அரசியலமைப்பு மாற்றச்சட்டம்-பாகம் -01- வை.எல்.எஸ்.ஹமீட்

Untitled(1)-minஓட்டமாவடி அஹமட் இர்ஸாட்

புதிதாகக் கொண்டு வரப்படவுள்ள அரசியல்  அமைப்புச்சட்டம்  சம்பந்தமாக  அகில இலங்கை மக்கள் காங்கிரசின்  செயலாலர் நாயகம் வை.எல்.எஸ். ஹமீட் மக்களை விழிப்பூட்டும் அடிப்படையில் தொடர் பாகங்களாக எழுதும் அரசியல் அமைப்புச்சீர்த்திருத்தம் சம்பந்தமான கட்டுரை.

அரசியல் அமைப்புச்சட்டம் மாற்றம் இன்று நாட்டின் பிரதான பேசும் பொருளாக மாறி வருகின்றது. பொது மக்களிடத்திலிருந்து இது தொடர்பான கருத்துக்களை அறிந்து அரசுக்கு அறிக்கை சமர்பிப்பதற்காக 24 பேர் கொண்ட குழுவொன்றும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இது தொடர்பாக முஸ்லிம் சமூதாயம் போதியளவு விழிப்படைந்திருக்கின்றதா? மாற்றப்படவிருக்கின்ற அரசியல் யாப்பில் முஸ்லிம்கள் மீது நேரடித்தாக்கம் செலுத்தக்கூடிய காரணிகள் எவை? அவைகள் எந்தவிதத்தில் இடம்பெற்றால் முஸ்லிம்களின் நலன்கள்ப் பாதுகாக்கப்படுமென்ற விடயங்களில் தெளிவுகள், ஒருமித்த கருத்துக்கள் ஏற்பட்டுள்ளனவா?

இன்று சில முஸ்லிம் அரசியல் கட்சிகள்  எவராவது வெளிநாட்டுப் பிரமுகர்கள் வந்தால், அவர்களைச் சந்தித்து முஸ்லிம்களின் நலன்களும் உள்வாங்கப்பட வேண்டும் எனக்கூறியதாக அறிக்கைகளை விடுகின்றார்கள். அவர்கள் கூறிய அந்த நலன்கள் என்ன? அவைகளைப்பற்றி அவர்கள் எதுவும் குறிப்பிடுவதில்லை. காரணம் எல்லோருக்கும் தெரியும். இருந்தாலும், நாங்களும் பேசியிருக்கின்றோம் என்று கூற வேண்டுமென்பதற்காக அறிக்கை விடுகின்றார்கள்.

இன்னும் சில முஸ்லிம் கட்சிகள் வடகிழக்கு இணைப்பிற்கு நிபந்தனையுடன் உடன்படத்தயார் என வெளிநாட்டு பிரமுகர்களிடம் கூறியதாகவும் அறிக்கை விடுக்கின்றனர். வடகிழக்கு இணைப்பானது முஸ்லிம்களுக்குச் சாதகமானதா? அல்லது பாதகமானதா? என முஸ்லிம் மக்களின் அபிப்பிராயத்தினைக் கோரினார்களா? அது தொடர்பில் முஸ்லிம்களுக்கு ஏற்படப்போகின்ற சாதக பாதக விடயங்களைப்பற்றி சிந்தித்தார்களா? அல்லது முஸ்லிம் சமூகமாவது சிந்திக்கத் தயராக இருக்கின்றதா? என்ற கேள்விகள் ஒரு புறமிருக்க மறு புறத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு இணைந்த வடகிழக்கைப்பற்றியும் சமஸ்டியைப்பற்றியும் அதிகமாகப் பேசுகின்றார்கள். சில விடயங்களில் மறைமுகமாக இவர்களுக்குஉத்தரவாதங்கள் கிடைத்திருப்பதாகவும் ஊகங்கள் நிலவுகின்றன.

அடுத்த புறத்தில் இந்தியா என்ற வல்லரசும் மேற்கத்திய அரசுகளும் தமிழ் தரப்பிற்கு பக்கபலமாக இருக்கின்றன. புலம்பெயர் தமிழர்கள் இந்த சக்திகளுக்குபின்னால் மிக வேகமாக செயற்பட்டுகொண்டிருக்கின்றார்கள் என்ற கருத்துக்கள் மிக வேகமாக உலாவுகின்றது. இவ்வாறு அரசியலமைப்பு மாற்றம் மற்றும் அதிகாரப்பரவலாக்கல் போன்ற விடயங்களில் பல சக்திகள் வேகமாகச் செயற்பட்டுக்கொண்டிருக்கின்ற அதே வேளை, முஸ்லிம் சமூகத்தினைப் பொறுத்த வரையில் சிலர் ஆங்காங்கே அக்கறைகளை காட்டினாலும் பாரியளவில் முஸ்லிம்களுக்கு மத்தியில் விழிப்புணர்வு ஏற்படவில்லை.

கட்சிகளுக்கு வாக்களித்ததோடு, தமது பணி முடிவடைந்து விட்டது. மிகுதியை அவர்கள் பார்த்துக் கொள்வார்கள் என்பதுவே பலரது நிலைப்பாடாக இருக்கின்றது.

தாம் வாகக்ளித்து தெரிவு செய்தவர்களில் எத்தனை பேர் வரவிருக்கின்ற அரசியல் மாற்றம் மற்றும் அதிகாரப்பரவலக்கல் போன்ற விடயங்களில் ஆழமான அறிவினை அல்லது அகலமான தெளிவினைக் கொண்டிருகின்றார்கள்? அல்லது இவ்விடயங்கள் சமபந்தமாக பாராளுமன்றத்தில் எத்தனை பேர்கள் உரத்துக் குரல் கொடுக்கக் கூடியவர்களாக இருக்கின்றார்கள்? போன்ற விடயங்களைத் தெரிவு செய்கின்ற பொழுது முஸ்லிம் சமூகம் சிந்திக்கத் தவறி விடுகின்றது.

இப்போதாவது கண் விழித்து அவர்களுக்குப் பின்னால் உந்துசக்தியாக இருந்து, தமது நலன்கள் பாதிக்கப்படாமலிருக்கும் படியாக உறுதி செய்வதற்குத் தயாரா? என்பது தொடர்பாக எத்தனை பேர்கள் சிந்திக்கின்றோம்? அரசியல் கட்சிகள் சமூகத்தினைப் புறக்கணித்து யார் யாரையோ திருப்திப்படுத்த முடிவுகளை எடுத்து, அம்முடிவினை சமூகத்திற்கான சிறந்த முடிவென்று காட்ட முற்படுகின்ற பொழுது, அம்முடிவுகள் உண்மையாகவே சிறந்ததா? அல்லது பாதகமானதா? என்பதைப்பற்றி சிந்திப்பதற்கும் அது தொடர்பான தமது நிலைப்பட்டினை வெளிப்படுத்தி கட்சிகள் பிழையான முடிவுகளை எடுக்கின்ற பொழுது அவற்றினை மாற்றச்செய்வதற்கும் அல்லது கட்சிகள் பெயருக்கு சில உணர்ச்சி பேச்சுக்களைப் பேசி தங்கள் தொண்டர்களுக்கு முகநூல்களில் புகழ்பாட உற்சாகம் கொடுத்து விட்டு, அரசியலமைப்பு மாற்றத்தினால் என்னென்ன விடயங்கள் உள்வாங்கப்படவிருக்கின்றன என்பதைப் புரிந்து கொள்ளக்கூடியளவிற்குக் கூட சக்தியில்லாமலிருக்கின்ற பொழுது, அவர்களைத் தட்டியெழுப்பி இவைகள் தான் முஸ்லிம் சமூதாயத்தின் நிலைப்பாடு இதனை போய்க்கூறுங்கள் என அவர்களுக்கு அழுத்தம் கொடுப்பதற்கும் சமுதாயத்திற்கு மத்தியில் தெளிவுகளையும் ஒருமித்த கருத்துக்களையும் ஏற்படுத்த ஏதாவது முயற்சிகள் நடக்கின்றனவா? என்பவைகள் தான் இன்று எம்முன்னாலுள்ள கேள்விகளாகும்.

எனவே தான் இத்தொடர் கட்டுரை மூலமாகஉத்தேசிக்கப்பட்ட அரசியலமைப்புச் சட்டத்தில் மாற்றப்படவிருக்கின்ற பிரதான அம்சங்கள் என்ன? அவை முஸ்லிம் சமுகத்தின் மத்தியில் எவ்வகையான தாக்கத்தினை ஏற்படுத்தப்போகின்றது? அத்தாக்கங்களிலிருந்து தம்மைப் பாதுகாத்துக்கொள்ள எவ்வகையான முன்மொழிவுகளை முன்வைக்கலாம்? போன்ற விடயங்களை சமூகத்தின் முன் முன்வைக்க முயற்சிக்கப்படுகிறது.

இதற்கான பிரதான காரணம் இந்த அரசியலமைப்புச் சட்டமானது முஸ்லிம்களைப் பொறுத்த வரையில் கரணம் தப்பினால் மரணம் என்பது போன்றதாகும். இதில் நமக்குப் பாதிப்புக்கள் ஏற்பட்டால், அப்பாதிப்புக்களை நிவர்த்தி செய்ய நூறு ஆண்டுகள் கூட போகலாம். அதே நேரம், எமது அரசியலைப்  பொறுத்த வரையில், அரசியலமைப்பு மாற்றத்தினை சிந்திக்கக் கூடிய போதுமானளவு பிரதிநிதித்துவங்கள் இல்லாமை ஒரு புறமிருக்க ஓரளவு சிந்திக்கக்கூடிய பிரதிநிதித்துவங்கள் வேறு சக்திகளின் முகவர்களாகச் செயற்பட்டுக்கொண்டு தமது எஜமான்களின் நிலைப்பட்டை தமது சமூகத்தின் நிலைப்பாடாகக் காட்டி சமுதாயத்தினை திசை திருப்பக்கூடிய நிலைமையகும்.

எனவே, உறுதியான சமூக நிலைப்பட்டினை மிக விரைவாகக் கட்டியெழுப்ப வேண்டிய நிலையில் முஸ்லிம் சமூகமிருக்கின்றது. அதற்கான ஒரு பங்களிப்பாக இத்தொடர்கட்டுரை இடம்பெறுகின்றது.

அரசியல் அமைப்புச் சட்டத்தில் உள்வாங்கப்படயிருக்கின்ற பிரதான அம்சங்கள்

Nature of the State -நாட்டின் தன்மை,

Form of Government ( presidential/parliamentary) ஜனாதிபதி ஆட்சியா? அல்லது பாராளுமன்ற ஆட்சியா?

Legislature (unicameral/bicameral) -பாராளுமன்றம் ஒரு சபையினைக் கொண்டதா?  அல்லது இரு சபைகளைக் கொண்டதா?

Supremacy of the Constitution or Parliament-அரசியலமைப்பு சட்டம் மீயுயர் தன்மை கொண்டதா? பாராளுமன்றம் மீயுயர் தன்மை கொண்டதா?

Court Structure- நீதிமன்றக்கட்டமைப்பு.

Constitutional Court-அரசியலமைப்பு நீதிமன்றம்,

Power sharing and devolution-அதிகாரப்பகிர்வு மற்றும் அதிககாரப் பரவலாக்கல்.

Constitutional Council and Independent Commissions-அரசியலமைப்புச்சபை மற்றும் சுதந்திர ஆணைக்குழுக்கள்.

Electoral Reforms-தேர்தல் சீர்திருத்தம்.

இவைகள் முஸ்லிம்கள் மீது நேரடியாகத் தாக்கம் செலுத்தக்கூடிய தலைப்புக்களாகும். இங்கு தரப்பட்டுள்ள ஆங்கிலச் சொற்களுக்கான தமிழ் பதங்கள் அவற்றின் உரிய பதங்களாக (கலைச்சொற்களாக) இல்லாவிட்டாலும், ஆங்கிலப் பதங்களை இலகுவாகப் புரிந்து கொள்வதற்காக என்னால் தரப்பட்டுள்ள தமிழ் சொற்களாகும்.

தொடரும்……..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>