வாழைச்சேனை ஆர்ப்பாட்டத்துக்கான அழைப்பு : சமூகக்காட்டிக்கொடுப்பு

0
153

(எம்.ஐ.லெப்பைத்தம்பி)

வாழைச்சேனை தபாலக வீதியில் முறையான அனுமதியோடு பிரதேச சகோதரர்களால் அமைக்கப்பட்டு வரும் குர்ஆன் மதரஸா அடங்கலான தொழுகை நடாத்துமிடத்திற்கெதிராக வாழைச்சேனையைச்சேர்ந்த ஒரு சில சகோதரர்களால் வெள்ளிக்கிழமை ஜும்ஆத் தொழுகையைத் தொடர்ந்து முன்னெடுக்கப்படவுள்ளதாகச் சொல்லப்படும் ஆர்ப்பாட்டம் சமூகக்காட்டிக் கொடுப்பாகவே அமையும்.

இன்று இப்பிரதேசத்தில் பல்வேறு சமூகச்சீரழிவுகளும் அவலங்களும் போதை மற்றும் இன்னோரன்ன படு பாவச்செயல்களும் மலிந்து காணப்படும் நிலையில், எந்தவொரு சமூக அக்கறையுள்ளவர்களோ, அமைப்புக்களோ, பிரதேச முக்கிய சமூக நிறுவனங்களோ இது தொடர்பில் இவ்வாறான கண்டனங்கள் ஆர்ப்பாட்டப் பேரணிகளை முன்னின்று நடாத்த வக்கற்ற நிலையில், தூய இஸ்லாத்தையும் அதன் போதனைகளையும் புனித குர்ஆனையும் கற்றுக்கொடுக்கும் நோக்கில் நல்லுள்ளம் படைத்த சகோதரர்களின் ஒத்துழைப்பு, நிதிப்பங்களிப்போடு அமைக்கப்பட்டு வரும் இஸ்லாமிய நிலையமொன்றை எதிர்த்து இவ்வாறான ஆர்ப்பாட்டமென்ற போர்வையில் முன்னெடுப்புகளை மேற்கொள்வோர் சமூகத்தை மாற்றினத்துக்கு காட்டிக்கொடுப்பதான செயலாகவே கொள்ளப்பட வேண்டும்.

அத்தோடு, இதன் பின்னணியில் தூண்டுகோளாக இருந்து செயற்படுகிறார் சக்தியை இப்பிரதேசத்தைச் சேர்ந்த உலமாக்கள், புத்திஜீவிகள், சமூக அமைப்புக்கள் கண்டும் காணாமலிருப்பது கல்குடா சமூகத்துக்கு சாபக்கேடாகவே அமையும். தமது கொள்கையைப் பரப்ப சமூகத்துக்குள் மறைந்து கொண்டுள்ள விஷக்கிருமிகள் சிந்தனைத்தெளிவற்ற, மார்க்க ரீதியான அறிவற்ற ஒரு சில சகோதரர்களைத் தூண்டிக் கொண்டிருப்பதையும் அதனை அறியாமல் ஒரு சில சகோதரர்கள் பலிக்கடாவாக்கப்படுவதையும் சொல்லியே ஆக வேண்டும்.

இன்று இப்பிரதேசத்தில் அமைக்கப்படும் தொழுமிடத்திற்கெதிராக பிரதேச பாமர மக்களை ஒன்று திரட்டி புனித நோன்பையும் கவனத்திற்கொள்ளாது, கொலைவெறித்தாக்குதலில் ஈடுபட்டவர்கள், நம் ஒவ்வொருவரதும் ஈமானையும் பறித்தெடுத்துக் கொண்டிருக்கும் வழிகீட்டுக்கொள்கை வளர்ச்சியைத் தடுக்க என்ன செயற்பாடுகளை முன்னெடுத்துள்ளீர்கள் என்பதை சிந்தித்துப்பாருங்கள். .

உங்களைப்போன்ற ஒரு சில சிந்தனை மழுங்கடிக்கப்பட்டவர்களின் ஒத்துழைப்புத்தான் இன்று இவர்களின் வளர்ச்சிக்கு மறைமுக ஒத்துழைப்பை வழங்கிக் கொண்டிருப்பதை எண்ணிப்பார்க்க கடமைப்பட்டுள்ளீர்கள்.

இயக்கம், கருத்துமுரண்பாடு, பிரதேச வேறுபாடுகளை மறந்து ஒட்டுமொத்த கல்குடா சமூகத்தையும் ஒன்று திரட்டி இந்த வழிகெட்ட கொள்கை, போதை, சமூகச் சீரழிவுளுக்கெதிராகப் போராட வேண்டிய உங்களைப்போன்றவர்கள், அவர்களின் பின்புலத்தோடு இவ்வாறான ஆர்ப்பாட்டத்துக்கு அழைப்பு விடுப்பதை என்னவென்று சொல்வது?

வெறுமனே கூப்பாடு போட்டு  அல்லது முகநூல் பிரசாரம் செய்து இஸ்லாத்துக்கும் முஸ்லிம்களுக்கும் சேறு பூசும் செயல்களூடாக இந்த சமூகத்தைக் காட்டிக்கொடுத்து மதவாதிகளுக்கும் சமூக விரோத சக்திகளுக்கும் தீனி போடும் கைங்கரியத்தை செய்யாமல் யதார்த்தங்களையும் உண்மைகளையும் புரிந்து செயற்பட சகல தரப்பினரும் முன்வர வேண்டும்.

வெறுமனே ஒரே சமூகத்தைச்சேர்ந்த இரு குழுக்கள் அடித்துக்கொள்வதால் குளிர்காயப்போவது மாற்று மத சக்திகளும் மதவாதிகளும் தான் என்பதை மனதிற்கொள்வோமாக.

உங்கள் உணர்ச்சி, உசுப்பேற்றல், ஆர்ப்பாட்டம், பேரணிகளை இப்பிரதேச நன்மைக்கும் இப்பிரதேசத்தின் நற்பெயரை தேசியளவில் அசிங்கப்படுத்தி வரும் போதைப்பொருள் விற்பனை மற்றும் பாவனைக்கெதிராகவும் மேற்கொள்ள முன்வருவீர்களானால், ஒட்டுமொத்த கல்குடா சமூகமும் உங்கள் பின்னால் அணி திரண்டு வரக்காத்து நிற்கிறது  என்பதை மனதிற்க்கொண்டு சமூகத்தைக் காட்டிக்கொடுக்கும் இவ்வாறான செயற்பாடுகளை கைவிட வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here