைய உள்ள மனக் கசப்புக்களை மறந்து எல்லோரும் அல்லாஹ்வுடைய பாதையில் எல்லோரும் சமம் என்ற வகையில் தீனை எத்தி வைப்பதற்காக ஒன்றிணையுங்கள் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

;விசேட விருந்தினராக தாருத் தவ்ஹீத் அஸ்ஸலபிய்யா கலாபீடம் மற்றும் ஜமாஅத் அன்சாரிஸ் சுன்னத்தில் முஹம்மதிய்யாவின் பொதுச் செயலாளர் ஏ. எல். கலிலுர்ரஹ்மான் உரையாற்றும் போது
இஸ்லாமிய பிரச்சாரப் பணியை அல்குர்ஆன், சுன்னா அடிப்படையில் மக்கள் மத்தியில் முன் வைத்து ஒரு சமூக புனர் நிர்மாணத்துக்கு அடித்தளமிட வேண்டும் என்ற நோக்கில் சுமார் 72 வருட ஆண்டுகளுக்கு முன்பு 1947 ஆம் ஆண்டு காலப்பகுதியிலேயே அஷ்ஷெய்க் அப்துல் ஹமித் அல்பகரி ரஹ்மத்துல்லா அவர்கள் ஜமாஅத் அன்சாரிஸ் சுன்னத்தில் முஹம்மதிய்யா என்ற அமைப்பை உருவாக்கினார். அவர் ஷிர்க்கை ஒழித்து தவ்ஹீதை நிலைநாட்டவும் பித்அத்துக்களை அகற்றி சுன்னாக்களை உயிர்ப்பிக்கவும் அனாச்சாரங்களை தவிர்த்து சரியான கலாச்சாரப் பண்பாடுகளை மக்கள் மத்தியில் செயல்படவும் ஒரு தனிமனிதராக இருந்து போராடினார்கள். உண்மையில் அவரது தனி மனிதப் போராட்டத்தில் அல்லாஹ் தஆலா வெற்றிகளை வழங்கினான். அவரது போராட்டத்தில் உண்மை நிலையை உணர்ந்து கொண்ட உலமாக்கள் காலப் போக்கில் அவரோடு இணைந்து கொண்டார்கள். இந்தப் போராட்டம் தொடர வேண்டுமானால் சத்தியத்தை தெளிவாகப் பேசுகின்ற உலமாக்கள் தேவை என்பதை யதார்த்தமாக உணர்ந்து கொண்டதன் காரணமாக ஒரு சில மாணவர்களை தெரிவு செய்து மார்க்கக் கல்வி புகட்ட வெளிநாட்டுக்கு அழைத்ச் சென்றார்கள்.

இத்தகைய ஆர்வத்தின் பேரில் தான்; அஷ்ஷெய்க் எம். பி. எம். அபூபக்கர் சித்தீக் அவர்கள் மதீனா பல்கலைக்ழகத்துக்குச் சென்று மார்க்கக் கல்வியைக் கற்று 1980 களில் நாடு திரும்பி அஷ்ஷெய்க் அப்துல் ஹமீத் அல் பகரி (ரஹ்) அவர்கள் விட்டுச் சென்ற அதே பணியைத் தொடர்ந்தார்கள். இதன் நிமித்தம்தாதன் 1983 ஆம் ஆண்டு தாருத் தவ்ஹீத் அஸ்ஸலபிய்யா கலாபீடம் உருவானது. இந்த உருவாக்கப் பல சவால்களை சந்தித்து அதனையெல்லாம் முறியடித்து வெற்றிபெற பல பெரியார்கள் உழைத்தார்கள். அவர்கள் எல்லோருக்கும் இந்த சந்தர்ப்பத்தில் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

ஒரு தனிமனித போராட்ட தவ்வாக்களமாக இருந்த சூழல் மாறி இன்றைய நிலையில் தவ்வாக்களம் ஒரு சக்திமிக்க குழுவினது போராட்ட களமாக மாறியுள்ளது. இன்று இலங்கையின் சகல மாவட்டங்களையும் உள்ளடக்கியதாக 400 பேர் அளவில் ஸலபிய்யா பட்டதாரிகள வெளியேறியுள்ளார்கள். இந்த விரிவாக்கத்தின் பின்னால் நாம் செய்ய வேண்டிய பணிகள் என்ன? எங்களுடைய நோக்கங்கள் யாவை? எதை நோக்கி நாங்கள் பயணிக்க வேண்டும் என்பதையெல்லாம் ஸலபிய்யா பழைய மாணவர் அமைப்பு தெளிவாகவே பிரகடனம் செய்துள்ளது. ஸலபிய்யாவின் வளர்ச்சிக்கு உதவுதல், இஸ்லாமிய தவ்வாப் பணிக்கு பங்களிப்புச் செய்தல் ஸலபிய்யா மாணவர்களிடையே பரஸ்பர நல்லுறவை ஏற்படுத்தி அவாகளது கல்வி பொருளாதார மேம்பாட்டுக்கு உதவுதல் என்ற மூன்று பிரதான நோக்கங்களை உள்வாங்கி 2006 ஆம் ஆண்டு முதல் செயல்படுகிறது.

இவ்வமைப்பு ஆரம்பிக்கப்பட்ட காலம் முதல் ஸலபிய்யாவின் வளர்ச்சிக்கு பாடுபடல் என்ற நோக்கத்தில் பல்வேறுபட்ட உதவிகளைச் செய்வதற்கான முயற்சிகளிலே ஈடுபட்டு வந்தாலும் அண்மைக்காலமாக அதனுடைய செயற்பாடுகள் யதார்த்த பூர்வமாகவே உணரப்படடு நடைமுறைக்கு வந்துள்ளமை மகிழ்ச்சியைத் தருகின்றது.
இந்த வகையில் பழைய மாணவர் அமைப்பின் முன்னால் நிருவாகக் குழுவினர் கடந்த ஆண்டு ஸலபிகள் ஒன்றிணைந்து கண்டியில் தேசிய மாநாடொன்றை நடத்தி மாநாட்டு சிறப்பு மலரொன்றையும் வெளியிட்டு வைத்தனர்.
ஸலபிய்யா கலாபீடத்தின் வரலாற்றுப் பக்கங்களை மீட்டிப் பார்க்கவும் ஸலபிய்யா பட்டதாரிகளது எழுத்தாக்கங்களை மக்கள மயப்படுத்தவும் எடுத்த முயற்சி பாராட்டப்பட வேண்டியது. இந்த சந்தர்ப்பத்தில் அவர்களை நினைவு கூறுவதோடு நிருவாகம் சார்ந்த மனப்பூர்வமான நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கின்றேன். அதன் பின்னர் புதிதாகத் தெரிவு செய்யப்பட்ட நிருவாகக் குழுவினர் தங்களது ஆக்கபூர்வமான பணிகளை அமைதியாக இருந்து முன்னெடுத்துச் செல்கின்றார்கள். நிலைமைகளைச் சரியாகப் புரிந்து ஸலபிய்யா நிருவாகத்துக்கு ஒத்துழைப்பு வழங்கி வருகின்ற பாங்கு மனநிறைவையளிக்கின்றது. கல்வி வளர்ச்சியில் பங்காளிகளாக மாறிவருகின்ற இந்நிi தொடர வேண்டும். அதற்கான வாசல்கள் திறந்தே இருக்கின்றன என்று அவர் மேலும் தெரிவித்தார்.

கௌரவ அதிதியாக ஜமாஅத் அன்சாரிஸ் சுன்னத்தில் முஹம்மதிய்யாவின் நிதிச் செயலாளர் எம். எம். ஹிதுமத்துல்லாஹ் மற்றும் தாருத் தவ்ஹீத் அஸ்ஸலபிய்யா கலாபீடத்தின் பிரதி அதிபர் எஸ்.. யூ. சமீம் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதில் ஸலபிய்யா கலாபீடத்தின் உப அதிபர் கலாநிதி அம்ஜத் ராசிக் கலாநிதி எம். எல். முபாரக், தௌபீக் மதனி, கலிலுர்ரஹ்மான் உள்ளிட்ட நாட்டின் பல பாகங்களிலும் உள்ள பழைய ஸலபிய்யா மாணவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர் அதேவேளை வெளிநாடுகளில் பணிபுரியும் ஸலபிய்யா பழைய மாணவர்கள் வருகை தந்திருந்தார்கள்
புதிய டிசட் அறிமுகம் செய்து வைத்தல், நீச்சல் போட்டி, பலூன் உடைத்தல் உள்ளிட்ட பல்வேறு விளையாட்டம்சங்கள் இங்கு இடம்பெற்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here