அரசியலமைப்பு சட்ட மாற்றம்-பாகம் -06-வை.எல்.எஸ்.ஹமீட்

mnlkஓட்டமாவடி அஹமட் இர்ஸாட்

விகிதாசார பிரதிநிதித்துவ தேர்தல் முறையைப் பயன்படுத்தி சந்திரிரிக்காவின் அரசியல் நிர்ணய சபைத் திட்டத்தையே தவிடுபொடியாக்க முடிந்தது.. வை.எல்.எஸ்.ஹமீட்

நீதி மன்றில் அரசியல் நிர்ணய சபைக்கெதிரான வழக்கு.

இந்த பின்னணியில் திரு சுந்தரலிங்கம் அவர்கள் இந்த அரசியல் நிர்ணய சபைக்கெதிராக உயர் நீதி  மன்றத்தில் வழக்குத்தாக்கல் செய்தார். இந்த வழக்கின் தீர்ப்பு 1971ம் ஆண்டு பெப்ரவரி மாதம் 13ம் திகதி வழங்கப்பட்டது.

அத்தீர்ப்பில் “அவ்வாறானதொரு புதிய அரசியலமைப்புச் சட்டம் ஸ்தாபிக்கப்படுகின்ற பொழுது அல்லது அவ்வாறு ஸ்தாபிக்கப்பட்டிருப்பதாக ஒரு தோற்றப்பாடு உருவாக்கப்படுகின்ற பொழுது இரண்டில் ஒரு வகையான சூழ்நிலை எழலாம்.

1) அவ்வாறானதொரு அரசியல் யாப்பு சட்டபூர்வமானதாகவும் வலுவானதுமாகவும் இருக்கும். அது தற்போதைய அரசியல் யாப்பை மேவுகின்ற ஒன்றாகவும் இருக்கும். அவ்வாறான சூழ்நிலையில் புதிய அரசியல் யாப்பை கேள்விக்குட்படுத்துவது வெற்றியளிக்காது.

2) மாறாக, அரசியல் நிர்ணய சபையினால் உருவாக்கப்படுகின்ற புதிய அரசியல் யாப்பு சட்ட அந்தஸ்தும் வலுவுமற்றது என்பது தான் உண்மை நிலையாயின் அவ்வாறான புதிய அரசியல் யாப்பு ஸ்தாபிக்கப்பட்ட அல்லது ஸ்தபிக்கப்பட்டதற்கான தோற்றப்பாடு உருவாக்கப்பட்டதற்கு பின்னர் தான் பொருத்தமான நீதிமன்றம் அந்த யாப்பு சட்டத்தன்மை மற்றும் வலுவற்றதென தீர்மானிக்க முடியுமென்று தீர்ப்பளித்திருந்தது.

(அதாவது இத்தீர்ப்பு வழங்கப்பட்ட நேரம் புதிய அரசியல் யாப்பு பிரகடனப்படுத்தப்பட்டிருக்கவில்லை என்பது இங்கு கவனத்திற்கொள்ளப்பட வேண்டும்)

புதிய யாப்பு பிரகடனம்.

இறுதியாக, 1972ம் ஆண்டு மே மாதம் 22ம் திகதி பி.ப.12.43 மணிக்கு நவரங்ககல மண்டபத்தில் வைத்து புதிய யாப்பு பிரகடனப்படுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து பிரதமர் சிறீமாவோ பண்ராநாயக்க அவர்கள் குடியரசிற்கும் புதிய அரசியல் யாப்பிற்கும் விசுவாசம் தெரிவித்து சத்தியப்பிரமாணம் செய்ததோடு, ஜனாதிபதியாக திரு.வில்லியம் கோபல்லாவ அவர்களை அறிவித்தார்.
பின்னர் நீதிபதிகளும் அரச உத்தியோகத்தர்களும் இலங்கை குடியரசிற்கும் யாப்பிற்கும் விசுவாசம் தெரிவித்து சத்தியப்பிரமாணம் செய்தார்கள். இவ்வாறு தான் புதிய அரசியல் யாப்பு நிறுவப்பட்டது.

எனவே தான் அன்று “2/3 பெரும்பான்மையுடனோ அல்லது இல்லாமோ அரசியலமைப்பை திருத்துவதன் மூலம் தேர்தல் முறை மாற்றப்பட வேண்டும்” என்ற சந்திரிக்கா அம்மையாரின் கூற்று தொலைக்காட்சியில் அறிவிக்கப்பட்டதும், அது வரைக்கும் தனித்துப் போட்டியிட வேண்டுமென்ற நிலைப்பட்டிலிருந்த நான் ஐக்கிய தேசியக்கட்சியுடன் சேர்ந்து தான் போட்டியிட வேண்டுமென்று விவாதிக்கத் தீர்மானித்தேன்.

ஏனெனில், சந்திரிக்கா அம்மையாரின் ஐக்கிய மக்கள் சுதந்திரக்கூட்டமைப்பு சாதரண அறுதி பெரும்பான்மையினைப் பெற்றால் கூட அவர் அரசியல் நிர்ணய சபையினை அமைத்து தேர்தல் முறைகளை தனக்கு வேண்டிய முறையில் மாற்ற முற்படலாம். அவ்வாறு மாற்றினால் சிறுபான்மை அரசியல் பாரதூரமாக பாதிக்கப்படலாம். எனவே, அதனைத்தடுத்து நிறுத்த ஒரே வழி ஐக்கிய தேசியக்கட்சியுடன் இணைந்து போட்டியிடுவதாகும்.

ஏனெனில், விகிதாசாரத்தேர்தல் முறையின் கீழ் ஒரு வாக்கு இரண்டு பாராளுமன்ற உறுப்பினர்களைத் தீர்மானிக்கலாம். 1989ம் ஆண்டு சுமார் முன்னூறு வாக்குகளால் அம்பாறை மாவட்டத்தில் இரண்டு ஆசனங்களை இழந்த வரலாறு நம்மில் பலருக்கு ஞாபகம் இருக்கும்.

நாம் தனித்துப்போட்டியிட்டால் சில நேரங்களில் ஐக்கிய தேசியக்கட்சியின் வாக்குகள் குறைவதனால் பொது ஜன ஐக்கிய முன்னணி சில மாவட்டங்களில் இலகுவாக வெற்றி பெறலாம். ஒரு மாவட்டத்தினை வெல்கின்ற கட்சிக்கு பெரும்பாலும் ஆகக்குறைந்தது இரண்டு ஆசனங்கள் அதிகமாகக் கிடைக்கலாம். சில நேரங்களில் விதி விலக்கு இருந்தாலும் கூட . அதே நேரம், நாம் ஐக்கிய தேசியக்கட்சியுடன் இணைந்து போட்டியிடும் பொழுது அம்மாவட்டங்களை ஐக்கிய தேசியக்கட்சி வென்று அதிக ஆசனங்களைப் பெறலாம். எவ்வாறாயினும், பொது ஜன ஐக்கிய முன்னணி அறுதிப் பெரும்பான்மை பெறுவது தடுக்கப்பட வேண்டுமென்பதே நிலைப்பாடாகும்.

இந்த முடிவுடன் அதியுயர் பீடக் கூட்டத்திற்குச் சென்ற பொழுது புத்தளம் பாயிசைத்தவிர அனைவரும் தனித்துப் போட்டியிட வேண்டுமென்ற நிலைப்பாட்டிலிருந்தார்கள்.நான் ஐக்கிய தேசியக்கட்சியுடந்தான் இணைந்து போட்டியிட வேண்டுமென்ற எனது நிலைப்பட்டைக் கூறிய பொழுது அக்கறைப்பற்றைச் சேர்ந்த சகோதரர் உவைஸ் அவர்கள் அவ்வாறு ஐக்கிய தேசியக்கட்சியுடன் இணைந்து போட்டியிட்டால் மக்கள் கல்லால் அடிப்பார்கள் என்றார்.

அப்பொழுது அப்படி மக்கள் கல்லால் அடித்தால், முதலாவது கல்லடியினை வாங்குவதற்கு நான் தயாராக இருக்கின்றேன். கட்சி மக்களை வழி நடாத்துகின்ற சந்தர்ப்பங்களும் இருக்கின்றன, அதே நேரத்தில், கட்சியை மக்கள் வழி நடாத்துகின்ற சந்தர்பங்களும் இருக்கின்றன. இது கட்சி மக்களை வழி நடாத்துகின்ற சந்தர்ப்பம் எனக்கூறி எனது நிலைப்பட்டிற்கான நியாயத்தினை விளக்கினேன். பலர் என்னுடன் உடன்பட்டார்கள். சிலர் என்னுடன் உடன்படுவதில் தயக்கமிருந்த போதிலும் கூட. கட்சித்தலைவருக்கு அந்த நேரம் வை.எல்.எஸ்.ஹமீட் ஒரு ஆபத்தாவனாகப் பட்டார்.

ஏனெனில், கட்சி தலைவரைப் பொறுத்த வரை  ஐக்கிய தேசியக்கட்சியுடன் இணைந்து போட்டியிட வேண்டும். ஆனால், அவருக்கு கைகொடுக்க புத்தளம் பாயிஸ் மட்டுமே இருந்தார். ஏனைய அனைவரும் மறு பக்கம். அவ்வறான இக்கட்டான நிலையில் இரண்டு நாட்களுக்கு முன் ஏனையவர்களின் நிலைப்பட்டிலிருந்த ஒருவர் இரண்டு நாட்களுக்கு பின் அவரது நிலைப்பட்டிற்கு ஆதரவாக உரத்து குரல் கொடுத்தது அவருக்கு ஆறுதலாக இருந்தது.

முஸ்லிம் காங்கிரஸ் ஐக்கிய தேசியக்கட்சியுடன் இணைந்து போட்டியிடப்போகின்றது என்று அறிந்ததும், கிழக்கிலிருந்து பல குழுக்கள் தனித்து போட்டியிட வேண்டுமென்று தலைமையிடம் வலியுறுத்த கொழும்பிற்கு வந்தார்கள். கிழக்கிழங்கை ஜம்மியத்துல் உலமா சபையும் வந்தது. இவர்களுக்கெல்லாம் விளக்கம் கொடுக்கின்ற பொறுப்பு கட்சி தலைவரினால் வை.எல்.எஸ்.ஹமீடிற்கு ஒப்படைக்கப்பட்டது. இறுதியில் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து போட்டியிட்டோம். எமது இலக்கிலும் வெற்றியடைந்தோம். ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு  அறுதிப்பெரும்பான்மை பெறவில்லை.அதற்கு எட்டு ஆசனங்கள் தேவைப்பட்டன. அல்ஹம்துலில்லாஹ்.

1972ம் ஆண்டு சிறீமாவோ பண்டாரநாயக்கா 50 விகிதத்திற்கு குறைவான வாக்குகளைப் பெற்றும் அதிக ஆசனங்களைப் பெற்று அரசியல் நிர்ணய சபையினை அமைத்தார். தொகுதி முறைத்தேர்தலில் உதவியின் காரணமாக. அதாவது 1970ல் ஐக்கிய முன்னணி ( சிறீலங்கா சுதந்திரக் கட்சியின் கூட்டு அணி) 48.7 விகித வாக்குகளைப் பெற்று 76.8 விகித ஆசனங்களைப் பெற்றது. மறு வார்த்தையில் கூறுவதானால், 151 ஆசனங்களை கொண்ட பாராளுமன்றத்தில் 116 ஆசனங்களை வென்றார்கள்.

2004ம் ஆண்டு ஏப்ரல் மாதம் இரண்டாம் திகதி நடந்த தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திரக்கூட்டமைப்பு 45.6 விகித வாக்குகளைப் பெற்று 46.6 விகித ஆசனக்களைப் பெற்றார்கள். அதாவது 225 ஆசனங்களைக் கொண்ட பாராளுமன்றத்தில் 105 ஆசனங்களை மட்டும் வென்றார்கள்.

இரண்டு தேர்தலுக்குமிடைப்பட்ட வித்தியாசம் 1970ம் ஆண்டு, 2004ம் ஆண்டு UPFA பெற்ற வாக்குகளை விட 3.1 விகித மேலதிக வாக்குகளை சிறீலங்கா சுதந்திரக் கூட்டணிப் பெற்று, 30.2 விகித மேலதிக ஆசனங்களைப் பெற்றதனால் அவர்களுக்கு அரசியல் நிர்ணய சபை சாத்தியப்பட்டது.

விகிதாசார தேர்தல் முறையின் கீழ் சில சிறுபான்மைகளுக்கு இருக்கின்ற அரசியல் பலத்தை 2004ம் ஆண்டு பாவித்து சிறுபான்மைகளுக்கு வர இருந்த பெரியதொரு ஆபத்து -அதாவது சந்திரிக்கா பண்டார நாயக்காவின் அரசியல் நிர்ணய சபை அமைத்து தேர்தல் முறையை பெரும்பான்மை சமூகத்திற்குச் சாதகமாக மாற்றுகின்ற அந்தத்திட்டம். தவிடு பொடியாக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.

இந்த விகிதாசாரத்தேர்தல் முறையில் தான் இப்பொழுது மீண்டும் கைவைக்க முயற்சிக்கின்றார்கள். எனவே தான் முஸ்லிம்களே விழிப்படையுங்கள்.! விழிப்படையுங்கள்.! என்று மீண்டும் கூறுகின்றோம்.

சந்திரிக்கா அம்மையார் அறுதிப் பெரும்பான்மை பெறாத போதிலும், ஐக்கிய தேசியக் கட்சியை விட அதிக ஆசனங்களைப் பெற்றிருந்தார். அவர் அறுதிப்பெரும்பான்மை பெற்றிருந்தால், அரசியல் நிர்ணய சபையை அமைத்திருப்பார். ஏனெனில், அன்று சிரிமாவோ பண்டாரநாயக்க செய்தது போல் அவரும் தேர்தல் விஞ்ஞாபத்தில் அரசியல் நிர்ணய சபை தொடர்பாகக் குறிப்பிடிருந்தார். அவ்வாறு அவர் அரசிய நிர்ணய சபையை அமைத்திருந்தால், தேர்தல் முறை மாற்றப்பட்டிருக்கும். சில வேளை சிறுபான்மை அரசியலுக்கு சந்தர்ப்பமில்லாமல் கூட போய்யிருக்கலாம்.

2004ம் ஆண்டு சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸிலிருந்து வெளியேற்றமும், முஸ்லிம்களின் அரசியல் பலம் இன்னுமொரு தடவை நிரூபிக்கப்பட்டமையும்….

தேர்தலில் ஆசனங்களைக் குறைவாகப் பெற்ற போதிலும், சிறீலங்கா சுதந்திரக்கட்சி ஆட்சியமைத்தது. இருப்பினும், ஆட்சியைத் தொடர பெரும்பான்மை தேவைப்பட்டது. குறித்த தேர்தலில் ஜாதிக ஹெல உறுமய முதல் தடவையாகப் போட்டியிட்டு 9 ஆசனங்களைப் பெற்றிருந்தது. அதே நேரம் முஸ்லிம் காங்கிரஸ் பத்து ஆசனங்களைப் பெற்றிருந்தது. தேவையான பெரும்பான்மையைப் பெறுவதற்கு சந்திரிக்கா அம்மையாருக்கு இரண்டு வழிகள் இருந்தன. ஒன்று ஜாதிக ஹெல உறுமயவை அரவணைப்பது அல்லது சிறீலங்கா முஸ்லிம் காங்கிரசை அரவணைப்பது. அவர் முஸ்லிம் காங்கிரசினை அரவணைக்கவே விரும்பினார்.

இந்த விடயம் கட்சியின் அதியுயர் பீடத்தில் விவாதிக்கப்பட்டது. அங்கு கட்சி கட்டாயம் சந்திரிக்காவிற்கு ஆதரவு வழங்க வேண்டுமென்ற நிலைப்பட்டை நாங்கள் ஒரு சிலர் எடுத்தோம். ஏனெனில், யுத்த நிறுத்த காலத்தில் புலிகளினால் முஸ்லிம்களுக்கு செய்யப்பட்ட அநீதிகளை கைகட்டிப் பார்த்துக் கொண்டு முஸ்லிம் காங்கிரசின் தயவில் ஆட்சி செய்த ஐக்கிய தேசியக்கட்சியுடன் நாங்கள் கூட்டுச் சேர்ந்தது,

சந்திரிக்காவிற்கு பெரும்பான்மை கிடைப்பதனைத் தடுத்து அதன் மூலம் அவரது அரசியல் நிர்ணய சபையை அமைக்கும் யோசனையினை தவிடு பொடியாக்குவதேயாகும்.

இப்பொழுது அவருக்கு எட்டு ஆசனங்கள் மட்டுமே தேவை. ஜாதிக ஹெல உறுமயவிடம் ஒன்பது ஆசனங்கள் இருந்தன. ஜாதிக ஹெல உறுமயவுடன் சேர்ந்து அவர்கள் பெரும்பான்மையை பெற்றால், அவர் அதன் மூலம் அரசியல் நிர்ணய சபையை அமைத்து தனது காரியத்தை சாதிக்க முயலலாம்.

எதைத் தடுப்பதற்காக நாம் ஐக்கிய தேசியக்கட்சியுடன் கூட்டு சேர்ந்தோமோ அதை இப்பொழுது ஐக்கிய தேசியக் கட்சியினை திருப்திப்படுத்துவதற்காக வெளியிலிருப்பதன் மூலம் சந்திரிக்காவிற்கு ஜாதிக ஹெல உறுமயவுடன் சேர்ந்து அதனைச் செய்வதற்கு சந்தர்ப்பத்தை வழங்கப் போகின்றோம்.

எனவே, நாம் இதனைத் தடுப்பதாக இருந்தால் சந்திரிக்காவிற்கு முஸ்லிம் காங்கிரஸ் முட்டுக்கொடுப்பதைத் தவிர வேறு வழியில்லையென்பதைச் சுட்டிக்காட்டினோம். அபொழுது எம்மை வைத்து அந்த அரசியல் நிர்ணய சபையினை அமைத்தால் என்ன செய்வது? என கட்சித்தலைவர் கேட்டார்.

அப்பொழுது அரசியல் நிர்ணய சபையை அமைக்கக் கூடாதென்ற உத்தரவாதத்தைப் பெற்றுக்கொண்டு ஆதரவளிப்போம் என்று கூறினோம். அப்பொழுது தலைவர், மீண்டும்  உத்தரவாதம் தந்த பின்னர் அரசியல் நிர்ணய சபையை அமைத்தால் என்ன செய்வது, என்று கேட்டார்.  நாம் கூறினோம். அவ்வாறு செய்தால் நமது முட்டை கழற்றி விடுவோம். அப்பொழுது அவருடைய ஆட்சி கவிழ்ந்து விடும்.

அது அவருக்கு தெரியும். எனவே, அவர் அதனை ஒரு பொழுதும் செய்யமாட்டார். ஆனால், நாம் முட்டுக்கொடுக்கா விட்டால், ஜாதிக ஹெல உறுமயவை கொண்டு எல்லாவற்றையும் சாதித்து விடுவார் என்றோம். ஆனால், கட்சியின் தலைவர் ஐக்கிய தேசியக்கட்சியை விட்டு விட்டு வெளியில் வருவதற்கு தயாராக இருக்கவில்லை.

இந்த நிலையில் தான் வேறு வழியில்லாமல் கட்சியை உடைத்து கொண்டு வெளியேற வேண்டியேற்பட்டது. அதன் மூலம் அரசியல் நிர்ணய சபை தடுத்து நிறுத்தப்பட்டது. விளைவு சந்திரிக்காவின் தேர்தல் முறை மாற்றம் கைகூடாமல் போனது. அந்த முடிவினை எடுக்காமல் இருந்திருந்தால், சில வேளை தேர்தல் முறை மாற்றப்பட்டு சிறுபான்மை அரசியல் பற்றி பேசுவதற்குரிய சந்தர்ப்பமே இல்லாமல் போயிருக்கலாம். தேர்தல் முறை மாற்றம் சிறுபான்மை சமூகத்தை எவ்வாறு பாதிக்கும் என்பதை தேர்தல் முறைகள் தொடர்பாக விரிவாக ஆராயும் பொழுது பார்க்கலாம்.

இன்று சிலர் எம்மீது சேறு பூச முனைவது போல் அன்றும் சிலர் முனைந்தார்கள். ஆனால், எங்களுடைய உள்ளத்தில் இஹ்லாஸ் இருந்தது. அதனால் தான் நாங்கள் எதற்கும் கவலைப்படாமல் சத்தியத்திற்கான எமது போராட்டத்தினை முன்னெடுத்தோம்.

இன்று வை.எல்.எஸ்.ஹமீட் கட்சியுடன் முரண்பட்டிருப்பது தேசியப்பட்டியலுக்காக என்று கொச்சைப்படுத்த சிலர் முற்படுகின்றார்கள். தேசிய பட்டியல் தான் பிரச்சினை என்றால், 2010ம் ஆண்டு வை.எல்.எஸ்.ஹமீட் முரண்பட்டிருக்க வேண்டும். அவ்வாறு முரண்பட்டிருந்தால் நீதி மன்றம் செல்ல வேண்டிய தேவை கூட இருந்திருக்காது. ஏனெனில், “இன்று மாநாடுகள் நடாத்துகின்றவர்கள் “அன்று கட்சியில் சாதாரண  அங்கத்தவர்களாகக்கூட இருக்கவில்லை.

இன்றைய போராட்டம் வெளித்தோற்றத்தில் ஒரு  தேசியப்பட்டியல் பிரச்சினை போன்று தோற்றினாலும், இன்றைய போராட்டத்திற்கு பின்னாலும் இஹ்லாசான எண்ணமிருக்கின்றது. எந்த இஹ்லாசான எண்ணத்துடன் முஸ்லிம் காங்கிரசிலிருந்து வெளியேறி ஒரு போராட்டத்தை ஆரம்பித்தோமோ, அந்தப்போராட்டத்தில் சத்தியமும் இஹ்லாசும் உண்மையாக இல்லை.

மாறாக, அப்போராட்டத்தில் கபட நோக்கங்களும் இலக்கில்லாத பாதையும் தான் இருக்கின்றது. என்பது தெளிவாகின்ற போது, மீண்டுமொரு சத்தியப் போராட்டத்தினை அங்கிருந்து தொடங்க வேண்டியேற்படுகின்றது. அப்போராட்டத்தின் வெளிப்படையான ஆரம்பப்புள்ளி ஒரு தேசியப்பட்டியல் பிரச்சினை போல் தோற்றலாம். அதற்காக அப்போராட்டமே தேசியப்பட்டியல் என்று எடை போடுவது தவறாகும்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*