கல்குடா நேசனின் இளங்கலைஞர் அறிமுகம்-கவிஞர் மாலினி (ஜேர்மனி)

Spread the love

FB_IMG_1438155601957-minகல்குடாநேசனுக்காக கட்டாரிலிருந்து கவிஞர் ஓட்டமாவடி றியாஸ்

கல்குடா நேசன் ‘இளங்கவிஞர்’ அறிமுகம் பகுதியை ஆரம்பித்து, இன்று பரவலாக கவிதை, கட்டுரை என பல் துறைகளில் எழுதி வரும் கலைஞர்களை ஊக்குவிக்கும் நோக்கில் பிரதி வாரந்தோறும் இளங்கவிஞர்களை அறிமுகம் செய்து வருகின்றமை பலராலும் வரவேற்கப்பட்டு, இப்பகுதிக்கு தொடராக அறிமுகம் பெறுபவர்களின் விபரங்கள் கிடைக்கப் பெற்ற வண்ணமுள்ளன.

நீங்கள் உலகின் எப்பகுதியில் வசித்தாலும், இப்பகுதியில் உங்களைப் பற்றிய விபரமும் இடம்பெற விரும்பினால், எமது kalkudahnation2013@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு உங்களைப் பற்றிய விபரங்களையும், ஆக்கங்களையும் அனுப்பி வையுங்கள். பிரசுரிக்க நாம் தயாராகவே உள்ளோம்.

இதன் தொடரில், இவ்வாரம் இளங்கவிஞராக அறிமுகம் பெறுகிறார் ஜேர்மனியில் வசித்து வரும் கவிஞர் மாலினி. அவர் தன்னைப் பற்றி இவ்வாறு அறிமுகம் செய்கிறார்.

எனது பெயர் மாலினி. நான் யாழ்ப்பாணம் அரியாலையைப் பிறப்பிடமாகக் கொண்டவள். யாழ் வேம்படி மகளிர் கல்லூரியில் உயர் தரம் வரை படித்த நான், ஜேர்மனியில் குடும்பத்துடன் வசித்து வருகிறேன்.

Screenshot_2015-07-26-17-19-44-cxcx-minமிகச்சிறிய வயதிலிருந்தே எனது கலைப்பயணம் ஆரம்பித்தது என்றே சொல்லலாம். 13 வயதில் ஒரு சிறு கதைப்போட்டியில் பரிசு பெற்று, சிறுகதையுடன் ஆரம்பித்த என் எழுத்துப்பயணம், ஆரம்பத்தில் இலங்கையின் பத்திரிகை, சஞ்சிகைகளில் சிறுகதை, தொடர் கதை, கட்டுரை, விமர்சனம் எனத் தொடர்ந்து, வானொலி நாடகங்கள், வானொலிச் சிறுகதைகள், இசையும் கதையும் என விரிந்து செல்கிறது.

புலம்பெயர்ந்து ஐரோப்பிய மண்ணில் பாதம் பதித்த பின்னரும் கூட என் இலக்கிய தாகம் தீரவில்லை. அது என் கூடவே ஒரு இரத்த உறவு போல என்னோடு ஒட்டிக்கொண்டே தொடர்கிறது.

இலங்கையின்  ‘ஜீவநதி’   சஞ்சிகைகளிலும் ‘காற்று வெளி’   சஞ்சிகைகளிலும்  எனது சிறுகதை, கவிதைகள் தொடர்ந்து  வெளி வருவதுடன், ‘வீரகேசரி’ பத்திரிகையும் எனது பல தொடர் சிறுகதைகளுக்கு களமமைத்துக் கொடுத்திருக்கிறது. வீரகேசரியில் தொடர் நாவலாக வெளி வந்த கதையை  ஒரு பிரசுர நிறுவனம்  நூல் வடிவில் வெளியிட்டமை இங்கே குறிப்பிடத்தக்கது.

மற்றும், யாழ்ப் பத்திரிகைகளில் போர்க்கால  நினைவுகளான  ‘நிலையாமையின்  நினைவுகளில்”   என்ற தொடர் வெளி வந்து வாசகர்களின் அமோக வரவேற்பைப் பெற்றமையும் குறிப்பிடத்தக்கது. FB_IMG_1438155601957fgsdscccc-min‘வளரி’ இதழில் இவ்வார பெண் கவிஞர் பகுதி ஆரம்பமான முதல் நூலில் என்  கவிதைகளும், விபரங்களும்  வெளியிட்டிருந்தார்கள்.

மற்றும்  இலண்டனில்  இயங்கும் IBC தமிழ் வானொலி நிகழ்சிகளில் முகநூல்களிலும், இணையங்களிலிருந்தும் என் கவிதைகளைப் பெற்று, அவர்களாகவே  விரும்பி  அதிகம்  சேர்த்துக்  கொள்வது  என்  எழுத்துப்  பயணத்தில் நம்பிக்கையுடன்  நகர வைக்கிறது.

‘ஏன் மறந்தாய் துளசி’  மற்றும்  ‘நித்தியாவின் அர்த்தமுள்ள  மௌனங்கள்” இவை இரண்டும் நூல்  வடிவில்  வெளிவந்த எனது நாவல்களாகும்.

கவிதை நான் முன்பு அதிகம்  கவனிக்காத துறை. இப்போது தான் அதில் தீவிர கவனஞ்செலுத்துகிறேன்.  ஆரம்ப நாட்களில் மிகச்சொற்பமாகவே கவிதைக்கு இடம் கொடுத்திருந்த நான்,
இப்போது மிகவும் விருப்புடன் அதன் வழியிலும் பயணிக்கிறேன். பல போட்டிகளில் பரிசில்களையும் பெற்றிருக்கும் நான், இரு முறை ஐரோப்பிய இரீதியில் நடைபெற்ற மாபெரும் சிறுகதைப் போட்டியில் தங்கப் பதக்கங்களையும் பெற்று கொண்டேன் என்று தொடர்ந்து  சொல்லும் கவிஞர் மாலினி, கதை எழுத வேண்டும் என்ற உந்துதலை புறச்சூழலும், நாட்டின் நடப்பு நிகழ்வுகளுமே ஏற்படுத்தின என்கிறார். FB_IMG_1438155601957ggg-min

என்னுடைய சிறுகதைகளாகட்டும், கவிதைகளாகட்டும் அல்லது நாடகங்களாகட்டும் இவையெல்லாமே அன்றாட வாழ்வியல் மற்றும் பெண்களின் பிரச்சினைகளையும், அடி மட்ட மக்களின் பிரச்சினைகளையுமே எடுத்துக் கூறுவதையே காணலாம்.

எனக்கென்று உள்ள வாசகர்கள் கூட அந்தக் கதைகளால் தான் கவரப்பட்டு என்னை வாசிக்கிறார்கள் என்று நினைக்கிறேன் என்கிறார் சிறுகதை, எழுத்தாளர் மாலினி.

இவரது எழுத்துப்பணி தொடரவும், எழுத்துலகில் தொடர்ந்து சாதிக்கவும் கல்குடா நேசன் தனது வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறது.

Screenshot_2015-07-26-17-21-12-min

1 Comment

  1. அரியாலையூர் மாலினி சுப்பிரமணியம். நான் மதிக்கின்ற பெண் எழுத்தாளர்களில் மனதில் நின்றவர்,85 இற்க்கு முன்பு இலங்கைப்பத்திரிகைகளில் (சிறுகதைகள்,தொடர் நாவல்) பார்த்திருந்தேன்,புலம்பெயர்ந்தபின் எங்கும் கேள்விப்படவில்லை.

Leave a Reply

Your email address will not be published.


*