கல்குடா நேசனின் இளங்கவிஞர் அறிமுகம்-கவிஞர் விசுவமடு கரீஸ்

Spread the love

12243854_958763817529122_1162703787_n-minகல்குடா நேசனுக்காக பிரபாகரன் வேதிகா

கல்குடா நேசன் இளங்கவிஞர் அறிமுகம் பகுதியை ஆரம்பித்து, இன்று பரவலாக கவிதை, கட்டுரை எனப் பல்துறைகளில் எழுதி வரும் கலைஞர்களை ஊக்குவிக்கும் நோக்கில் பிரதி வாரந்தோறும் இளங்கவிஞர்களை அறிமுகம் செய்து வருகின்றது.

இதன் தொடரில், இவ்வாரம் இளங்கவிஞராக அறிமுகம் பெறுபவர் கவிதை, அறிவிப்பு, நடிப்பு எனப் பல துறைகளில் சாதனை படைத்து வரும் கவிஞர் விசுவமடு கரீஸ் அவர்கள்.

அவர் தன்னைப் பற்றி குறிப்பிடுகையில்…..

எனது இயற்பெயர் கந்தசாமி அரிகரன். சொந்த இடம் முல்லைத்தீவு மாவட்டத்தின் விசுவமடுக் கிராமம். விசுவமடு ம.வி எனக்கு கல்வி தந்த ஆலயம். யாழ் பல்கலைக்கழகத்தில் ஊடகக்கற்கை நெறியைப் பயின்று பின்னர் இந்தியாவின் சென்னை, மதுரை, சேலம், ஆகிய பல்கலைக்கழகங்களில் விசேட ஊடகப் பயிற்சியினைப் பெற்றேன்.

தற்சமயம் கனடாவில் இயங்கும் மின்னல் தொலைக்காட்சிக்கு பரிஸ் நகரிலிருந்து நிகழ்ச்சிகளை ஒழுங்கமைத்து வருகிறேன். 2016 இல் பரிஸ் நகரில் ஒளிபரப்பாகவுள்ள மின்னல் தொலைக்காட்சியின் முகாமையாளராகக் கடமையாற்றவுள்ளேன்.

நான் ஒரு அறிவிப்பாளரும் கூட. ஆசைகளும் எதிர்ப்புகளும் கனவுகளாய் கலைந்து போகும் நடுத்தர குடும்பமே எனது. பள்ளிக்காலங்களில் நண்பர்களோடு சேர்ந்து பல நாடகங்களைத் தயாரித்து நடித்திருக்கிறேன். காலத்தின் கட்டாயத்தால் பல நண்பர்கள் மாவீரர்களாயினர்.

சிறு வயதிலிருந்தே அடக்குமுறை எனும் கூண்டில் வாழ்ந்ததால் என் உணர்வுகளை, வலிகளை வரிகளாக்க முயன்று பல தடவைகள் தோற்றுப் போனவன். எனது விருப்பங்கள், ஆசைகள் எல்லாமே என் குடும்பச் சூழலால் சிவப்புக்கொடி காட்டப்பட்டதால் கனவுகளாக கலைந்து போயின.

வாழ்க்கையில் தூய அன்புக்காக ஏங்கி தோற்றுப் போனதே மிச்சம். என் நிலையற்ற வாழ்க்கைப் பயணத்தில் சந்திக்க நேரிட்ட பல விதமான மனிதர்கள் கற்றுக் கொடு‌த்த படிப்பினைகள் எல்லாம் தடைகளைத் தாண்டி என்னை எழுதத்தூண்டியது.

வாழ்க்கையின் அர்த்தங்களை வாழ்ந்து பார்க்காமலே கற்றுக் கொண்டவன் நான். எனது முதல் நூலான “முகவரி அறியா முகவரி ஒன்றிற்காய்” எனும் கவித்தொகுப்பினூடாக அதிகமாக வாழ்வியல், பெண்களின் ஏக்கங்களை பார்த்த, கேட்ட, உணர்ந்த அனுபவங்களை வெளியிட்டுள்ளேன்.

அன்பான கவிஞர்களுக்கு எனது வேண்டுகோள் ஒன்று.. அறியாமை என்கின்ற மாயையால் சீரழிந்து போகின்ற குடும்ப வாழ்வியலில் கணவனால் அடிமைகளாக்கப்பட்டு தம் கனவுகளை, ஆசைகளை தொலைத்து நடைப்பிணங்களாக வாழ்கின்ற நமது சகோதரிகளின் வாழ்வில் மாற்றத்தை உருவாக்கி, அவர்கள் வாழ்வைப் பிரகாசமாக்க எழுதுவோம்.

இளங்கலைஞர் அறிமுகம் பகுதியினூடாக என்னையும் அறிமுகம் செய்யும் கல்குடா நேசனுக்கு மனமார்ந்த நன்றிகள்.

12231456_958763870862450_167469815_n-min 12244077_958763810862456_1504003525_n-min 12250192_958763830862454_2082729838_o-min 12250442_958763844195786_413859837_o-min

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*