கல்குடா முஸ்லிம்களின் வழக்கொழிந்த வாழ்வியல் கோலங்கள் தொடர் – 2

Spread the love

DSC_4006கல்குடா முஸ்லிம்களின் வாழ்வு, வரலாறு, பழக்க வழக்கங்கள் என்பன குறித்த பல தரவுகளையும் குறிப்புக்களையும் பதிவு செய்து வரும் நோக்கில் கல்குடாநேசன் ஒரு பகுதியை ஆரம்பித்தது. அதன் தொடர்ச்சியில் கல்குடா முஸ்லிம்களிடம் வழக்கொழிந்து கொண்டுவரும் திருமணம், கத்னா தொடர்பான சில வாழ்வியல் குறிப்புக்களை முன்னாள் கோறளைப்பற்று மேற்கு கலாசார உத்தியோகத்தர் ஏ.எல். பீா்முஹம்து MA அவா்களினால் மருதோன்றி இதழ் 03ற்காக மூத்த எழுத்தாளா் எஸ்.எல்.எம். ஹனீபா அவா்களிடமிருந்து கண்ட நோ்காணலின் தொடர்ச்சி …

 

2.சுன்னத்துக் கல்யாணம் (கத்னா)

சுன்னத்துக் கல்யாணம் என்பது இன்றைய காலம் போல் சாதாரணமானதாக அன்று நடக்கவில்லை. அதுவே வெறும் கல்யாணந்தான். திருமணத்திற்கான அத்தனை தடல் புடல்களும் அதிலும் இருந்தன. சுன்னத்து என்பதுதான் இஸ்லாமாக இருந்ததே ஒழிய மற்ற எதுவும் அங்கு இஸ்லாமாக இருக்கவில்லை.

1003888_213164448835237_20926096_n

ஆனால் அதிலும் ஓர் அழகு, கலைத்துவம் இருந்தது என்பதை மறுக்க முடியவில்லை. கடன் பட்டாவது அல்லது வட்டிக்கு வாங்கியாவது சுன்னத்துக் கல்யாணத்தை சிறப்பாகச் செய்ய வேண்டும் என எல்லோரும் விரும்பினார்கள். அன்று பல போடிமார்கள், விவசாயிகள் வட்டியை விளைச்சலுக்குக் கொடுத்தல் என்ற பெயரில் செய்து கொண்டிருந்தார்கள்.

ஒரு சாக்கு நெல்லை வாங்கி வேளாண்மை விளைந்ததும் இரண்டு சாக்கு நெல் கொடுப்பார்கள். இதுவும் ஒரு வகை வட்டி என்று யாரும் நினைக்கவில்லை. எடுத்துச் சொல்வதும் இல்லை. எனவே விளைச்சலுக்கு நெல்வாங்கி சுன்னத்துக் கல்யாணத்தைச் சிறப்பாகச் செய்வார்கள். அன்று ஓர் அவணம் நெல் 100/= விற்கப்பட்டது. ஒரு அவணம் நெல்லுக்கு விளைச்சலுக்குக் கொடுப்பவர்கள் 30/= தான் கொடுப்பார்கள். சிலர் ஒரு சாக்குக்கு மூன்று சாக்கு என விளைச்சலுக்கு கொடுப்பார்கள். இப்படியெல்லாம் பெற்றுத்தான் அன்று சுன்னத்துக் கல்யாணத்தைச் சிறப்பாகச் செய்தார்கள்.

இந்த ஊரில் நாலைந்து போடிமார்கள், பணக்காரர்கள் இப்படித்தான் ஏழை மக்களை தந்திரமாகச் சுரண்டி அவர்களது உழைப்பை உறிஞ்சிக் கொண்டிருந்தார்கள். இந்த வகையில் எமது மீராவோடைக் கிராமம் மிகவும் பாவப்பட்ட ஊர். அங்கு பல போடிமார்களும், பணக்காரர்களும் இப்படித்தான் ஏழை விவசாயிகளிடமிருந்து செல்வம் குவித்தார்கள். அன்றைய பள்ளிவாயல் பயான்களும், மார்க்கத்தீர்ப்புகளும் இவர்களுக்கு சார்பாகவே இருந்தன.

திருமணத்தில் பறையன், மேளம், மருதோன்றி இருந்தது போல சுன்னத்துக் கல்யாணத்திலும் இருந்தன. சுன்னத்துக்கார மாப்பிள்ளைக்கு தாய் மாமனின் மகள் மருதோன்றி இடுவாள். மிகவும் சிறப்பாக அலங்கரிக்கப்பட்டு மிக அழகாக அவள் காட்சியளிப்பாள். சுன்னத்துச் செலவுகளுக்காக உறவுக்காரர்கள் தேவையான பலசரக்குச் சாமான்களை வாங்கி ‘செலவுப்பெட்டி’ கொண்டு கொடுப்பார்கள். சுன்னத்து வைக்கும் பணியை அன்று ‘உஸ்தா’ மாமா என அழைக்கப்படுவோரே செய்தார்கள். அவர்களே பாரம்பாரியமாக இந்தத் தொழிலைச் செய்து வந்தனர். இன்று இத்தொழிலை வைத்தியர்கள் செய்வதால் அவர்களது தொழில் முற்றாக இழக்கப்படும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.

சவரக்கத்தி, சவரக்கல் என்பனவே அன்று பயன்படுத்தப்பட்டது. திரும்பவும் சுன்னத்து வைக்கும் போது அதே கத்தியைக் கொண்டு அதே கல்லில் தீட்டி சுன்னத்து வைத்தனர் இவற்றைச் செய்வதில் சுகாதார முறைகள் பேணப்படா விட்டாலும் யாருக்கும் அதனால் பாதிப்பு ஏற்பட வில்லை. இயற்கையோடு மனிதன் அன்று ஒன்றி வாழ்ந்ததால் பக்ரீரியா, வைரஸ், பங்கஸ் என்று எதுவும் அன்று இல்லையோ  தெரியவில்லை. சுன்னத்து வைத்த காயத்துக்கு ஆரம்ப காலத்தில் மருந்து கூட போடப்பட வில்லை. சீலையை நனைத்து வெட்டுக்காயத்தில் போட்டு விடுவார்கள். 3 நாள் அல்லது 7 நாள் கழித்து    அச்சீலையைக்  கழட்டுவார்கள்.  அது சுன்னத்து வைப்பதை விட வேதனையாக இருக்கும். காயத்துக்கு சாம்பல் தான் போடுவார்கள். இயற்கையாக அக்காயம் ஆறிப் போய்விடும். சுன்னத்துக் கல்யாண வீடுகள் சோடனைகளால் அலங்கரிக்கப் பட்டிருக்கும். மேளம் அடித்தல் ஆரம்பத்தில் வழக்கிலிருந்தாலும் 1970களில் அந்த இடத்தை ஸ்பீக்கர் பிடித்துக் கொண்டது. கல்யாண வீடுகளுக்கு அடையாளமாக அங்கு இராப்பகலாய் ஸ்பீக்கர் படிக்கும். நாகூர்  EM ஹனிபாவின் பாடல்கள் பொரும்பாலும் ஒலிக்கும். முதல்பாடலாக “பாலைவனம் தாண்டிப்போகலாமே நாம்” என்ற பாடல் ஒலிபரப்பப்படுவது வழக்கமாக இருந்தது. 1980ம் ஆண்டு காலப்பகுதி வரை ஸ்பீக்கர்கள் கல்யாண வீடுகளின் அடையாளமாக இருந்தன. ஊரில் உள்ள ஸ்பீக்கர்கள் போதாதென்று காத்தான்குடி நியூ மொஹிதீன், சித்தாண்டி மோகன் ஆகியோரின் ஸ்பீக்கர் செட்டுகள் வரவழைக்கப்பட்டன. சித்தாண்டி மோகன் என்பவருக்கு மூன்று ஊரும் அத்துப்படி. அவர் செல்லாத கல்யாண வீடுகள் இல்லை என்றே சொல்லலாம். TLT ஹாஜியாரின் ஸ்பீக்கர்களும் பெரும்பாலான கல்யாண வீடுகளில் பாடி வந்தன.

சுன்னத்து வைக்கும் உஸ்தா மாமாவுக்கும், சுன்னத்து வைக்கும் போது பிள்ளையைப் பிடிப்பவருக்கும்,  மரைக்கார்மார்களுக்கும் வட்டா வைத்துத்தான் அழைப்பார்கள். சுன்னத்துக் கல்யாண மாப்பிள்ளையை குதிரை வண்டியில் ஏற்றி ஊர்வலமாக அழைத்துச் செல்வார்கள்  பணக்கார வர்க்கத்தின் சுன்னத்து மாப்பிள்ளைகள் மக்கள் புடை சூழ  மாலையிலிருந்து இரவு நடுநிசி வரை ஊர்வலம் வருவார்கள். மூன்று பிரதான பள்ளிவாயல்களுக்கும் சென்று காணிக்கை இடுவார்கள்;  சுன்னத்து வைக்கப்படும் போது லைப்பைகள், ஆலிம்களைக் கொண்டு ஹழரா மஜ்லிஸ்களும் இடம்பெறும். கிடக்கிற எல்லா அவ்லியாக்களுக்கும் நேர்த்திக்கடன் வைப்பார்கள். சுன்னத்துக் கல்யாணப் பிள்ளைக்கு சருகு உடுப்பு அணிவிக்கப்படும். சருகு உடுப்புச் செய்வதில் அன்று பிரபல்யமானவா் ஆதம் மாமா. சருகுத்தாள், பட்டுத்துணி என்பவற்றைக் கொண்டு பாவாடை போல் அந்த ஆடை வடிவமைக்கப்பட்டிருக்கும். கேரளத்தின் பிரபலமான கதகளி நடன உடையின் சாயலை ஒத்ததாக அது இருந்தது.

சுன்னத்து மற்றும் எல்லாக் கல்யாணங்களிலும் தமிழ் சகோதரிகள் கலந்து கொண்டனர். அன்று இரு சமூகங்களும் ஒன்றிணைந்து பின்னிப்பிணைந்து வாழ்ந்ததால் ஒருவர் மற்றவரின் சுக துக்கங்களில் பங்கெடுத்தனர். முஸ்லிம்கள் தமிழ் சகோதரர்களின் திருமணங்களில் கலந்து கொண்ட போதும் அவர்களின் உணவுகளை உண்பதைத் தவிர்த்துக் கொண்டனர். சுன்னத்துக் கல்யாண வீடுகளில் 15 அல்லது 20 நாட்கள் ராப்பகலாய் விழித்திருந்து காவல் காப்பர். விடிய விடிய பாட்டுக்கச்சேரி நடக்கும். மீராவோடை ஓடைக்கரையில் பூலாவரி மீரிசாக்கா, SLM. ஹனிபா, கரிமர் போன்றோர் பாடுவதில் பிரபல்யமானவர்கள்,  ஒரு பக்கம் காட்ஸ் விளையாட்டு நடக்கும். இன்னொரு பக்கம் கஞ்சாப்புகை வெளியேறிக் கொண்டிருக்கும். 3 அல்லது 3 ½ மணிக்கு கோழிச்சாவல் கத்தும். கோழிக்கறியுடன் ரொட்டி தயாராகும். சுப்ஹூக்கான பாங்குடன் கச்சேரியும், களறியும் நிறைவுறும்  சுபஹ்த் தொழுகை எதுவும் அப்போது கிடையாது. வெள்ளிக்கிழமை ஜூம்மா  மட்டும் தான். ஐங்காலத் தொழுகையை பெரும்பாலானவர்கள் தொழுவதே கிடையாது.

அன்று வாழ்ந்த மக்கள் ஷிர்க்குகளோடும், மூட நம்பிக்கைகளோடும் வாழ்ந்தாலும் மிகச் சிறந்த ஒழுக்கத்தோடு வாழ்ந்தார்கள் என்றே கூற முடியும். இன்று காலம் மாறிவிட்டது. இந்தச்சடங்கு சம்பிரதாயங்கள் வழக்கொழிந்து விட்டன. ஷிர்க்கான விடயங்களிலிருந்து மக்கள் மீண்டு வருகிறார்கள். இன்னும் 5 அல்லது 10 வருடங்களில் எல்லாம் ஒழிந்து விடும். ஆனாலும் வேறு விடயங்கள் வந்து சேர்ந்து கொண்டிருக்கின்றன.

இன்றைய தொடர்பு சாதனங்கள் மிக மோசமான கலாசாரத்தையும், பண்பாடுகளையும் விதைத்துக் கொண்டிருக்கின்றன. முன்னைய நிலையை விடவும் ஓர் ஆபத்தான நிலையை நோக்கி நாம் போய்க்கொண்டிருக்கின்றோம் என்றே நினைக்க முடிகிறது.

 

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*